நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..4

அழகியசிங்கர்

ஒருநாள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இன்னும் என்ன புத்தகங்கள் கொண்டு வரலாமென்று யோசித்தேன். திடீரென்று அம்ருதாவில் எழுதிய கட்டுரைகள் ஞாபகத்திற்கு வந்தது. உடனே கணினியைத் திறந்து பார்த்தேன். அம்ருதாவில் கட்டுரைகளை 5 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தன. ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டனவா என்று மலைப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அம்ருதாவில் எழுதியிருந்தேன். என்னை எழுதச் சொல்லி தூண்டியவர் தளவாய் சுந்தரம். அவருக்கு நன்றி தெரிவிப்பது கடமை.
உண்மையில் அம்ருதா கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் அதற்கு முன் நான் எழுதியதைப் பார்த்தேன். வரிசையாக அத்தியாயங்கள் மாதிரி ஒன்று இரண்டு என்று எழுதியிருந்தேன். அதாவது 2010லிருந்து எழுதியிருந்தேன்.
அதை எடுத்துப் பார்த்தபின் இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு நாவலாக மாற்றலாம் என்று தோன்றியது. இது உருவாக இன்னொரு காரணமும் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருக்கும் என் நண்பர் பிரபு, ‘உங்கள் சிறுகதைகளை எல்லாம் சேர்த்தால் அது நாவலாக மாறிவிடும்,’ என்று கூறியது.
உடனே எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நாவலாக மாற்றினேன். அதில் சிலவற்றை நீக்கினேன். திரும்பவும் பல முறை படித்துப் பார்த்தேன். நாவலுக்கான எல்லாத் தகுதியும் அதற்கு இருக்கிறது என்று தோன்றியது.
எனக்கு நகுலன்தான் ஞாபகத்திற்கு வந்தார். நகுலன் 9 நாவல்கள் எழுதியிருக்கிறார். அவர் நாவல்களில் üநினைவுப்பாதைý என்ற நாவலை ஒருவர் எடுத்து முழுவதுமாகப் படிக்க முடியாது. யாரும் நகுலனை நாவலாசிரியர் என்று சொன்னது கிடையாது. இன்றைய பெரிய சவால் நகுலனின் நாவலைப் படிப்பதுதான். அவர் நாவல்கள் மூலம் தன்னையே உரித்துக் காட்டுகிறார். நினைவுப்பாதை என்ற நாவலில் ஒரு இடத்தில் அவருக்குப் பைத்தியம் பிடித்து அவதிப் பட்டதையும் எழுதியிருக்கிறார். நகுலன் மாதிரி தன்னையே உரித்துக்காட்டும் பாணியில் இப்போது எழுதி வருபவரில் சாருநிவேதிதாவும் ஒருவர் என்று எனக்குப் படுகிறது.
என் நாவல் எனக்கு நகுலனைத்தான் ஞாபகப்படுத்தியது. ஆனால் நகுலனிடமிருந்து நான் தூர வந்துவிட்டேன். என் நாவல் எளிதில் புரியும். படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். என் நாவலுக்கு நான்தான் முக்கிய பாத்திரம். ஆனால் நான் சந்திக்கும் கூட வரும் பாத்திரங்களையும் அதே பேரில் குறிப்பிட்டிருக்கிறேன். நல்லவிதமாகத்தான் எழுதியிருக்கிறேன். நகுலனாவது அவர் நாவலில் க.நா.சுவை ராமநாதன் என்று குறிப்பிட்டிருப்பார். சுந்தர ராமசாமியை கேசவ மாதவன் என்று சொல்லியிருப்பார். முதலில் என் நாவலுக்கு என்ன தலைப்பு வைப்பது என்பதில் எனக்குக் குழப்பம். உள்ளும் புறமும் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தேன். என்னுடன் நடந்து வரும் நண்பர் ஒருவர் ஏன் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள் என்றார். உடனே தலைப்பை மாற்றி விட்டேன். என் கவிதை ஒன்றின் தலைப்பை நாவலுக்கு வைத்துவிட்டேன். üஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்ý என்ற பெயரில். மேலும் அந்த நண்பர் எதுûமாதிரி அட்டை வரவேண்டுமென்றும் ஐடியா கொடுத்தார். இது விருட்சம் வெளியீடின் 3வது புத்தகம்.
என் புத்தகத்தைப் படிப்பவர்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள். அல்லது என்னைப் பார்க்காமலேயே ஓட்டமாய் ஓடிப் போய்விடுவார்கள். என் அலுவவக நண்பரிடம் என் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். அவர் இதுவரை என் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இனிமேல் என் கூட பேசவே மாட்டார் என்றும் தோன்றுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு உஷாதீபன் 3 பக்கங்களுக்கு மேல் ஒரு விமர்சனம் முகநூலில் எழுதி உள்ளார். அவருக்கு என் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன