எளிமையான மனிதர்…

அழகியசிங்கர்

அவர் தி நகரில் பூங்கா லாட்ஜில் ஒரு சிறிய அறையில் வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கியிருந்தார்.  ஒரே அறை.  நான் போய்ப் பார்க்கும் போது அந்தச் சிறிய அறையில் மகிழ்ச்சியாக இருப்பவர் ஸ்டெல்லா புரூஸ். 
பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல், ஒருவர் தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.”
படிக்க சில புத்தகங்கள், கேட்க சில இசைத்தட்டுக்கள், பழக சில நண்பர்கள்.  அவ்வளவுதான்.  அவர் உலகம் அத்துடன் முடிந்தது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உபாசகர்.  எதைப் பற்றியும் தெளிவாக தன் கருத்துக்களைக் கூறக் கூடியவர்.  இப்படி வாழ்ந்து வந்த ராம் மோஹன் என்கிற ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இப்போதெல்லாம் இருந்தால் அவருக்கு 80 வயது முடிந்திருக்கும்.  மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவர் தற்கொலை செய்து கொண்டே 12 ஆண்டுகள் முடிந்து விட்டது.
அவருடைய பிறந்தநாள் இன்று.  ஒவ்வொரு முறையும் நான் ஞாபகமாய் அவர் பிறந்த தினத்தையும் மரணம் அடைந்த தினத்தையும் முகநூலில்  ஞாபகப்படுத்தும் வழக்கம் உள்ளவன்.
கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள் என்ற கட்டுரையில் அவரி; இதுமாதிரி எழுதியிருக்கிறார். …..1965ல் சென்னை வாழ்க்கைக்கு இடம் பெயர்வதற்கு முந்திய சில மாதங்களின் பெரும்பான்மையான நேரங்கள் நூல் நிலையக் கிளையிலேயே எனக்குக் கழிந்தது.  கு.அழகிரிசாமி, கு.ப.ரா போன்றோரின் சிறுகதைத் தொகுப்புகளும் அங்கு எனக்கு வாசிக்கக்  கிடைத்தன. 1970ஆம் வருடம் ஞானரதம் என்ற இலக்கிய இதழின் என் எழுத்து முதல் முறையாகப் பிரசுரம் பெற்றது.  ஞானரதம் இதழின் ஆசிரியர்.  ஜெயகாந்தன்.  இதுதான் வாழ்க்கையின் எதிரேபாராத சம்பவம்.  தமிழில் என்னுடைய எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது ஜெயகாந்தனின் எழுத்துக்கள்.  என் எழுத்து பிரசுரமாவதற்கான பிள்ளையார் சுழி போட்டது ஜெயகாந்தன் ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை…
இப்படி எழுதியிருக்கும் ஸ்டெல்லா புரூஸ் ஆனந்தவிகடனில் தொடர்கதை எழுதிப் பிரபலமான எழுத்தாளர் ஆகிவிட்டார்.  
அந்தக் கட்டுரையில் சி.சு.செல்லப்பாவைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படி எழுதுகிறார்.
…..இந்த இடத்தில் சி.சு செல்லப்பா மரணம் குறித்து எனக்குள் இருக்கும் ஆதங்கம் ஒன்றினை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.  மொத்த வாழ்க்கையும் இலக்கியத்திற்கு அர்ப்பணித்த இலக்கிய யாத்ரீகன் செல்லப்பா.  அந்த அயராத இலக்கிய யாத்ரீகனின் மரணம் அதற்கான மாபெரும் அஞ்சலியைப் பெறவில்லை.  அந்த இலக்கியவாதியை நினைவு கூறும் இலக்கிய கொண்டாட்டங்கள் கொண்டாடப்படவில்லை.  என்ன காரணம்? அதற்கான நிறுவன பலம் செல்லாப்பாவிற்குப் பின்னால் இல்லை.  அவருக்குக் கொடி கட்டுவதற்கான வலைப்பின்னல் அமைப்புகள் உலகம் பூராவும் விரிந்து கிடக்கவில்லை…
ஸ்டெல்லா புரூஸ÷ற்கும் அந்த நிறுவன பலம் இல்லை.  ஏன் இன்றைய காலகட்டத்தில் எந்த எழுத்தாளருக்கும் இல்லை. அதுதான் நிதர்சன உண்மை.    

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன