நகுலனும், அப்பாவும், நானும்….

 

நகுலன் சென்னை வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டார்.  அவர் சென்னையில் தங்கும் இடம் ஆன அவர் சகோதரர் வீடு என் வீட்டிலிருந்து அருகில் இருந்தது.  சகோதரரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்துவிடுவார்.  ஒருமுறை அவர் வந்திருந்தபோது நான் வீட்டில் இல்லை.

நகுலன் என் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட அரை மணி நேரம் மேலேயிருக்கும். நான் வீட்டிற்கு வந்தபோது நகுலனும், அப்பாவும் பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? எதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்?  என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

நகுலன் எப்போதும் புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பவர்.  என் அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது.

மாடியில் உள்ள அறைக்கு நகுலனை அழைத்துக்கொண்டு போனேன்.

“அப்பாவிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

நகுலன் சிரித்தபடியே,”உங்கள் அப்பா சுவாரசியமான மனிதர். அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர்.. அந்த மருந்துகளைப் பற்றி சொன்னார்?”

“போச்சுடா..யார் வந்தாலும் இப்படித்தான் ஆரம்பித்துவிடுவார். போனில் அசோகமித்திரனிடம் கூட ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி சொல்வார்.”

“ஒரு கான்சர் பேஷண்ட் இவர்  மருந்தால் குணமாகிட்டாராம்..”

“என்னால் நம்ப முடியவில்லை… ஹோமிபோபதி மருந்தால் கான்சரை குணப்படுத்த முடியுமா?”

“எனக்குத் தெரியாது..உங்கள் அப்பாதான் சொன்னார்..”

“வேற எதுவும் சொல்லவில்லையா?”

“உங்கள் அப்பா அரசியலைப் பற்றி பேசினார்…எனக்கு தமிழ்நாட்டு அரசியல் புரியலை…அவர் கருணாநிதி மாதிரி பேசிக் காட்டினார்..”

“போச்சுடா இப்படித்தான் அவர் எல்லார் கிட்டேயும் பேசிக் காட்டுவார்..”

“அவர் ஒரு ஜாலியான மனிதர்..”

“வேற எதுவும் பேசலையா?”

“பேசினார்…உங்களைப் பற்றி..”

“என்னைப் பற்றியா?”

“ஆமாம்.  நீங்கள் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறீங்களாம்..ஆனால் எதுவும் படிப்பதில்லையாம்.  இப்போது உங்கக் கிட்ட இருக்கிற புத்தகங்களைப் படிச்சாலே இந்த ஜன்மத்திலே படிக்க முடியாதாம்..என்னை உங்களுக்கு அட்வைஸ் பண்ணச் சொன்னார்.. பையனை இனிமேல் புத்தகம் வாங்காமல் இருக்கச் சொல்லுங்கள்..என்று,” நகுலன் இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

எங்கள் பேச்சு அப்பாவை விட்டுப் போயிற்று.. “என்ன புதுசா எழுதினீங்க?” என்று கேட்டார் நகுலன்.

நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த சில கவிதைகளைக் காட்டினேன்.

நகுலன் ஒரு விஷயம் சொன்னார்..” நீங்க இவ்வளவு வருஷம் எல்லோருடைய படைப்புகளையும் பிரசுரம் செய்கிறீர்கள்…யாராவது உங்கள் எழுத்தைப் பற்றி எதாவது சொன்னார்களா?”

“இல்லை..”

“ஏன்?”

“ஒரு சமயம் என் படைப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்க வேண்டும்..”

“அதெல்லாம் இல்லை.  நீங்க மோசமாக எழுதுவதில்லை.  இது உங்களைச் சுற்றி உள்ளவர்களின் மனசைக் காட்டுகிறது.  நீங்க அதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்..”

நான் ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தேன்.

நகுலன் என் நோட்டில் உள்ள கவிதைகளை எல்லாம் படித்துவிட்டு, சில மாற்றங்களைச் செய்யும்படி குறிப்பிட்டார்..

என் வீட்டைவிட்டு நகுலன் கிளம்பும்போது, ஒன்று சொன்னார். “உங்களைப் பற்றியும், வைதீஸ்வரனைப் பற்றியும் கட்டுரைகள் எழுதுகிறேன்.”

நகுலன் எசான்னபடி என் கவிதைகள் குறித்தும், வைதீஸ்வரன் கவிதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதி அனுப்பினார்.

அன்றைய அவருடைய பேச்சை என்னால் மறக்கவே முடியாது.

 

நீங்களும் படிக்கலாம் – 31

 

40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்…

கேள்வி கேட்பவர் : இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்?

நான் : அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.

கே கே : 40 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் ஆயிற்றே?

நான் : ஒரு கூட்டத்தில் எனக்கு அசோகமித்திரனைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது.  அப்போது அவருடைய சில சிறுகதைகளையும், நாவல் ஒன்றையும் படித்தேன்.  கரைந்த நிழல்கள்தான் அந்த நாவல்.

கே கே :  முன்பே படிக்கவில்லையா?

நான் : படித்திருக்கிறேன்.  சினிமா சநம்பந்தமான நாவல் என்ற ஞாபகம் மட்டும் இருந்தது.  ஆனால் நாவல் முழுக்க மறந்து போய்விட்டது.

கே கே : நாவலில் என்ன விசேஷம்.

நான் : அவர் நாவலை எடுத்துக் கொண்டு போகும் பாங்கு..

கே கே : சினிமா சம்பந்தமான நாவல்தானே இது,..

நான் : உண்மைதான்.  இந் நாவலை இப்போது படித்தாலும், சினிமாவில் நடக்கும் எந்த விஷயமும் பெரிதாக மாறவில்லை என்று தோன்றும்.

கே கே : இந்த நாவலில் என்ன விசேஷம்?

நான் : பலதரப்பட்ட கதாபாத்திரங்களை அசோகமித்திரன் உருவாக்கியிருக்கிறார்.  ஒரு சினிமா அவுட்டோர் ஷ÷ட்டிங் நடப்பதிலிருந்து இந்தக் கதை ஆரம்பமாகிறது.  அதை நடத்த எத்தனைப் பேர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை துல்லியமாக விவரித்துக்கொண்டு போகிறார்.

கே கே : உண்மையில் இந்த நாவல் இரண்டு பட முதலாளிகளின் கதை.

நான் : ஆமாம்.  ஒருவர் படம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு யார் கண்ணிலும் படாமல் ஓடிப் போய் விடுகிறார். படம் எடுத்து திவாலாகி விடுகிறார்.  இன்னொரு தயாரிப்பாளர் படம் எடுத்து முடித்துவிட்டு ரிலீஸ் பண்ண முடியாமல் அவதிப் படுகிறார்.

கே கே :  சினிமாவில் சாதாரண நிலையில் இருப்பவர்களிலிருந்து தயாரிப்பாளர்கள் வரை எல்லோரையும் எழுதியிருக்கிறார்.

நான் : ஒரு நாவலில் ஏகப்பட்ட குரல்களை ஒலிக்க வைக்கிறார். அமைப்பியல் விமர்சன முறைபடி நாம் ஆசிரியரைப் பார்க்கக் கூடாது. படைப்பைப் பற்றிதான் பேச வேண்டும்.

கே கே : அமைப்பியல் முறைபடி வேற என்ன பார்க்க முடியும்?

நான்; : ஒரு படைப்பு சிறந்த படைப்பா இல்லையா என்பதை அமைப்பியல் முறை கூறாது.  ஆனால் ஒரு படைப்பில் காணப்படுகிற பல அம்சங்களை அலசி ஆராயும்.

கே கே : இந்த நாவலில் அப்படி என்ன கண்டீர்கள்?

நான் : இந்த நாவலில் யாருக்கும் முக்கியமான பாத்திரம் கிடையாது.  ஒரு இடத்தில் உதவி டைரக்டராக இருக்கிற ராஜகோபால் இப்படிப் பேசுகிறார் : ‘üசினிமாவில் எல்லாம் டெம்பரரி, பர்மனென்ட்னு கிடையாது.  எல்லாம் பர்மனென்ட்தான், எல்லாம் டெம்பரரிதான்.ý இது சினிமாவைப் பற்றிய கருத்தாக இருக்கிறது.

கே கே : இந்த நாவலில் தாவிப் போகிற தன்மை இருக்கிறது.

நான் : ஆமாம்.  முதலில் நடராஜன் என்ற கதாபாத்திரம் வருகிறது.  அடுத்த அத்தியாயங்களில் நடராஜன் என்ற பாத்திரம் வருவதில்லை.  ஆனால் அவரைப் பற்றி பேச்சு மட:டும் வருகிறது. அடுத்தது பட்டாபிராம் ரெட்டியார் வருகிறார்.  ஜயசந்திரிகாவை ஷ÷ட்டிங் அழைப்பதற்குச் கூப்பிடுகிறார்.  அவள் உண்மையில் மயங்கி விழுந்து விடுகிறாளா அல்லது நடிக்கிறாளா என்பது தெரியவில்லை. ஆனால் அதன்பின் ரெட்டியார் காணாமல் போய் விடுகிறார்.

கே கே  : கரைந்த நிழல்கள் என்ற தலைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு கதாபாத்திரமும் கரைந்து போய்விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

நான் : ராம ஐய்யங்காரைப் பற்றி அடுத்தது வருகிறது.  அதில் மணிமுடி என்ற தமிழ் வாத்தியாரைப் பற்றி வருகிறது.  வாரப் பத்திரிகையில் ஒன்றில் ஒரு கதை எழுத, அதை ஒரு படத் தயாரிப்டபாளர் திரைப்படமாக எடுக்க, எடுத்த படம் பல்வேறு காரணங்களார் பிரபலமாக, மணமுடி ஒரு ராசிக்கார வசனகர்த்தா என்று பெயர் பெற, அவர் வாத்தியார் வேலையை விட்டுவிட்டு அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் ûத்துக் கொண்டார் என்று கிண்டலடிக்கிறார்.

கே கே : ராம ஐய்யங்கார் அவருடைய மகன் பாச்சாவைப் போய்ப் பார்க்கிற இடத்தில், பையனிடம் நிறையா வசனம் பேசுகிறார்.  இந்த இடத்தில் மகனும், அப்பாவும் பேசும்போது, ராம ஐய்யங்கார் யார் என்பதை தோலுரித்துக் காட்டி விடுகிறான் பையன்.

நான் : இன்னொன்று இந்த நாவலின் கடைசி அத்தியாயம். நாவலின் ஒன்பது அத்தியாயங்கள்  படர்கையில் சொல்லப்படுகின்றன.  பத்தாவது அத்தியாயமான கடைசி அத்தியாயத்தில் தன்மை ஒருமையில் வருகிறது.  இங்கு கதை சொல்பவன் பெயர் தெரியவில்லை.

கே கே : கடைசியாக  நாவலைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?

நான் : சினிமாவில் ஈடுபடுகிறவர்களின் தாறுமாறான வாழ்க்கையை இந் நாவல் படம் பிடித்துக் காட்டுவதாகத் தோன்றுகிறது.  ஒரு நிறைவான நாவலைப் படித்தத் திருப்தி ஏற்படுகிறது.

ஏ கே செட்டியாரைப் பற்றி நெகிழ்வான பேச்சு

 

                                                                                                   

சமீபத்தில் நான் மூன்று கூட்டங்களை நடத்தி உள்ளேன். இந்த மூன்று கூட்டங்களிலும் பேசியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் பேச்சுக்களைக் கேட்க வந்தவர்களுக்கு அதிகப்படியான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது.  திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைக் குறித்துப் பேசினார்.  உண்மையில் அன்று தி ஜானகிராமனை நேரில் அழைத்து வந்து அவர் பக்கத்தில் உட்கார வைத்து உரையாடியது போல் தோன்றியது.  இரண்டாவது கூட்டம் ஜøலை மாதம் நடந்தது.  இக் கூட்டத்தில் பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார்.  பெருந்தேவியின் பேச்சைக் கேட்டு புதுமைப்பித்தனே நெகிழ்ந்து போனதுபோல் உணர்வு ஏற்பட்டது.

மூன்றாவது கூட்டமாக இன்று கடற்கரை ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார்.  அவருடைய பேச்சை ஏ கே செட்டியார் கேட்டிருந்தால், அவரை மனமுவந்து ஆசிர்வாதம் செய்திருப்பார்.  எனக்கு என்ன மலைப்பு என்றால் 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள ஏ கே செட்டியாரை தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்தது.  இந்தப் புத்தகத்திற்கு கடற்கரை 30 பக்கங்களுக்கு மேல் பதிபாசிரியர் உரை எழுதி உள்ளார்.  ஏ கே செட்டிôர் புகழ் ஓங்குவதோடல்லாமல் கடற்கரையின் புகழும் ஓங்கும். புத்தகத்தைப் பதிப்பித்த சந்தியா பதிப்பகம் வாழ்க.  என் புத்தக அலமாரியை அலங்கரிக்க இப் புத்தகத்தை விலைக்கு  வாங்கி உள்ளேன்.

இந்த மூன்று உரைகளையும் நான் சோனி வாய்ஸ் ரிக்கார்டில் பதிவு செய்து கம்ப்யூட்டரில் கொண்டு வந்து விட்டேன்.  திருப்பூர் கிருஷணன் உரையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  அதேபோல் பெருந்தேவி பேசியதையும், கடற்கரை பேசியதையும் ஒருவர் கேட்க வேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்ய உள்ளேன்.  கூடிய விரைவில்.

இக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  சிலர் கூட்டத்திற்கு வருகிறார்கள்.  சிலர் கூட்டத்திற்கு வரவேண்டுமென்று நினைத்து வர முடியாமல் போய் விடுகிறது.  இன்னும் சிலரால் கூட்டத்திற்கு வரவே முடியவில்லை.  ஆனால் இதுமாதிரியான கூட்டங்கள் தொடரந்து நடந்து கொண்டிருக்கிறது.  ஆனால் எல்லோரும் வந்துவிட்டால் கூட்டம் நடக்கும் இடமே தாங்காது.

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம் இந்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை வழக்கம்போல் நடைபெற உள்ளது.  ஒவ்வொரு முறையும் இக் கூட்டத்திற்கு வருபவர்களை நான் வரவேற்கிறேன்.  இந்த முறை ஏ கே செட்டியார் பற்றிய கூட்டம்.  சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவந்த ஏ கே செட்டியார் புத்தகத்தைத் தொகுத்து அளித்தவர், கடற்கரை மந்தவிலாச அங்கதம்.  இத் தொகுப்பு 2000 பக்கங்களைக் கொண்டது.  அவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.  இக் கூட்டம் பற்றிய தகவலை எல்லோரும் பகிர்ந்து அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காந்தியைப் பற்றி ஏ கே செட்டியார் எடுத்த ஆவணப்படமும் தி நகரில் உள்ள தக்கர் பாபா கல்வி நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது.  விலை ரூ.100 தான்.  ஒவ்வொருவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம்.  இதோ கூட்டத்திற்கு ஆன அழைப்பிதழை உங்களுக்கு அளிக்கிறேன்.  அழைப்பிதழைத் தயாரித்து அளித்தவர் என் நண்பர் கிருபானந்தன்.  அவருக்கு நன்றி பல.

புத்தகங்களைப் படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன்…

 
தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள். பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள். இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள். என் குடும்பத்தில் நான் ஒருவன்தான் தமிழ் புத்தகம் படிக்கிறவன். என் மனைவி எப்பவாவது லக்ஷ்மி புத்தகங்களைப் படிப்பார். யாரும் தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க மாட்டார்கள்.
 
நான் அந்தக் காலத்திலிருந்து தமிழ் புத்தகங்களைப் படிக்கிறவன். ஆங்கிலம் படித்தாலும், தமிழ் புத்தகம் படிக்கிற அளவிற்கு ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கிற ஆர்வம் இல்லாதவன். ஆனால் புத்தகங்களை வாங்கி வாங்கி ைத்துக்கொள்வேன்.
ஒருநாள் நான் வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்து பயந்து விட்டேன். நமக்கோ வயது கூடிக்கொண்டே போகிறது, எப்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கப் போகிறோம் என்ற பயம் என்னை பற்றிக்கொண்டது. வாரம் ஒருநாள் புத்தகங்களைப் பார்த்தபடி கற்பூரம் காட்டி நமஸ்காரம் செய்யலாம், படிக்க வேண்டாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன். அல்லது ஒரு புத்தகத்தை எடுத்து வெறுமனே புரட்டிப் பார்த்து வைத்துவிடலாமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
 
ஒருநாள் ஆவேசமாக புத்தகங்களைப் படிப்பது என்று தீர்மானித்தேன். என்னிடம் அதிகமாக உள்ள பத்மா காப்பி பைகளை எடுத்து ை்துக்கொண்டேன். மூன்று பைகளை எடுத்து வைத்தக்கொண்டேன். முதல் பையில் ஒரு முப்பது புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டேன். இரண்டாவது பையில் இன்னும் முப்பது புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டேன். மூன்றாவது பையை எடுத்தேன். அதில் முப்பதைந்து புத்தகங்களைச் சேர்த்தேன். இதில் தடித்தடியான புத்தகங்களும் அடங்கும்.
 
முதல்நாள் ஒரு பையை எடுத்தேன். அதில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்தேன். அது ஒரு தமிழ் புத்தகம். தி ஜானகிராமன் எழுதிய மோகமுள். சில பக்கங்களைப் படித்தேன். பின் ஒரு கோடு போட்டேன். தேதி, கிழமையைக் குறிப்பிட்டு, இதுவரை படித்துள்ளேன் என்று எழுதினேன். அடுத்தது அலைஸ் முன்றோவின் தேர்ந்தெடுத்தக் கதைகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தை எடுத்தேன். ஆங்கிலப் புத்தகம். ஒரு பக்கம்தான் படித்தேன். பின் கோடு போட்டேன். தேதியை இட்டேன். இதுவரை படித்துள்ளேன் என்று குறிப்பு எழுதினேன். இப்படியே 30 புத்தகங்களையும் மூன்றிலிருந்து நான்கு மணிவரைப் படித்தேன். பின் அந்தப் பையை ஓரமாக வைத்தேன்.
 
இரண்டாவது நாள் இன்னொரு பையை எடுத்தேன். அதே மாதிரி வேறு வேறு முப்பது புத்தகங்கள். ஒவ்வொன்றாக எடுத்துப் படித்தேன். தமிழ்புத்தகங்கள் என்றால் மூன்றிலிருந்து நான்கு பக்கங்கள் படித்துவிட்டு கோடு போடுவேன். ஆனால் ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் இரண்டு பக்கங்கள் மேல் படிக்க முடியவில்லை. முப்பது புத்தகங்களையும் படித்து முடிக்குமுன் 3 அல்லது 4 மணி நேரம் ஆனது.
 
இதேபோல் மூன்றாவது நாள் மூன்றாவது பை. திரும்பவும் நாலாவது நாள் அன்று முதல்பையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒன்று கண்டுபிடித்தேன். என்ன படித்தேன் என்று ஞாபகம் வரவில்லை. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் படிக்குமுன் நான் படித்து முடித்த இடத்திலிருந்து தொடங்கினாலும் என்ன படித்தோம் என்று ஞாபகத்தில் வரவில்லை. திரும்பவும் முதலிலிருந்து படிக்க வேண்டுமென்று தோன்றியது. பெரிய கொடுமையாக இருந்தது.
நான் ஆரம்பித்த இந்தத் திட்டம் சரியாக வரவில்லை என்று தோன்றியது. அதோடு அல்லாமல் நான் படிக்கிற புத்தகங்களைப் பற்றி நடைபயிற்சி செல்ல நேரிடும்போது நண்பர் ஒருவரிடம் பெருமையாகச் சொல்வேன். அவர் திடீரென்று நான் படித்தப் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி கேட்பார். எனக்கு எரிச்சலாக இருக்கும். சரியாக சொல்ல வராது. பின் அவர் என்னை கிண்டல் அடிப்பார். இப்படி பகுதி பகுதியாகப் படிக்கும் முறை சரியா என்று எனக்கு யோசனையாக இருந்தது. மூன்று நாட்கள் 95 புத்தகங்களைப் படிப்பதை விட இன்னும் கொஞ்சம் புத்தகங்களைக் குறைத்துக்கொண்டு படிக்கலாமா என்ற யோசனை எனக்குத் தோன்றியது.
 
எல்லாப் பைகளிலும் உள்ள புத்தககங்களை எல்லாம் ஒன்று சேர்த்தேன். பின் நான் எப்போது படிக்கப் போகிறேனென்று ஏக்கமாக இருந்துகொண்டிருக்கிற புத்தகக் குவியலில் சேர்த்துவிட்டேன். வெறும் பத்துப் புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு படித்தால் என்ன என்று தோன்றியது. யோசிக்கும்போது அதுவும் சரியாக வரவில்லை என்றும் தோன்றியது. நான் ரிட்டையர்டு ஆன புதியதில் உற்சாகத்தில் தடித்தடி புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.
 
புத்தருக்கு போதி மரத்தில் ஞானதிருஷ்டி ஏற்பட்டதுபோல எனக்கு தடித்தடி புத்தகங்கள் ஞானத்தைக் கொடுத்தது. வாங்காதே என்பதுதான் அந்த ஞானம். அன்றிலிருந்து என் தடிப் புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை அளவில் என்னிடமிருந்து குறைந்து போய் விட்டது.
பத்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிப்பதும் என் எண்ணத்திலிருந்து கழன்று போய்விட்டது. இப்போது கவலையே படுவதில்லை ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொள்கிறேன். தமிழோ ஆங்கிலமோ? அதைப் படித்துக்கொண்டே இருக்கிறேன். முடிக்கும்வரை படித்துக்கொண்டு இருக்கிறேன்.
 
சமீபத்தில் என் பெண் வீட்டிற்குச் சென்றேன். ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அது ஒரு நாவல். படித்துக்கொண்டே இருந்தேன். பல மணி நேரங்கள் படித்துக்கொண்டேன் இருந்தேன். 383 பக்கங்கள் கொண்ட அந்த நாவலில் 230 பக்கங்கள் வரை படித்து விட்டேன். இரவு ஆகிவிட்டது. நான் திரும்பவும் என் வீட்டிற்குக் கிளம்பினேன். என் பெண் வீட்டில் உள்ள அனைவரும் என்னை விரோதியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் புத்தகம் படிக்கிற கவனத்தில் அவர்களிடம் பேசவே இல்லை.
 
“எதுக்கப்பா இங்கே வந்தே?” என்று பெண் கோபமாகக் கேட்டாள்.
 
“வெற்றி. 232 பக்கங்கள் படித்துவிட்டேன், ” என்றேன் நான்.

ஸ்டால் எண் 12…

இரண்டு

 

 

சென்னை புத்தக திருவிழாவிற்கு நான் கொண்டு வந்த புத்தகங்கள் இரண்டு இரும்பு அலமாரிகளில் அடங்கி விட்டன.   மீதமுள்ள ஐந்து அலமாரிகளுக்கு வெளி இடத்திலிருந்து புத்தகங்கள் தேடி வரவேண்டும். எல்லாம் கிடைத்துவிட்டன.  நாங்கள் மூவரும் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டோம்.  முதலில் காற்றோட்டம் இல்லாத இடத்தில் உட்கார்ந்து கொண்டோம்.  பின் இடத்தை மாற்றிக்கொண்டோம்.  நாங்கள் இருந்த பகுதிக்கு அடுத்து போகிற வழி.  வெளியே போய் விடலாம்.  அந்தத் திறந்த வெளியிலிருந்து காற்று பிரமாதமாக வந்து கொண்டிருந்தது.   நான் அதை பீச் என்று அழைத்தேன். கிருபா செல்போன் போனதுபோல் இன்னும் பலருடைய செல்போன் போய்விட்டன.  அலுவலகத்திலிருந்து செல்போன்களை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி எச்சரிக்கை வந்து கொண்டிருந்தன. நாங்கள் மூவரும் ஒரே வயதுக்காரர்கள்.  வேற வேற வங்கியிலிருந்து ஒவ்வொருவரும் ரிட்டையர்டு ஆனவர்கள்.  நான் கொஞ்சம் வயதில் பெரியவன்.  என்றாலும் மதியம் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் அங்கு வந்து அமரும்போது ஒரு மாதிரியாகத்தான் எனக்கு இருந்தது.  வந்த வேகத்தில் பல ஸ்டால்களில் உள்ளவர்களைப் பார்க்கும்போது தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள்.  சாதாரண நாட்களில் புத்தகங்கள் வாங்க கூட்டம் அலைமோதவில்லை.  வீட்டில் சும்மா இருக்கப் போகிறோம். அதற்குப் பதில் இங்கே வந்து சும்மா இருக்கலாமென்றுதான்.

இந்தத் தருணத்தில்தான் நான் நான்கு புத்தகங்கள் கொண்டு வந்தேன். எல்லாம் குறைவான பிரதிகள்.  யாராவது வாங்குவார்களா என்பது உறுதியானவுடன்தான் இன்னும் கொஞ்சம் அடிக்க முடியும்.  இல்லாவிட்டால் முதல் முறை அடித்த பிரதிகளுடன் நின்று விட வேண்டியதுதான்.

இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்.  இரண்டாவது வரிசையில் ஒரு ஆங்கிலப் பதிப்பாளர்.  டெல்லியிருந்து மூன்று பேர்களாக வந்திருக்கிறார்கள்.  இந்திதான் பேச வருகிறது.  அவர்களுடைய பெரிய பெரிய புத்தகங்கள் எல்லாம் ரூ.225 ஐத் தாண்டவில்லை ஆனால் எல்லாம் காப்கா, தால்ஸ்தாய்,  தாஸ்தோவஸ்கி, சாமர்சட் மாம், தாகூர், என்று பெரிய  பெரிய எழுத்தாளர்களின் முழுத் தொகுப்புகள்.  எல்லாம் 225 ரூபாய்க்கள்தான். கடையில் டெல்லியில் வந்தவர்கள் மூன்று பேர்களும் தலையில் கை வைத்தபடியே உட்கார்ந்திருந்தார்கள்.  அவர்கள முகங்களில் சிரிப்பே இல்லை.  என்ன இவ்வளவு மோசமாக இருக்கிறது இங்கே, போய்விடலாம் என்று பார்க்கிறோம் என்றார்கள்.  ஆனால் கடைசி வரை இருந்தார்கள். நடுவில் போகவில்லை.  இப்படி தடுமாறிக் கொண்டிருந்த அவர்களைப் பார்க்கும்போது நாம் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது.

டேனியல் ஸ்டீல் என்ற எழுத்தாளரின் சம்மர்ஸ் என்ட் என்ற புத்தகத்தில் 70 மில்லியன் பிரதிகள் கொண்ட அவருடைய நாவல்கள் அச்சாகிக் கொண்டிருப்பதாக ஒரு தகவலை புத்தக அட்டையில் படித்துப் பிரமித்து விட்டேன்.

என் ஸ்டால் எதிரில் ஜஸ்ட் கெட் புக்ஸ் என்ற கடை இருந்தது.  அதில் ஒரு ஆங்கில நாவல் ரூ.50.  அல்லது மூன்று நாவல்கள் எடுத்தால் ரூ.250.  ஒரே கூட்டம்.  ஏகப்பட்ட யூவதிகள், யூவன்கள் கட்டுக் கட்டாய் புத்தகங்களைத் தூக்கிச் சென்றார்கள்.

நான் நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்தேன்.  50 பிரதிகளுக்குக் குறைவாக.  மூன்று புத்தக வெளியீட்டுக் கூட்டங்கள் நடத்தினேன். ஞானக்கூத்தன் மறைந்த ஓராண்டு நினைவாக அவர் கவிதைகளை எல்லோரையும் வாசிக்க வைத்தேன்.  பரிசல் செந்தில்குமார் பாடகர் என்பதை இந்த புத்தகச் சந்தையில்தான் அறிந்து கொண்டேன்.  அவர் பழைய தமிழ்ப் பாடல்களைப் பாடினார்.

என்ஸ்டாலில் நான், என்னுடன் மற்ற இரண்டு நண்பர்கள், புத்தகம் வாங்க வந்தவர்கள், எங்களுடன் வெறும் அரட்டை அடித்துச் செல்பவர்கள், சாய்ந்திர நேரத்தில் நல்ல காற்று என்று எங்கள் பொழுது போயிற்று.

இந்தப் புத்தகக் காட்சியில் எனக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தேன்.

புத்தகக் காட்சியில் புத்தகம் விற்பவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.  1.  அதிகமான தலைப்புகளில்  புத்தகம் தயாரித்து விற்பவர்கள் 2. எல்லோரிடமும் புத்தகங்கள் வாங்கி விற்பவர்கள். 3. அரைகுறையாக மிகக் குறைவான புத்தகங்களை தயாரித்து மேலும் மற்றவர்களிடம் புத்தகங்களை வாங்கி விற்பவர்கள்.  விருட்சம் முன்றாவது ரகத்தைச் சேர்ந்தது.

சனி ஞாயிறுகளில் கூட்டம் வந்த அளவிற்கு மற்ற நாட்களில் கூட்டம் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. மூன்று காரணங்களை எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  1. விளம்பரம் சரியாகக் கொடுக்கப்படவில்லை. 2. மாசக் கடைசி 3. ஜனவரியில்தான் வந்ததால்  புதிய புத்தகங்கள் இல்லை.  ஆனால் இடம் பிரமாதமாக இருந்தது.  வெகு சீக்கிரத்தில் இடத்தை அடைந்து விடலாம்.  வண்டியெல்லாம் எளிதாக வைத்துவிட முடிந்தது.  கழிவறை அடிக்கடி தண்ணீரால் கழுவப்பட்டு நீட்டாக இருந்தது.

31ஆம் தேதி திரும்பவும் அதே டெம்போகாரரைக் கூப்பிட்டடு புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகச் சொன்úன்.

ஸ்டால் எண் 12…

ஒன்று
 
நடந்து முடிந்த புத்தகக் காட்சியைப் பற்றி நடந்து முடிந்த அடுத்த நாள் சொல்வது சரி என்று தோன்றுகிறது. சென்னை புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வது பற்றி விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது. போஸ்டல் காலனி வீட்டில் புத்தகத்தை அடுக்கிக் கொண்டிருந்தபோது, கீழே உள்ள குடியிருப்பவர், ஒரு கவரை கொண்டு வந்தார். அந்தக் கவரை திறந்து பார்த்தால் சென்னை புத்தகத் திருவிழாவின் விண்ணப்பம். ஜøலை 21ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை.
அந்தச் சமயத்தில் நானும் என் நண்பர் கிருபானந்தனும் எம்ஜி ஆர் ஜானகி கல்லூரியில் நடந்த 3 நாட்கள் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டிருந்தோம். அது மோசம். இந்தக காலத்து கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிக்க விரும்புவதில்லை. வேடிக்கைப் பார்க்க வருகிறார்கள். செல்போனை திருகுகிறார்கள். கூட்டமாக நின்று காஸ்மாடிக் கடையில் நின்று காஸ்மாடிக் வாங்குகிறார்கள. புத்தகக் கடையில் நிற்கக் கூட இல்லை. என்ன சொல்கிறார்கள் என்றால் வீட்டில் புத்தகம் வாங்க பணம் கொடுப்பதில்லை என்கிறார்கள். உண்மையா என்பது தெரியவில்லை.
கிருபானந்தனைப் பார்க்கும்போது, இதுமாதிரி ஒரு விண்ணப்பம் வந்திருக்கிறது. நீங்கள் சரி என்று சொன்னால் கலந்து கொள்ளலாம் என்றேன். ஒரு நாள் கழித்துச் சொல்வதாக சொன்னாôர் கிருபா. அடுத்தநாள் சரி என்றார். நானும் நீங்களும்தான்..சுரேஷ்ஷைக் கூப்பிட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்றேன்.
டிடி எடுக்கம்போது சற்று உறுத்தல். ரூபாய் 15500 என்ற உறுத்தல்தான். புத்தகக் காட்சியில் புத்தகம் விற்று திரும்பவும் பணம் கிடைத்துவிடுமா என்ற ஐயம் எனக்கு இருந்துகொண்டிருந்தது. இது என்ன பெரிய தொகை. போனால் போகிறது என்று எண்ணத் தோன்றாது.
முதல்நாள் மதியம் 3 மணிக்குமேல் போஸ்டல் காலனியில் உள்ள வீட்டில் உள்ள புத்தகங்களை வெளியே எடுத்து 7 இரும்பு அலமாரிகளை காலி செய்து வைத்துக்கொண்டேன். புத்தகங்களை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டேன். எல்லாத் தலைப்புகளில் உள்ள புத்தகங்களிலிருந்து ஐந்து ஐந்தென்று எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 10 பெட்டிகள் நிரப்பியிருப்போம். பில் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டோம்.
பழைய விலைப் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டோம். பின் டெம்போவைக் கூப்பிட்டு கிளம்பி விட்டோம். டெம்போ காரரிடம் பேரம் பேசினேன். ரூபாய் 1700க்குக் குறைவாக வர முடியாது என்று சொல்லிவிட்டார். திரும்பவும் கொண்டு வருவதற்கு நீங்கதான் வர வேண்டுமென்று சொன்னேன். சரி என்றார். ஆனால் ரூ.15500லிருந்து திரும்பவும் 3400 ரூபாயைச் சேர்த்தால் கிட்டத்தட்ட 19000 ரூபாய். பக் பக்..முன்பு இதே நிலையில் இன்னும் பக் பக் பக் பக் என்றிருப்பேன். புத்தகம் போடுகிறோம், புத்தகத்தைக் கொண்டு வந்து வைக்கிறோம், பின் புத்தகத்தை யாரும் வாங்க வராவிட்டால் என்னவாவது. ரொம்ப யோசித்தால் பக் பக் பக்.
கிருபாவும் நானும் முதல் நாள் வந்தவுடன், சுரேஷையும் கூப்பிட்டோம். அன்றே கிளம்பி சுரேஷ÷ம் வந்துவிட்டார். அப்போதுதான் ஒரு சம்பவம் நடந்தது. புத்தகங்களை அடுக்கும்போது டேபிள் மேலே கிருபா தன்னுடைய ùஸல்போனை வைத்துவிட்டு புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். யார் வந்தார்கள் என்பது தெரியவில்லை செல்போன் மாயமாக மறைந்து விட்டது. புத்தகங்களை அடுக்கிய பிறகு கிருபா வேற ஒரு செல்போன் வாங்கச் சென்று விட்டார். எனக்கோ புத்தகம் விற்க ஆரம்பிக்கும்போதே இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை பிடித்துக் கொண்டது.
(இன்னும் சொல்கிறேன்)

பத்மா காபி பேக்….

 

நான் ஒரு பையை எப்போதும் வைத்திருப்பேன்.  அந்தப் பையின் பெயர் பத்மா காபி பை.  துணிப்பைதான்.  ஆனால் உறுதியான பை.  இந்தப் பை மூலம் என் புத்தகங்களை எல்லா இடங்களிலும் சுமந்து வருவேன்.  புதிய புத்தகங்கள் ஆனாலும் பழைய புத்தகங்கள் ஆனாலும் சுமப்பதற்கு உறுதியான பை.  அகலமான பெரிய பை.  தினத்தந்தி பேபர்பர்களைக் கொண்டு வருவார்களே அதுமாதிரியான பை.

நான் மயிலாடுதுறை செல்லும்போது இந்த பத்மா காபி பையை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  என்னிடம் இப்படி அதிகமாக  7 அல்லது 8 பைகள் சேர்நதிருக்கும்.  இந்தப் பை ஒவ்வொன்றும் ரூ.60 விலை.  எனக்கு யாராவது இந்தப் பையை மட்டும் தானமாகக் கேட்டால் கொடுக்க மனசு வராது.  ஆனால் என் வீட்டில் பணிபுரிபவருக்கு ஒரு பையைக் கொடுத்து விட்டேன்.  திரும்பவும் மயிலாடுதுறைக்குச் சென்று இன்னும் இரண்டு முன்று பைகள் வாங்கி வந்து விட்டேன்.  பத்மா காபி என்று விளம்பரம் படுத்தியிருக்கும் இந்தப் பையில் பத்மா காபி எப்படி இருக்குமென்று தெரியாது.  வாழ்க பத்மா காபி. பையை விளம்பரப் படுத்தி வழங்கிய வள்ளல் அது.

இந்தப் பை பலவிதங்களில் சொளகரியமானது.  எந்தக் கணமான பொருள்களையும் இந்தப் பை சுமக்க வல்லது.  இந்த பத்மா காபி பையை பைக்கில் மாட்டிக்கொண்டு சென்றால் அறுந்து விழாது.  தெருவில் உள்ள தரையில் உரசாது.  கிழிந்து போகாது.  ஆனால் சீக்கிரம் அழுக்காகப் போய்விடும். அதனால் ஒரு சௌககரியம் உண்டு.  யாரும் பையைத் தொட மாட்டார்கள்.

இந்த பத்மா காபி பைகளில் விருட்சம் புத்தகங்களை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விடலாம்.  ஒன்றரைப் பைகள் போதும்.  விருட்சம் புத்தகங்களே ஒன்றரை அல்லது ஒன்னேகார் பத்மா காபி பைகளில் அடங்கி விடும்.

எந்த முணுமுணுப்பும் இல்லாமல் நான் கொண்டு வரும் புத்தகங்களை சுமக்கும் இந்தப் பையை நான் கௌரவப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.  அதனால்தான் இந்தப் பையைப் பற்றி எழுதுகிறேன்.

வாழ்க இந்தப் பை.  வாழ்க இதன் நாமம்.  ஒன்றரைப் பைகளில் விருட்சம் புத்தகங்களை அடக்கிவிடும் உன் சாமர்த்தியம் என்ன.  வாழ்க நீ.

இத்தனை நாட்கள் பழகியும் இந்தப் பையை நான் புரிந்து கொள்ளவில்லை.

அது துணிச்சலுடன் என்னுடன் பேச ஆரம்பித்தது.

நான் : பையே உன்னை வணங்குகிறேன்.

பை : போதும் நிறுத்து.  நான் சொல்வதை நீ கேட்பதில்லை.

நான் : நீ என்ன சொல்கிறாய்.. நான் கேட்பதில்லை.

பை : அதிகமாகப் புத்தகங்களை அடிக்காதே..

நான் : அதிகமாக என்றால் என்ன?

பை : கவிதைப் புத்தகம் என்றால் 20 புத்தகங்களுக்கு மேல் அடிக்காதே..

நான் : யே… நீ என்ன சொல்கிறாய்…உன்னை நம்புகிறேன் என்பதால் உனக்கு ஆணவம் அதிகமாகி விட்டது…

பை : நிஜமாக சொல்கிறேன்.  முதலில் 20 புத்தகங்கள் அடி.  அது விற்றால், இன்னும் 20 புத்தகங்கள் அடி.  அதுவும் விற்றால் இன்னும் 20…

நான் : சரி, சிறுகதை என்றால்?

பை : அதுவும் 20தான்.

நான் : ஐயோ நான் எங்கே போவேன்…சரி நாவல் என்றால்..

பை : நாவல் என்றால் அதிகமாகப் பக்கங்கள் உள்ள நாவலை அடித்து விடாதே…குறைவான பக்கங்கள் உள்ள நாவலை அடி…

நான் : குறைவான பக்கங்கள் உள்ள நாவல் என்றால் எவ்வளவு அடிக்க வேண்டும்?

பை : 30.

நான் : ஏன் 20 அடித்தால் போதாதா?

பை : போதும். போதும்.  உன் ஆறுதலுக்காகத்தான் சொன்னேன்.

நான் : சரி ஒருவர் 800 பக்க நாலலை எழுதி விட்டால்..

பை : அதை எழுதிய நபர் சாகித்திய அக்காதெமி பரிசு பெற எதாவது முயற்சி செய்ய வேண்டும்….

நான் : ஏன்

பை : அப்படியென்றால் அதிகமாக விற்கும்.

நான் : இல்லாவிட்டால்

பை : பத்துக்கு மேல் அடிக்காதே….

நான் : பத்தா…எனக்கு உன் மேல் கோபம் வருகிறது..

பை : வாங்குபவர்களை நினைத்துப் பார்த்தாயா?  அவர்கள் மீது இரக்கம் கொள்..

நான் : சரி கட்டுரைத் தொகுப்பு..

நான் : எதைப் பற்றி எழுதப் போகிறாய்…சமஸ் மாதிரி அரசியல் பற்றி எழுதினால் அதிகமாக அடிக்கலாம்.  அதற்கு மார்க்கெட் இருக்கிறது.  இலக்கியம் பற்றி எழுதப் போகிறாய் என்றால் அதுவும் டௌன்லோட் என்றால் மதிப்பு இருக்கிறது…நீயே எழுதுகிறாய் என்றால் அதே பத்து.

நான் : நீ என் கூட பேசாதே..

கோபமாகப் பேசிவிட்டு பையைத் தூக்கிப் போட்டுவிட்டு போய்விட்டேன்.

டிவி பார்க்காமல் ஓடுவது எப்படி?…….

நான் டிவி பார்ப்பதற்கு எதிரி இல்லை.  ஆனால் ஒருவர் டிவியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை நான் வெறுக்கிறேன்.  டிவி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது.  அது பெரிதும் நம்முடைய வாழ்க்கை முறையைக் கெடுக்கிறது.

நான் டிவியில் காட்டப்படுகிற சீரியல்களைப் பார்ப்பதில்லை.  செய்திகளைக் கூட கொஞ்சம் நிமிடங்கள்தான் பார்ப்பேன்.  டிவியில் காட்டப்படும் தமிழ்ச் சினிமாக்களை முழுவதும் பார்ப்பதைத் தவிர்ப்பேன்.  எதாவது ஒரு காட்சி பார்ப்பேன்.  விளையாட்டும் பார்ப்பேன்.

இன்றைய நவீன கடவுள் டிவிதான் என்று சிலர் நினைக்கிறார்கள்.   ஒருவர் டிவி பார்க்காமல் இருக்க முடியுமா?  என் வீட்டில் என்னுடன் வசித்து வருபவர் ஒருவர் சதா சர்வ காலமும் டிவியைப் பார்த்தபடி இருக்கிறார்.  காலையில் எழுந்தவுடன் டிவியை ஆன் செய்து திரும்பவும் அணைப்பது என்பது இரவு 11 மணி ஆகிவிடுகிறது.  இது எனக்கு அச்சத்தைத் தருகிறது.

நான் என்னைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  சரி டிவி பார்க்காமல் இருந்தால் பொழுதை எப்படிக் கழிப்பது?  இந்தக் கேள்வியை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.  புத்தகம் படிக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம்.  ஆனால் அப்படி ஒரு புத்தகத்தை ஒருவர் காலையிலிருந்து இரவு வரை படிக்கிறார் என்றால் ஒரு நாளைக்கு 200 அல்லது 300 பக்கங்கள் வரை படிக்கலாம்.  ஆனால் அப்படியெல்லாம் படித்து விட முடியுமா?  என்னால் ஒரு நாளைக்கு நான் பெரிய முயற்சி செய்தால் 10 அல்லது 20 பக்கங்களுக்குள்தான் முடியும்.  அதுவும் நான் படிக்க வேண்டுமென்று முயற்சி செய்தால்தான் முடியும்.  அப்படியென்றால் வேற வழியே இல்லை.  நீங்கள் டிவிக்குத்தான் வர வேண்டும் என்று நீங்கள் கிண்டல் செய்வது என் காதில் விழாமல் இல்லை.

ஆனால் என்னால் டிவி முன் அமர்ந்திருக்க முடியவில்லை.  கொஞ்சநேரம் உட்கார்ந்து பார்த்தாலே என்னை டிவி ஓட ஓட விரட்டுகிறது.  பால்கனியில் ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்து கொள்ளலாமென்று தோன்றுகிறது. ஆனால் அப்படியெல்லாம் சொல்வது தவறா?  ஆனால் பொழுது போவதற்காக நான் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்கிறேன்.  சினிமா செல்கிறேன். எதாவது கோயிலுக்குப் போக வேண்டுமென்றாலும் போகிறேன்.

என்னால் புத்தகம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் பொழுது போக்க முடியும்.  ஆனால் டிவி முன்னால் அப்படியெல்லாம் கூட உட்கார முடியவில்லை.  ஏன் இப்படிப்பட்ட உணர்வு எனக்குள் ஏற்படுகிறது?  டிவியில் காட்டப்படும் காட்சிகள்தான் என்னை விரட்டுகின்றன.  அழுகை நிரம்பிய அபத்தமான டிவி சீரியல்களை என்னால் ரசிக்க முடியவில்லை.  அதற்குப் பதில் பாக்கெட் நாவல்களை  படித்து ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது..   ஆனால் வேண்டுமென்றே டிவி இல்லாமல் இருக்கவும் முடியாது.  அதனால் டிவியை ஆன் செய்துவிட்டு அதைப் பார்க்காமல் இன்னொரு இடத்தில் உட்கார்ந்து கொள்வேன்.  டிவி மட்டும் தனியாக ஏதோ கத்திக்கொண்டு இருக்கும்.  காதில் வாங்கிக்கொள்ள மாட்டேன்.  ஒருவர் இசையைக் கேட்டுக்கொண்டே பொழுதை ரம்மியமாகக் கழிப்பதாக சொல்வார்கள்.  என்னால் இசையையும் ரொம்ப நேரம் ரசிக்க முடியாது.

ஆனால் அதே சமயத்தில் புத்தகங்கள் என்னை வசீகரிக்காமல் இல்லை.  ஒரு புத்தகத்தை முழுவதும் எடுத்துப் படிக்க வேண்டுமென்று என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும், முழுவதும் என்னால் முடிவதில்லை.   ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையை எடுத்துப் படிப்பேன்.  அல்லது ஒரு கவிதைப்புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை எடுத்துப் படிப்பேன்.  ஒரு நாவலிலிருந்து சில பகுதிகள் படிப்பேன்.  அல்லது ஒரு கட்டுரைப் புத்தகத்ததை எடுத்து வைத்துக்கொண்டு தீவிரமாகப் படிப்பேன்.

சதா சர்வக்காலமாக டிவியைப் பார்த்தபடி இருக்கும் இன்னொரு நபரை இலக்கியக் கூட்டங்களுக்கு, சினிமாவுக்கு, கோயிலுக்கு, புத்தகம் படிப்பதற்கு என்று மாற்ற முயற்சி செய்கிறேன்.  என் முயற்சி ஓரளவு வெற்றிப் பெறும் என்று நினைக்கிறேன்.

(Photo taken by Clik Ravi)

விருட்சம் நடத்திய மூன்றாவது கூட்டம்…..

இந்தச் சென்னைப் புத்தகக் காட்சியில் மூன்றாவது கூட்டமாக பெருந்தேவியின் üபெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்ý என்ற கூட்டத்தை மாலை 6 மணிக்கு மேல் நடத்தினோம். திரளாக பெருந்தேவியின் நண்பர்கள் இந் நிகழ்சியில் கலந்து கொண்டார்கள்.
 
அம்ஷன்குமார் முதல் பிரதியைக் கொடுக்க கவிஞர் பரமேஸ்வரி பெற்றுக்கொண்டார். மற்ற இரண்டு தொகுப்புகள் போல் இல்லாமல் (அழுக்கு சாக்ஸ், வாயாடிக் கவிதைகள்) இது முற்றிலும் வித்தியாசமான கவிதைகள் கொண்ட தொகுப்பு. ஆனால் இந்த மூன்று கவிதைத் தொகுதிகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு.
 
இக் கூட்டத்தை ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துள்ளேன்.
அம்ஷன் குமார் பேசிய சாரம்சத்தை இங்கே தர இயலுமா என்று பார்க்கிறேன்.
 
…..பெருந்தேவி கிட்டத்தட்ட 20 வருஷமாகக் கவிதை எழுதி வருகிறார். அவர் முதல் கவிதைத் தொகுதி 1992ல் வெளிவந்தது. தீயுறைத் தூக்கம். அப்போதிலிருந்து அவர் கவிதைகள் மீது எல்லோருக்கும் கவனம் விழுந்திருக்கிறது. ஒரு கவனிக்கப்பட வேண்டிய கவிஞர் என்று. அந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை என்னவென்றால் அது பலபேர்களுக்குப் புரியவில்லை. ஒரு கவிஞர் முதன்முதலாக தொகுப்பு கொண்டு வரும்போது மொழி மீது யுக்திப் பூர்வமான பரிசோதனைகளைக் கையாளணும்னு தோன்றும். அவர் கவிதை புரியவில்லை என்று சொல்வார்கள், ஆனா கவிதையின் லட்சணம் புரியாமல் இருப்பதுதான். அதாவது ஒரு புலப்படாதத் தன்மை. திரும்பத் திரும்ப அதற்குள் போகும்போது ஒரு திரை விலகிப் போவதுபோல் போய்விடுகிறது. அவர் ஒரு பெண் கவிஞர் என்று வரையறைக்குள் கொண்டு வர முடியாது. அதே சமயம் பெண்ணியக் கவிஞர் என்று தன்னை முன்னெடுத்துக்கொள்ளாத கவிஞர். ஆண்களும் கவிதைகள் எழுதுகிறார்கள், பெண்களும் கவிதைகள் எழுதுகிறார்கள். அப்படித்தான் அவரைப் பார்க்க முடியும். மேலும் அவரது கவிதைகளில் ஒரு எள்ளல் இருக்கிறது, எள்ளல் மூலம் கேலி செய்வது, கேலி மூலம் சீண்டுவது இதெல்லாம் இவர் கவிதைகளில் உண்டு. இந்தத் தொகுப்பில் இது அதிகமாகவே இருக்கிறது. இந்தத் தொகுப்பில நேரிடையான தன்மை இருக்கிறது. எதிர் கவிதை என்று சொல்கிற விஷயமெல்லாம் இருக்கிறது. ஏற்கனவே அவருடைய கவிதைகளில் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன். நாம் புனிதம் என்று நினைக்கிறதை உடைத்தெறிகிறார். வலுவாக உடைத்து எறிந்திருக்கிறார் என்பதைவிட சீண்டிப் பார்த்திருக்கிறார். உதாரணமாக இந்தப் புத்தகத்தின் தலைப்பே அப்படித்தான் இருக்கிறது. ……..
என்று பேசிய அம்ஷன்குமார் சில கவிதைகளை உதாரணமாக எடுத்துப் படித்துக் காண்பித்தார்.
 
அங்குக் கூடிய பலரும் பெருந்தேவியின் கவிதைகளைப் படித்தார்கள். சீனாக்காரன் என்ற கவிதையை மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் படிக்கும்போது, சிரித்து விட்டார். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதனால் அக் கவிதையை அவரால் படிக்க முடியவில்லை பெருந்தேவிதான் படித்தார். கூட்டம் இனிதாக முடிந்தது. எல்லோரும் கலைந்து போன பிறகு, பக்கத்தில் உள்ள ஸ்டால்காரர், ‘என்ன உங்கள் ஸ்டாலில் ஒரே கூட்டமாக இருக்கிறது, கூட்டம் போட அனுமதி வாங்கினீரா,’ என்று சிரித்தபடி கேட்டார். ‘எதுக்கு அனுமதி வாங்கறது..என்ன மைக் வெச்சா கூட்டம் நடத்தறோம்,’என்றேன்.
 
இந்தக் கூட்டத்தின் ஆடியோ வீடியோ பிரமாதமாகப் பதிவு ஆகி இருக்கிறது. யாராவது உதவி செய்தால் எல்லோரும் கேட்பதுபோல் முகநூலில் கொண்டு வர முடியும். எனக்கு சில டெக்னிக் இன்னும் கைவராமல் இருக்கிறது. கூடிய சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுவேன்.