பத்மா காபி பேக்….

 

நான் ஒரு பையை எப்போதும் வைத்திருப்பேன்.  அந்தப் பையின் பெயர் பத்மா காபி பை.  துணிப்பைதான்.  ஆனால் உறுதியான பை.  இந்தப் பை மூலம் என் புத்தகங்களை எல்லா இடங்களிலும் சுமந்து வருவேன்.  புதிய புத்தகங்கள் ஆனாலும் பழைய புத்தகங்கள் ஆனாலும் சுமப்பதற்கு உறுதியான பை.  அகலமான பெரிய பை.  தினத்தந்தி பேபர்பர்களைக் கொண்டு வருவார்களே அதுமாதிரியான பை.

நான் மயிலாடுதுறை செல்லும்போது இந்த பத்மா காபி பையை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  என்னிடம் இப்படி அதிகமாக  7 அல்லது 8 பைகள் சேர்நதிருக்கும்.  இந்தப் பை ஒவ்வொன்றும் ரூ.60 விலை.  எனக்கு யாராவது இந்தப் பையை மட்டும் தானமாகக் கேட்டால் கொடுக்க மனசு வராது.  ஆனால் என் வீட்டில் பணிபுரிபவருக்கு ஒரு பையைக் கொடுத்து விட்டேன்.  திரும்பவும் மயிலாடுதுறைக்குச் சென்று இன்னும் இரண்டு முன்று பைகள் வாங்கி வந்து விட்டேன்.  பத்மா காபி என்று விளம்பரம் படுத்தியிருக்கும் இந்தப் பையில் பத்மா காபி எப்படி இருக்குமென்று தெரியாது.  வாழ்க பத்மா காபி. பையை விளம்பரப் படுத்தி வழங்கிய வள்ளல் அது.

இந்தப் பை பலவிதங்களில் சொளகரியமானது.  எந்தக் கணமான பொருள்களையும் இந்தப் பை சுமக்க வல்லது.  இந்த பத்மா காபி பையை பைக்கில் மாட்டிக்கொண்டு சென்றால் அறுந்து விழாது.  தெருவில் உள்ள தரையில் உரசாது.  கிழிந்து போகாது.  ஆனால் சீக்கிரம் அழுக்காகப் போய்விடும். அதனால் ஒரு சௌககரியம் உண்டு.  யாரும் பையைத் தொட மாட்டார்கள்.

இந்த பத்மா காபி பைகளில் விருட்சம் புத்தகங்களை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விடலாம்.  ஒன்றரைப் பைகள் போதும்.  விருட்சம் புத்தகங்களே ஒன்றரை அல்லது ஒன்னேகார் பத்மா காபி பைகளில் அடங்கி விடும்.

எந்த முணுமுணுப்பும் இல்லாமல் நான் கொண்டு வரும் புத்தகங்களை சுமக்கும் இந்தப் பையை நான் கௌரவப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.  அதனால்தான் இந்தப் பையைப் பற்றி எழுதுகிறேன்.

வாழ்க இந்தப் பை.  வாழ்க இதன் நாமம்.  ஒன்றரைப் பைகளில் விருட்சம் புத்தகங்களை அடக்கிவிடும் உன் சாமர்த்தியம் என்ன.  வாழ்க நீ.

இத்தனை நாட்கள் பழகியும் இந்தப் பையை நான் புரிந்து கொள்ளவில்லை.

அது துணிச்சலுடன் என்னுடன் பேச ஆரம்பித்தது.

நான் : பையே உன்னை வணங்குகிறேன்.

பை : போதும் நிறுத்து.  நான் சொல்வதை நீ கேட்பதில்லை.

நான் : நீ என்ன சொல்கிறாய்.. நான் கேட்பதில்லை.

பை : அதிகமாகப் புத்தகங்களை அடிக்காதே..

நான் : அதிகமாக என்றால் என்ன?

பை : கவிதைப் புத்தகம் என்றால் 20 புத்தகங்களுக்கு மேல் அடிக்காதே..

நான் : யே… நீ என்ன சொல்கிறாய்…உன்னை நம்புகிறேன் என்பதால் உனக்கு ஆணவம் அதிகமாகி விட்டது…

பை : நிஜமாக சொல்கிறேன்.  முதலில் 20 புத்தகங்கள் அடி.  அது விற்றால், இன்னும் 20 புத்தகங்கள் அடி.  அதுவும் விற்றால் இன்னும் 20…

நான் : சரி, சிறுகதை என்றால்?

பை : அதுவும் 20தான்.

நான் : ஐயோ நான் எங்கே போவேன்…சரி நாவல் என்றால்..

பை : நாவல் என்றால் அதிகமாகப் பக்கங்கள் உள்ள நாவலை அடித்து விடாதே…குறைவான பக்கங்கள் உள்ள நாவலை அடி…

நான் : குறைவான பக்கங்கள் உள்ள நாவல் என்றால் எவ்வளவு அடிக்க வேண்டும்?

பை : 30.

நான் : ஏன் 20 அடித்தால் போதாதா?

பை : போதும். போதும்.  உன் ஆறுதலுக்காகத்தான் சொன்னேன்.

நான் : சரி ஒருவர் 800 பக்க நாலலை எழுதி விட்டால்..

பை : அதை எழுதிய நபர் சாகித்திய அக்காதெமி பரிசு பெற எதாவது முயற்சி செய்ய வேண்டும்….

நான் : ஏன்

பை : அப்படியென்றால் அதிகமாக விற்கும்.

நான் : இல்லாவிட்டால்

பை : பத்துக்கு மேல் அடிக்காதே….

நான் : பத்தா…எனக்கு உன் மேல் கோபம் வருகிறது..

பை : வாங்குபவர்களை நினைத்துப் பார்த்தாயா?  அவர்கள் மீது இரக்கம் கொள்..

நான் : சரி கட்டுரைத் தொகுப்பு..

நான் : எதைப் பற்றி எழுதப் போகிறாய்…சமஸ் மாதிரி அரசியல் பற்றி எழுதினால் அதிகமாக அடிக்கலாம்.  அதற்கு மார்க்கெட் இருக்கிறது.  இலக்கியம் பற்றி எழுதப் போகிறாய் என்றால் அதுவும் டௌன்லோட் என்றால் மதிப்பு இருக்கிறது…நீயே எழுதுகிறாய் என்றால் அதே பத்து.

நான் : நீ என் கூட பேசாதே..

கோபமாகப் பேசிவிட்டு பையைத் தூக்கிப் போட்டுவிட்டு போய்விட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன