எல்லோருக்கும் வணக்கம். இது 13வது கவிதை வாசிக்கும் கூட்டம். போன வெள்ளிக்கிழமை 12வது கூட்டம் பூனைகளைப் பற்றி வாசிக்கும் கூட்டமாக இருந்தது. 25பேர்களுக்கு மேல் கவிதைகள் வாசித்தார்கள். கூட்டம் நிறைவாக இருந்தது.
இதுவரை 60 கவிஞர்கள் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் வாசித்திருக்கிறார்கள். 21.08.2020 அன்றும் 6 கவிஞர்கள் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள். 6 பேர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். இந்த மாதம் 15ஆம் தேதிதான் ந. பிச்சமூர்த்தி பிறந்தார். புதுக்கவிதையின் பிதாமகர் அவர். அவரை ஞாபகப்படுத்தும் விதமாக இந்தக் கவியரங்கத்தின் பெயரை ந.பிச்சமூர்த்தி கவியரங்கக் கூட்டம் என்று பெயர் சூட்டலாமென்று நினைக்கிறேன்.
வரும் வெள்ளியன்று கவிதை வாசிப்பவர்கள் பட்டியலை இங்குத் தருகிறேன்.
இந்தக் கூட்டத்திற்கு மேற்பார்வையாளர் வ.வே.சு. கூட்டம் சரியாக ஒன்றரை மணி நேரம் நடக்கும். ந.பிச்சமூர்த்தியைப் பற்றி குறிப்புகள் வழங்குபவர் அழகியசிங்கர். பிச்சமூர்த்தி கவிதைகளை வாசிப்பவர் அழகியசிங்கர், மையம் ராஜகோபாலன்.
இன்று மாலை 7 மணிக்கு சூமில் பூனைகளைப் பற்றிய கவிதைகளை வாசிக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களை முன்னதாகவே 15 நிமிடங்கள் முன்னால் சூமில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
தங்களுடைய கவிதைகளை வாசிப்பது மட்டுமல்லாமல் நம் முன்னோடிகள் கவிதைகளும் வாசிக்கலாம். எல்லோரும் ஒரே ஒரு கவிதையை மட்டும் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பூனைகள் கவிதைகளைச் சேகரித்து இலவசமாகக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்து விநியோகிக்க எண்ணம். இப்படிச் சொல்வதால் பூனைக்கு நான் செய்யும் துரோகமாகவும் இருக்கலாம். இன்று படிக்கும் கவிதைகளை என் இ மெயிலில் அனுப்புங்கள்.navina.virutcham @ gmail. com
பூனையைக் குறித்து நாளை கவிதை வாசிக்க உள்ளோம். மாலை 7 மணிக்கு. முதலில் பாரதியார் கவிதையை வாசிக்க உள்ளேன். அதே போல் இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்க உள்ளேன். நான் எழுதிய பூனைகளைப் பற்றி கவிதையும் வாசிக்க உள்ளேன். ஒவ்வொருவரும் ஒரு கவிதை மட்டும்தான் வாசிக்க வேண்டும். இந்தக் கூட்டம் சரியாக 1மணி 15 நிமிடங்களுக்குள் முடிப்பதாக உள்ளேன். இந்த இணைப்பை உங்களுக்குத் தருகிறேன்.
அவர் தி நகரில் பூங்கா லாட்ஜில் ஒரு சிறிய அறையில் வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கியிருந்தார். ஒரே அறை. நான் போய்ப் பார்க்கும் போது அந்தச் சிறிய அறையில் மகிழ்ச்சியாக இருப்பவர் ஸ்டெல்லா புரூஸ். பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல், ஒருவர் தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.” படிக்க சில புத்தகங்கள், கேட்க சில இசைத்தட்டுக்கள், பழக சில நண்பர்கள். அவ்வளவுதான். அவர் உலகம் அத்துடன் முடிந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உபாசகர். எதைப் பற்றியும் தெளிவாக தன் கருத்துக்களைக் கூறக் கூடியவர். இப்படி வாழ்ந்து வந்த ராம் மோஹன் என்கிற ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் இருந்தால் அவருக்கு 80 வயது முடிந்திருக்கும். மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டே 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவருடைய பிறந்தநாள் இன்று. ஒவ்வொரு முறையும் நான் ஞாபகமாய் அவர் பிறந்த தினத்தையும் மரணம் அடைந்த தினத்தையும் முகநூலில் ஞாபகப்படுத்தும் வழக்கம் உள்ளவன். கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள் என்ற கட்டுரையில் அவரி; இதுமாதிரி எழுதியிருக்கிறார். …..1965ல் சென்னை வாழ்க்கைக்கு இடம் பெயர்வதற்கு முந்திய சில மாதங்களின் பெரும்பான்மையான நேரங்கள் நூல் நிலையக் கிளையிலேயே எனக்குக் கழிந்தது. கு.அழகிரிசாமி, கு.ப.ரா போன்றோரின் சிறுகதைத் தொகுப்புகளும் அங்கு எனக்கு வாசிக்கக் கிடைத்தன. 1970ஆம் வருடம் ஞானரதம் என்ற இலக்கிய இதழின் என் எழுத்து முதல் முறையாகப் பிரசுரம் பெற்றது. ஞானரதம் இதழின் ஆசிரியர். ஜெயகாந்தன். இதுதான் வாழ்க்கையின் எதிரேபாராத சம்பவம். தமிழில் என்னுடைய எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது ஜெயகாந்தனின் எழுத்துக்கள். என் எழுத்து பிரசுரமாவதற்கான பிள்ளையார் சுழி போட்டது ஜெயகாந்தன் ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை… இப்படி எழுதியிருக்கும் ஸ்டெல்லா புரூஸ் ஆனந்தவிகடனில் தொடர்கதை எழுதிப் பிரபலமான எழுத்தாளர் ஆகிவிட்டார். அந்தக் கட்டுரையில் சி.சு.செல்லப்பாவைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படி எழுதுகிறார். …..இந்த இடத்தில் சி.சு செல்லப்பா மரணம் குறித்து எனக்குள் இருக்கும் ஆதங்கம் ஒன்றினை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். மொத்த வாழ்க்கையும் இலக்கியத்திற்கு அர்ப்பணித்த இலக்கிய யாத்ரீகன் செல்லப்பா. அந்த அயராத இலக்கிய யாத்ரீகனின் மரணம் அதற்கான மாபெரும் அஞ்சலியைப் பெறவில்லை. அந்த இலக்கியவாதியை நினைவு கூறும் இலக்கிய கொண்டாட்டங்கள் கொண்டாடப்படவில்லை. என்ன காரணம்? அதற்கான நிறுவன பலம் செல்லாப்பாவிற்குப் பின்னால் இல்லை. அவருக்குக் கொடி கட்டுவதற்கான வலைப்பின்னல் அமைப்புகள் உலகம் பூராவும் விரிந்து கிடக்கவில்லை… ஸ்டெல்லா புரூஸ÷ற்கும் அந்த நிறுவன பலம் இல்லை. ஏன் இன்றைய காலகட்டத்தில் எந்த எழுத்தாளருக்கும் இல்லை. அதுதான் நிதர்சன உண்மை.
கடந்த சில மாதங்களாக சூமில்தான் கூட்டங்கள் நடக்கின்றன. நேரில் கூட்டம் நடத்துவதுபோல் இது வராது என்று ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால் சூமில் கூட்டம் நடத்தும்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. யார் வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் கலந்து கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் நேரிடையாகக் கூட்டம் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மூகாம்பிகை காம்பளெக்ஸில் 50க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி உள்ளேன். அங்குத் தொடர்ந்து வருபவர்கள் பத்துக்கும் மேல் இருக்க மாட்டார்கள். ஆனால் சூமில் நடத்தும் கூட்டங்களில் 40க்கு மேல் வருகிறார்கள். எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்துகிறோம். இதுவரை பத்து பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு பேச வருவதாகக் கூறி உள்ளார். அவர்களுக்கு நன்றி. இன்னும் பலர் கலந்துகொண்டு பேச விரும்பினால் நேரில் சூமில் வரும்போது தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நாளை (06.08.2020) ஏழுமணிக்குக் கூட்டம். கூட்டம் பற்றி விபரம் இங்குத் தருகிறேன்.
Zoom meeting ID 83876967530 No Password US02WEB.ZOOM.USJoin our Cloud HD Video Meeting
எழுத்து பத்திரிகை ஞானக்கூத்தனின் திறமையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் 1970 வெளிவந்த ‘கசடதபற’ என்ற சிற்றேட்டில்தான் அவருடைய படைப்புகள் எல்லாம் வெளிவந்தன.
‘தமிழை எங்கே நிறுத்தலாம்’ என்று அவருடைய முதல் கவிதையிலிருந்து தொடர்ந்து கசடதபறவில் அவர் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஜனவரி 1971ஆம் ஆண்டு ‘கசடதபற’ இதழில் (4வது இதழ்) அவருடைய மொழிபெயர்ப்பு ஒன்று வெளிவந்தது. மொத்தமே 3 வரிகள்தான். ஒரு தாஓ கவிதை என்ற தலைப்பில். இங்கே வாசிக்கத் தருகிறேன்.
ஒரு தாஒ கவிதை
“ சோளக் கொல்லைப் பொம்மையிடம் இரவல் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது.
சொல்வனம் என்ற மின் இதழில் பிரபு எழுதியிருக்கிற கதையின் பெயர் பிரிவு. இது வங்கியில் பணி ஓய்வு பெறுகிற ஒரு பெண் ஊழியரைப் பற்றிய கதை.
பெண் ஊழியர் பத்மா ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நூறு பேர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் பத்மாவின் புகழ் பாடுகிறார்கள். அதைக் கேட்கும்போது தன்னுடைய கதைதானா என்று அவளுக்குத் தோன்றுகிறது.
மேலாளர் பேசும்போது, பதமா மேடம் இன்று ஓய்வு பெறுகிறார். நான் அவரைவிட வயதில் சிறியவன். அவர் எப்போதும் வங்கி திறப்பதற்கு அரை மணி நேரம் முன்பே வந்து விடுவார். அலுவலகம் முடிந்தபின்னும் அவருடைய அடுத்தநாள் பணிகளை ஒருங்கமைப்பார்.. கலையில் எந்த மனநிலையில் வந்தாரோ அந்த மனநிலையில் முடியும் வரை இருப்பார். கிளையின் பணியை எளிதாக்கினார் என்றார்.
இந்திய அணியின் பந்து வீச்சாளர் அந்த வங்கிக் கிளையில் ஒரு வாடிக்கையாளர். அவரது தாயார் நிகழ்ச்சியில் பத்மாவைப் புகழ்ந்து பேசுகிறார்.
நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடம் கழித்து தாரணி வந்திருந்தாள். அவள் நுழையும் போதே இருவரும் பார்த்துக் கொண்டார்கள். தாரணி நடுவயதில் இருக்கிறாள்.
தாரணி ஒரு வாடிக்கையாளர். நந்தினியின் முயற்சியில் காரணிக்குக் கடன் கிடைக்கிறது. அவள் இவ்வளவு தூரம் பொருளாதார முன்னேற்றம் அடையக் காரணம் பத்மாதான்.
கதை தாரணியைப் பற்றிப் பேசும்போது பின் பக்கமாகச் சுழலுகிறது. தாரணி லோன் வாங்க மானேஜரைப் பார்க்க வருகிறாள்.
லோன் விஷயமாக மேனேஜரைப் பார்க்க வேண்டுமென்றால் மாலை மூணு மணிக்கு வர சொல்கிறாள் பத்மா. திரும்பவும் மூன்று மணிக்கு வரும்போது மேனேஜர் அலுவல் விஷயமாகப் போய்விடுகிறார்.
தாரணியை அடுத்த நாள் வரும்படி பதமா கூறுகிறாள்.
பதமா ஓய்வு பெறும் நாளில் தாரணி 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பத்மாவைப் பார்க்க வந்திருக்கிறாள். “
தாரணியைப் பேசக் கூப்பிடுகிறார்கள். தாரணி பேசுகிறாள். “ஒரு பெரிய அரசமரத்தோட நிழலைப் பார்க்கிறோம் அதுக்கடியில் ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோடா மூடிமேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம் அந்த நிழலல் நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கிறோம். அப்ப தீரர்து நம்ம தாகம் மட்டும் இல்ல. நம்மோட துக்கமும்தான். இந்த மரத்ததை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம் வரப்போறோம்னு தெரியாது. அன்னைக்கு காலைல அந்த பானையில் தண்ணீர் நிரப்பினவருக்கும் நம்மள தெரியாது. எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடப்பட்ட மரமும் ஒரு டம்ளர் தண்ணீரும் நம்ம துக்கத்தை இல்லாமல் ஆக்கி நம்பிக்கை தருது. அந்த மரத்து நிழலும் ஒரு டம்ளர் தண்ணீரும் போன்றவர் பதமா மேடம்.”
சாதாரண ஒரு நிகழ்ச்சிதான் இங்குக் கதையாக மாறி உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் உள்ளடங்கிய எத்தனையோ உணர்வலைகள் இங்குக் கதையாகப் பின்னப்பட்டுள்ளன.
இந்தக் கதையின் கூறுகளைப் பார்ப்போம்.
பத்மா என்பவர் வங்கியில் ஒரு சாதாரண காசாளர் பணியில் சேர்ந்ததிலிருந்து பதவி மூப்பு வரும் வரை கதை விவரிக்கப்படுகிறது.
பெரிய பதவியை வகிக்காவிட்டாலும், அவருடைய பணியில் அவர் நேர்மையாக இருந்திருக்கிறார்
தாரணி என்பவருக்கு வங்கியிலிருந்து லோன் வாங்க உதவியிருக்கிறார் அதற்கு நன்றிக்கடனாக பத்மாவின் நட்புக்காக தாரணி 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கார் ஓட்டிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்.
இந்தக் கதையை இப்படி எழுதியிருக்கிறார் கதாசிரியர். ஒரு இயல்பான நிகழ்ச்சியை விவரிக்குமுன் எல்லாவற்றையும் கதைகளாக மாற்றி உள்ளார். கதைக்குள் கிளைக்கதைகள் வருகின்றன. மேலும் பணிமூப்பு என்ற நிகழ்வை ஒரு கதையாகக் கட்டமைக்கிறார்.
ஒரு நாகலிங்க மரம் நின்று கொண்டிருக்கும். தன்னைச் சுற்றி தான் உருவாக்கிய மலர்களை அலங்காரமாய் செய்து கொண்டு மெல்லிய மணம் காற்றில் பரவ விண் நோக்கி மெல்ல அசைந்தவாறு வளரும். பத்மா அதன் நிழலில் நின்று கை கூப்பி வணங்கினாள். சிறு குழந்தையாயிருந்த போது அப்பா மடியில் உட்கார வைத்து கதை சொன்னது. ‘’பத்மாக்கண்ணு! ஆதுரசாலைல அடிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கற சீடன் குருகிட்ட கேக்கறான். ‘’குருநாதா! எல்லாமே பிரம்மத்தோட ரூபம்னு நீங்க சொன்னீங்க. அப்ப மதம் பிடிச்ச யானையும் பிரம்மம் தானே.’’ குருநாதர், ‘’நான் சொன்னது முழு உண்மை குழந்தை. நீ அதில பாதியை மட்டும் புரிஞ்சுகிட்ட. முழுசா புரிஞ்சுகிட்டிருந்தா ’விலகிப் போ! விலகிப் போ!’ன்னு சொன்ன யானைப் பாகனையும் நீ பிரம்ம சொரூபமா பாத்திருப்ப.’’ அப்பா எத்தனை கதைகள் எனக்கு சொன்னீர்கள். இப்போது நீங்கள் எங்கே? நீங்கள் சொன்ன புத்தர் கதை. ‘’அம்மா! சாவே நிகழாத ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு கொண்டு வா அம்மா. உன் மகனை நான் உயிர்ப்பிக்கிறேன்.’’ ராமர் கதை. ‘’தன்னையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’’. நீ ராமான்னு அவன் பேரைச் சொன்னா போதும். ’’எங்கேடா இருக்கிறான் ஸ்ரீஹரி?’’ பிரகலாதன் சொல்கிறான். ‘’அப்பா! அவன் எங்கும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். தூணிலும் இருப்பான்.’’ கீதைல கிருஷ்ணன் சொல்றான்: ‘’சேவா பரம் தர்ம’’. அப்பா நீங்கள் ஒரு குரலாக என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
கதைக்குள் கதையாக இதைக் கொண்டு போகிறார். ஆனால் சாதாரண நிகழ்ச்சிதான் இந்தக் கதை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை. கதை சொல்லும்படி பேரன் வற்புறுத்தலுடன் கதை முடிவடைகிறது.
இதுவரை 50 கவிஞர்கள் சூம் மூலமாகக் கவிதைகள் வாசித்து விட்டார்கள். தொடர்ந்து கவியரங்கக் கூட்டங்களை சூம் மூலமாக நடத்திக்கொண்டு வருகிறேன்.
9வாரங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன். நேற்று நடந்த கூட்டம் 9வது கூட்டம். சில திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாய் இன்டெர் நெட் தொடர்பு போனதால் முதல் பாதியில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. என் நண்பர் சுந்தர்ராஜன் திறமையாக நடத்திச் சமாளித்து விட்டார்.
அடுத்த பாதியில்தான் நான் கலந்து கொண்டேன். என் திட்டத்தில் கவிதை வாசிப்பவர்களின் கவிதைகளைக் கேட்டு மற்றவர்களும் தனக்குத் தோன்றுகிற அபிப்பிராயங்களைக் கூற வேண்டுமென்று முயற்சி செய்தேன். ஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது. நான் மறைந்த கவிஞரின் கவிதைகளை எடுத்துக்கொண்டு வாசிக்கிறேன். இதுவரை திரிசடை, ஆத்மாநாம் என்று வாசித்திருக்கிறேன். நேற்று க.நா.சுவை சரியாக அறிமுகம் செய்து வாசிக்க முடியாமல் போய்விட்டது.
கவிதை எழுதுபவர்களே அவர்களுடைய கவிதைகளை வாய்விட்டுப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. ஒருவர் வாசிக்கிற கவிதையை எந்த அளவிற்கு நாம் உன்னிப்பாகக் கவனிக்க முடிகிறது. அல்லது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது என்பது எனக்கே விடப்பட்ட சவால் என்று தோன்றுகிறது.
இதை இன்னும் செம்மையாகக் கொண்டு போவதை நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டு வர உள்ளேன். இந்தக் கூட்டத்தை ஒருவரே நடத்த முடியாது. கவிதை வாசிப்பவரும், கவிதையை ரசிப்பவரும் சேர்ந்து நடத்தும் கூட்டமாக நான் நினைக்கிறேன்.
இதுவரை யார்யார் எந்தந்த தேதிகளில் கவிதைகள் வாசித்தார்கள் என்ற பட்டியலைத் தர நினைக்கிறேன்.1) 29.05.2020 அன்று கவிதை வசித்தவர்கள் : 1. தேவேந்திர பூபதி 2. லக்ஷ்மி மணிவண்ணன் 3. யவனிகா ஸ்ரீராம் 4. திருக்கூனன் கண்டராதித்தன்.
2) 05.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி 4. பானுமதி 5. உமா பாலு 6. வசந்த தீபன 7 ஆர்.கே 8 . வேணுவேட்ராயன் 9. சுரேஷ் ராஜகோபாலன்
3) 12.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. இராய செல்லப்பா 2. கால சுப்ரமணியன் 3. ப்ரியம்4. திருநாவுக்கரசு 5. புதிய மாதவி 6. தாமரைச் செல்வன்
4) 19.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. வ.வே.சு 2. நாகேந்திர பாரதி 3. தில்லை வேந்தன் 4. சதூர் புஜன் 5. அன்புச்செல்வி
5) 26.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. லாவண்யா 2. மனோன்மணி புது எழுத்து 3. சத்தியானந்தன் 4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன் 6. எஸ்.லக்ஷ்மணன்
6) 03.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. கவிஞர் கா.ந.கல்யாண சுந்தரம் 2.. கவிஞர் கனகா பாலன் 3. கவிஞர் பத்மஜா நாராயணன் 4. கவிஞர் நிஷாந்தன் (34 பேர்கள்)
7) 10.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. தஞ்சாவூர் கவிராயர் 2. வேல் கண்ணன் 3. புலவர் பூ.அ. ரவீந்திரன் 4. கீர்த்தி கிருஷ். 5. திரிசடை கவிதைகள் (39) (குரல் அழகியசிங்கர்)
8) 17.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. ஷா அ 2. க.வை பழனிசாமி 3. தென்றல் சிவக்குமார் 4. சிறகா 5. ந. இந்திராணி 6. ஆத்மாநாம் கவிதைகள் ( வாசிப்பு : அழகியசிங்கர்) (44)
9) 24.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. சு.பசுபதி 2. வானவில் கே ரவி 3. தஞ்சாவூர் ஹரணி 4. பிரேமா பிரபா 5. நளினா கணேசன் 6. சோம சுந்தரி
7. க.நா.சு கவிதைகள் (வாசிப்பு : அழகியசிங்கர்) (50 கவிஞர்கள்)
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் ஒன்பதாவது கூட்டம் இது. கவிதையை ரசிக்க எல்லோரும் இணையும்படி கேட்டுக் கொள்கிறேன். கவிதையைக் கேட்டு ரசிப்பது என்பது மகத்தான விஷயமாக என்று எனக்குத் தோன்றுகிறது. இன்று மாலை 7 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது. இது ஒன்பதாவது கூட்டம். எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன். இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறேன். 1. சு. பசுபதி 2. வானவில் கே ரவி 3. தஞ்சாவூர் ஹரணி 4. பிரேம பிரபா 5. நளினா கணேசன் 6. க.சோமசுந்தரி 7. க.நா.சு கவிதைகள் (வாசிப்பவர் அழகியசிங்கர்)
திருவல்லிக்கேணியில் பாரதி சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன் ஒருநாள். அப்போதுதான் கோவை ஞானியைப் பார்த்தேன். என் கூட வந்திருந்தவர் அறிமுகப்படுத்தினார். நான் பார்த்த அன்று அவர் பார்வையை இழந்திருந்தார் என்பதை அறிந்தேன். அதற்குக் காரணம் சர்க்கரை நோயின் கடுமை என்று குறிப்பிட்டார்.. அதன் பின் நான் எப்போதும் கோவை சென்றாலும் கோவை ஞானியைப் போய்ப் பார்ப்பேன். அவர் நிகழ் என்ற பத்திரிகையும், தமிழ் நேயம் என்ற பத்திரிகையும் அனுப்புவார். நான் விருட்சம் அவருக்கு அனுப்புவேன். அவர் வீட்டில்தான் அவரைச் சந்திப்பது வழக்கம். அவருடன் யாராவது இளைஞர் ஒருவர் உதவியாளனாக இருப்பார். அவர்தான் அவருக்குக் கொடுக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் படித்துச் சொல்வார். வயது முதிர்ந்த நிலையிலும் அவர் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர் விடாமல் அதிகம் விற்பனை ஆக முடியாத பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வந்தது எனக்குத் திகைப்பாக இருக்கும். சமீபத்தில் அவர் பிறந்த நாள் அன்று அவரைப் பற்றி தமிழ் ஹிந்துவில் பலர் கட்டுரைகள் எழுதி இருந்தார்கள். அவருக்குச் சரியான கௌரவம் தமிழ் ஹிந்து நாளிதழ் தந்திருப்பதாக நினைத்தேன். இன்று மதியம் நான் தூங்கி எழுந்தபோது அவர் மரணம் அடைந்த செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். வருந்துகிறேன்.