நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …11

அழகியசிங்கர்

14வது புத்தகமாக வளவ துரையனின் கவிதைப் புத்தகம். அப்பாவின் நாற்காலி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 100 கவிதைகளுக்கு மேல். வளவ துரையன் சங்கு என்ற பெயரில் சிறுபத்திரிகை நடத்திக்கொண்டு வருகிறார். கதைகள், கவிதைகள் எழுதுபவர்.
நவீன விருட்சத்தில் அவர் கதைகள், கவிதைகள் பிரசுரித்துள்ளேன்.
பொதுவாக கவிதைப் புத்தகங்களுக்கு உலகமெங்கும் வாங்குபவர்கள் எண்ணிக்கைக் குறைவு. தமிழில் பல பதிப்பகங்கள் மூலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் பாரதியார் கவிதைகள் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டியிருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
வளவ துரையன் கவிதை ஒன்றை இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.

பொம்மைகள்

அவன்வட்ட வடிவத்
துணிமேல் பொம்மைகள்
வைத்துள்ளான்.

போலிஸ் பொம்மை ஒன்று
திருடன் பொம்மையிடம்
பிச்சைகேட்பதாய் இருக்கிறது.

புலிக்குப் பக்கத்தில் மானும்
முயலும் சிரிக்கின்றன.

இராமாயணசெட்டில்
சீதையைக் காணோம்
இராவணன் கொண்டு
போயிருப்பானோ?

இலட்சுமியை விட்டுச்
சரஸ்வதி விலகி அமர்ந்துள்ளாள்.
தலையாட்டிப் பொம்மைகள்
அதிகம்தான்

இவை இப்படி
ஏன்என்று கேட்டால்
அவன்

பித்துப்பிடித்தவனாய்ச்
சிரிக்கிறான்.

வளவ துரையன் புத்தகம் விலை ரூ.100தான்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..10

அழகியசிங்கர்

இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி 14 புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறேன். அப் புத்தகங்களைப் பற்றி சொல்வது முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். அது தவிர என் புத்தகக் (எண் : 403) விற்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய நூல்களையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. முதலில் விருட்சம் வெளியீடாக வந்துள்ள புத்தகங்களை முடித்து விடுகிறேன்.

‘எதையாவது சொல்லட்டுமா?’ என்பது என்னுடைய கட்டுரைத் தொகுதி. இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் 2012ஆம் ஆண்டு அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரைகள். என்னை உற்சாகப்படுத்தி பத்திரிகையில் எழுதி வைத்தா அம்ருதா ஆசிரியர் திலகவதிக்கும், என்னைத் தூண்டிய நண்பர் தளவாய் சுந்தரத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் கட்டுரை எழுதி 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் மறந்தே விட்டேன். பின் ஒருநாள் டிசம்பர் மாதத்தில் படுக்கையிலிருந்து தூங்கி எழுந்தபோது தோன்றியது அம்ருதாவில் நான் எழுதிய கட்டுரைகளைப் பற்றி. உடனே கணினியைத் தட்டினேன். அதில் வரிசையாக எழுதும்போதே பதிவு செய்து வைத்திருந்தேன். அத்தனையும் சேகரித்தேன். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நான் எழுதியிருக்கிறேன். அப்போது கட்டுரை எழுதுவது சாதாரண விஷயமில்லை என்று எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு மாதமும் என்ன எழுதுவது என்ற யோசனை ஓடிக்கொண்டிருக்கும்.

ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்றாலும் கட்டுரை எழுதும்போது ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். சொன்னதையே திரும்பிச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நம் வாழ்க்கை சாதாரண வாழ்க்கை. காலையில் எழுந்து கொள்கிறோம், ஏதோ புத்தகம் படிக்கிறோம். தூங்கி விடுகிறோம். பெரிய அதிசயம் ஒன்றும் நடப்பதில்லை. ஆனால் கட்டுரை எப்படி எழுதுவது? என் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளைத்தான் கட்டுரையாக மாற்றினேன். இக் கட்டுரைகள் பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும்போது லக்ஷ்மி மணிவண்ணன். பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அவர் வெளிப்படையாக மனதில் தோன்றுவதைச் சொல்லக் கூடியவர். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அவருடைய ‘கேட்பவரே’ என்ற கவிதைத் தொகுதியைப் படித்துவிட்டு எழுத வேண்டுமென்ற நினைக்கிறேன். அவர்தான் என் கட்டுரைத் தொகுதிக்கு அணிந்துரை எழுதி உள்ளார். அவருக்கும் என் நன்றி.

இக் கட்டுரைகள் எழுதிய விதம் பற்றி சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக சரக்கரை நோயிற்காக ஒரு மாத்திரையை பல ஆண்டுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் பேப்பரில் ஒரு செய்தி. அந்த மாத்திரையைச் சாப்பிடக்கூடாது, கெடுதல் என்ற செய்தி. அந்த மாத்திரியை விற்கக் கூடாதென்று அரசாங்கம் உத்தரவு போட்டிருந்தது. பேப்பரில் தலையங்கமாகவே அதை எழுதியிருந்தார்கள். உடனே அந்த மாத்திரையை நிறுத்திவிட்டேன். ஆனால் அதை எடுத்துக்கொள்ளச் சொன்ன மருத்துவருக்கு இது தெரியவில்லையே என்று தோன்றியது. இதை ஒரு செய்தியை கட்டுரையாக மாற்றி எழுதினேன். ஆனாலும் 22 மாதங்களாக நான் எழுதியது பெரிய விஷயமாக எனக்குப் பட்டது.

அக் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 108 பக்கங்கள் கொண்ட புத்தகமாக எதையாவது சொல்லட்டுமா என்ற புத்தகம் உருவாகி உள்ளது. இதன் விலை : ரூ.90 தான்.

கீழ்க்கண்ட விருட்சம் வெளியீடின்

கீழ்க்கண்ட விருட்சம் வெளியீடின் புதிய புத்தகங்கள் 20% தண்ளுபடியில் விருட்சம் அரங்கம் எண் 403 ல் சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைக்கும்.

1. அழகியசிங்கர் கவிதைகள் – ரூ.350 – ச வி: ரூ.280
2. ஞாயிற்றுக்கிழமை தோறும்
தோன்றும் மனிதன் – நாவல் – ரூ.150 – ச வி : ரூ.100
3. பிரமிளும் விசிறி சாமியாரும் – விலை : 110 – ச.வி : ரூ.70
4. எதையாவது சொல்லட்டுமா – விலை : ரூ.190 – ச வி : ரூ.70
5. மனதுக்குப் பிடித்த கவிதைகள் – விலை ரூ.120 – ச.வி : 100
6. அலகில் அலகு – வேணு வேட்ராயன் – விலை ரூ.60 – ச.வி : ரூ.50
7. தெலுங்கு சிறுகதைகள் பகுதி 1, 2 – விலை ரூ.200 – ச வி : ரு150
8. சென்ற நூற்றாண்டின் சிறுகதைள் : விலை: 90 – ச வி : ரூ.70
9. அப்பாவின் நாற்காலி – வளவ.துரையன் – விலை : 120 ச வி : 100
10. க.நா.சு படைப்புகள் – உலக இலக்கியம் – விலை : 80 -சவி:70
11. க.நாசு படைப்புகள் – விமரிசனக்கலை – விலை : 120 – ச.வி100
12. க.நா,சு படைப்புகள் – 5. நல்லவர் 6. இலக்கிய விசாரம்
விலை : 90 – சவி: 70
மேலே குறிப்பிடப்பட்ட 13 நூல்களையும்ரூ.1230க்குப் பெறலாம். மொத்தமாக எல்லாவற்றையும் வாங்குபவர்க்கு எல்லாப் புத்தகமும் ரூ.1000 க்குக் கிடைக்கும்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..8

அழகியசிங்கர்

நான் மூன்றாவதாகக் கொண்டு வந்த புத்தகம் üபிரமிளும் விசிறி சாமியாரும்ý என்ற புத்தகம். ஐந்தாண்டுகளுக்கு முன்பே, நான், பிரமிள், விசிறி சாமியார்,ý என்ற தலைப்பில் என்னுடைய வலைத்தளத்தில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் நடுவில் அந்தக் கட்டுரையை எழுதுவதை விட்டுவிட்டேன். பின் அக் கட்டுரைத் தலைப்பில் ஒரு மாற்றம் செய்து பிரமிளும் விசிறி சாமியாரும் என்று எழுத ஆரம்பித்தேன்.
பிரமிள் விசிறி சாமியாரைச் சந்திக்க என்னை அழைத்துக்கொண்ட சம்பவத்தை விவரித்திருப்பேன். அந்தச் சந்திப்பில் பிரமிளுடன்தான் விசிறிசாமியார் பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ சாமியார்களைப் பார்ப்பதில் அனுபவமில்லை. அவர்கள் எப்படியெல்லாம் பழகுவார்கள் என்பதும் தெரியாது.
ஆனால் பிரமிளுடன் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு விசிறி சாமியாரைத் திரும்பவும் சந்திக்கப் போகவில்லை. இந்தப் புத்தகத்தில் முதலில் விசிறி சாமியாரை பிரமிள் சந்தித்த விபரத்தையும் பின் பிரமிளைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்.
ஒரு இடத்தில் இந்தப் புத்தகத்தை என்னால் முடிக்கவே முடியாது என்று தோன்றியது. அந்த இடம் பிரமிளின் மரணத்தைப் பற்றி விவரிக்கிற இடம். ஏனோ அது சங்கடமாக இருந்தது. திரும்பவும் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணம் வந்தவுடன் அதையும் எழுதி விட்டேன்.
இந்தப் புத்தகத்தில் கட்டுரைகள் விட்டு விட்டு எழுதியிருப்பதால் சொன்னதையே சில இடத்தில் சொல்லியிருக்கிறேனோ என்ற எண்ணம் தோன்றிக்கொண்டிருக்கிறது. திரும்பவும் நான் முழுவதும் படித்து சரி செய்துவிட்டேன்.
இப்போது என்ன தோன்றுகிறது என்றால் ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தைப் படித்து அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. 109 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.90தான். ஆனால் புத்தகக் காட்சியை ஒட்டி 20% தள்ளுபடியில் தரத் தயாராக உள்ளேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..7

அழகியசிங்கர்

டிசம்பர் மாதம் முழுவதும் முடியுமா முடியுமா என்றிருந்தது. என் நாவல் மாத்திரம்தான் அச்சடித்திருந்தேன். இதன் நடுவே விருட்சம் 107வது இதழ். பெரிய போராட்டமாகப் போராட வேண்டியிருந்தது. வேணு வேட்ராயன் கவிதைப் புத்தகம் மாத்திரம் தயாராகி விட்டது. அடுத்தது என் நாவல். கவிதைப் புத்தகத்திற்கு என்னுடைய எல்லாக் கவிதைகளையும் ஒன்று சேர்த்தேன். பிழைத் திருத்தம் செய்து கொண்டிருந்தேன். வேணு வேட்ராயன் உதவினார்.
இந்தத் தருணத்தில்தான் அரவிந்த் சுவாமிநாதன் போன் செய்தார். ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்,’ என்ற புத்தகம் ஒன்று கொண்டு வர முடியுமா என்று கேட்டார்.
முடியும் என்று சொல்லிவிட்டேனே தவிர எப்படி முடியும் என்பது தெரியாது. என் புத்தகங்கள் தயாரிப்பதிலேயே டைட்டாக இருந்தேன்.
எல்லாக் கதைகளையும் தயாரித்து எனக்கு அனுப்பி விட்டார். பின் தொகுப்பாசிரியர் என்ற இடத்தில் என் பெயரும் சேர்த்திருந்தார். என் பெயர் சேர்ப்பதில் நான் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் புத்தகம் முழுவதும் அவருடைய முயற்சி. அவர் பெயர் வருவதுதான் நியாயம். அதனால் என் பெயரை நீக்கிவிட்டேன்.
10 கதைகள் கொண்ட சென்ற நூற்றாண்டின் சிறுகதைகளைத் தொகுத்துவிட்டேன்.
இதோ அந்தத் தொகுப்புக்கான முன்னுரையை இப்படி எழுதி உள்ளார்.

‘தமிழின் நவீனச் சிறுகதை என்று ஆய்வாளர்களால் போற்றப்படும் ‘குளத்தங்கரை அரசமரம்’ 1917ல் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே திருமணம் செல்வகேசவராய முதலியார், பாரதியார் போன்றோர் பல சிறுகதைகளை எழுதி விட்டனர். “சிறுகதை என்பது ஒரே அமர்வில் வாசித்து முடிப்பதாக இருக்க வேண்டும்; முதல் வரியிலேயே கதை ஆரம்பமாகிவிட வேண்டும்; ஒரு பொருள் பற்றியதாகவோ, ஒரு மனோநிலை பற்றியதாகவோ ஒருமைகொண்டதாக அமைய வேண்டும்” என்றெல்லாம் கூறப்படும் சிறுகதை இலக்கணத்திற்கேற்றவாறு வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதை இருந்தாலும், அது தாகூர் எழுதிய கதையின் தழுவல் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. தனது சிறுகதைகள் குறித்து, ‘லைலி மஜனூன்’ என்ற சிறுகதையின் முன்னுரையில், பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், வ.வே.சு.ஐயர். “உலகத்தில் சில கதைகள் நித்திய யௌவனமாயும் சர்வாந்தர்யாமியாயும் இருந்துகொண்டு கோடானுகோடி மனிதர்களுடைய மனதில் காதல், கதம், பயம், சோகம் முதலிய பேருணர்ச்சிகளை உண்டாக்கி வருகின்றன. இந்த லைலி மஜனூன் அத்தகைய கதைகளின் ஜாதியைச் சேர்ந்தது. இது அராபியாவிலும் பாரஸீகத்திலும் பலபலப்பட அலங்கரித்துச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இவற்றுள் மிகவும் பேர்பெற்ற கற்பனை, கலி கஉஅக-ல் இறந்து போனதாகக் கூறப்படும் நிஜாமி என்னும் மகாகவியால் பாடப்பட்டதாகும். இங்கு நாம் செய்யும் கற்பனை அவனது கற்பனையினின்று பல இடங்களில் மாறுபட்டிருக்கும். ஆனால் கதைகளுக்கு அவரவர்களுடைய சுவைக்கும் ஆற்றலுக்கும் தக்கபடி புதிய உருவங்கள் கொடுப்பது ஆசிரியருக்குத் தொன்றுதொட்டு வந்திருக்கும் உரிமையாகும். அவ்வுரிமையைக் கையாடியதைக் கண்டு அறிஞர் வெகுளமாட்டார்கள் என்பது திண்ணம். எம் கற்பனை சுவையுடன் செய்யப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்ற பிரச்னையைக் கதாப்பிரியர்களும் ரஸிகர்களும் தான் நிர்ணயிக்க உரியவர்கள்.” இவ்வாறு பாலபாரதியின் முதல் இதழில் ஐயர் குறிப்பிட்டிருக்கிறார்.’

இப்படி எழுதிக்கொண்டே போகிறார் அரவிந்த் சுவாமிநாதன். அவர் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
இப்போது கூட ஆச்சரியமாக இருக்கிறது இந்தப் புத்தகத்தை எப்படி முடித்தேனென்று.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..6

அழகியசிங்கர்

நண்பர்களே,

நான் இந்த முறை 14 புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன். அதில் நான் புத்தகங்கள் நான் எழுதிய புத்தகங்கள். ஒரு புத்தகம் நான் தொகுத்த கவிதைப் புத்தகம்.
போன ஜனவரி மாதம் நான் என் சிறுகதைகள் முழுவதையும் தொகுத்து அழகியசிங்கர் சிறுகதைகள் என்று கொண்டு வந்தேன். நான் எழுதியவை எல்லாவற்றையும் சேகரித்து விட்டேன். இதை அப்படிச் செய்யவேண்டுமென்று தோன்றியதால் அந்தப் புத்தகம் கொண்டு வந்தேன்.
அதேபோல் இந்த ஆண்டு என் கவிதைகள் முழுவதும் தொகுக்க வேண்டுமென்று தோன்றியது. எல்லாவற்றையும் தொகுத்து விட்டேன். 304 கவிதைகள் வரை எழுதியிருக்கிறேன்.
1975ஆம் ஆண்டிலிருந்து நான் கவிதை எழுதி வருபவன். என் கல்லூரியில் முதலில் இலக்கணப்படி வெண்பா எழுத ஆரம்பித்தேன். ஆனால் கட்டுப்பாட்டுடன் கவிதை எழுதுவது என்னால் ஏற்க முடியவில்லை.
அப்போதுதான் எஸ்.வைத்தியநாதன் என்ற நண்பர் மூலம் நான் இன்னும் சில கவிதைகள் எழுதும் நண்பர்களுடன் நட்புக்கொண்டேன். அதில் மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள். அதேபோல் இன்னொரு பக்கம் பிரமிள் என்ற மூத்தக் கவிஞருடன் பழகிக் கொண்டிருந்தேன். ஒருபோதும் நான் எழுதிய கவிதைகளை இவர்களிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டதில்லை. திருவனந்தபுரத்திலிருந்து வரும் நகுலனும் என் கவிதைகளைப் பற்றி பேசுவார். இப்படியாக என் கவிதை எழுதும் அனுபவம் ழ பத்திரிகையிலிருந்து விருட்சம் பத்திரிகை வரை வளர்ந்தது. என் முதல் கவிதைத் தொகுப்பு வந்தபோது அப் புத்தகத்திற்கு தமிழவன், ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன், நகுலன் கட்டுரைகள் எழுதி உள்ளார்கள். அதே போல் என் இரண்டாவது தொகுப்பிற்கு ரிஷி முன்னுரை தந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை கவிதை எளிதாகப் புரிய வேண்டுமென்று கொள்கை வைத்திருக்கிறேன். கவிதையைப் பொறுத்தவரை ரொம்பவும் எளிதாகப் புரிந்தாலும் ஆபத்து இருக்கிறது. புரியாமல் போனாôலும் ஆபத்து இருக்கிறது.
ஆரம்பத்தில் நான் கவிதை எழுத வள்ளலார் ஒரு காரணம். அதன் பின் க நா சு. என் சக கவிஞர்களிடமும் நான் பலவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன். கற்றுக்கொண்டு வருகிறேன்.
என்னுடைய இந்தத் தொகுப்பிற்கு சீனிவாச நடராஜனுக்கு நான் நன்றிக்கடன் படுகிறேன். அவர் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அவர் வெங்கட் சாமிநாதன் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகப் பிரதிகளைக் கொடுத்து விருட்சம் நல நிதிக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
மேலும் அவர் எ;ன்னுடன் வந்திருந்த கிபாகரணையும் என்னையும் பல புகப்படங்கள் எடுத்தார். அவர் ஒரு புகைப்படம் மட்டும் எடுப்பதில்லை. பல புகைப்படங்கள் எடுக்கிறார். ஒரு இடத்தில் இந்தப் புகைப்படத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்.
அவர் என்னைப் புகைப்படமாக எடுத்ததை நான் என்னுடைய இரண்டு புத்தகங்களுக்குப் பயன்படுத்தி உள்ளேன். அதில் ஒரு புகைப்படத்தைத்தான் என் கவிதைகளுக்கான அட்டைப்படம் புகைப்படமாகக் கொண்டு வராமல் டிஜிட்டல் படமாக மாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பாகவும் வித்தியாசமாகவும் அட்டைப்படம் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
1975ஆம் ஆண்டிலிருந்து எழுதிய கவிதைகள் தொகுப்பு இது. எல்லாவற்றையும் சேகரித்துவிட்டேன். 2018ல் நான் ஒரு கவிதை எழுதி உள்ளேன். அக் கவிதையின் பெயர் : மீ டு

மீ டு

உலகத்தில் அழகானவர்கள்
பெண்கள்தான்
அவர்கள் இல்லாவிட்டால்
இந்த உலகத்தை ரசிக்க முடியாது

எத்தனையோ வயதான பெண்களின்
உடல் அமைப்பையும் முக அழகையும்
பார்த்து ரசித்திருக்கிறேன்

வெகுளியாக பாவாடைச் சட்டை
அணிந்து வரும் சிறுமிகளையும்
பார்த்து ரசித்திருக்கிறேன்

மெல்லிய சூடிதார் அணிந்து வரும்
இளம் பெண்களிடம்
ஒன்று கேட்க வேண்டும்
உங்கள் காதலர்களிடம்
மணிக்கணக்காய் நீங்கள்
என்ன பேசுகிறீர்கள் என்று

ஒரு பெண் அழுதால்
என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது
நான் தொடர்ந்து அந்தப் பெண்ணின்
அழுகையைப் பார்த்துக்கொண்டிருந்தால்
நானும் கண் கலங்கி விடுவேன்
அதனால் நகர்ந்து போய் விடுவேன்.

எந்தப் பெண்ணும் என்னிடம்
மீ டு என்று சொன்னதில்லை

502 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.350. புத்தகக் காட்சியை ஒட்டி இப் புத்தகம் விலை ரூ.250.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..4

அழகியசிங்கர்

ஒருநாள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இன்னும் என்ன புத்தகங்கள் கொண்டு வரலாமென்று யோசித்தேன். திடீரென்று அம்ருதாவில் எழுதிய கட்டுரைகள் ஞாபகத்திற்கு வந்தது. உடனே கணினியைத் திறந்து பார்த்தேன். அம்ருதாவில் கட்டுரைகளை 5 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தன. ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டனவா என்று மலைப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அம்ருதாவில் எழுதியிருந்தேன். என்னை எழுதச் சொல்லி தூண்டியவர் தளவாய் சுந்தரம். அவருக்கு நன்றி தெரிவிப்பது கடமை.
உண்மையில் அம்ருதா கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் அதற்கு முன் நான் எழுதியதைப் பார்த்தேன். வரிசையாக அத்தியாயங்கள் மாதிரி ஒன்று இரண்டு என்று எழுதியிருந்தேன். அதாவது 2010லிருந்து எழுதியிருந்தேன்.
அதை எடுத்துப் பார்த்தபின் இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு நாவலாக மாற்றலாம் என்று தோன்றியது. இது உருவாக இன்னொரு காரணமும் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருக்கும் என் நண்பர் பிரபு, ‘உங்கள் சிறுகதைகளை எல்லாம் சேர்த்தால் அது நாவலாக மாறிவிடும்,’ என்று கூறியது.
உடனே எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நாவலாக மாற்றினேன். அதில் சிலவற்றை நீக்கினேன். திரும்பவும் பல முறை படித்துப் பார்த்தேன். நாவலுக்கான எல்லாத் தகுதியும் அதற்கு இருக்கிறது என்று தோன்றியது.
எனக்கு நகுலன்தான் ஞாபகத்திற்கு வந்தார். நகுலன் 9 நாவல்கள் எழுதியிருக்கிறார். அவர் நாவல்களில் üநினைவுப்பாதைý என்ற நாவலை ஒருவர் எடுத்து முழுவதுமாகப் படிக்க முடியாது. யாரும் நகுலனை நாவலாசிரியர் என்று சொன்னது கிடையாது. இன்றைய பெரிய சவால் நகுலனின் நாவலைப் படிப்பதுதான். அவர் நாவல்கள் மூலம் தன்னையே உரித்துக் காட்டுகிறார். நினைவுப்பாதை என்ற நாவலில் ஒரு இடத்தில் அவருக்குப் பைத்தியம் பிடித்து அவதிப் பட்டதையும் எழுதியிருக்கிறார். நகுலன் மாதிரி தன்னையே உரித்துக்காட்டும் பாணியில் இப்போது எழுதி வருபவரில் சாருநிவேதிதாவும் ஒருவர் என்று எனக்குப் படுகிறது.
என் நாவல் எனக்கு நகுலனைத்தான் ஞாபகப்படுத்தியது. ஆனால் நகுலனிடமிருந்து நான் தூர வந்துவிட்டேன். என் நாவல் எளிதில் புரியும். படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். என் நாவலுக்கு நான்தான் முக்கிய பாத்திரம். ஆனால் நான் சந்திக்கும் கூட வரும் பாத்திரங்களையும் அதே பேரில் குறிப்பிட்டிருக்கிறேன். நல்லவிதமாகத்தான் எழுதியிருக்கிறேன். நகுலனாவது அவர் நாவலில் க.நா.சுவை ராமநாதன் என்று குறிப்பிட்டிருப்பார். சுந்தர ராமசாமியை கேசவ மாதவன் என்று சொல்லியிருப்பார். முதலில் என் நாவலுக்கு என்ன தலைப்பு வைப்பது என்பதில் எனக்குக் குழப்பம். உள்ளும் புறமும் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தேன். என்னுடன் நடந்து வரும் நண்பர் ஒருவர் ஏன் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள் என்றார். உடனே தலைப்பை மாற்றி விட்டேன். என் கவிதை ஒன்றின் தலைப்பை நாவலுக்கு வைத்துவிட்டேன். üஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்ý என்ற பெயரில். மேலும் அந்த நண்பர் எதுûமாதிரி அட்டை வரவேண்டுமென்றும் ஐடியா கொடுத்தார். இது விருட்சம் வெளியீடின் 3வது புத்தகம்.
என் புத்தகத்தைப் படிப்பவர்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள். அல்லது என்னைப் பார்க்காமலேயே ஓட்டமாய் ஓடிப் போய்விடுவார்கள். என் அலுவவக நண்பரிடம் என் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். அவர் இதுவரை என் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இனிமேல் என் கூட பேசவே மாட்டார் என்றும் தோன்றுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு உஷாதீபன் 3 பக்கங்களுக்கு மேல் ஒரு விமர்சனம் முகநூலில் எழுதி உள்ளார். அவருக்கு என் நன்றி.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..2

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..2

அழகியசிங்கர்

இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி எத்தனைப் புத்தகங்கள் கொண்டு வருவேனென்று கடைசி வரை தெரியவில்லை. என் இரண்டாவது புத்தகமும் கவதைப் புத்தகம்தான்.
நான் கடந்த ஓராண்டாகத் தேர்ந்தெடுத்த üமனதுக்குப் பிடித்த கவிதைகள்ý தான் இந்தத் தொகுப்பு. 100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட அற்புதமான புத்தகம்.
இதை நானே சொல்வது சரியாக வராது. ஆனால் உங்களில் யாராவது ஒருவர் சொன்னால் மகிழ்ச்சி அடைவேன். எல்லாக் கவிதைகளையும் கவிதைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளேன். இந்தத் தொகுப்பு நூல் சிறப்பான முறையில் வெளிவந்திருக்கிறது. நீங்கள் யாராவது இந்தத் தொகுப்பைப் படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறினால் மகிழ்ச்சி அடைவேன். இதைத் தொடர்ந்து இன்னொரு தொகுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டு வர உள்ளேன்.
திரும்பவும் எடுத்து இந்த நூறு புத்தகங்களிலிருந்து இன்னொரு நூறு கவிதைகள் எடுத்துப் புத்தகமாகப் போடலாம். ஆனால் நான் வேற நூறு கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.
முகநூலில் வெளிவந்ததால் முகநூல் நண்பர்களுக்கு இத் தொகுதியை சமர்ப்பிக்கிறேன். இதிலிருந்தும் ஒரு கவிதை.
ழாக் ப்ரெவெர் கவிதையை இங்குக் குறிப்பிடுகிறேன்.

உனக்காக என் அன்பே
ழாக் ப்ரெவெர்

தமிழில்: வெ ஸ்ரீராம்

பறவைகள் சந்தைக்குப் போனேன்
பறவைகள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

மலர்கள் சந்தைக்குப் போனேன்
மலர்கள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

இரும்புச் சாமான்கள் சந்தைக்குப் போனேன்
சங்கிலிகள் வாங்கினேன்
கனமான சங்கிலிகள்
உனக்காக
என் அன்பே

பிறகு அடிமைகள் சந்தைக்குப் போனேன்
உன்னைத் தேடினேன்
ஆனால் உன்னைக் காணவில்லை
என் அன்பே.

இப் புத்தகம் 120 ரூபாய்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..1

அழகியசிங்கர்

ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி புத்தகங்கள் கொண்டு வரும் வழக்கம் எனக்குண்டு. ஆரம்பத்தில் நான் ஒன்றோ இரண்டோ புத்தகம் கொண்டு வருவேன். சிலசமயம் அப்படிப் புத்தகம் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். புத்தகக் காட்சியை முன்னிட்டிதான் அப்படி புத்தகம் கொண்டு வருவேன். அதற்கு முன் வரை சும்மா வெட்டியாய் பொழுதைப் போக்குவேன். இப்போதெல்லாம் அச்சிடும் முறை மாறிவிட்டது. அளவறிந்து செயல் படுகிறார்கள்.
வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்துகொண்டு வரும்போது புத்தகக் காட்சி 4ஆம் தேதி என்று சொன்னார் என்னுடன் வரும் நண்பர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரமாக வந்து விட்டதே என்ற அதிர்ச்சி.
பூங்காவில் ஒரு பெரிய மரம் இருக்கிறது. பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மரத்திடம் போய் பேசினேன். “மரமே மரமே,”
“என்ன?”
“இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேச மாட்டேன்.”
“என்ன இரண்டு விஷயங்கள்”
“ஒன்று வந்து ஏன்?”
“ஓ ஓ ஏன்னா?”
“இன்னொன்று இன்னொரு ஏன்?”
“எனக்குப் புரிந்து விட்டது. உன்னால் முடியாது.”
எனக்கு மரம் மீது கோபம். நழுவி வந்து விட்டேன். என் கூட நடந்து வரும் நண்பர், “உம்மால் ஒருநாள் கூட அதைச் சொல்லாமல்
இருக்க முடியாது.”
“உண்மைதான்” என்றேன்.
வரும் ஆண்டிற்கான புத்தகங்களை டிசம்பர் மாதம்தான் அவசரம் அவசரமாக அடித்து முடித்தேன். இதோ என் முதல் புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

புத்தகம் 1 : ‘அலகில் அலகு’தான் முதல் புத்தகம். வேணு வேட்ராயனின் கவிதைத் தொகுப்பு. 72 கவிதைகள் அடங்கிய புத்தகம். வேணு வேட்ராயன் மூன்று பேர்களை அடையாளப்படுத்துகிறார். அவர் கவிதை ஆக்கத்திற்கு அந்த மூன்று படைப்பாளிகள்தான் காரணம் என்கிறார். ஜெயமோகன், பிரமிள், தேவதேவன்தான் அந்த மூன்று பேர்கள். அவர் கவிதைப் புத்தகத்தைப் புரட்டினால் பிரமிளோ தேவதேவனோ தென்படவில்லை.
வேணு வேட்ராயன் கவிதைகள் வித்தியாசமாக இருக்கின்றன. கவிதைகள் முழுவதையும் படிமத்தால் அழகுப் படுத்துகிறார். இவர் கவிதைகளை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் நண்பர் பிரபு மயிலாடுதுறை. இக் கவிதைகளைப் படிக்கும் போது இவர் கவிதைகளை முபீன் கவிதைகளுடன் ஒப்பிடலாமா என்று யோசித்தேன். ஆனால் நிச்சயமாக அது மாதிரி இல்லை என்று உடனே தோன்றி விட்டது.
இத் தொகுப்பில் உள்ள 72 கவிதைகளில் தலைப்பே இல்லை. அவரும் இக் கவிதைகளுக்கு எந்த முன்னுரையும் எழுதவில்லை. இதோ அவர் கவிதை ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
பக்கம் 27ல் இது மாதிரி ஒரு கவிதை எழுதி உள்ளார்.

சொல்லோ
சூத்திரமோ
சுட்டும் விரல்
நிலவோ
மௌனமோ
சூட்சுமமோ.

சுட்டும் விரலோ
நிலவோ
உன் ஒரு சொல்லோ
மௌனமோ
சூத்திரமோ
சூத்திரத்தின் சூட்சுமமோ.

83 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.60.

துளி : 24 – நான் எப்படியோ ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன்

அழகியசிங்கர்

டிசம்பர் மாதம் மோசமான மாதம் ஜனவரி மாதம் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி புத்தகங்கள் தயாரிக்க வேண்டும். புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் 16வது சென்னை உலகத் திரைப்பட விழா 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிவரை. இதைத் தவிர இசைக் கச்சேரிகள் பல சபாக்களில்.
நான் இந்த முறை ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன். மாலை நேரத்தில் குளிர் தாங்க முடியாமல் இருந்ததால் பகல் நேரங்களில் சென்று கொண்டிருந்தேன்.
இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை உலகத் திரைப் பட விழாவில் நான் பார்த்த படங்கள் எனக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்தன. ஆனால் போன ஆண்டு அந்த அளவிற்கு திருப்தியைத் தரவில்லை. பல படங்களில் பாதியை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.
ஆனால் இந்த முறை நான் பார்த்தப் படங்கள் எல்லாம் எனக்குத் திருப்தியை மட்டுமல்ல, இன்னும் சினிமாப் படங்கள் பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக எனக்குத் தெரிந்தது. முதலில் டுர்கிப் படம் ஒன்றைப் பார்த்தேன். படம் பெயர் தி ஒயில்டு பியர் டீரி. சிலான் என்பவர் இயக்கியப் படம்.
எழுத்தாளராக வர வேண்டுமென்று சினான் நினைக்கிறார். அவர் இளைஞர். அவர் வசித்த கிராமத்திற்கே வருகிறார். அங்கு பலரைச் சந்திக்கிறார். அவர் கட்டுரைகளை எல்லாம் சேர்த்து புத்தகமாகக் கொண்டு வருகிறார். ஆனால் அவர் வீட்டிலேயே அவர் புத்தகத்தை அவருடைய அம்மாவும் தங்கையும் படிக்கத் தயாராய் இல்லை. ஒரு நூல்நிலையத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரைச் சந்திக்கிறார். அவருடைய அறிவுரையைப் பெறுவதற்குப் பதில் அவருடன் சண்டைப் போடும்படி ஆகிவிடுகிறது.
சினிமாப் படம் முழுவதும் ஒரே பேச்சு. எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் பார்ப்பதற்கு அலுப்பாகவே இல்லை.
இன்னொரு படம் ஹ÷யுமன், ஸ்பேஸ், டைம் அன்ட் ஹ÷யுமன். கொஞ்சங்கூட கற்பனையே செய்ய முடியாத படம். உணவுக்காக ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கிறார்கள். எந்த அளவிற்கு மோசமாக நடந்து கொள்வார்களோ அந்த அளவிற்கு மோசமாக நடந்து கொள்வார்கள். கி டக் கிம் இயக்கியப் படம். கப்பலில் நடைபெறும் கொடுரமான காட்சிகள் கொண்ட படம். இது ஒரு கொரியா படம்.
பெயின்டிங் லைப் என்ற படம் பார்த்தேன். டாக்டர் பிஜ÷ குமார் தாமோதரன் இயக்கியப் படம். ஒரு வரத்தகப்படத்திற்கு நடனத்தையும் பாட்டையும் படம் பிடிக்க சினிமாப்படக் குழு இயற்கை காட்சி நிறைந்த ஒரு இடத்திற்கு வருகிறார்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத இடம். எதிர்பாராதவிதமாகப் பெய்யும் மழையால் எங்கும் போக முடியாமல் படப்பிடிப்புக் குழுவினர் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். வெளி உலகத் தொடர்பே இல்லாத இடம். அந்த இடத்தில் படக்குழுவினர் படும் அவதிதான் படம். படத்தை இயக்குவதற்காக வந்திருக்கும் இளைஞர் வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாத அந்தக் கிராமத்தைப் பார்த்து பாட்டுக் காட்சியைப் படமே எடுக்க வேண்டாமென்று போய்விடுகிறார். நான் ரசித்தப் 3வது படம்.
மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் என்ற தமிழ்படம் பார்த்தேன். சிவ கார்த்திகேயன் நடித்தப் படம். ஏற்கனவே இந்தப் படத்தைப் பார்த்து ரசித்தவன். திரும்பவும் இந்தப் படத்தை இன்னொரு முறை ரசித்தேன். பொழுது போக்குப் படமாக இல்லாமல் கலப்பட உணவு எப்படி மக்களைப் பாதிக்கிறது என்று விளக்குகிற படம். அலுப்புத் தட்டாமல் பார்த்து ரசித்தப் படம்.
கடைசியாக விஷன் என்ற பிரான்சு தேசத்துப் படத்தைப் பார்த்து ரசித்தேன். விஷன் என்ற பெயரில் உள்ள அரிதான மருத்துவ மூலிகைச் செடியைத் தேடி ஜன்னி என்பவள் ஜப்பான் நாட்டில் உள்ள காட்டிற்கு வருகிறாள். டோமோ என்கிற காட்டுப் பகுதியில் பணிபுரிகிறவனைச் சந்திக்கிறார். மருத்துவச் செடியைக் கண்டுபிடிப்பதற்குப் பதில் அவளைக் கண்டுபிடிக்கும் இடமாக மாறி விடுகிறது. நோமி கவாஸ் தயாரித்து இயக்கியப் படம்.
தாமதமாக இப் படங்களைப் பற்றி எழுதுகிறேன். ஒவ்வொரு படத்திலும் நான் பார்த்த சிறப்புக் காட்சிகளை திறமையாக எழுத முடியவில்லை. இந்தப் படங்களைப் பற்றி சொல்லும்போது ஒரு பார்வையாளனாக ஒரு படத்தை முழுவதுமாக உணர முடியுமா என்பதை என்னால் கணிக்க மடியவில்லை.
புத்தகத் தயாரிப்பு தருணத்தில் இப் படங்களைப் பார்த்தேன். புத்தகங்களையும் தயாரித்துவிட்டேன். இûச்க் கச்சேரிக்குத்தான் போக முடியவில்லை. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இன்று நடைபெற விருக்கும் நித்யஸ்ரீ கச்சேரிக்குப் போக நினைக்கிறேன்.