இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

 
அழகியசிங்கர்


இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.


இந்திரா பாரத்தசாரதயின் சிறுகதைகள் தொகுதி 1 என்ற புத்தகத்திலிருந்து இக் கதையைப் படித்தேன். கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பாக 2010ல் வெளியிட்டிருந்தது.


இப்போது இந்தப் புத்தகம் விற்பனைக்கு இருக்குமா என்று தெரியாது. இத் தொகுப்பில் ஒரு பெரிய குறையைக் கண்டு பிடித்தேன்.


‘சூசைம்மாவும் அத்வைதமும்’ என்ற சிறுகதை எப்போது எழுதப் பட்டது என்ற குறிப்பு இல்லை. அல்லது பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தால் எந்தப் பத்திரிகையில் வந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது பெரிய குறையாக எனக்குத் தோன்றுகிறது. சரி, இனிமேல் கதைக்குப் போகலாம்.


இக் கதையில் தலைப்பிலேயே இந்திரா பார்த்தசாரதியின் நையாண்டித்தனம் ஆரம்பித்து விட்டது. இக் கதை ஒரு விதத்தில் இன்றைய நிலையை வெளிப்படுத்துகிறது.


சூசையம்மா நர்ஸ் சூபரின்டெண்டன்ட ஆக அந்த மருத்துவமனையில் பணி புரிகிறாள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவள். அவளுக்கும் அத்வைதிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. கிண்டலுக்காகக் கதாசிரியர் இந்தக் கதையின் தலைப்பை அப்படி வடிவமைத்திருக்கிறாரா?இந்தக் கதை அன்னம்மா என்ற நர்ஸ் மூலம் ஆரம்பமாகிறது.


அன்னம்மா மணியைப் பார்க்கிறாள். மணி 5.15. ஆஸ்பத்திரிக்கு வெளியே ஸ்கூட்டரில் மாத்யூ என்பவன் அன்னம்மாவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். ஐந்து நிமிடம் காத்திருந்தாலும் அவனுக்குக் கோபம் வந்து விடுகிறது. அவனுடைய சினம் வெளிப்படையாகக் காட்டாத சினம்.கதை தலைப்பே கிண்டலாக வைக்கப் பட்டிருந்தாலும், அன்னம்மாவிற்காகக் காத்திருக்கும் அவள் காதலன் பெயர் மாத்யூ. கிறித்துவ மதத்தைச் சார்ந்தவன்.நர்ஸ் உடையைக் களைந்து புடவையைக் கட்டிக்கொள்ள அவள் ஜெனரல் வார்டை ஒட்டியிருந்த அறைக்குள் சென்றாள்.


மூன்று நிமிஷம் நாற்பது வினாடிகளில் அறையைவிட்டு வெளியே அலறிக்கொண்டு ஓடிவந்தாள். கதாசிரியர் துல்லியமாக நேரம் சொல்லி விவரிக்கிறார்.அறையில் உள்ளே எலி ஒன்று செத்துக் கிடக்கிறது என்று அன்னம்மா கூறுகிறாள். அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எல்லோரும் திகைப்படைகிறார்கள்.தோராயமாக இந்தக் கதையை 1996ல் இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போதுதான் சூரத்திலிருந்து பிளேக் என்ற நோய் பரவுகிறது என்ற அச்சம் மக்களிடம் பரவி இருந்தது. பிளேக் நோயின் முக்கியமான அம்சம். எலி செத்து விடுவது.


. ‘செத்த எலி,’ என்றாள் அன்னம்மா, அங்கு அனைவரும் மின்சாரத்தால் தாக்குண்டவர்கள் போல் ஆளுக்கொரு திக்காய் ஓடத் தொடங்கினார் என்று விவரிக்கிறார் கதாசிரியர்.
அதன்பின் எலியை வைத்து கூத்துதான் இந்தக் கதை முழுவதும்.
முகமூடி அணிந்துகொண்டு வந்த ஆஸ்பத்திரி உதவியாளன் எல்லோருக்கும் முகமூடிகளை விநியோகம் செய்தான்.
அன்னம்மாவைப் பார்க்க வந்த மாத்யு, “மணி 5.30 ஆகப்போகிறது,” என்கிறான்.


“தெரியும். அந்த ரூம்மில டிரஸ் மாத்திக்கப் போனேன். செத்த எலியைப் பார்த்தேன்,” என்கிறாள்.இன்னொரு நர்ஸ், “அங்க என் டிரஸ் இருக்கிறது,” என்றாள்.


அன்னம்மா, “நல்லகாலம் நான் டிரெஸ் மாத்திண்டுட்டேன்,” என்கிறாள்.


உடனே மாத்யு, “முழுக்க மாத்திக்கலே. ப்ளவுஸ் எங்கே?” என்றான்.
அப்பொழுதுதான் அன்னம்மா தன்னைப் பார்த்துக் கொண்டாள். இப்படியே ப்ளேக் என்ற நோய் காரணம் காட்டி கிண்டல் தொனியில் கதையை நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர். கொரானா குறித்துக்கூட இன்னொரு கதையை எழுதச் சொல்லலாம் இந்திரா பார்த்தசாரதியை.


இந்த இடத்தில் உதவியாளன் முகமூடியை வழங்குகிறான். மாத்யு வாங்கிக்கொள்ள மறுத்ததுடன், வெளியே செல்ல லிஃப்டுக்குள் புகுந்து கொண்டான்.சூசைம்மாளும் முகமூடியை வாங்கிக்கொள்ள வில்லை. ஆனால் அவள் அன்னம்மாவைப் பார்த்து ஒன்று சொல்கிறாள்.


“பாத்தியாஉன் சினேகிதனை, ஓடிப்போறான். இவனையா கட்டிக்கப் போறே?” என்று கேள்வியை எழுப்புகிறாள்.
சூசைம்மாளுக்கு தைரியம் ஜாஸ்தி. செத்துப் போனஎலியைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. அதனால்தான் இ.பா. ‘சூசைம்மாளும் அத்வைதமும்’ என்ற பெயரைக் கதைக்கு வைத்திருக்கிறாரென்று தோன்றுகிறது.


சூசைம்மாவை முகமூடியைப் போட்டுக்கொள்ளும்படி அங்கிருக்கும் டாக்டரும் மற்றவர்களும் போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் சூசைம்மா மாஸ்க்கை போட்டுக்கொள்ள மறுக்கிறாள்.இந்தஇடத்திற்கு மெடிக்கல் சூப்ரின்டெண்டன்ட் அவசரமாக வருகிறார். கதாசிரியர் அவரை இப்படி வர்ணிக்கிறார்.
அவருக்கு ஐம்பது வயதிருக்கும். மீசை நரைத்திருந்தது .தலை மயிர், சாய உதவியில் அசாதாரண கறுப்புடன் பட்டொளி வீசியது என்கிறார் கிண்டலுடன்.


யாருக்கு ப்ளேக்? என்று கேள்வி கேட்கிறான் மெ.சூவுடன் கூட வந்த டாக்டர்.


சூசைம்மாள் கிண்டலாக பதில் சொல்கிறாள். “யாருக்குமில்லை இதுவரைக்கும். நீங்க செய்ற அமர்க்களத்திலே எல்லாருக்கும் வந்துடலாம்,” என்கிறாள்.


இப்படியே இந்தக் கதை நகைச்சுவை உணர்வுடன் போய்க்கொண்டிருக்கிறது.


மெ.சூ அடிமேல் அடி எடுத்து அன்னம்மா குறிப்பிட்ட அறையை நோக்கிச் சென்றார்.


“எங்கே எலி?” என்று அவர் கேட்கும்போது அன்னம்மா அவரருகில் வந்தாள். மெ.சூ வெருட்டென்று நகர்ந்து கொண்டார்.
அவர் கண்ணில் எலி தென்படவில்லை.


“உனக்கு நிச்சயமாகத் தெரியுமா அது செத்தஎலிதானா” என்று
“மல்லாக்கக் கிடந்தது,” என்கிறாள் அன்னம்மா.
“நாத்தம் வந்ததா?”
“எனக்குத் தெரியலை அப்ப,” என்கிறாள் அன்னம்மா
. “இப்பவும் நாத்தமில்லே” என்கிறாள் சூசைம்மா.
எலி செத்துக் கிடந்ததா என்பதுபோல் சூசைம்மா சந்தேகப்படுவதுபோல் தோன்றுகிறது.மெ.சூ சிரிக்கும்போது எல்லோரும் சிரித்தாக வேண்டுமென்பது அந்த ஆஸ்பத்திரி நியதிகளிலொன்று. அவர் ஜோக் அடிக்க எல்லோலரும் சிரிக்கிறார்கள். சூசைம்மாவைத் தவிர.
சூசைம்மாவிற்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது. அரசியல்வாதிகளின் தயவில் உயர்ந்த பதவிக்கு வந்து விட்டான் என்று நினைக்கிறாள்.. சர்ஜன் என்று பெயர். சலூனில் கூட வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஜோக் அடிக்கிறார் கதாசிரியர்.இப்போது பாத்ரூமில் செத்த எலியை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்குப் போக வேண்டுமென்று தீர்மானம் ஆகிறது. சூசைம்மா எடுத்துக்கொண்டு போகத் துணிகிறாள்.
“எலிப்பிரேதத்தை எப்படிக்கொண்டு போய் அடக்கம் செய்றது?” என்ற கேள்வியை எழுப்புகிறாள் சூசைம்மா.
“அடக்கம் செய்யக்கூடாது. எரிக்கணும். துணியோடு எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு எரிக்கணும்” என்கிறார் மெ.சூ.
ஹெர்ஸ் வண்டியில் எடுத்துச் செல்வதாகத் தீர்மானம் ஆகிறது. செத்த எலியை அந்த அறையிலிருந்து எடுத்துக் கொண்டு போக யாரும் துணியவில்லை. சூசையம்மா அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அட்டைப்பெட்டியுடன் எடுத்து வந்தவுடன் ஸீல் வைக்கிறார்கள்.
இங்கு செம்ம கிண்டலாக ஒரு உரையாடல் நடக்கிறது.
“பிராமணாள் இங்கே யாருமில்லையா? என்று கேட்டாள் சூசைம்மா.
“எதுக்கு?” என்றார் மெ.சூ. அவர் பிராமணர்.
“மந்திரம் சொல்ல,” என்கிறாள்.
அங்கிருந்தவர்கள் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். சுடுகாட்டிற்குச் செத்த எலியை எரிப்பதற்கு சூசையம்மா எடுத்துக் கொண்டு போகிறாள். சவப்பெட்டி ஊர்வலம் தொடங்கியது. அட்டைப் பெட்டியை ஹெர்ஸ்ஸில் வைத்துவிட்டு டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள் சூசைம்மா.
சுடுகாட்டில் தகராறு. எரிக்க அனுமதி மறுக்கிறார்கள். எரிக்க டெத் சர்டிஃபிகேட் வேணும் என்கிறான்.
“செத்த எலிககா டெத் சர்டிஃபிகேட் என்று கேட்க, உடனே இடத்தைக் காலி செய்யச் சொல்கிறான். இந்த இடத்தில் கதையின் நையாண்டித்தன ரசிக்கும்படியாக உள்ளது.
அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியவில்லை. டிரைவர் ஆத்திலே தூக்கிப் போடலாம் என்கிறான்.
சுடுகாட்டிலேயே எரிக்கப் பயப்படறாங்க, ஆத்தில போடலாம்னு சொல்றீங்க என்று சூசைம்மாள் டிரைவரைப் பார்த்துக் கேட்கிறாள்.
சூசைம்மா அவள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போகிறாள். செத்த எலியை அவள் வீட்டுக் கொல்லைப்புறத்திலே எரிச்சிடுவதாகச் சொல்கிறாள்.
சூசைம்மா ஒண்டிக் கட்டை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றாள். இருட்டு வந்ததும்.
உரிய மரியாதையோடு எரிக்க ஆசை. உள்ளே போய் பைபிளை எடுத்து வந்தாள்.
அட்டைப் பெட்டியில் இருக்கும் செத்த எலியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. எலியைச் சுற்றிவைத்திருந்த துணியைப் பிரிக்கத் தொடங்கியவள், எழுந்து உள்ளே சென்றாள்.
முகமூடியை அணிந்து கொண்டு துணியைப் பிரித்தாள். பிரித்தாள். பிரித்துக்கொண்டே இருந்தாள். அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிரித்துக்கொண்டே இருந்தாள். நிஜமும் நிழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவளுக்குப் பட்டது. நாணயம் எது என்பதுதான் அவளுக்குப்பிடிபடவில்லை என்று முடிகிறது கதை.
துணியை அவிழ்க்கும்போது அதில் செத்த எலி இல்லையா? ஏன் சூசைம்மாள் சிரிக்கிறாள்? ஒரு வரியில் இந்தக் கதையைப் படித்தவுடன் என்ன சொல்வது? ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்குப் பெரிதாக கலவரப்படுவது மனித இயற்கை. இப்போதைய கொரானா சூழ்நிலைக்கும் இந்தக் கதை பொருந்துகிறது.
நகைச்சுவை உணர்வுடன் கடைசிவரை அதைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இ.பாவிற்குப் பாராட்டுகள்.
(25.10.2020 திண்ணை முதல் இணைய வாரப் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

ஜெயகாந்தன் நண்பரை இழந்து விட்டோம்.

அழகியசிங்கர்

சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமலிருந்த ஜெயகாந்தன் நண்பரான கே எஸ் என்று அழைக்கப்படுகிற டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவருக்கு வயது 83. 
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஜெயகாந்தனை அறியச் செய்தவர்.  பல கவிதை நூல்களை ஆங்கிலத்திற்கு அறிமுகப் படுத்திய பெருமை அவருக்குண்டு.

சமீபத்தில் பலருடைய கவிதைகளைக் கொரானா குறித்து எழுதப்பட்டதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘லாக்டௌன் லரிக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.  
அவருடைய மரணம் இயற்கையானது
.  கொரானாவால் இறக்கவில்லை.  அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இன்று காலை 11.30 மணிக்கு பெஸன்ட் நகர் மின் தகன மேடையில் இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. 

22வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம்

 

அழகியசிங்கர்

வணக்கம்.


இந்த முறை கவிதை வாசிக்கிறவர்கள் ஒரு கவிதையை வாசிக்க 2 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சற்று வித்தியாசமாகக் கவிதை வாசிக்க முயற்சி செய்வோம்.  நம்மிடையே பழங்கால கவிஞர்கள் அவ்வையார், காளமேகப் புலவர், இரட்டைப் புலவர்கள் எல்லாம் உண்டு.  அவர்கள் சிலேடையாகவும், அங்கத உணர்வுடன் கூடிய கவிதைகள் எழுதி உள்ளார்கள்.


நவீன கவிஞர்களும் பலர் எழுதியிருக்கிறார்கள்.   கவிதை வாசிப்பவர்கள் அதுமாதிரியான உணர்வுடைய கவிதைகளை வாசிக்கவும்.


இந்த முறை யாருடைய கவிதை வேண்டுமானாலும் நீங்கள் வாசிக்கலாம்.  மொழிபெயர்ப்புக கவிதை வாசிக்கலாம்.  நேரிடையாகப் பெயர் கொடுத்துக் கலந்து கொள்ளுங்கள்.
வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள்.
வெள்ளிக்கிழமை (23.10.2020) அன்று மாலை 6.30க்கு கவிதை வாசிப்புக் கூட்டம்


முனைவர் கல்யாணராமன் ஆத்மாநாம் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துகிறார்.  சிறப்பான உரையாக இது இருக்கும் தவற விடாதீர்கள்.

Topic:  விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் 

Time: Oct 23, 2020 06:30 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81421763609?pwd=QmFobFJqOFZQUnYyZnY3WXVsM0hWQT09
Meeting ID: 814 2176 3609Passcode: 647559


எலிகள் விரும்பி சாப்பிடுகின்றன என் கதைகளை..

துளிகள் 150  

அழகியசிங்கர்

இரண்டு மாதங்கள் பெண் வீட்டிலிருந்துவிட்டு திரும்பவும் மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்தவுடன்  தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.


பெண் வீட்டிற்குப் போனபோது மிகக் குறைவாகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போனேன்.  எளிதாகப் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  பிரும்மாண்ட    ‘கரமாஸவ் சகோதரர்கள்’  என்ற ‘தஸ்தயேவ்ஸ்கி’ புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  இத்தனையும் பெண் வீட்டில்.
என் வீட்டில் ஒரு கட்டில் முழுவதும் புத்தகங்கள்.   எதை எடுத்துப் படிப்பது என்ற குழப்பத்தில் இரண்டு நாட்கள் ஒன்றும் படிக்காமல் காலத்தைக் கழித்தேன்.


மெதுவாக கட்டிலில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கலாமென்று தனித்தனியாக எடுத்து வைத்து அடுக்கி வைத்தேன். கிட்டத்தட்ட 400 அல்லது 500 புத்தகங்களுக்குக் குறைவில்லாமலிருக்கும்.   அதில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் என் கண்ணை உறுத்தியது.


அது வேறு ஒன்றுமில்லை என் சிறுகதைத் தொகுப்புதான்.  664பக்கங்கள் கொண்ட தொகுப்பு.  100க்கும் மேற்பட்ட கதைகள் கொண்ட தொகுப்பு. 


ஏன் இதை மட்டும் சொல்கிறேன்?  என் கதைகளைப் படிப்பவருக்குத் தெரியும் அதன் சுவை.  


உண்மைதான் எலிக்கு மட்டும் அது தெரிந்து சில பக்கங்களைச் சுவைத்து விட்டது.  எங்கோ புத்தகக்   கட்டின் அடியிலிருந்த அந்தப் புத்தகத்தை மட்டும் எலியனார் பதம் பார்த்து விட்டார். 
எலியனாரைப் பார்த்தால் கேள்வி கேட்க வேண்டும்.  எப்படி இருந்தது என் புத்தகம் சுவைக்க என்று.   

கவிதையும் ரசனையும் – 3

அழகியசிங்கர்

கல்யாண்ஜி என்ற பெயரில் ஏராளமான கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளும் எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர் கல்யாணி.சி.
இவர் சிறுகதைகளுக்கு எப்படி ஒரு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்ததோ அதேபோல் இவர் கவிதைகளுக்கும் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்க வேண்டும்.
அந்த அளவிற்குத் திறமையாக கவிதைகளிலிருந்து விலகி கதைகளும், கதைகளிலிருந்து விலகி கவிதைகளையும் எழுதியிருக்கிறார் கல்யாணி.
இதைப் போன்ற திறமை ஒரு சிலருக்குத்தான் வரும்.  குறிப்பாகத் தமிழில் நகுலன், காசியபன், சுந்தர ராமசாமி.  அதேபோல் கல்யாணி சி என்கிற வண்ணதாசனுக்கு.  கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும்போது அவர் வேறு ஒரு உலகத்திற்குப் போய் விடுகிறார்.  அதேபோல் வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதும்போது “இவர்தானா அவர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறார்.
நான் இப்போது இங்கு எடுத்துக் கொண்டு பேசப்போவது மழை குறித்து என்ற கவிதையைப் பற்றி.  இதோ அந்தக் கவிதையை இங்குத் தருகிறேன். கல்யாண்ஜி கவிதைகள் என்று வ.உ.சி நூலக வெளியீடிலிருந்து இந்தக் கவிதையை எடுத்துள்ளேன்.

மழை குறித்து

மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்

சொல்லியிருக்கிறதா

ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகு நாட்களாக

ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக

ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக

நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை

நனையக் கூடாது என்று தடுத்துவிட்டதாக

வெளியே வந்து எதையும் பாராமல்

முட்டாள் பெட்டிமுன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக

இல்லை அல்லவா

அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து

இவ்வளவு புகார்களை எல்லோரிடமும் வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே

சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்

இந்தக் கவிதையைப் படிக்கும்போது வாசிப்பவனை நோக்கி இந்தக் கவிதை பேசுவதுபோல் தோன்றுகிறது.  


வாசிப்பவன் மழையைப் பற்றி ஏதோ புகார் கூறியதுபோலவும் அதனால் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இக் கவிதை எழுதப் பட்டுள்ளது.  மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார் சொல்லியிருக்கிறதா என்று ஆரம்பம் ஆகிறது கவிதை.  மழையே உங்களைப் பற்றி புகார் அளிக்காதபோது நீங்கள் ஏன் புகார் அளிக்கிறீர்கள் என்பதுபோல் அமைந்துள்ளது.


மழை வந்ததால் ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகு நாட்களாக.  ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய் விட்டாள்.  ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டது இதெல்லாம் யாரு யாரிடம் குறை பட்டுக்கொள்கிறார்கள்.  
மழையின் சார்பாகக் கவி குரலோன் இதையெல்லாம் சொல்கிறான். அப்புறம் இன்னொன்றும் கொல்கிறான்.


நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை நனையக் கூடாது என்று தடுத்து விட்டீர்கள் ஏன்? 


உங்களுக்கு மழையைப் பார்த்தால் பயம்.  மழையில் நனைந்தால் சிறுவனின் உடல்நிலை பாதிக்கும் நீங்கள் முன்னதாகவே கற்பனை செய்து அவனை வெளியே வராமல் தடுத்து விட்டீர்கள்.  மேலும் நீங்களும் வெளியில் வந்து பார்க்கவில்லை. 


அதேபோல நீங்களும் முட்டாள் பெட்டி முன் சாய்ந்த கிடக்கிறீர்கள்.
உங்களுக்கு எந்தவித அக்கறையுமில்லை.  மழை பெய்கிறதா இல்லையா என்பதுகூட உங்களுக்குத் தெரியாது.
இப்படி ஜாக்கிரதையாக இருக்கும் நீங்கள் ஏன் மழை குறித்து  இவ்வளவு புகார்களை வீட்டிற்குள்ளே தேநீர் குடித்தபடி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  மனிதர்களுடைய இயல்பு

எதைப் பற்றியாவது குறை சொல்லிக்கொண்டிருப்பதை என்பதை இக் கவிதை மூலம் கவிகுரலோன் வெளிப்படுத்துகிறானோ?
இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்துபவன் யார்? கவிகுரலோன்தானா?  அவனைத் தவிர வேற யாருமில்லை.  அவன்தான் தன் செய்கையை நினைத்து நொந்து, நீங்கள்தான் இதற்குப் பொறுப்பு என்று உங்களைக் குற்றம் சாட்டுவதுபோல் தன்னை வெளிப்படுத்துகிறானா?


தன்னுடைய இயலாமையைக் கவிதை மூலம் கொண்டு வருகிறானா?  மழையைப் பற்றி புகார்களைத் தேவையில்லாமல் சொல்லிக்கொண்டு வருகிறானா? எப்படிப் பார்த்தாலும் இக் கவிதை எழுதப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது.


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையான திண்ணையில் 18.10.2020 அன்று வெளியான கட்டுரை)

ஒரு கதை ஒரு கருத்து ..

சா.கந்தசாமியின் பிற்பகல் என்ற கதை…..

அழகியசிங்கர் 

‘சொல்லப்படாத நிஜங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து சமீபத்தில் நான் படித்த கதை üபிற்பகல்ý என்ற சா.கந்தசாமியின் கதை. இந்தக் கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.
எளிய மொழிநடையில் சா.க.இந்தக் கதையை எடுத்துச் செல்கிறார்.
சாரதா அரைநாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு ஆபிஸிலிருந்து வெளியே வருகிறாள். அவளுக்குத் தாங்க முடியாத பல்வலி. 
ஒருவருக்குப் பல்வலி வந்தால் தாங்க முடியாது.  சாரதாவிற்கும் அப்படித்தான்.  தாங்க முடியவில்லை.  பல்வலியோடு அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாது என்பதால் வீட்டிற்கு வருகிறாள்.
சாரதாவிற்கு ஏற்படுகிற பல்வலியை நமக்கும் பல சம்பவங்களைக் கூட்டி ஏற்றுகிறார் கந்தசாமி.
காலையில் பல்வலி தாங்காமல் அலுவலகத்திற்கு வருகிறாள் சாரதா.  மதியம் விடுமுறை எடுத்துக்கொள்கிறாள்.  அங்கிருந்து திரும்பவும் வீட்டிற்குத் திரும்புகிறாள்.  
மாலை கணவன் வந்தவுடன் மாலை ஏழு மணிக்கு டாக்டர் உஷாதேவியைப் பல்வலிக்காகப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாள்.  
வலியைப் பொறுத்துக்கொண்டு பிளாட்டில் மாடி ஏறி வருகிறாள்.  கரண்ட் இல்லாததால் மாடிப்படிக்கட்டுகளில் நடக்க வேண்டி உள்ளது.  அப்போது நாலாவது மாடியிலிருந்து பிரதாப ரெட்டி சினிமா ஆர்ட் டைரக்டர் கீழே இறங்கி வருகிறான்.
அவள் அவனைப் பார்த்துப் புன்னகை பூக்கிறாள்.  
“என்ன மேடம் அரைநாள் ம்டடமா?” என்று கேட்கிறான்.
அவன் என்ன காரணத்திற்காக மட்டம் என்று கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.  நர்த்தகியில் நடக்கும் ஷøட்டிங்குக்கு வரச் சொல்கிறான்.
பதிலொன்றும் சொல்லாமல் மேலே ஏறிச் சென்றாள்..  இந்த இடத்தில் பல் வலியோடு இருக்கும் சாரதா அதைக் குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.
ஈரக் கையைத் துடைத்தபடி வெளியில் வந்து நாற்காலிலியல் உட்கார்ந்தாள்.  வாசல் கதவு மெதுவாகத் தட்டப்படும் சப்தம் கேட்டது.  தலையை நிமிர்ந்து பார்த்தாள்.  எழுந்து போய் கதவைத் திறந்தாள்.
எலக்டிரிசிட்டி கார்டில் என்ட்ரி போட்டுகிட்டு வந்திருக்கிறான் வாட்சுமேன் நாராயணன்.  அவனிடம் இரண்டு ரூபாய் சில்லறையைக் கொடுத்து விட்டு கார்டை வாங்கி வைத்துக் கொள்கிறாள் சாரதா.
இந்த இடத்திலும் தவறிப்போய் தனக்குப் பல்வலி தாங்க முடியவில்லை என்று சொல்லவில்லை சாரதா.
ஆனால் அவளுக்கு ஏற்பட்ட பல் வலியை விவரிக்கிறார் கதாசிரியர்.
‘கடைவாய்ப் பல்லுக்குக் கீழே வலிப்பது மாதிரி இருந்தது.  இடது கையால் ஒரு முறை தடவிவிட்டுக் கொண்டாள்.  கை தாடையில் பட்டதுமே ஈறு வலிப்பது மாதிரி இருந்தது.  புரண்டு குப்புறப்படுத்து, கால்களைப் படபடவென்று மெத்தை மீது உதைத்துக்கொண்டாள்.’
காலிங் பெல் அடிக்கிறது.  படுக்கை அறையில் தலைக்கு மேல் வைக்க வேண்டாமென்று எத்தனையோ முறை சொல்லியும் அவன் கேட்கவில்லை.
சாரதா கதவைத் திறந்தாள்.  ஒரு பெண். இருபது இருபத்தொரு வயதிருக்கும்.  தோளில் காது வைத்த பையும், கையில் பிளாஸ்டிக் கூடையுமாக நின்றுகொண்டு இருந்தாள்.  இவளைப் பார்த்ததும் பல்லெல்லாம் தெரியப் பெரிதாகச் சிரித்தபடி,
“மேடம் புதுசா வந்திருக்கிற லேடீஸ் டவல் மேடம்..” என்கிறாள். பொருளைக் காட்டி பல்லைக் காட்டியபடி விற்க வந்திருக்கிற பெண்ணை மெதுவாக அனுப்பி விடுகிறாள்.
பல் வலியோடு பிரம்பு நாற்காலியை முன்னே இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.
இந்தக் கதையில் இதுவரை அவளுடைய பல்வலியை யாரிடமும் பிரஸ்தாபிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
பிரதாப் ரெட்டி போன் செய்து அவன் மனைவியிடம் ஹைதராபாத்து போவது பற்றிக் குறிப்பிடச் சொல்கிறான். மனைவியிடம்.  சாரதா சொன்னால் போதும் என்கிறான்.  மனைவியைக் கூப்பிட வேண்டாமென்கிறான். டெலிபோனைக் கீழே வைத்தாள்.  வாசல் கதவு தட்டப்பட்டது.  அவள் முன்னே சென்று கதவைத் திறந்தாள்.  இரண்டாவது பிளாட் மனோன்மணி சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.   “என்ன உடம்பு சரியில்லையா, ஆட்டோவில் வந்தீங்க போலிருக்கு?” என்கிறாள் மனோன்மணி.
இப்போதுதான் சாரதா தனக்குப் பல்வலி என்பதைப் பற்றிப் பேசுகிறாள்.
“ஐய்யய்யோ எது வந்தாலும் வரலாம்.இந்தப் பல்லு வலி மட்டும் வரக்கூடாது,” என்கிறாள் மனோன்மணி.  
மனோன்மணி போய் விட்டாள்.  இப்போது பல்வலியுடன் சாரதா போராடுகிறாள்.  திரும்பவும் மணி அடிக்கிறது. கதவைத் திறந்தவுடன் வாசலில் பூ விற்கும் ராணி நிற்கிறாள்.
இரண்டு முழம் ஜாதி மல்லியைத் தந்து விட்டு, உடம்பு சரியாய் இல்லையாம்மா என்று கேட்கிறாள்.  நாளைக்கு வா என்று அவளுக்குப்  பதில் அளித்துவிட்டு கதவைச் சாத்துகிறாள்.  அவளிடம் அவள் பல்வலியைப் பற்றிப் பேசவில்லை.
திரும்பவும் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் உடனே போய் கதவைத் திறக்கவில்லை சாரதா.  அவள் கண்ணாடியைப் பார்க்கிறாள்.  தலைமுடியை விரலால் கோதி சரிசெய்து கொண்டாள்.  மணி மறுபடியும் அடித்தது.  அவள் வாசல் பக்கம் ஒரு முறை பார்த்துக்கொண்டாள்.  ஆனால் வாசல் கதவைத் திறக்கப் போகவில்லை.  நிதானமாக ஒருமுறை இருமி எச்சிலை வாஷ்பேசினில் துப்பி விட்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.
மணி விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளிடம் ஒரு அலட்சியம் கதவைத் திறக்க.  
பின் அவள் ஈரக் காலை மிதியடியில் துடைத்தபடி பாத் ரூமை விட்டு வெளியில் வந்தாள். இப்போது கதவு படபடவென்று தட்டப்பட்டது.  அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னே போய் கதவைத் திறந்தாள்.
அவள் கணவன் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தாள்.  அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.
“எவ்வளவு நேரமா கதவைத் தட்டிக்கிட்டு இருக்கேன்.  உள்ள என்ன புடுங்கிக்கிட்டா இருக்க..”என்று அவளை இடித்துத் தள்ளியபடி உள்ளே சென்றான்.
அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.  மின்னல் கீற்று போல ஒரு புன்னகை தோன்றி மறைந்து சென்றது. 
இத்துடன் இந்தக் கதை முடிந்து விடுகிறது.  அவளிடம் அவள் தனக்குப் பல்வலி என்ற சொல்லாமல் புன்னகை மூலம் சொல்லப் பார்க்கிறாள்.  அந்தப் புன்னகையும் ஒரு நொடியில் போய் விடுகிறது.
மனித உறவுகளைப் பற்றி நுணுக்கமாக விவரிக்கப்படுகிறது இந்தக் கதையில். சாரதா கதவைத் திறக்காமல் ஏன் அவசரப்படாமலிருந்தாள்..  ஒரு சமயம் அவள் கணவன்தான் வரப்போகிறான் என்று ஊகித்திருந்தாளா? அவனும் தாமதமாகக் கதவைத் திறக்கிறாளென்று கோபமாக அவளைத் திட்டிவிட்டு உள்ளே நுழைகிறான். 
சா கந்தசாமியால் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை இது.     
(11.10.2020 அன்று இணைய இதழ் திண்ணையில் வெளியான கட்டுரை)      

இரண்டு மாதம்கழித்துத் திரும்பி விட்டேன்

அழகியசிங்கர்

எங்கள் அடுக்ககத்தில் இரண்டாவது மாடியில் குடியிருப்போர் ஒருவர் வீட்டில் 3 நபர்களுக்குக் கொரானா தொற்று. . இது ஆகஸ்ட் மாதம் நடந்தது.  நானும் மனைவியும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிளம்பி மடிப்பாக்கத்திலுள்ள என் பெண் வீட்டிற்குச் சென்றோம்.
மேல் வீட்டில் தொற்று சரியாய் போய்  மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டார்கள்.  ஆனால் நாங்கள் இன்று மதியம்தான் (11.10.2020) பெண் வீட்டிலிருந்து திரும்பிவிட்டோம். எப்படித்தான் இரண்டு மாதம் போயிற்று என்று தெரியவில்லை.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் இருந்து விட்டோம்.  2019ஆம் ஆண்டு அப்படி அமெரிக்காவில் உள்ள பையன் வீட்டிலிருந்தேன். பொதுவாக நான் எங்குப் போனாலும் தங்குவது எனக்குக் கஷ்டமாக இருக்கும். என் வீட்டில் இருப்பதுபோல் என்னால் உணர முடியாது.
எப்படிப் பெண் வீட்டில் இரண்டு மாதம் தாக்குப் பிடித்தேன் என்று தெரியவில்லை.  பெண் வீடு தனி வீடு.  காலையில் மொட்டை மாடியில் நடை பயிற்சி செய்வேன்.  என் வீட்டில் மனைவியுடன் இருக்கும்போது சற்று தாமதமாகத்தான் சாப்பிடுவேன்.  கிட்டத்தட்ட 12 மணி ஆகிவிடும்.  ஆனால் பெண் வீட்டில் 10.30 மணிக்கே சாப்பிடுவேன்.

நான் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி போனவுடன் நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென்று இறந்து விட்டார்.  அவருக்கு தொற்று இல்லை.  ஹார்ட் அட்டாக்.  சிலநாட்கள் அதிர்ச்சியாக இருந்தது.  நம்ப முடியவில்லை. 
ஆனால் பெண் வீட்டில் தீர்மானமாக ஒரு பெரியப் புத்தகத்தை எடுத்துப் படித்துவிட்டேன்.  தஸ்தயேவ்ஸ்கி யின் கரமாஸவ் சகோதரர்கள் என்ற புத்தகம் அரும்பு சுப்ரமணியன் ருஷ்ய மொழியிலிருந்து மொழி பெயர்த்தது.  காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.  இந்தப் புத்தகத்தை 28.06.2014ல் வாங்கியது.  அப்போது 180 பக்கங்கள் வரை படித்துவிட்டுக் கைவிட்டுவிட்டேன். இப்போது வீராப்பாக முழுவதும் படித்து விட்டேன்.  இந்நாவல்களில் பெயர்கள் என்னைக் குழப்பாமலிருப்பதில்லை.  தன் தந்தையைக் கொலையே செய்யாத திமித்ரி கொலை தண்டனைக்கு ஆளாகிறான்.  யாரும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரை மொழி பெயர்ப்பு சரியாகச் செய்திருந்தார் அரும்பு.  ஆனால் சத்திரத்தில் சந்தித்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.  இந்த நாவலைப் படித்துக் காட்டியபோது என் நண்பர் சத்திரம் என்பது சரியாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
குறைந்தபட்சம் நான் பத்து கட்டுரைகளைத் திண்ணைக்கு அனுப்பி பிரசுரமானது.  என் பெண் வீட்டில் புதியதாக 15 கவிதைகள் எழுதினேன்.  ஒரு கவிதையை ஒரு போட்டிக்கு அனுப்பி உள்ளேன்.  அதேபோல் சிறுகதை ஒன்றையும் எழுதி போட்டிக்கு அனுப்பி உள்ளேன். தீபாவளி மலர் ஒன்றிற்குக் கட்டுரையும்.
என் நீண்டகால அலுவலக நண்பர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கோவுட் பாதிப்பால் இறந்து போனது அதிர்ச்சியாக இருந்தது.    நான் வங்கியில் சேர்ந்ததிருந்து எனக்கு நண்பர்.  தீவிர வாசகர்.  என் புத்தகங்களை வாங்கி விரும்பிப் படிப்பவர்.  பதவி மூப்பு அடைந்தவுடன் கோவில்பட்டியில் செட்டில் ஆக நினைத்தார். அதேபோல் எஸ்.பி.பி என்ற பாடகர். சற்றும் எதிர்பாராத தருணத்தில் கி.அ.சச்திதானந்தம் என்ற இலக்கிய நண்பரின் மரணம்.   எல்லாம் கோவிட் என்ற விஷக் கிருமியால்  அதேபோல் தேவகோட்டை வா மூர்த்தி புற்றுநோயால் இறந்து விட்டார். நான் என் பெண் வீட்டில் இருந்ததால் இந்த மரணங்களும் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டன.  
முக்கியமாக 114வது நவீன விருட்சம் இதழ் அச்சில் கொண்டு வந்து விட்டேன்.
   இந்த இதழ் தாயரிப்பு விலை சற்று அதிகம்தான்.  மிகக் குறைவாக அச்சிட்டு சந்தாதாரர்களுக்குத்  தபாலில்   அனுப்பி விட்டேன். மடிப்பாக்கத்தில் தபால் அலுவலகம் ஒரு கேவலமான இடத்திலிருந்தது.  ஆனால் தபாலில் போட்டவுடன் அடுத்தநாள்  போய்ச் சேர்ந்து விட்டது.  தபால் அலுவலகத்தில் ஒரு வயதான பெண்மணி பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

துளிகள் 148 – இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்…

07.10.2020


அழகியசிங்கர்

    ஞானக்கூத்தன் பிறந்த நாள் இன்று.  அவர் 1938ல் பிறந்தவர். இப்போது இருந்திருந்தால் 82 வயதாகியிருக்கும்.

    1988ஆம் ஆண்டு விருட்சம் என்ற சிற்றேடு நடத்தும் போது எனக்கு நெருக்கமாக சில எழுத்தாள நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.   அதில் ஞானக்கூத்தன் முதன்மையானவர். பலர்  தவறுதலாக விருட்சம் பத்திரிகையை ஞானக்கூத்தன்தான் நடத்துகிறார் என்று சொல்வார்கள்.

    நான் இல்லை இல்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.  ஞானக்கூத்தன் போல இன்னும் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகம்.

    பிரமிள், வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், நகுலன், காசியபன், ஐராவதம், ஸ்டெல்லா புரூஸ் என்று பலர் எனக்கு நண்பர்கள்.  இவர்கள் எல்லோரும் என்னை விட மூத்தவர்கள்.

    இவர்கள் மூலம் நான் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். விருட்சம் வரும் ஆரம்ப ஆண்டுகளில் ஒவ்வொரு இதழிலும் ஞானக்கூத்தன் கவிதை இடம் பெறாமலிருக்காது.

    அவர் ஒருநாள் பீச்சில் பேசிக்கொண்டிருந்தபோது என் கைக்குத் தங்கக் காப்பு போட வேண்டுமென்று அன்று கூடிய நண்பர்கள் முன்  சொன்னார்.  என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

    முழு மூச்சாகக் கவிதையைப் பற்றிச் சிந்தித்து கவிதைகள் மட்டும் எழுதி தன் வாழ் நாளைக் கழித்த ஞானக்கூத்தனுக்குக் குறைந்த பட்சம் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருக்க வேண்டும்.

    நண்பர் ஜெயமோகன் விஷ்ணுபுர விருது கொடுத்து கௌரவம் செய்தது மறக்க முடியாதது.  நண்பர் வினோத் அவரைக் குறித்து ஒரு ஆவணப் படம் எடுத்து கௌரவம் செய்தார்.

    ஞானக்கூத்தனைப் பற்றிப் பேசும்போது அவர் ஆரம்பக் கால கவிதைகளை மட்டும் குறிப்பிட்டு ஓடிப் போய்விடுவார்கள்.

    கடைசிவரை அவர் சிறப்பாகக் கவிதை எழுதி உள்ளார்.

    நகுலனின் சுசீலா

    நான்கைந்து ரூபாய்கள் செலவழித்தால்
    கும்பகோணத்துக் கடைத் தெருவை
    வாங்கிவிடலாமென்று
    கனவு கண்ட சோமு முதலியார்
    கடைசியில் சோமுப் பண்டாரமாகி
    திடீரென ஒருநாள் செத்துக் கிடந்தார்

    சுசீலாவும் ஒருநாள்
    செத்துக் கிடந்ததாய்
    நகுலன் சொன்னார்
    சுசீலாவின் ரோமபந்தி
    தனியாய்க் கிடந்ததாய்க்
    கூறவும் செய்தார்.
    ஆனால் சுசீலா போனது
    தெருவிலா வீட்டிலா

கவிதையும் ரசனையும் – 2


அழகியசிங்கர்

கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன்.  அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.

அவருடைய எதாவது ஒரு கவிதையை எடுத்து வாசித்து என் ரசனையைத் தெரியப்படுத்தலாமென்று நினைக்கிறேன்.
நான் எடுத்துக்கொண்ட கவிதை 'உபதேசம் நமக்கு' என்ற கவிதை. 

உபதேசம் நமக்கு

அடுத்த வீட்டுக்காரனிடம்
இருந்து தொலைத்துவிடு
வம்பில்லை .

பல்தேய்த்துக் கொண்டிருக்கும்போது
பக்கத்து வீட்டுக்காரனிடம்
வள்ளையாக சிரித்துவிடு.
தொல்லை யில்லை.

என்றாவது
உன் வீட்டில்
மழை பெய்யும்போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்.
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும்போது,
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்.
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்.

எதற்கும்
ஒருவிதமான தவமாக,
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால்சொறிந்து நில்லு.

உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்,
உனக்குப் போன தூக்கம்,
ஊருக்குள் திருட்டு, கற்பழிப்பு
உணவுத்தட்டு, கருப்பு மார்க்கட்டு,
லாட்டரிச் சீட்டு,
எவனுக்கோ பிறந்துவிட்ட
இரண்டு தலைப் பிள்ளை ,
இன்னும்
கிரஸின் விலை, ஊசி விலை
கழுதை விலை, காக்காய் விலை
எல்லா நிலையும், பந்தமுடன்
பல்திறந்து பேசிவிட்டு
வாய்கொப்பளித்து வந்துவிடு.
தொந்தரவில்லை.

என்றாவது நின்றுபோகும்
உன் சுவர் கடிகாரம்கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்.

ஏசுவும் புத்தனும்
எதற்குச் சொன்னான் பின்னே,
அடுத்தவனை நேசி என்று.
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்

அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.

இந்தக் கவிதையைப் படிக்கும்போது  எளிதாக நமக்குப் புரிந்து விடுகிறது. வைதீஸ்வரனின் கவிதையில் எந்தக் குழப்பமும் இல்லை.

பக்கத்து வீட்டுக்காரனுடன் பகைத்துக் கொள்ளாதே என்கிறது கவிதை. அதுவும் பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது வெள்ளையாகச் சிரித்துவிடு தொல்லை இல்லை.

ஏன் இப்படிச் சொல்கிறது? கவிதை மூலம் நமக்கு வைதீஸ்வரன் படிப்பவர்களுக்கு அறிவுரை கூற வருகிறாரா? ஆமாம் அப்படித்தான் தோன்றுகிறது.

நம்மிடம் இல்லாத ஒன்று கட்டாயம் பக்கத்து வீட்டுக்காரனிடம் இருக்கும்.  அவனுடைய தயவு நமக்கு வேண்டியிருக்கும்.  இந்தக் கவிதையை ஆராயும்போது, மழை பெய்யும்போது நம்மிடம் குடை தட்டுப்படாமல் இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரனிடம் குடை இருக்கும். நம் வீட்டுச் செடியை ஆடு கடிக்கும்போது அந்த ஆட்டைத் துரத்த அவனிடம் கம்பு இருக்கும்.

அவன் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா என்பதைக் கவிதை சொல்லவில்லை, ஆனால் நம் வீட்டுக் குழந்தைகள் ஓடியாட அவன் வீட்டுத் தாழ்வாரம் நீளமாயிருக்கும் என்கிறது கவிதை. அதற்காகவாவது அவனுடன் சண்டை போடாதே என்கிறது கவிதை.

அவனை அனுசரித்துப் போக இன்னும் ஒன்று சொல்கிறது கவிதை. தினந்தினம் வேலியோரம் சற்றே கால் சொறிந்து நில்லு என்று.

அடுத்தது அவன் பாட்டி செத்தால் உனக்குப் போன துக்கம் என்கிறது. ஊருக்குள் நடக்கும் திருட்டு, கற்பழிப்பு, உணவுத் தட்டு, கருப்பு மார்க்கெட், லாட்டரிச் சீட்டு, எவனுக்கோ பிறந்துவிட்ட இரண்டு தலைப் பிள்ளை, இன்னும் கிரஸின் விலை, காக்காய் விலை, கழுதை விலை எல்லா நிலையிலும் பந்தமுடன் பல்திறந்து பேசிவிட்டு வாயைக் கொப்பளித்து வந்துவிடச் சொல்கிறது.  அப்படி இருப்பது தொந்தரவாக இருக்கிறது.  இது எப்படிப்பட்ட உபதேசம்.  பக்கத்து வீட்டுக்காரனுடன் மேம் போக்காகப் பழகச் சொல்கிறார்.

எப்போதும் பக்கத்து வீட்டுக்காரன் உதவி செய்வான். உன் உதவி அவனுக்குத் தேவையில்லை. அவன் உதவிதான் உன்க்கு எப்போதும் தேவை.

கவிதையில் உபதேசம் நமக்கு என்று கூறப்படும் அர்த்தம் நமக்கு நன்கு விளங்கி விடுகிறது. 

பாருங்கள் என்றோ நின்றுபோகும் நம் சுவர்க் கடிகாரம் கூட அவன் வீட்டில் அடிக்கும் மணியை ஒட்டுக் கேட்குமாம்.

இந்தக் கவிதையின் கிண்டல் இறுதி வரியில்தான் வருகிறது. ஏசுவும் புத்தனும் எதற்குச் சொன்னார்கள்?  அடுத்தவனை நேசி என்று. அவனால் கிடைக்கும் போகும் உபகாரங்கள் ஆயிரமாம். 

தவறிப்போய் கூட நீயும் எதாவது அவனுக்கு உதவி செய் என்று இந்தக் கவிதை சொல்லவில்லை.

மேல் உதடு அசையப் பக்கத்து வீட்டுக்காரனுடன் உறவு வைத்துக்கொள்பவன் யார்?

அவன் ஒரு நகரவாசி.  இறுதியில் எல்லா நகர வாசிகளும் அப்படித்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறார் கவிஞர்.

உறவு என்பது போலித்தனமாக இருப்பதை இந்தக் கவிதை நன்றாகத் தோலுரித்துக் காட்டுகிறது.  நகரவாசியில் இருப்பவர்கள் பெரும்பாலோர் போலித்தனமான அன்புடன் இருப்பார்கள் என்கிறார் கவிஞர்.

கவிதையை ஆரம்பிக்கும்போது, அடுத்த வீட்டுக்காரனிடம் அன்பாய் இருந்து தொலைத்துவிடு என்கிறார்.  அன்பு என்பது தானாகவே உருவாக வேண்டும்.  ஆனால் இங்குப் போலியாக அன்பாக இருக்கும்படி வற்புறுத்துகிறார்.

ஆனால் கவிஞர் சொல்வது ஓரளவு உண்மை.  ஒவ்வொருவரும் இன்னொருவரிடம் போலியாகத்தான் அன்பாக இருப்பார்கள். அல்லது இருக்க வேண்டும்.  அதுவும் அப்படி அன்பு காட்டுபவர்கள் நகரவாசி என்கிறார்.  ஏன் நகரவாசி என்கிறார்?

நகரவாசிதான் அதிகமாகக் கெட்டுப் போகிறான்.  உண்மையாக அன்பு செலுத்தாமல் நடிக்கிறான். இவ்வளவு சூட்சுமம் உள்ளது இந்தக் கவிதையில்.
இப்படிப்பட்ட சிந்தனைகள் நவீன கவிதையில்தான் சாத்தியம்.       

                                                                 (அக்டோபர் 4  2020, திண்ணையில் வெளிவந்த கட்டுரை)

விருட்சம் நடத்தும் சூம் வழியாக 19வது கூட்டம்

அழகியசிங்கர்

    ‘இன்றும் காந்தி’  என்ற தலைப்பில் ஸ்ரீ பா.வீரராகவன் உரை நிகழ்த்துகிறார்.

    கூட்டத்தில் எல்லோரும் அனுமதிப் பெற்றே உள்ளே நுழைய முடியும்.   

    காந்தி ஜெயந்தி நாளை.  காந்திய சிந்தனைகளை, காந்தியைப் பற்றி கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  பொதுவாகவும் கவிதை வாசிக்கலாம்.

    இதுவரை இக் கூட்டங்களில் கலந்து கொண்டு  கவிதை  வாசித்தவர்களும்  இணைந்து கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டால் ஒரே ஒரு கவிதை வாசிக்கும்படி நேரிடும். இல்லாவிட்டால் அதிகமாக எண்ணிக்கை உள்ள கவிதைகள் வாசிக்கவும்.

    அரசியல் கவிதை, மதச்சார்பான கவிதை, நாத்திக கவிதை, ஆபாசமாக எழுதப்படுகிற கவிதை, கொரானா கவிதையெல்லாம் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    கூட்டம் நடக்கும் அன்று உங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.   

    எல்லோரும் வாருங்கள் கவிதை வாசிப்போம்  இந்த முறை 6.30 மணிக்குக் கூட்டம்.

    சூமில் இணைவதற்கான

Topic: விருட்சம் நடத்தும் சூம் வழியாக 19வது கூட்டம்

Time: Oct 2, 2020 06:30 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81101721564?pwd=STVKS2hrZkVuZ3lEcTU1TkpBM3U1UT09
Meeting ID: 811 0172 1564Passcode: 271815