என்று தணியும் இந்தத் தண்ணீர் தாகம்….

 

கோடை பயங்கரமான தன் விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.  கிணற்றில் தண்ணீர் இல்லை.  போரில் தண்ணீர் இல்லை.  கார்ப்பரேஷன் தண்ணீர் வருவது நின்றுவிட்டது.  நாங்கள் மெட்ரோ தண்ணீரை வாங்கிக் கொள்கிறோம்.  முதலில் 3 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த மெட்ரோ தண்ணீர், இப்போது ஒரு வாரம் காலம் ஆகிறது.  போகப் போக இது அதிக நாட்கள் ஆகும்.

கொஞ்சம் வசதியாக இருப்பவர்கள் தண்ணீரை வாங்க முடிகிறது.  ஆனால் தண்ணீர் வாங்க முடியாதவர்களின் நிலை என்ன? எங்கள் தெருவில் தண்ணீரை வாங்க முடியாதவர்கள் நிலை அதிகம்.  லாரியில் வரும் தண்ணீரைப் பெறுவதற்கு அவர்களிடம் போட்டியும் சண்டையும் அதிகமாகவே இருக்கிறது.

ஒருவரை ஒருவர் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.  முறையாகப் பேசியவர்கள் முறையில்லாமல் பேசுகிறார்கள்.  தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும், பணம் கட்டிய ரசீதை எடுத்துக்கொண்டு தண்ணீர் கொண்டு தரும் இடத்திற்கு ஒரு வாரம் கழித்துச் செல்ல வேண்டும்.  தண்ணீரை அனுப்பும் படி கேட்டுக்கொள்ளவேண்டும்.  ஒரு லாரி தண்ணீர் ரூ.600 தான்.  அதை எடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு ரூ100 தரவேண்டும்.

எங்கள் தெருவில் தண்ணீர் லாரி வர பல தடைகள் உண்டு.  தெருவில் நுழைவதற்கு முன் இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிற்கும், பெரிய மெட்ரோ லாரி நுழைய முடியாதபடிக்கு மூன்று சக்கர வாகனம் நின்றுகொண்டிருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வந்து இந்த இடம் நாசமாகிப் போனது.  அந்த இடமா இப்படி வெயிலில் காய்கிறது என்று தோன்றுகிறது.  இந்த வலியைச் சமாளிக்க என்ன வழி என்று யோசிக்கிறேன்.  கீழ்க்கண்டவாறு சில முயற்சிகளை செய்து பார்க்கலாமென்று தோன்றுகிறது.

1. தினமும் குளிக்கும் வழக்கத்தை விட்டு விட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிக்கலாம்;

2.  துணி துவைப்பதைத் தள்ளிப் போடலாம்.  ஒரு சட்டை பேன்ட் ஒரு வாரம் வரை பயன் படுத்திக்கொள்ளலாம்.

3.  தண்ணீரை எல்லோரும் அளந்து அளந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. தண்ணீர் ரொம்பப் பிரச்சினையாக இருந்தால், உறவினர் வீட்டிற்குச் சென்று விடலாம்.  ஆனால் உறவினர் வீடு சென்னையை விட்டு வேறு எங்காவது இருக்க வேண்டும்.

5. யாராவது வீட்டிற்கு வருவதாக இருந்தால் தண்ணீரையும் கையில் கொண்டு வரும்படி சொல்லலாம்.

6. தண்ணீரும் கண்ணீரும் என்று கவிதை எழுதி மன ஆதங்கத்தைத் தணித்துக்கொள்ளலாம்.

7. துணியை அலசிய தண்ணீரை கீழே கொட்டாமல் அதையே பாத்திரம் கழுவவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

8.  என்னைப் போல் ரிட்டையர்டு ஆனவர்களுக்குத்தான் தண்ணீர் இல்லாமல் இருப்பது பிரச்சினை.  அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பிரச்சினை இல்லை.  குளிப்பது, காலைக் கடன்களை முடிப்பது எல்லாம் அலுவலகத்தில் முடித்துவிடலாம்.

9. தண்ணீரைப் பற்றிய கவலையை மறக்க.  எதாவது புத்தகம் எடுத்துப் படிக்கலாம்.  அந்தப் புத்தகம் போர் அடித்தாலும் பரவாயில்லை.

10.  எழுதத் தெரிந்தவராக இருந்தால் அசோகமித்திரன் தண்ணீர் நாவல் போல, தண்ணீர் குறித்து இன்னொரு நாவல் எழுதலாம்.

இதைத் தவிர உங்களுக்கு எதாவது வழி தெரி0ந்தால் சொல்லவும்.

தனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்

நகுலன் 1968ஆம் ஆண்டு மே மாதம் ஒரு இலக்கியத் தொகுப்பு கொண்டு வந்தார். அத் தொகுப்பின் பெயர் குருúக்ஷத்ரம் என்று பெயர். அத் தொகுப்பில் பல முக்கிய இலக்கிய அளுமைகள் பங்கு கொண்டுள்ளனர். மௌனி, பிரமிள், நீல பத்மநாபன், ஐயப்பப்ப பணிக்கர், நகுலன், சார்வாகன், அசோகமித்திரன் போன்ற பலர். அதில் ஒரு பெயர் எஸ் ரெங்கராஜன். அவர் ஒரு கதை எழுதி உள்ளார். அக் கதையின் பெயர் ‘தனிமை கொண்டு.’.
இக் கதையை எழுதியவர் வேறு யாருமில்லை. சுஜாதா என்ற எழுத்தாளர்தான். 17வயது பெண் எழுதிய டைரி மூலம் கதையை நகர்த்திக் கொண்டு போகிறாள். அண்ணனும் தங்கையும். தங்கையை தனியாக விட்டுவிட்டு அடிக்கடி அண்ணன் டூர் விஷயமாகப் போகிறான். அவளுடைய தனிமை அவளுக்கு கிருஷ்ணன் என்ற நபர் மூலம் ஏற்பட்ட துயரம்தான் இந்தக் கதை. வித்தியாசமான நடையில் வித்தியாசமாக எழுதப்பட்ட கதைதான் இது.
குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பில் வெளிவந்த கதைகளில் இக் கதை வித்தியாசமானது. இக் கதையை 1968ஆம் ஆண்டில் சுஜாதா எழுதி உள்ளார். அப்போது அவர் தொடர் கதை குமுதத்தில் வெளிவந்ததா? பிரபலமானவரா என்பது தெரியவில்லை.
இந்தக் கதையைப் படிக்கும்போது சுஜாதா கதை எழுதுவதில் திறமையானவர் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். மாலா என்ற 17வயது பெண்ணின் டைரியைப் படிக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
மாலா டைரியில் இப்படி எழுதுகிறாள் :
‘’முதல் தடவை. முதல் தடவை. என் வாழ்க்கைலே முதல் தடவை என்னை வேற ஒருத்தன் தொட்ட முதல் தடவை. உடம்பு எவ்வளவு ஜ்ர்ய்க்ங்ழ்ச்ன்ப். நான் என்னை குளிக்கிறபோது எவ்வளவு தடவை தொட்டுக்கறேன்..அண்ணா மேலே படறபோது ஒண்ணும் தெரியல்லையே…கிருஷ்ணன் இன்னிக்கு என் கன்னத்தைத் தட்டி கையை முழங்கைக்கு மேலே பிடித்து அழுத்தினான். எவ்வளவு வித்யாசமா இருந்தது?
எஸ் ரங்கராஜன் பற்றி நகுலன் இப்படி எழுதி உள்ளார். நான் சமீபத்தில் படித்த எழுத்தாளர்களில் எஸ் ஆர் ஒரு புதிய திருப்பத்தைச் சிறுகதையில் காண்பித்திருக்கிறார் என்பது என் அனுமானம். üüதீபýýத்தில் வந்த அவர் கதை ஞாபகம் வருகிறது. நடை உருவமாக மாறுகிறது அவர் கதையில். இங்கு வரும் கதையிலிருந்து சில பகுதிகள் :
“கிருஷ்ணா நீ புலி. நிழலிலே பதுங்கற புலி.”
“கிருஷ்ணன் என் மேலே புயல்போல வீசிண்டிருக்கான். அவன் என் மனசிலே ஜொலிக்கிறான். என் வயிற்றிலே பயமாப் பரவறான். என் உடம்பிலே ரத்தமா ஓடறான்.”
ஆழ்வாராதிகள் அழுது அரற்றி ஊன் கரைய உருகிப் பாடிப் பரவிய அவன் பெயரும் கிருஷ்ணன் தான் என்பது ஞாபகம் வருகிறது என்கிறார் நகுலன்.
குருúக்ஷத்ரம் இலக்கிய மலரில் வெளிவந்த இந்தக் கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

இனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்டும்…

தமிழில் எழுதுகிற எழுத்தாளர்களுக்கு சரியானபடி விருது கிடைப்பதில்லை. அங்கீகாரம் கிடைப்பதில்லை. உயிரோடு இருக்கும்போது யாரும் கண்டுக்கக் கூட மாட்டார்கள். இது ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படித்தான் நடக்கும். நான் பழகிய பல படைப்பாளிகளுக்கு இந்த அங்கீகாரம் சிறிது கூட இல்லை. சி சு செல்லப்பாவின் சுதந்திரதாகம் என்ற மெகா நாவலுக்கு சாகித்திய அக்காதெமியின் விருது அவர் மரணம் அடைந்தபிறகுதான் கிடைத்துள்ளது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் பரிசு வேண்டாமென்று சொல்லியிருப்பார். சி சு செல்லப்பா பிடிவாதக்காரர். அதேபோல் பரிசு கிடைக்காமல் விட்டுப்போன எழுத்தாளர்களின் பட்டியல் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நீண்ட பட்டியலையே கொண்டு வர முடியும்.

இந்தப் பரிசு கிடைக்க என்ன செய்வது என்று ஒவ்வொரு எழுத்தாளனும் யோசிக்கத் தொடங்கினால் அவன் எழுதாமல் ஓடிவிட வேண்டியதுதான். மா அரங்கநாதனின் இரங்கல் கூட்டத்தில் பேசியபோது மா அரங்கநாதனின் சிறுகதைகளுக்கு ஒரு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்திருக்கலாமே என்று தோன்றியது. மனித நேயத்தை ஒவ்வொரு கதையிலும் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். இதுமாதிரி சிறுகதைகள் எழுதுகிற எழுத்தாளர் இந்தியா அளவில் மற்ற மொழிகளில் இருப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.

கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளரை எடுத்துக்கொள்ளுங்கள். அவரைப் போல எழுத்தாளர் தமிழ் மொழியைத் தவிர வேற மொழியில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவருக்குக் கிடைத்தது என்ன?

சார்த்தருக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு முன்பே காம்யூவிற்கு நோபல் பரிசு கிடைத்துவிட்டது. அவருக்குப் பின் நோபல் பரிசை சார்த்தருக்கு அளித்தார்கள். அவர் வாங்க மறுத்துவிட்டார்.

நகுலன் என்ற எழுத்தாளர் என்னிடம் சொல்வார். என் புத்தகம் 36 பிரதிகள் அடித்தால் போதும். ஏன் என்று கேட்பேன். என் நண்பர்கள் 35 பேர்கள்தான் இருப்பார்கள். அவர்களிடம் புத்தகங்களை அனுப்பி விடுவேன். ஒரு பிரதியை நான் வைத்துக்கொள்வேன்.

இந்த அளவிற்கு தெளிவாக சிந்திக்கக் கூடியவர்தான் நகுலன். அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்க வில்லை. ஆனால் ஒருமுறை அவருக்கும் பரிசு கொடுத்தார்கள். அதை வாங்குவதற்கு அவர் பட்ட அவஸ்தையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மேடையில் கூச்சத்துடன் அமர்ந்திருந்தார். பரிசு கொடுக்கும்போது எழுந்து சென்று பரிசு வாங்குவதுபோல் போஸ் கொடுக்கவில்லை. பரிசு பெற்றவுடன் ஒரே ஓட்டமாக ஓடி வந்துவிட்டார். சமீபத்தில் அசோகமித்திரனுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்க எல்லோரும் சிபாரிசு செய்தார்கள். இந்த முறை உங்களுக்கு நிச்சயம் ஞானப்பீட பரிசு கிடைக்கும் என்றேன். அவர் அதை நம்பவில்லை. அதெல்லாம் கிடைக்காது என்றார். அதை நினைத்து கற்பனையும் செய்யவில்லை. அவர் சொன்னது மாதிரி ஞானப்பீட பரிசு கிடைக்கவில்லை.

நான் வங்கியிலிருந்து ஓய்வுப் பெற்றபிறகு, நானும் சிறந்த கவிதைத் தொகுதி, கதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி, நாவலுக்கு என்று எல்லாவற்றுக்கும் பரிýசு கொடுக்கலாமாவென்று யோசித்தேன். ஒரு பரிசு விதம் ரூ.10000 வரை பரிசு கொடுக்கலாமென்று யோசித்தேன். பின் அது மாதிரி கொடுப்பதில் உள்ள சிக்கலை என் நண்பர் சொன்னதும் அதிலிருந்து விலகிக்கொண்டேன். அது பெரிய ஆபத்தில் போய் முடிந்திருக்கும். ஏன் இந்தப் புத்தகத்திற்குப் பரிசு கொடுத்தீர்கள் என்று சண்டைக்கு வந்து விடுவார்கள். அப்படி சண்டை போடுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.

எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாளர் அதிகப் பக்கங்கள் கொண்ட அவர் புத்தகத்தை பரிசுக்கு அனுப்பி அது கிடைக்குமா என்று எதிர்பார்த்து ஏமாந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவர் எழுதிய புத்தகம் அவ்வளவு மோசமான புத்தகம் இல்லை. ஏனோ நடுவர்கள் கண்களுக்கு அந்தப் புத்தகத்தின் மேன்மை புலப்படவில்லை. என்ன செய்வது? பரிசு கொடுப்பதில் தேர்ந்தெடுப்பவர்களிடம் ஏதோ அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதேபோல் எதாவது போட்டிக்கு நான் கொண்டு வரும் புத்தகங்களை அனுப்புகிற தொற்று நோய் என்னை விட்டுப் போகவில்லை. தீராத இந்தத் தொற்று நோயிலிருந்து விலக வேண்டும். அதிலிருந்து விலகிப் பார்க்கிற மனோபாவம் வேண்டும். அங்கீகாரம் கிடைக்கவில்லை, விருது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டிருக்க வேண்டாம். யாருக்கோ யாரோ பரிசு அளிக்கிறார்கள். நாம் விலகியிருந்து பார்ப்போம். நமக்குப் பிடித்திருந்தால் நாமும் புத்தகங்களை வாங்கிப் படிப்போம். இல்லாவிட்டால் பேசாமல் ஒதுங்கி இருப்போம். புத்தகங்களை மட்டும் போட்டிக்கு அனுப்பிவிட்டு ஏங்கிக்கொண்டிருக்க வேண்டாம்.

கண்ணை மூடிக்,கொண்டு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறேன்.

 முன்றில் நினைவுகளும் மா அரங்கநாதனும்…

நான் டில்லியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.  அந்த ஒரு வாரத்தில் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.  முகநூல் பார்க்கவில்லை.  நான் வைத்திருந்த இரண்டு தொலைபேசிகளில் ஒன்றுதான் உபயோகத்தில் இருந்தது.  ரவி சுப்பிரமணியன் போன் ஒரு முறை வந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர் மூலம்தான் எனக்குத் தெரிந்தது மா அரங்கநாதன் இறந்து விட்டார் என்பது.  என்னால் நம்ப முடியவில்லை.  மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆகிவிட்டது.  ஆனால் என் அப்பா பொதுமருத்துவமனைக்கு ஒரு முறை சென்றபோது, ஒரு வாக்கியத்தை அடிக்கடி படிப்பார்.  ஒருவர் 60 வயதுக்குப் பிறகு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் அவனுக்குப் போனஸ் என்று.  என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றும்.  இதைக் குறிப்பிட்ட என் அப்பா 94 வயது வரை இருந்தார்.  அப்பா சொன்னது உண்மை என்பதை என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த பல நண்பர்கள் 60 ஆண்டுகள் முடிந்த சில ஆண்டுகளிலேயே இறந்து போவதைப் பார்த்து நினைத்துக்கொள்வேன்.

மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆனாலும் அவர் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை.  காரணம் அவர் சுறுசுறுப்பானவர்.  தடுமாறாமல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடக்கக் கூடியவர்.  தெளிவாகப் பேசக் கூடியவர். அளவுக்கு மீறி சாப்பிட வேண்டுமென்று ஆசை இல்லாதவர். மிக எளிமையான பழக்கவழக்கங்களைக் கொண்ட எளிய மனிதர்.  அவர் எப்படி மரணம் அடைந்திருக்க முடியும். 100 வயது வரை அவர் வாழ்ந்திருக்க வேண்டியவர்.  அதானல்தான் ரவிசுப்பிரமணியம் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.  மேலும் மா அரங்கநாதனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, தன் உடம்பில் ஏற்படும் அவதிகளை ஒருபோதும்  அவர் தெரிவித்ததில்லை.  அவருடைய மனைவியின் உடல்நிலை அவர் கவலைப்படும்படி சொல்வார். அதுவும் என்ன செய்வது என்பார்.  அவர் சென்னை வாசியாப இருந்து, பாண்டிச்சேரி வாசியாக மாறியபிறகு, அவரைச் சந்திப்பது என்பது சிரமமாகப் போய்விட்டது.  அதனால் போனில் பேசுவதோடு என் தொடர்பு எல்லை குறுகிவிட்டது.

ஆரம்ப காலத்தில் நான் மா அரங்கநாதனை மின்சார ரயிலில் பயணம் செய்யும்போது அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.  அவர் பூங்கா ரயில் நிலையத்தில் இறங்கி சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றுவிடுவார்.  நான் அவரைத் தாண்டி என் வங்கிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது இருவரும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொள்வோம்.  பேசிக்கொள்வோம். இரண்டொரு முறை அவருடைய அலுவலத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

அதன்பின் அவரைச் சந்தித்தது, ரங்கநாதன் தெருவில் உள்ள முன்றில் அலுவலகத்தில்.  அந்த அலுவலகம் ஒரு விசித்திரமான அலுவலகம்.  அப்போதெல்லாம் அங்கே வைத்திருக்கும் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ யாரும் வாங்க வருவதில்லை என்றே நினைக்கிறேன்.  ஆனால் அங்கே எழுத்தாளர்கள் கூடுவது வழக்கம்.  மா அரங்கநாதன் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் முன்றில் அலுவலகத்திற்கு வந்து விடுவார்.  60 வயதுக்கு மேல் அவர் அங்கு வந்தாலும், அவரிடம் சாப்பாடு விஷயத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும்.  வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து விடுவார்.  மேலும் மா அரங்கநாதன் யாருடன் பேசினாலும் அவர்களுடைய மனதைப் புண்படுத்துபம்படி பேச மாட்டார்.  தான் சொல்ல வேண்டிய கருத்தில் உறுதியாக இருப்பார்.

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும்.  அரங்கநாதன் முன்றில் என்ற பத்திரிகை நடத்திக்கொண்டு வந்தார்.  முதலில் அப் பத்திரிகையின் ஆசிரியர் க.நா.சு.  அதன் பின் அசோகமித்திரன்.  மா அரங்கநாதனுக்கு கநாசு மீதும், அசோகமித்திரன் மீதும் அளவுகடந்த மரியாதை உண்டு.  ஒரு முன்றில் இதழ் வந்தவுடன், விருட்சம் இதழ் தொடர்ந்து வரும்.  இரண்டும் அளவில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.  பக்க அளவும் அதிகமாகப் போகாது.  இரண்டு பத்திரிகைகளுக்கும் ஆதிமூலம்தான் லெட்டரிங் எழுதியிருப்பார்.  அசப்பில் பார்த்தால் இரண்டு பத்திரிகைகளும் ஒரே மாதிரியாகத்தான் ùதியும்.  ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பத்திரிகைகளும் ஒரே அச்சகத்தில் அச்சடிக்கப் பட்டிருக்கும்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு மா அரங்கநாதனே அந்தப் பத்திரிகை ஆசிரியராக இருந்தார்.  அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது, üஇந்த வயதில் இதத்னை துடிப்புடன் இருக்கிறாரேý என்று தோன்றும்.  கிட்டத்தட்ட அசோகமித்திரனை விட ஒரு சில ஆண்டுகள்தான் குறைவான வயது உள்ளவராக இருந்தார்.  இருந்தாலும் அவரைப் பார்க்கும்போது ஒரு இளைஞனாகத்தான் காட்சி அளித்தார்.

அவருடன் பேசும்போது அவருக்குக் கோபம் வருமா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி தோன்றும்.  எதையும் நிதானமாகத்தான் பேசுவார்.  அவர் பேசும்போது யார் மீதும் அவருக்கு அன்பு உள்ளதுபோல் உணரமுடியும்.  அவர் சிறுகதைகள் எழுதுவதில் நிபுணர் என்பதை அப்போதெல்லாம் நான் உணரவில்லை.  ஏன்என்றால் எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாகப் பேச மாட்டார்.

ஒருமுறை அவருடைய சிறுகதைத் தொகுதியை என்னிடம் கொடுத்தார்.  அந்தப் புத்தகத்தின் விமர்சனம் விருட்த்தில் வர வேண்டுமென்று விரும்பினார்.  நான் கொடுக்கக் கூடாத ஒருவரிடம் அவர் புத்தகத்தை விமர்சனத்திற்காகக் கொடுத்து விட்டேன்.  அவரும் அந்தப் புத்தகத்தை தேவையில்லாமல் தாக்கி எழுதியிருந்தார்.  எனக்கு சங்கடமாகப் போய்விட்டது.  நானே கூட அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கலாம், ஏன் இப்படி செய்தோம் என்று வருத்தமாக இருந்தது.  மா அரங்கநாதனிடம் அவர் எழுதிய விமர்சனத்தைக் கொடுத்தேன்.  அதைப் படித்து மா அரங்கநாதனுக்கும் சற்று வருத்தமாக இருந்தது.

‘அவர் எழுதிய விமர்சனத்தை விருட்சத்தில் பிரசுரம் செய்ய மாட்டேன்,’ என்று அவரிடம் கூறினேன்.

அந்த விமர்சனத்தை மட்டும் நான் பிரசுரம் செய்திருந்தால் மா அரங்கநாதன் என்ற நல்ல நண்பரின் நட்பை இழந்திருப்பேன். ஒரு சமயம் நான் பிரசுரம் செய்திருந்தால் அவர் அதைக் கூட பெரிசாக எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.  என்னால் எதுமாதிரி நடந்திருக்கும் என்று இப்போது யூகிக்க முடியவில்லை.

விருட்சமும் முன்றிலும் இரண்டு சகோதரிகள் போல் ஒன்று மாற்றி ஒன்று வந்தாலும், இரண்டும் வேறு விதமான பத்திரிகைகள்.ஒரு சந்தர்ப்பத்தில் முன்றில் ஒரு இலக்கிய விழா நடத்தியது.  அது பெரிய முயற்சி.  அதன் தொடர்ச்சிதான் காலச்சுவடு தமிழ் இனி 2000 என்று விழா நடத்தியதாக எனக்குத் தோன்றுகிறது.

மா அரங்கநாதனிடம் ஒரு எழுத்தாளர்தான் ரொம்ப ஆண்டுகளாக தொடர்பு இல்லாமல் இருந்தார் என்று நினைத்தேன்.  ஆனால் சிலகாலம் கழித்து அந்த எழுத்தாளரும் முன்றில் அலுவலகத்தில் மா அரங்கநாதனுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.  அவர் வேறு யாருமில்லை.  பிரமிள்தான். பிரமிளுடன் யார் பேசினாலும் தொடர்ந்து நட்புடன் இருக்க முடியுமா என்பது சந்தேகம்.  மா அரங்கநாதன் எப்படி பிரமிளை சமாளிக்கப் போகிறார் என்று கவலையுடன் இருந்தேன்.   ஒரு முறை பிரமிளிடம் நான் கேட்டேன். ‘மா அரங்கநாதனின் கதைகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்று.  ‘நான் இப்போது ஒன்றும் சொல்ல மாட்டேன்,’ என்றார் பிரமிள்.  கொஞ்சங்கூட உயர்வாக சொல்ல மனம் வரவில்லையே என்று எனக்குத் தோன்றியது.  மா அரங்கநாதன் எழுத்தை அசோகமித்திரன், நகுலன் போன்ற எழுத்தாளர்கள் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்கள். எழுதவும் எழுதியிருக்கிறார்கள்.  க நாசுவும் எழுதியிருக்கிறார்.

பிரமிளுக்கும் மா அரங்கநாதனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விட்டது.  முன்றில் பத்திரிகையில் அது எதிரொலிக்க ஆரம்பித்தது.  உண்மையில் பிரமிள் படைப்புகள் மீது மா அரங்கநாதனுக்கு அபாரமான லயிப்பு உண்டு.  சண்டைப் போட்டாலும் பிரமிள் கவிதைகளைப் புகழ்ந்து சொல்வார்.  ஆனால் கருத்து வேறுபாடு வந்தபோது, பிரமிளைப் பற்றி தனக்கு ஒவ்வாத கருத்துக்களையும் அவர் எழுதத் தவறவில்லை.  உண்மையில் கொஞ்சம் தைரியயமாக எழுதியவர் மா அரங்கநாதன்தான்.   அப்போது அதையெல்லம் படிக்கும்போது, ஐயோ ஏன் இப்படி எழுதிகிறார், அவருடன் மோத முடியாதே என்று எனக்குத் தோன்றும்.  யாராவது பிரமிள் மீது ஒரு அடி பாய்ந்தால் பிரமிள் 10 ஆடி பாய்வார்.  மேலும் பிரமிள் ஒரு பத்திரிகையைப் பற்றி எதாவது எழுத ஆரம்பித்துவிட்டால், அந்தப் பத்திரிகை தொடர்ந்து வராமல் நின்றுவிடும்.  இது என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.  பிரமிள் உள்ளே புகுந்து கலகம் செய்ததால் பல சிறு பத்திரிகைகள் நின்றே விட்டன என்று கூறுவேன்.  முன்றில் எள்ற எளிய பத்திரிகைக்கும் அதுமாதிரி நடந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது.  விருட்சத்துடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த முன்றில் என்ற சகோதரி பத்திரிகை நின்று போனதில் விருட்சத்திற்கு வருத்தம்.  அதேபோல் முன்றில் கடையும் முடப்பட்டுவிட்டது.   தொடர்ந்து நஷ்டத்துடன் வாடகைக் கொடுத்துக்கொண்டு நடத்துவது என்பது முடியாத காரியம்.  அதை அவர்கள் நிறுத்தும்படி ஆகிவிட்டது.

அதன் பின்னும் மா அரங்கநாதன் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.  சிறுகதை எழுதுவதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். 90 கதைகள் எழுதியிருக்கிறார்.

மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகத்தில் மா அரங்கநாதன் இப்படி எழுதி உள்ளார் :

üகதை என்றால் என்ன – கவிதை என்றால் என்ன – கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறேன்,ý என்று.

மா அரங்கநாதனை நான் அடிக்கடி சந்திக்க முடியாமல் போய்விட்டாலும், தொலைபேசியில் என்னை விஜாரிக்காமல் இருக்க மாட்டார்.  விருட்சம் பத்திரிகையை அவர் முகவரிக்குக் கட்டாயம் அனுப்பச் சொல்வார்.  ‘நீங்கள் ஏன் எனக்கு கதைகள் அனுப்பக் கூடாது,’ என்பேன்.  எனக்கு இரண்டு மூன்று கûதாகள் அனுப்பியிருக்கிறார்.

எதை எழுதி அனுப்பினாலும் அதில் அவர் திறமை வெளிப்படும்.

பொதுவாக என் அலுவலகத்திற்குப் போன் செய்து பென்சன் கிரிடிட் ஆகிவிட்டதா என்று விஜாரிப்பார்.  அப்போதுதான் அவர் கணக்கில் ஒன்றை கவனித்தேன்.  அவர் பென்சன் கணக்கில் நாமினேஷன் இல்லாமல் இருந்தது.

“சார் நாமெல்லாம் எத்தனை வருஷம் இருப்போம்னு சொல்ல முடியாது.. நாமினேஷனில் உங்கள் பையன் பெயரையோ பெண் பெயரையோ போடாமல் இருக்காதீர்கள்?” என்று சொல்லிக்கொண்டிருப்பேன்.  நாமினேஷன் இல்லாமல் இருந்தால் அவருடைய பணத்தை அவருக்குப் பின் வாங்குவதில் பிரச்சனையாக இருக்கும்.

நான் சொன்னபடி அவர் நாமினேஷன் போட்டிரு&ப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

நாம் ஒரு எழுத்தாளரைப் பற்றி பேசுகிறோம் என்றால் அவர் ஒன்று எதாவது பரிசு வாங்கியிருக்க வேண்டும்.  அதாவது சாகித்திய அகாதெமி பரிசுபோல் ஒன்று வாங்கியிருக்க வேண்டும்.  அல்லது அந்த எழுத்தாளர் மரணம் அடைந்திருக்க வேண்டும்.  மா அரங்கநாதனைப் பற்றி நாம் அவர் மரணம் அடைந்த பிறகுதான் பேசுகிறோம்.  இது வருத்தத்தற்குரிய விஷயம்.  அவருடைய முழு தொகுதி வந்தபோது அது குறித்து எதாவது கூட்டம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஏனோ யாரும் கண்டுகொள்ளவில்லை.

நற்றினை என்ற பதிப்பகம் மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகத்தை 1022 பக்கங்களில் அற்புதமாக அச்சடித்து கொண்டு வந்திருக்கிறது.  ரூ890 கொண்ட இப்புத்தகம் முக்கியமான புத்தகம் என்று நினைக்கிறேன்.  மா அரங்கநாதனை முழுவதுமாக இதன் மூலம் அடையாளம் காண முடியும். இது அவருக்குக் கிடைத்த கௌரவம் என்று நினைக்கிறேன்.  அதேபோல் ரவி சுப்பிரமணியன் அவரைக் குறித்து எடுத்து ஆவணப்படமும் முக்கியமானதாக நினைக்கிறேன்.  எஸ் சண்முகம் அவரைப் பேட்டி கண்டு அற்புதமான புத்தகம் ஒன்று கொண்டு வபந்திருக்கிறார்.  அதில் மா அரங்கநாதனின் புகைபடங்கள் அற்புதமாக பதிவு ஆகியிருக்கும்.

மா அரங்கநாதன் கதைகளில் எப்படியும் முத்துக் கருப்பன் என்ற பெயர் வராமல் இருக்காது.  அந்த முத்துக் கருப்பன் என்பவர் யார்? அவர் வேறு யாருமில்லை மா அரங்கநாதன்தான்.  ஆரம்பத்திலேயே அவருடைய எல்லாக் கதைகளைப் படித்திருக்கிறேன். திரும்பவும் இப்போது அவர் கதைகளைப் படிக்கத் தோன்றுகிறது.  அதற்கு ஏற்றார்போல் மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகமும் என்னிடம் இருக்கிறது.

இங்கு வருவதற்கு முன் கண்ணை மூடிக்கொண்டு ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தேன்.  அலுப்பு என்பது அந்தக் கதை.  கதை ஆரம்பிக்கும்போது முத்துக்கருப்பன் என்ற பெயர் எங்கும் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு படித்தேன்.  கதை படித்துக்கொண்டே இருக்கும்போது முத்துக்கருப்பன் வந்துவிட்டார்.  மா அரங்கநாதன் முத்துக் கருப்பனாக என் கண்ணில் தென்பட்டார்.  இந்தக் கதையை இங்கு வருவதற்குள் மூன்று முறை படித்துவிட்டேன்.  அக் கதையில் வருகிற முத்துக்கருப்பன் அதாவது மா அரங்கநாதன் இறந்து விடுகிறார்.  அந்தக் கதையை அவர் எழுதிக்கொண்டு போகிற விதம் அபாரம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலந்து கலந்து எழுதியிருக்கிறார்.  அவர் எழுத்தில் நான் காண்பது மனித நேயம்.  இந்தக் கதையிலும் அது தென்படாமல் இல்லை. மனித நேயம் சிலசமயம் நம்மை ஏம்மாற்றவும் ஏமாற்றி விடும்.  பெரும்பாலபன எழுத்தாளர்கள் துரோகத்தைதான் அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதுவார்கள்.  அல்லது வருமைச் சித்தரிப்பை கதைகளாகக் கொண்டு வருவார்கள்.   இந்தக் கதையை அவர் 1988ல் எழுதியிருக்கிறார்.  இந்தக் கதையை இன்னொரு முறை படித்தாலும் அதில் எதாவது தென்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.

இத் தொகுப்பில் 90 கதைகள் உள்ளன.  தன் வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு கதைகயாக எழுதிப் பார்த்திருக்கிறார்.

சமீபத்தில் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்து அனுப்பச் சொல்லி ஒரு செக் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பாவிட்டாலும் பத்திரிகையை அவருக்கு அனுப்பியிருப்பேன்.  இனிமேல் யாருக்கு பத்திரிகையை அனுப்புவது.

இக் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்த ரவிசுப்பிரமணியத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(26.04.2017 அன்று கவிக்கோ அரங்கத்தில்  மா அரங்கநாதன் குறித்து நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய கட்டுரை)

மூன்று வித எழுத்தாளர்கள்…..

எழுத்தாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். முதல் வகை எழுத்தாளர்கள் அவர்களுக்குள்ளே எழுதுபவர்கள். எதைப் பார்த்தாலும் படித்தாலும் கதைகள், கவிதைகள் என்று எழுதித் தள்ளிவிடுவார்கள். இவர்களுடைய படைப்புகளும் பெரும் பத்திரிகைகளில் எளிதாக நுழைந்து விடும். குறிப்பாக பாக்கெட் நாவல்கள் எல்லாம் இப்படிப்பட்ட எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன. கை வலிக்க வலிக்க எழுதிக்கொண்டே போவார்கள் அல்லது டைப் அடித்துக்கொண்டே போவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் பத்திரிகைக்கு பக்கங்களுக்கு ஏற்ப கதைகள் எழுதித் தருவார்கள். அரைப்பக்கம் வேண்டுமென்றால், அரைப்பக்கம், ஒரு பக்கம் வேண்டுமென்றால் ஒரு பக்கம் என்றெல்லாம்
 
அந்தக் காலத்தில் குமுதத்தில் வாராவாரம் சரஸ்வதி பஞ்சு என்கிற பெயரில் ஒரு பெண்மணி கதைகள் எழுதிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு வாரமும் வராமல் இருக்காது. இந்த முதல் வகை எழுத்தாளர்களின் வழக்கம் என்னவென்றால் கதை வேண்டுமென்றால் கதை, கட்டுரை வேண்டுமென்றால் கட்டுரை, கவிதை வேண்டுமென்றால் கவிதை என்று இயந்திரத்தனமாக எழுதிக்கொண்டே போவார்கள். இவர்கள் மேலும் எழுத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஏகப்பட்ட பாக்கெட் நாவல்கள் எழுதியிருக்கிறார். அவரிடம் உள்ள திறமையால் அதெல்லாம் எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். இவர்களைப் படிக்க வாசகர் கூட்டம். அதிகமாகவே இருக்கும். எப்படி இவர்கள் சிந்திக்காமல் எழுதியிருக்.கிறார்களோ அதேபோல் வாசகர்களும் அவற்றைப் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடுவார்கள். இதுதான் முதல் வகை எழுத்து. இவர்கள் எழுதினாலும் தங்கள் முகங்களை வாசகர்களிடம் காட்ட மாட்டார்கள். அல்லது வாசகர்களை சந்திக்கப் பயப்படுவார்கள். நன்றாகப் பொழுது போகிற மாதிரி எழுதித் தள்ளிவிடுவார்கள்.
 
இப்போது இரண்டாவது வகை எழுத்தாளர்களைப் பார்ப்போம். இவர்களும் எழுதுவதற்கு சளைத்தவர்கள் அல்லர். இவர்கள் முதல்வகையைச் சார்ந்தவர்கள் போல் அவர்களுக்குள்ளேயும், மற்றவர்களுக்காகவும் எழுதுவார்கள். இவர்களுக்கு கûதாகள் குறித்து தெளிவான பார்வை உண்டு. புதுமைப்பித்தன், மௌனி என்று பலருடைய கதைகளைப் படிப்பதோடல்லாமல், அவர்கள் எழுதிகிற கதைகள் எப்படி எழுதப் படுகின்றன என்ற சிந்தனையும் கொண்டவர்கள். ஒரு கதை எப்படி இருக்க வேண்டுமென்று இலக்கியக் கூட்டங்களில் இவர்களால் பேச முடியும். ஆனால் முதல் வகை எழுத்தாளர்கள் மாதிரி அதிகமாக கதைகளை எழுதித் தள்ள மாட்டார்கள். இவர்களில் ஒருசில எழுத்தாளர்களே எல்லோருடைய கவனத்திற்கு வருவார்கள். இந்த இரண்டாம் வகை எழுத்தாளர்களுடன்தான் வாசகர் வட்டம் சுற்றி சுற்றி வரும். நான் பெரியவனா நீ பெரியவனா என்று போட்டியெல்லாம் வரும். இவர்களில் ஒரு சில எழுத்தாளர்கள் பெரும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து கவனத்தைப் பெறுவார்கள்.
 
மூன்றாவது வகை எழுத்தாளர்கள் உலகத் தரத்தில் எழுதக் கூடிய எழுத்தாளர்கள். இவர்களை படிப்பவர்கள் தானே போய் கண்டுபிடித்து படித்துக்கொண்டிருப்பார்கள். எந்த மொழியில் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் அறியும். ஆளால் ஒரு சிலர்தான் இவர்களை முழுவதும் புரிந்துகொள்ள முடியும். இவர்களை உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள். ரொம்ப அரிதாகவே இதுமாதிரியான எழுத்தாளர்களை நாம் காணமுடியும்.
 

உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்?

நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன்.  ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன்.  அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார்.  தமிழில் எழுதவதை நிறுத்தி இருந்தார்.  கடுமையான சண்டை.  அல்லது பத்திரிகையே இல்லை எழுத.  அஞ்ஞானவாசம் மாதிரி தனித்து இருந்தார்.  நான் பிரமிளுடன் பேசிக்கொண்டிருந்தவன், வெங்கட் சாமிநாதன் எப்படி என்று அறிய ஆவல். வெங்கட் சாமிநாதன் எழுத்தில் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்கிற தன்மை இருக்கும்.  ஆனால் கடுமையாக விமர்சனம் செய்வார்.  பிரமாதமான உரைநடை.  அவர் உரைநடையில் நாவலோ சிறுகதையோ எழுதுவதாக இருந்தால் நன்றாக இருந்திருக்கம். அவர் தன்னை விமர்சகராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினார். அவரைப் போலவே கடுமையா க விமர்சனம் செய்பவர் பிரமிள். இவர்கள் இருவரும் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலை கலகலக்க வைத்தவர்கள்.

டில்லியிலிருந்து சென்னைக்கே வந்துவிட்டார் வெங்கட் சாமிநாதன்.  தனியாக வீடு கட்டிக்கொண்டு மடிப்பாக்கத்தில் இருந்தார்.  அடிக்கடி அவரைப் பார்ப்பதோடு அல்லாமல் போனில் பேசவும் செய்வேன்.

ஒவ்வொரு முறையும் வெங்கட் சாமிநாதனைப் பார்க்கும்போதும், தொலைபேசியில் பேசும்போதும், ‘உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்பார்.  எனக்கு யாரும் குருநாதர்கள் கிடையாது என்பேன்.  அவர் கடுமையாக, ‘ஏன்யா பொய் சொல்றே அசோகமித்திரனும், ஞானக்கூத்தனும்தான் உன் குருநாதகள்தானே’ என்பார். உங்களுடன் பேசுவதுபோல்தான் அவர்களுடன் பேசுகிறேன்.  அப்படியென்றால் நீங்களும் என் குருநாதர்தான் என்பேன்.

என் மீது வெங்கட் சாமிநாதனின் இந்தக் கோபம் அவ்வளவு எளிதில் போகவில்லை. கடைசி வரை நீடித்திருந்தது.  கடைசியாக அவரை எப்படியாவது பார்க்க வேண்டுமென்று பெங்களுக்குச் சென்றபோது அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அப்போது அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன.  அந்தக் கடைசி முறை சந்திப்பிலும் அவர் கோபமாக இருந்தார்.  உங்கள் குருநாதர் என்னய்யா சொல்றாங்க என்று கிண்டலடித்தார்.

அவர்கள் மீத உள்ள இந்த வன்மத்தை கடைசிவரை விடவில்லை.  இத்தனைக்கும் அவர் நல்ல நண்பர்.  பல புத்தகங்களைப் படித்துவிட்டு தன் கருத்துக்களைத் தெரிவித்து கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்.   நான் அவருக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறேன்.  தில்லியிலிருந்து அவர் சென்னை வந்தபோது தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன்.

இதெல்லாம் தெரியப்படுத்துவது கூட ஆணவத்தின் செயல்பாடாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன்.  என்னைப் பார்த்தவுடன் சுர்ரென்று அந்தக் கோபம் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. போன் செய்தால் கூட, üஉன் குருநாதர்கிட்டே பேசு என்னிடம் ஏன் பேசுகிறாய்ý என்று சீறி விழும் அளவிற்குப் போய்விட்டவர்.  போனை வைத்துவிடுவார்.  இதற்குப் பயந்தே அவருடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தேன்.  அவருடைய கோபம் யார் மீது..பிரமிளிடமும் இந்தப் பிரச்சினை இருந்தாலும் வெங்கட்சாமிநாதனைப் போல் தீவிரமாக இல்லை.

அசோகமித்திரனையும் ஞானக்கூத்தனையும் பார்த்து, உங்களை என் குருநாதர்கள் என்று சொல்லி வெங்கட் சாமிநாதன் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என்று சொல்வேன்.  அவர்கள் அதைக் கேட்டு சிரிப்பார்கள்.

உண்மையில் நான் அசோகமித்திரனையும் ஞானக்கூத்தனையும் என் குருநாதராக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  ஞானக்கூத்தன் என்னை விட 15 ஆண்டுகள் மூத்தவர்.  அசோகமித்திரனோ 22 வயது பெரியவர்.  நான் வெங்கட் சாமிநாதனை மதிப்பதுபோல் அவர்களையும் மதித்தேன்.  வெங்கட் சாமிநாதனை எப்படி போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேனோ அதேபோல் ஞானக்கூத்தனையும், அசோகமித்திரனையும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  மேலும் சில ஆண்டுகள் நான் சென்னையில் இல்லை.  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அசோகமித்திரனுடனும் ஞானக்கூத்தனிடமும் என் நட்பு இயல்பாக இருந்தது.

நான் ஒவ்வொருவரிடமும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.  அப்படி கற்றுக்கொள்ளும்போது நான்தான் எனக்கு குருவாகவும், சீடனாகவும் இருக்க முடியும் போல் தோன்றுகிறது.

KEEP QUITE

நமக்கு சில வார்த்தை ரொம்பவும் யோசனை செய்ய வைக்கும். அதுமாதிரியான வார்த்தைதான் KEEP QUITE.  நம்மால அப்படி அமைதியாய் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா என்பது தெரியவில்லை.  சும்மா அப்படி இருக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.  அப்படி இருந்துவிட்டால் பெரிய சண்டைகளே வராது.  ஆனா முடியுமா?  சமீபத்தில் யு ட்யூப்பில பாபாஜி அவர்கள் இது குறித்துப் பேசுவதைக் கேட்டேன்.

அவர் குறிப்பிட்டதுபோல அப்படி இருந்து பார்த்தால் என்ன? உண்மையில் ஒருவர் அப்படி இருக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் நாம எதிலாவது மூக்கை நுழைப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது.  யார் நம்மைத் திட்டினாலும், எதாவது சொன்னாலும் காதில வாங்கிக்கொண்டு கீப் கொய்ட்டாக இருக்க முடியுமா? முடியாது..முடியாது.  ஆனால் அப்படி மட்டும் இருந்துவிட்டால் வாழ்க்கை பிரமாதமாக இருக்கும். யோசித்துப் பார்த்தால் நான் பெரும்பாலும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்.  என் அனுபவத்தை இங்கு பட்டியல் இடுகிறேன். ஆனால் இன்னும் இந்த கீப் கொய்ட்டைப் பற்றி யோசிக்க வேண்டும். பக்குவம் அடைய வேண்டுமென்று நினைக்கிறேன்.  கீப் கொயட் என்பது எப்போதும் உள்ள ஒரு நிலை.  அதை அடைய தவம் செய்ய  வேண்டும்.

என் வீட்டில் உள்ளவர்க்கு நான் புத்தகம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவது பிடிக்காது.  கீப் கொய்ட்டாக இருக்க வேண்டுமானால் புத்தகமே வாங்கிக்கொண்டு வரக் கூடாது.  நம்மாள அதுமாதிரி இருக்க முடியுமா?  சமீபத்தில் ஒரு புத்தகக் காட்சியில் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் விதம் பத்துப் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்.  உண்மையில் கீப் கொய்ட்டாக இருக்க வேண்டிய நான் அப்படி இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் யாருக்கும் தெரியாமல் புத்தகங்களை ஒளித்து வைக்க வேண்டும்.  முடியுமா?  கீப் கொய்ட் இங்கே எப்படி கொண்டு வருவது.  அதனால வண்டியிலே புத்தகக் கட்டை வைத்து விட்டு பூனைபோல் வீட்டிற்குள் நுழைந்து விட்டேன்.  பின் ராத்திரி வீடை பூட்ட நான் கிளம்பியபோது, புத்தகக் கட்டை மெதுவாக எடுத்துக்கொண்டு வந்து ஒரு ஓரத்தில் வீட்டில் இருப்பவருக்குத் தெரியாமல் வைத்துவிட்டேன்.  பின் அது குறித்து மூச்சு விடவில்லை.  எப்படி கீப் கொய்ட்டை கண்டுபிடித்தேன் பாருங்கள். உண்மையில் பிரச்சினை தீர்ந்து விட்டதாக நீங்கள் நினைத்து விடாதீர்கள்.  வீட்டில் உள்ளவர் ஒருநாள் நான் புத்தகங்கள் வைத்திருக்கும் இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, üஇந்தப் புத்தகம் எப்படி வந்தது.  முன்னே இல்லையே?ý என்று குரல் கொடுத்துக் கத்தும்போது, பாபாஜியின் அறிவுரை எனக்கு கை கொடுக்கும்.  அதாவது கீப் கொய்ட்.  எதாவது பதில் சொன்னால் மாட்டிக்கொண்டு விடுவோம்.  பதிலே சொல்லாமல் இருந்து விடுங்கள்.  எவ்வளவு அற்புதமாக பிரச்சினை தீர்ந்து விடுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

என்ன செய்வது நம்மால் சும்மா இருக்க முடியவில்லை. செலவு செய்து புத்தகங்கள் கொண்டு வருகிறோம்.  வீட்டில் இருப்பவருக்கத் தெரியாமல்தான் வேற இடத்தில் அவற்றை பத்திரப்படுத்த வேண்டி உள்ளது.  அந்தப் புத்தகங்களில் இருந்து இரண்டு இரண்டு புத்தகங்களாக எடுத்து நாலாவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறேன்.  அவர்கள் எதாவது எழுதினால் புத்தகங்களை ஒன்றிரண்டு பேர்கள் வாங்குவார்கள்.  ஆனால் பாருங்கள் அந்தப் பத்திரிகை நடத்துபவருக்கு எப்படி பாபாஜி சொன்னது தெரியும் என்பது தெரியவில்லை.  அவர்கள் கீப் கொய்ட்டாக இருந்து விடுவகிறார்கள்.  நமக்கோ அவதி.  என்ன ஆச்சு நம் புத்தகங்களுக்கு. வரப்பெற்றோம் என்று போட்டால் போதாதா என்றெல்லாம் அவதிப்படுவோம்.  இந்த இடத்தில்தான் நாமும் பத்திரிகைக்காரர்கள் மாதிரி கீப் கொய்ட்டாக இருக்க தெரிந்திருக்க வேண்டும்.  பிரச்சினையே இல்லை பாருங்கள். ஆனால் அச்சடித்தப் புத்தகங்களை வீட்டில் பார்க்கும்போது கீப் கொய்ட்டாக இருக்க தவறி விடுகிறது.

எனக்கு எழுத்தாள நண்பர்கள் பலர்.  இதில் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வது வாடிக்கையான ஒன்று.  ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மீது விடத்தான் விடுவேன்,’ என்று ஆவேசமாக ஒரு கவிஞர் என்னிடம் கத்தி சண்டைக்கு வருவதுபோல் வந்து விட்டார்.  அப்போது நான் கீப் கொய்ட்டாகத்தான் இருந்தேன்.  எழுதிய கவிஞரைப் பார்க்கும்போதும் கீப் கொய்ட்டாகத்தான் இருந்தேன்.  பிரச்சினை தீர்ந்து விட்டது.

ஆர்யக் கவுடர் ரோடில் ஒரு பேப்பர் கடை இருக்கிறது.  பிள்ளையார் கோயில் பக்கத்தில.  அந்தக் கடைக்காரர் சுற்றி பூனைகள் நடமாடிக்கொண்டிருக்கும்.  விருட்சம் என்ற பத்திரிகை தெரியுமா உங்களுக்கு. 29 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறேனே? அந்தக் கடைக்காரரிடம் விற்கக் கொடுத்தேன்.  பின் விற்றதா விற்றதா என்று பலமுறை போய்க் கேட்டேன்.  அவரிடமிருந்து அலட்சியமான பதில்தான் வந்தது.  அவரிடம்போய் விற்காத பத்திரிகையாவது பணமாவது கொடுங்கள் என்றால், அவர் அசையலே இல்லை.  ஆனால் அவரிடமிருந்த பூனைகள்தான் அசைந்து இங்கும் அங்கும் ஓடின.  கீப் கொய்ட் மந்திரம் செம்மையாகப் பயன் பட்டது.

பல முறை கேட்டும் பலனளிக்காத அவர் கடை முன் நின்றுகொண்டு கீப் கொய்ட் என்ற கண்ணை மூடிக்கொண்டேன்.  பின் அங்கிருந்து வந்து விட்டேன்.  இப்போது நிம்மதியாக இருக்கிறது.  இப்படித்தான் நாம் பிரச்சினையை சரி செய்துகொள்ள வேண்டும்.

கோபலபுரத்தில் என் நண்பர் இருக்கிறார்.  ஒரு கூட்டத்தில் நான் வாங்கிய புத்தகத்தை அவர் நைஸôக படிக்கிறேன் என்று வாங்கிக்கொண்டு விட்டார். ஆனால் அவர் திருப்பியே தரவில்லை.  கீப் கொய்ட்டாக இருக்க வேண்டியிருந்தது.  அவரை எங்காவது பார்த்துவிட்டால் மனம் படபடப்பாக மாறி விடுகிறது.  ஆனாலும் கீப் கொய்ட்டாக இருந்தேன்.  ஒரு முறை ஒரு கூட்டத்தில் அவரைப் பார்த்துவிட்டேன்.  கீப் கொய்ட்டாக அவர் பார்க்காமல் நழுவி விடலாமென்று நினைத்தால் என் பக்கத்திலேயே அவர் உட்கார்ந்து விட்டார். நான் பேசாமல் அங்கும் இங்கும் பார்த்தேன்.  பின் அவர் பேசினார் : üüஉன் புத்தகம் என்னிடம் இருக்கிறது.  உனக்கு எதற்கு? நானே வைத்துக்கொள்கிறேன்..ýý என்றார்.  அப்போது நியாயமாக அவர் மீது எழுந்த கோபத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு கீப் கொய்ட்டாக இருந்தேன்.  கீப் கொய்ட்டாக அவர் பார்வையில் படாமல் ஒதுங்கியும் விட்டேன்.  இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களில் அவரைப் பார்த்தால் ஓட்டமாக ஓடி விடுகிறேன். கீப் கொய்ட் என்னை ஓட வைத்துவிட்டது.

பாபாஜி பயன்படுத்திய கீப் கொய்ட்டை யோசியுங்கள். வாழ்க்கை அற்புதமாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் நடக்கும் எந்த அக்கிரமத்தைக் குறித்தும் நாம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  கீப் கொய்டாக இருப்பதைத் தவிர. உங்கள் வாழ்க்கையிலும் இதுமாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கும்.

படைப்பாளியா படைப்பா யார் முக்கியம்

சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பங்களூர் சென்றேன். ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம்.  பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டேன்.  என் நண்பர்கள் வேண்டாம் என்றார்கள். அவர்கள் சொன்னபடியே அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போகவில்லை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது ஒரு படைப்பை நாம் படிக்கிறோம்.  படித்துவிட்டுப் பரவசப்படுகிறோம்.  அந்த எண்ணத்தில் எழுத்தாளரைப் பார்க்க வேண்டுமென்று நினைப்பது அபத்தம் என்று தோன்றுகிறது.  அப்படி பக்தி பரவசத்தோடு படைப்பாளியை நாம் பார்க்கச் சென்றால், நமக்கு பெரிய ஏமாற்றமே கிட்டும்.  நாம் எதிர்பாரக்ககும் நிலையில் படைப்பாளி தென்பட மாட்டான்.

உண்மையில் படைப்பாளி வேறு, படைப்பு வேறு.  சினிமாவில்தான் ஒரு நடிகரின் பின்னால் ரசிகர் மன்றம் அமைத்து நடிகரை தேடி ஓடுவார்கள். சினிமா என்றால் அது பலருடைய முயற்சி. ஆனால் நடிகர் நடிகைக்குத்தான் அதில் முக்கிய பங்கு கிடைக்கிறது. இது சரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு படைப்பு நன்றாக படைக்கப்பட்டிருந்தாலும், படைப்பாளனை ஒரு தெய்வப்பிறவியாக நினைத்துப் பார்க்கச் செல்வதுபோல ஒரு அபத்தம் வேறு எதுவும் இல்லை. இதை ஒரு படைப்பாளியும் விரும்ப மாட்டான்.  நான் சந்தித்த பல படைப்பாளிகள் சாதாரண மனிதர்கள்.  அவர்கள் பின்னால் எந்த ஒளிவட்டமும் இல்லை. சாதாரணமாக நம் உறவினர்களை, நண்பர்களைப் பார்க்கச் செல்வதுபோல்தான் அவர்களையும் பார்க்கச் செல்வென். எழுத்து குறித்தும், படைப்புகளைக் குறித்தும் சாதாரணமாகப் பேசுவதபோல்தான் பேசிக்கொண்டிருப்போம்.

இம்பர் உலகம் என்ற கவிதைப் புத்தகத்தில் ஞானக்கூத்தன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

கவிதையின் பெயர் –  பொய்த்தேவு

பொய்த் தேவு
சைக்கிள் ரிக்ஷாவில் தன்னுடைய
கனமான உடம்புடன் ஏறி
அமர்ந்து கொண்டார் க.நா.சு.
திருவல்லிக்கேணி பெரிய தெருவில்
நல்லியக் கோடன் பதிப்பாலயம் இருந்தது
தேவாலயத்தைக் காட்டிலும்
புத்தகாலயத்தைப் போற்றிய க.நா.சு.
பதிப்பாலயம் நோக்கிப் புறப்பட்டார்
நாவலுக்கான ராயல்டி
கிடைக்கு மானால் என்னென்ன
செய்யலாம் என்று கணக்கிட்டார்
எதுவும் உருப்படியாய்த் தோன்றவில்லை
கோயம்புத்தூர் கிருஷ்ணையர் கடையில்
கோதுமை அல்வா கொஞ்சமும்
பின்னி மில்ஸ் போர்வை ஒன்றும்
வாங்க முடிந்தால் நன்றாயிருக்கும்
பணத்தை அவளிடம் கொடுத்தால் போதும்
அதற்கே அவள் கண்ணீர் விடுவாள்
சிலப்பதிகாரத்தைப் புரட்டினால்
நல்லதென்று மனம் சொல்லிற்று
என்ன விலையோ இப்போது?
ரிக்ஷாவை விட்டிறங்கினார் க.நா.சு.
ஜிப்பா பையைத் துழாவி
காசுகள் சிலவற்றைக் கண்டெடுத்து
டீ குடித்துவிட்டு வா என்றார்
ரிக்ஷா காரனை அனுப்பிவிட்டுப்
பதிப்பாலயம் போக
உடம்பைத் திருப்பினார். அங்கே
புரட்சிக் கவிஞர் நிற்கிறார்
என்னுடன் போஸ்ட் ஆபீஸ் வாரும்
மணியார்டர் வாங்கணும்
ஆள் அடையாளம் காட்டணும்.
நிறைய கடிதங்கள்
ரைட்டர், பொயட் & க்ரிடிக் என்று
திருப்பப் பட்ட கடிதங்கள் வந்ததால்
க.நா.சு.வுக்கு போஸ்ட்மேன் நண்பரானார்
நல்லியக் கோடனை மறந்து
புரட்சிக் கவிஞருடன் போனார்
கவிஞர் பணத்தைப் பெற்றுக் கொண்டார்
பக்கத்துத் தேநீர்க் கடையில்
தேநீர் வாங்கித் தந்தார்
இருவரும் தெருவில் நின்று பருகினர்
புரட்சியும் அமைதியும் அப்புறம்
தங்கள் தங்கள் வழியே போயினர்.

இந்தக் கவிதையைப் படிக்கும்போது எழுத்தாளர்களின் சாதாரணத் தன்மையை இக் கவிதை விளக்குகிறது.  இந்த சாதாரணத் தன்மையைத்தான் ஞானக்கூத்தன் அவர் கவிதை மூலம் விளக்குகிறார். அதனால்தான் படைப்பாளிகளை விட படைப்புகளை நாம் போற்றுவோம்.  படைப்பாளர்களை விட்டுவிடுவோம்.  நம் வீட்டில் உள்ளவர்களைப் பார்ப்பதுபோல, நண்பர்களைப் பார்ப்பதுபோல, உறவினர்களைப் பார்ப்பதுபோல படைப்பாளர்களை நாம் சந்திப்போம். அவர்கள் படைப்புகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்போம்.  அவர் படைப்புகளை வைத்துக்கொண்டு படைப்பளர்களைப் பற்றிய பெரிய கற்பனையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டாம்.  ரசிகர் மன்றம் போல் ஆக்க வேண்டாம்.  கொடி பிடித்துக்கொண்டு போக வேண்டாம். உண்மையில் நாம் படைப்புகள் மூலமாகத்தான் படைப்பாளிக்கு கௌரவத்தையும் மரியாதையும் செலுத்துகிறோம்.

ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்..

அழகியசிங்கர்
 
தி ஜானகிராமன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் கங்காஸ்நானம் என்ற கதை. 1956ஆம் ஆண்டு எழுதியது. இந்தக் கதையைப் படித்தபோது ஜானகிராமன் உயிரோடு இருந்தால் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன். துரோகம் செய்வதைப் பற்றி தி ஜானகிராமன் அதிகமாகக் கதைகள் எழுதியிருக்கிறார். இந்தக் கதையும் ஒரு துரோகத்தைப் பற்றிய கதைதான். ஆனால் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால், ஜானகிராமன் வேற மாதிரி எழுதியிருப்பார்.
 
பொதுவாக கடன் கொடுத்தவர்தான் பணத்தைத் திரும்ப வாங்க அல்லல்பட வேண்டும். பணத்தை வாங்கிக்கொண்டு போன பலருக்கு பணத்தைத் திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணம் வராது. அப்படியே திருப்பி தந்தாலும் கடன் வாங்கியதற்கான பணத்தைத் தருகிறோம் என்று எண்ண மாட்டார்கள். என்னமோ அவர்களோட பணத்தை விருப்பமில்லாமல் கொடுப்பதாக நினைத்துக்கொள்வார்கள். இப்போது வங்கியில் உள்ள பிரச்சினை இந்த வாரா கடன்தான்.
ஆனால் இந்தக் கதை 1956ஆம் ஆண்டு எழுதியிருப்பதால், சின்னசாமி என்பவரின் சகோதரி மரணம் அடையும் தறுவாயில் துரையப்பா என்பவரிடம் அவள் வாங்கிய கடனைத் திருப்பித் தர நினைக்கிறாள். அதற்காக அவளிடம் உள்ள நிலத்தை விற்கிறாள். அதன் மூலம் கிடைத்த வருவாயில் ரூ3000 வரை உள்ள கடனை அடைக்க உத்தரவிடுகிறாள்.
 
3000 ருபாய் போக மீதி உள்ள பணத்தில் சின்னசாமியையும், அவள் மனைவியையும் காசிக்குப் போகச் சொல்கிறாள். இது அவருடைய சகோதரியின் வேண்டுகோள். அவள் வாழ்க்கையில் அவள் காசியே போகவில்லை. தன் சார்பாக தம்பியும் அவர் மனைவியும் போகட்டும் என்று நினைக்கிறாள். இதெல்லாம் கட்டளையிட்டு அவள் இறந்து விடுகிறாள். ஜானகிராமன் இதை ஒரு வரியில் இப்படி கூறுகிறார் :
‘மறுநாள் வீட்டடில் ஒரு நபர் குறைந்துவிட்டது,’ என்று.
 
அக்காவின் கடனை திருப்பி அளிக்க சின்னசாமி துரையப்பா வீட்டிற்கு வருகிறார். இரவு நேரம். எதற்காக வந்தீர் என்று சின்னசாமியைக் கேட்கிறார் துரையப்பா. அக்காவுடைய கடனை அடைக்க என்கிறார் சின்னசாமி.
 
இரவு நேரத்தில் கணக்குப் பார்க்க முடியாது என்கிறார் துரையப்பா. நான் இங்கயே படுத்துக்கொள்கிறேன். காலையில் பார்க்கலாம் என்கிறார் சின்னசாமி. ஆனால் அவர் கொண்டு வந்த பணத்தை துரையப்பாவிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே வைக்கிறார் துரையப்பா.
கதையில் துரையப்பாவைப் பற்றி ஒரு அறிமுகம் நடக்கிறது. துரையப்பா பெரிய மனுஷன். அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி ஊரே பேசிக்கொள்கிறது.
 
காலையில் கணக்குப் பார்க்கும்போது, துரையப்பா சின்னசாமியிடம் பணம் கேட்கிறார். அதுதான் நேற்று இரவே உங்களிடம் கொடுத்தேனே என்கிறார் சின்னசாமி. எங்கே கொடுத்தே என்கிறார் துரையப்பா. சின்னசாமிக்கு தூக்கி வாரிப்போடுகிறது. துரையப்பா இப்படி ஏமாற்றுவார் என்பதை சின்னசாமி நினைத்தே பார்க்கவில்லை. ஊரே துரையப்பா பக்கம். தான் ஏமாந்துவிட்டோம் என்று மனம் வெதும்பி அந்த இடத்தை விட்டுப் போகிறார்.
 
இங்கேதான் ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் :
 
ஏன் துரையப்பாவை பெரிய மனிதன் என்றும், அன்னாதாதா என்று வர்ணித்தும், சின்னசாமிக்கு ஏன் துரோகம் செய்கிறார். இந்த அவருடைய குணம் முரண்பாடாக இருக்கிறது.
 
அப்படி பெரிய மனிதனாக இருப்பவர், அன்ன தாதாவாக இருக்பவர், ஏன் சின்னசாமியை ஏமாற்ற வேண்டும்?
 
துரையப்பாவை இப்படி வர்ணித்துவிட்டு, அவர் துரோகம் செய்பவராக ஏன் கொண்டு போகிறார். கதை இங்கு சரியாக இல்லையா என்று எனக்குப் படுகிறது.
 
ஊருக்கு நல்லது செய்பவனாக இருக்கும் துரையப்பா ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும்.
துரையப்பாவும், சின்னசாமியும் திரும்பவும் கங்கா ஸ்நானம் செய்யப் போகிற சந்திக்கிற நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார் ஜானகிராமன். ஆனால் அங்கு சின்னசாமி துரையப்பாவைப் பார்க்க விரும்பவில்லை. இதுதான் கதை.
ஆனால் துரையப்பாவின் காரெக்டரை அப்படி வர்ணித்தவிட்டு, ஏமாற்றுகிறவராக ஒரு வில்லனாக சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தக் கதையை ஜானகிராமன் வேறுவிதமாக எழுதியிருக்க வேண்டும்.

ஜோல்னாப் பையை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்…

 

அழகியசிங்கர்

 

 

நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன்.  கிட்டத்தட்ட 40  ஆண்டுகளுக்கு மேலாக ஜோல்னாப் பையை சுமந்துகொண்டு இருப்பேன்.  ஏன்? என் வங்கியில் நான் சேரும்போது (1978ஆம்ஆண்டு) நான்தான் ஜோல்னாப் பையை அறிமுகப்படுத்தினேன்.  என்னைப் பார்த்துதான் பெவ்வி என்ற யூனியன் அமைப்பில் உள்ள சிலர் ஜோல்னாப் பைகளை சுமந்து செல்வார்.  மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு ஜோல்னாப் பை வைத்திருப்பார்.  அதில் பெரும்பாலும் ஸமார்ட்போன், பர்ஸ் போன்றவற்றை வைத்திருப்பார்.  மறதி காரணமாக பலசமயம் பையோடு எல்லாவற்றையும் தொலைத்தும் விடுவார்.

என் நண்பர் ஒருவருக்கு நான் ஜோல்னாப் பையை  சுமந்துகொண்டு வருவது பிடிக்காது.  ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும்போதும் என்னை எச்சரிக்கை செய்வார்.  ஜோல்னாப் பையுடன் உங்களைப் பார்த்தால், பையை கிழித்து எறிந்து விடுவேன் என்று மிரட்டுவார்.  அவர் மிரட்டலுக்குப் பயந்து ஜோல்னாப் பையை அவர் கண்ணிற்குக் காட்டமாட்டேன்.  ஒரு ஜோல்னாப் பையைத் தயாரிக்க ரூ100 வரை செலவாகும்.  நான் துணி வாங்கிக்கூட ஜோல்னாப் பையை தயாரித்திருக்கிறேன்.  ஆனால் அந்த நண்பரைப் பார்க்க வரும்போது மட்டும்  ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போக மாட்டேன்.  இன்னும் ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.   ஜோல்னாப் பையில் நான் வைத்துக்கொள்ளும் பொருள்களும் முக்கியமானதாக கருதுகிறேன்.  பெரும்பாலும் புத்தகங்கள் இருக்கும். தின்பண்டங்கள் இருக்கும்.  காய்கறிகள் இருக்கும்.  காப்பிப் பொடி இருக்கும். தினசரிகள் இருக்கும்.  சிலசமயம் பர்ûஸக்கூட ஜோல்னாப் பையில் வைத்துவிடுவேன்.

நண்பரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் நான் ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போக மாட்டேன்.  ஏன் எனக்குக் கூட சிலசமயம் யாராவது ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு எதிர்பட்டால் எனக்கே  பிடிக்காது.  28ஆம் தேதி மார்ச்சுமாதம் செவ்வாய்க் கிழமை காலையில் நண்பரைப் பார்க்கும்போது கூட ஜோல்னாப் பையைத் தவிர்த்துவிட்டேன்.  அதற்கு தண்டனையும் கிடைத்துவிட்டது.

என் டூ வீலரை சர்வீஸ் செய்யும் நாள் நெருங்கி விட்டதாக நினைத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் அங்கு ஒரே கூட்டமாக இருக்கும்.  காலை 6 மணிக்கே போகவேண்டும்.  ஆனால் 28ஆம்தேதி  நண்பருடன் நடை பயிற்சிக்குச் சென்றுவிட்டு டூவீலர் சர்வீஸ் செய்யும் இடத்திற்கு 8மணிக்கு மேல் சென்றேன்.  ஆச்சரியம்.  டூவீலரை சர்வீஸிற்கு எடுத்துக்கொண்டார்கள்.  என் டூவீலருடன் வால்போல் எப்போதும் ஹெல்மெட் ஒட்டிக்கொண்டிருக்கும்.  அந்த ஹெல்மேட்டை கையில் கொடுத்துவிட்டார்கள்.  அத்துடன் அதை லாக் பண்ணுகிற சங்கிலிப் பூட்டையும் சுமக்க வேண்டி வந்தது.  கையில் புளூ நிற டைரி வைத்திருந்தேன்.  எல்லாவற்றையும் சுமந்துகொண்டு லொங்கு லொஙகென்று நடந்து வந்துகொண்டிருந்தேன்.

என் மனைவி இட்டிலி அல்லது தோசை செய்தால் சட்னி செய்து தர மாட்டார்.  மிளகாய்ப்பொடி அல்லது எப்போதும் பயன்படுத்தும் சாம்பார்தான் தட்டில் வைப்பார்கள். அதனால் இட்லியோ தோசையோ தட்டில் போட்டால் வேண்டா வெறுப்பாக சாப்பிடுவேன். அன்று சட்னி தயாரிப்பதற்காக தேங்காய் வாங்கிக்கொண்டு வரச் சொன்னார்கள்.  நான் வாங்கிக்கொண்டு கையில் எப்படி எல்லாவற்றையும் வைத்துக்கொண்வது தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். இரண்டு கைகளும் கொள்ளவில்லை.  இத்தனையும் சுமந்துகொண்டு ஆர்யாகவுடர் தெருவில் உள்ள ஒரு பஸ்ûஸப் பிடித்தேன்.  படிக்கட்டுகளில் ஏறி நின்றபின் பஸ் திடீரென்று கிளம்ப நான் விழுந்தேன் படிக்கட்டில். பஸ்ஸிற்குள்ளே விழுந்து விட்டேன்.  காலில் நல்ல சிராய்ப்பு. பஸ்ஸில் தென்பட்ட சில இளம் பெண்கள் என் மீது பச்சாதப்பட்டார்கள்.  ஒருவர் என்னை கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.

இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்  நண்பருக்காகப் பயந்து ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு வராத தவறை. முடிவு பண்ணினேன்.  நண்பருக்குப் பிடிக்காவிட்டாலும் ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போவது என்று.  உண்மையில் அன்று ஜோல்னாப் பை மாத்திரம் இருந்திருந்தால் அடிப்பட்டிருக்காது.

ஜோல்னாப் பையை வைத்து நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஞானக்கூத்தனுக்கு இந்தக் கவிதை பிடிக்கும். அவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.  கொஞ்சம் பெரிய கவிதையாக இருந்தாலும் இங்கு அளிக்கிறேன்.

   ஜோல்னாப் பைகள்

விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை

சுமந்து வருவேன்

பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில்

கூவி விற்பார்கள் ரூபாய் பத்திற்கு

வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன்

வீட்டில் உள்ளவர்களுக்கு

ஏனோ பிடிப்பதில்லை

நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை

பைகளில் ஸ்திரமற்ற தன்மையால்

கொஞ்சம் அதிக கனமுள்ள

புத்தகங்களை சுமக்காது

ஓரம் கிழிந்து தொங்கும்

இன்னொருமுறை தையல் போடலாமென்றால்

மூன்று பைகளை வாங்கும்

விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள்

ஜோல்னாப் பைகள்

மெது மெதுவாய் நிறம் மாறி

வேறு வேறு விதமான

பைகளாய் மாறின

ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை

உறவினர் வீட்டிலிருந்து

அளவுக்கதிமாய் தேங்காய்களை

உருட்டி வர

சாக்குப் பைகள் தயாராயின

மைதிலிக்கு மனசே வராது

என்னிடம் பைகளைத் திருப்பித் தர

வீட்டில் புத்தகக் குவியலைப்

பார்க்கும் கடுப்பை

பைகளில் காட்டுவாள்

ஆனால் என்னாலும் பைகளை விடமுடியவில்லை

பைகளில் இன்னது என்றல்லாமல்

எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய்

வீரன் கோயில் பிரசாதம்

மதியம் சாப்பிடப்போகும் பிடிசாதம்

வழுக்கையை மறைக்க

பலவித நிறங்களில் சீப்புகள்

உலக விசாரங்களை அளக்க

ஆங்கில தமிழ் பத்திரிகைகள்

சில க.நா.சு கவிதைகள். புத்தகங்கள்

எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்

போன ஆண்டு டைரி.

பின்

பின்

உடைந்த சில

கண்ணாடி வளையல் துண்டுகள்

பேப்பர் வெயிட்டுகள்

எல்லாம் எப்படி வந்தன பைக்குள்….

(08.03.11)