னிக்ஸ் குளிரும் சென்னை வெயிலும்

பீ

அழகியசிங்கர்

நான் மார்ச்சு முதல் தேதி அமெரிக்காவில் உள்ள பீனிக்ஸ் என்ற இடத்திற்குச் சென்றேன்.  அப்போது அங்குக் குளிர் தாங்க முடியவில்லை.  உண்மையில் பீனிக்ஸ் உஷ்ணப் பிரதேசம்.  ஆனால் குளிரில் நடுங்கும்படி குளிரை வெளிப்படுத்தியது.  இரவு நேரத்தில் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு தூங்குவேன். நான் இருந்த இரண்டு மாதங்களில் மின்விசிறியைப் போடவில்லை.   பல இடங்களுக்கும் சுற்றிப் பார்த்துவிட்டேன்.    சென்னை கிளம்பும் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெயில் தலை காட்டியது.  எப்படி குளிரோ அதை விட மோசமானது வெயில் பீனிக்ஸில்.  வேர்த்துக் கொட்டாத வெயில்.

ஒரு இடத்திலிருந்து நாம் திரும்பும்போது அந்த இடத்தின் ஞாபகம் நம்மைத் துரத்தியபடி இருக்கிறது.  அதிலிருந்து மீள சில நாட்கள் ஆகும்.  எப்படி பீனிக்ûஸ விட்டு வரும்போது ஞாபகம் துரத்துகிறதோ அதேபோல் சென்னையை விட்டுப் போனபோதும் ஏற்பட்டது.  ஞாபகத்தைச் சமநிலைப் படுத்துவதுதான் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். நாம் எங்கே எப்படி இருக்கிறோமோ அதுதான் வாழ்க்கை.  சொர்க்கமும் நரகமும் அதுதான்.

3ஆம் தேதி கிளம்பி இங்கு வந்துவிட்டேன்.  24 மணி நேரம் விமானத்தில் பயணம். கொஞ்சங்கூட தூங்கவில்லை.  குளோபல் படங்கள் பலவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  அமெரிக்காவிலிருந்து 12 மணி நேரம் விமானப் பயணம்  4 சீட் என்பதால் கொஞ்சம் நெருக்கமாகத்தான் இருந்தது.  அவர்கள் அளித்த உணவை சிறிதுகூட சாப்பிட முடியவில்லை.  ஆனால் வீட்டில்

இட்லியும், சப்பாத்தியும் எடுத்து வந்தோம்.  குளோபல் படங்களில் ஸôடர் இஸ் பார்ன் என்ற படத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.   அதில் பாடகராக நடித்த நடிகருடைய ஜாடை என் நண்பர் ராஜகோபாலை ஞாபகப்படுத்தியது.

விமானத்தில் ரெஸ்ட் ரூமைப் பயன்படுத்துவதுபோல அபத்தத்தை என்ன சொல்வது?  வேறு வழியுமில்லை.  நான் கதவைச் சார்த்திக்கொண்டு உள்ளே போனேன்.  பின் திறக்க முடிகிறதா என்று பார்த்தேன்.  திறக்க முடியவில்லை.  அல்லது தெரியவில்லை.  பதட்டப் பட ஆரம்பித்து கதவைத் தட்டினேன். ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தினேன்.  அமெரிக்கன் விமானத்தில்தான் இது நடந்தது.

விமானம் வானத்தில் வட்டமிட ஆரம்பிக்கும்போது ரெஸ்ட் ரூமை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கூட தெரிவித்திருக்கலாம். 

3ஆம் தேதி கிளம்பிய நான் இன்று காலை (அதாவது 5ஆம்தேதி) தான் வந்து சேர்ந்தேன்.  

சென்னையில் காலடி வைத்தவுடன் கடுமையான வெயில். இப்போது தோன்றுகிறது இன்னும் கொஞ்ச நாட்கள் பீனிக்ஸில் இருந்திருக்கலாமோ?

துளி : 49 – அமெரிக்கன் நூலகங்கள் பற்றிச் சொல்ல வேண்டும்



அழகியசிங்கர்

பீனிக்ஸ் என்ற இடத்தில் நாலைந்து அமெரிக்கன் நூலகங்கள் உள்ளன.  இங்கு எந்த நூலகத்திலும் புத்தகங்கள் எடுக்கலாம்.  புத்தகங்களை கௌன்டரில் கொடுக்க வேண்டுமென்பதில்லை.  இங்குள்ள எலெக்டிரானிக் கருவியின் முன் புத்தகங்களை நீட்டினால் அது புத்தகத்தைப் பதிவு செய்துகொள்ளும்.  ஆட்கள் யாரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  பிறகு ரிட்டர்ன்ஸ் என்ற பெட்டியில் புத்தகங்களைப் போட்டு விடலாம். ஒரு நூலகத்தில் வாங்கிய புத்தகங்களை இன்னொரு நூலகத்தில் உள்ள ரிட்டர்ன்ஸில் செலுத்தி விடலாம்.

நூலகத்தின் ஒரு பகுதியில் சிறாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.  அதில் விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருள்கள் வைத்திருக்கிறார்கள்.  அதைத் தவிர தனியாக அவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள்.  அதேபோல் இளம் பருவத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன.  புத்தகங்கள் தவிர டிவிடி, சிடியையும்

இரவல் எடுத்துக்கொள்ளலாம்.  எல்லாம் 35 எண்ணிக்கைக்குள் எடுத்துப் போகலாம். 

இதைவிட முக்கியமானது ரெஸ்ட் ரூம்.  இதைத் தனியாக ரொம்பவும் சுகாதாரத்துடன் வைத்திருக்கிறார்கள்.  நான் இந்த நூலகத்திற்கு முதலில் போனபோது கண்டுகொள்ளவில்லை.  அதன்பின்தான் கண்டுகொண்டேன்.  தனியாக அலமாரிகளில் பல புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  படித்துவிட்டு புத்தகங்கள் வேண்டாம் என்று தருபவர்களின் புத்தகங்கள் இவை.  இப் புத்தகத்தை மிகக் குறைவான தொகையைக் கொடுத்துவிட்டு வாங்கிக்கொண்டு போகலாம்.  அதையும் அவர்கள் நேரிடையாக கண்காணிப்பதில்லை.  ஒரு மரப்பெட்டியில் நாமே புத்தகத்திற்கான தொகையைச் செலுத்தலாம்.

இதில் சில அபூர்வமான புத்தகங்களைக் கண்டேன்.  மேலும் நேஷனல் ஜீயாகரபி, டைம் இதழ்கள் கிடைக்கின்றன.  எல்லாம் பழைய இதழ்கள்தாம்.  இதைத் தவிர டிவிடி, சிடியையும் விற்கிறார்கள்.   

இவ்வளவு வசதிகள் இருந்தும் நூலகங்களுக்குக் குறைவான பேர்களே வருகிறார்கள்.  நான் இப்படி நூலகம் நூலகமாகச் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு நூலகத்தில் கேரளா கிறித்துவத் தம்பதியரைச் சந்தித்தேன். 

“பழிக்குப் பழி வாங்க நிச்சயம் கிருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள்.  இலங்கையில் நடந்தது மாதிரி கொலைகளை கிறித்துவ மதம் ஏற்றுக்கொள்வதில்லை,  ஏன் பயங்கரவாதிகளே இல்லை” என்றார்.  

துளி : 47 – ஜெயகாந்தனின் யுகசந்தி

அழகியசிங்கர்

தமிழ் எழுத்தாளர்களில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.  அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்குள் நுழையுமுன் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்குடன் நுழைவார்.  மற்ற எழுத்தாளர்கள் வேஷ்டி, சட்டை அணிந்திருப்பார்களாம். இதெல்லாம் ஜெயகாந்தன் பற்றி மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒருமுறை என் கல்லூரியில் ஜெயகாந்தன் பேசும்போது மாணவர்களைப் பார்த்து தைரியமாகப் படிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்ன இவ்வளவு தைரியமாக மாணவர்கள் முன் பேசுகிறாரே என்று நினைத்ததுண்டு.

ஜெயகாந்தனுக்கு பாரதி மேல் பற்று அதிகம்.  உண்மையில் அவர் தன்னை பாரதி மாதிரியே நினைத்துக்கொண்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  ஆலந்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஜெயகாந்தன் பேசப்போகிறார் என்பதை அறிந்து நான் அந்தப் பள்ளிக்கு முன்னதாகவே ஜெயகாந்தன் பேசுவதைக் கேட்கப் போயிருந்தேன்.  ஜெயகாந்தன் தெருமுனையில் பள்ளியை நோக்கி நடந்து வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  தலையில் தான் வைத்திருந்த துண்டை எடுத்து முண்டாசு மாதிரி கட்டிக்கொண்டார்.  அப்போது பாரதியார் நினைப்பில் அவர் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.  

பள்ளியில் அவர் பேசத் துவங்கியபோது, கூட்டத்தை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியரையும், மற்ற ஆசிரியர்களையும் கம்பீரமான குரலில் திட்ட ஆரம்பித்தார்.  எனக்கு ஜெயகாந்தனின் அந்தப் பேச்சைக் கேட்டு ஜிவ்வென்றிருந்தது.  

அப்போதெல்லாம் ஜெயகாந்தனைப் பார்த்துப் பேச நான் துணியவில்லை.  ஆனால் அவர் பேசுவதுபோல் மேடையில் பேச வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.  அதனால் மாம்பலத்தில் ஒரு டைப்ரைட்டிங் நடத்தும் வகுப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  நான் பேசும்போது ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டு கத்திப் பேசினேன்.  பேசி முடித்தபிறகு, மொத்தமே 10 பேர்கள் வந்த கூட்டத்தில்  (பெரும்பாலோர்    நண்பர்கள், உறவினர்கள்) ஏன் இப்படி குரலை உயர்த்திப் பேசினேன் என்று வெட்கப்பட்டேன்.

நான் மற்ற எழுத்தாளர்களுடன் (அசோகமித்திரன், வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், பிரமிள், வெங்கட்சாமிநாதன், ஸ்டெல்லாபுரூஸ்) நெருக்கமாகப் பழக ஆரம்பித்த பிறகு ஜெயகாந்தனை மறந்து விட்டேன்.  ஜெயகாந்தன் அவர் காலத்திலேயே அவர் எல்லாம் எழுதிவிட்டு பிறகு எழுதுவதையே நிறுத்தி விட்டார்.  அவர் எழுதாமல் இருந்தாலும் கூட்டங்களில் பேசுவதை விடவில்லை. பாரதியாரைப் பற்றி அவர் பேசியதைப் போல் யாரும் பேசியிருக்க முடியாது.  

எழுத்தாளருக்குக் கர்வம் இருக்க வேண்டும்.  அது ஜெயகாந்தனிடம் இருந்தது.  ஜெயகாந்தன் கே கே நகரில்தான் வசித்து வந்தார்.  ஆனால் அவரைப் பார்த்துப் பேச வேண்டுமென்று நினைத்தாலும், அதற்கான முயற்சியை நான் செய்ததில்லை.  

1988ஆம் ஆண்டு விருட்சம் பத்திரிகையைக் கொண்டு வந்தாலும், ஒரு பிரதியைக் கூட நான் அவருக்கு அனுப்பவில்லை. காரணம் அவர் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டாரென்றுதான்.  

ஜெயகாந்தனின் பல கதைகளைப் படித்திருக்கிறேன்.  சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற அவருடைய கதை திரைப்படமாக வந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

  கடைசியாக ஆனந்தவிகடனும், ஜெயகாந்தன் வாசகரும் சேர்ந்து ஆனந்தவிகடனில் வெளிவந்த மாதிரி அவருடைய சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வந்தார்கள். மயிலாப்பூரில் உள்ள சங்கீத அகடெமியில்தான் அக் கூட்டம் நடந்தது. சபா முழுவதும் கூட்டம்.  உடல்நிலை சரியில்லாமல் ஜெயகாந்தன் வந்திருந்தார்.  அக் கூட்டத்திற்கு வந்ததோடல்லாமல் அந்தப் புத்தகத்தை வாங்கியும் வைத்துக்கொண்டேன். 

ஒருமுறை நான் 3 படைப்பாளிகளுக்குக் கௌரவம் செய்யும் நிகழ்ச்சி ஒன்றை தேனாம்பேட்டையில் உள்ள காதி அரங்கத்தில் நடத்தினேன்.  ஜெயகாந்தனும் ஒரு பார்வையாளராக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  எழுத்தாளர் சா கந்தசாமிக்கு மரியாதைச் செய்ததை அறிந்து வந்திருப்பார் என்று நினைக்கிறேன். கூட்டத்திற்கு வந்ததற்காக என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.  தமிழில் ஜெயகாந்தனுக்கு உயர்ந்த பரிசான ஞானபீட பரிசு கிடைத்துள்ளது.  அதற்குத் தகுதியானவரும் அவர்தான்.

கூட்டத்தோடு ஜெயகாந்தனைப் பார்த்துப் பழகிய நான், கூட்டத்தோடு பார்த்து முடித்துக்கொண்டேன். 

இனி நாம் அவர் படைப்புகளுடன்தான் அவரை ஞாபகத்தில் கொண்டு வர முடியும்.

ஜெயகாந்தனின் üயுக சந்திý என்ற கதையைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.  ஜெயகாந்தனின் கதைகளில் சிறப்பு வாய்ந்த கதைகளில் ஒன்றாக யுக சந்தி என்ற கதையைச்  சொல்லலாம்.

ஜெயகாந்தனிடம் இரண்டு விதமான படைப்பாற்றலை நான் பார்த்திருக்கிறேன்.  ஒன்று பிரமண வகுப்பில் நடக்கும் பாசாங்கை உடைக்கும் விதமான எழுத்து.  இரண்டாவது தலித்துகளை அடையாளப்படுத்தும் விதமாக எழுதியிருப்பது. 

யுக சந்தியில் வரும் கௌரி பாட்டியைப் பற்றிப் படிக்கும்போது எனக்கு என் பாட்டி நினைவு வந்தது.  கௌரி பாட்டியைப் போல் தைரியமாக என் பாட்டியும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பஸ் ஏறி பெண்ணைப் பார்க்கப் போய்விடுவாள்.  

ஜெயகாந்தன் கதையில் வரும் கௌரி பாட்டிக்கு ஒரே ஒரு பையன்.  அந்தப் பையனைப் பெற்றெடுத்து பாட்டி விதவை ஆகிறாள். அந்தப் பையனின் மூத்தப் பெண் கீதாவும் பத்து மாதம் திருமணம் ஆகி விதவை ஆகி விடுகிறாள்.  

தனக்கு நேர்ந்தது மாதிரி தன் பேத்திக்கும் ஆகிவிட்டதை எண்ணி பாட்டி வருந்துகிறாள்.  அந்தப் பெண்ணைப் படிக்க வைத்து உபாத்திமை ஆக்கி விடுகிறாள்.  சிதம்பரத்தில மாற்றல் கிடைத்தவுடன், பேத்தியுடன் சிதம்பரத்திற்குப் போய்விடுகிறாள்.  30 வயது பேத்தியைப் பார்த்துக்கொள்வது அவளுடைய வேலையாகிவிடுகிறது.  விடுமுறை அதிகமாக வரும்போது பேத்தியும் பாட்டியும் ஊருக்கு வருவார்கள்.  அதைத் தவிர சனி ஞாயிறுகளில் பாட்டி தலை முடியை வெட்டிக்கொள்ள பையன் இருக்கிற ஊருக்கு வந்து விடுவாள்.  

கதையின் ட்விஸ்ட் இப்போதுதான் நடக்கிறது.  கீதா எதுவும் சொல்லாமல் பாட்டி கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு அப்பா கடிதத்தைப் படிக்கும்போது என்ன செய்தி என்று கேட்டுக்கொள்ளச் சொல்கிறாள்.  பையனிடம் கீதா கொடுத்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள்.  அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு திகைப்படைகிறான் பாட்டியின் பையன்.  

அதில் கீதா அவளுடன் பணிபுரிந்துகொண்டிருந்த ஹிந்தி பன்டிட் ராமசந்திரனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கடிதம் மூலம் குறிப்பிடுகிறாள்.  

பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை.  ஏற்றுக்கொள்கிறாள்.  பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும் இல்லை. கீதாவுக்குப் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து விடுகின்றன.  இதைப் புரிந்துகொண்ட பாட்டி தன் பேத்தியின் செயலை கண்டிக்கவில்லை.  பேத்தியுடன் இருக்கத் திரும்பவும் சிதம்பரம் போய்விடுகிறாள்.  பேத்தியுடன் என்னையும் சேர்த்து இல்லை என்று மூழ்கி விடு என்று பையனிடம் கடுமையாகக் கூறியபடி போய்விடுகிறாள். 

இப்போது இந்தக் கதையை வாசிக்கும்போது இது சாதாரண விஷயமாகப்படும்.  ஆனால் இந்தக் கதை வெளிவந்த

ஆண்டில் இக் கதை புரட்சிகரமான கதையாக இருந்திருக்கும். 

ஜெயகாந்தனின் பிறந்த தினத்தின்போது இந்தக் கதையை ஞாபகப்படுத்தியபடி இக் கட்டுரையை முடிக்கிறேன். 

ஏப்ரல் 20ஆம் தேதி….



.

அழகியசிங்கர்

ஒருநாள் மாலை நேரத்தில் பிரமிள் வீட்டிற்கு வந்தார். என் கையைக் குலுக்கினார்.  ‘இன்று ஒரு முக்கியமான நாள்,  உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ‘என்ன?’ என்று கேட்டேன்.  ‘என்னுடைய பிறந்த நாள் இன்று,’ என்று சொன்னபோது, ஆச்சரியமாக இருந்தது.

பொதுவாகச் சந்தித்துக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் பிறந்த தின வாழ்த்துக்கள் தெரிவிப்பது இல்லை.

பிரமிளும் நானும் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று பிறந்த தினத்தைக் கொண்டாடினோம்.

எழுத்தாளர் க நா சு ஜனவரி மாதம் 31ஆம் தேதி 1912ல் பிறந்தவர்.  அவருடைய 100வது வயது 2012ல் முடிவடைந்தது.  என் நண்பர் ஞானக்கூத்தன் அவர்கள் அவருடைய பிறந்த தினம் வருகிறது அதை முன்னிட்டு எதாவது கூட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.  

அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லை.  மயிலாடுதுறையிலிருந்தேன்.  என்னால் க நா சுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  ஞானக்கூத்தனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இந்தத் தருணத்தில் நான் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடிந்தது.  க.நா.சு கவிதைகளைச் சிலவற்றை அச்சிட்டு அன்று இலவசமாக எல்லோருக்கும் கொடுத்தேன்.  என்ன கொடுமை என்றால் பலருக்கு க.நா.சு என்றால் யார் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துவிட்டு க.நா.சு கவிதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

நான் அப்போது பஸ்ஸில் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருப்பேன்.  பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  ஆனால் யாரிடம் க நா சு கவிதைகள் புத்தகத்தைக் கொடுப்பது?  யாராவது எதாவது தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தார்கள் என்றால் அவரிடம் கவிதைப் புத்தகத்தை நீட்டுவேன்.  என்னிடமிருந்து புத்தகம் வாங்குபவருக்கு ஒன்றும் புரியயாது.  üüஇதெல்லாம் வேண்டாங்க,ýý என்பார்கள்.  üüஇது இலவசமாகத் தருகிறேன்.   சும்மா படிங்க.. தமிழில் முக்கியமான எழுத்தாளர்,ýý என்று கூறி புத்தகத்தை நீட்டுவேன்.   உண்மையில் நான் க நா சு வுக்கு கூட்டம் நடத்த முடியாவிட்டாலும், அவருடைய நூற்றாண்டு வயதைக் கொண்டாடிவிட்டேன்.

இப்போது என்னுள் ஒரு கேள்வி எழுகிறது.  நம்மில் எத்தனைப் பேர்கள் படைப்பாளிகளைப் பாராட்டுகிறோம்.  பாரதியாரை நாம் காலம் காலமாகக் கொண்டாடுகிறோம்.    அதேபோல் இன்னும் சில படைப்பாளிகளையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.  பொதுவாக தமிழ் மொழிக்குச் சிறப்புச் செய்த பல எழுத்தாளர்களை நாம் ஏன் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம்.  சில தினங்களாக இந்தக் கேள்வி என்னுள் எழாமல் இல்லை.  குறிப்பாக எழுத்தாளர்களின் பிறந்த நாளை மட்டும் கவனத்தில் கொண்டு கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன்.  கொண்டாடுதல் என்றால் என்ன?  ஒரு கூட்டம் போட்டுப் பேசுவதல்ல. 

நாம் ஒவ்வொருவரும் அந்த எழுத்தாளரின் பிறந்த தினத்தின்போது நம் இடத்திலிருந்து நினைவுக் கூர்போம்.  அவருடைய படைப்பை ஒன்று எடுத்துப் படிப்போம்.  அவருடைய படைப்பைப் பற்றி முகநூலிலோ அல்லது நண்பர்களிடையோ பகிர்ந்து கொள்வோம்.

இது நான் மட்டும் செயல்படுத்தக் கூடிய ஒன்று இல்லை.  எல்லோரும் சேர்ந்த இயங்க வேண்டும்.  முதலில் எழுத்தாளர்களின் பிறந்தத் தினங்களைக் கண்டுபிடித்துக் குறிப்பிட வேண்டும்.  அந்தத் தினத்தின்போது அவரது படைப்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு லிஸ்ட் தயாரிப்போம்.  எந்தந்த எழுத்தாளர்கள் எப்போது பிறந்தார்கள் என்று.  

அந்த வகையில் பிரமிள் 1939ஆம் ஆண்டு 20 ஏப்ரல் தினம்.  அவர் உயிரோடு இப்போது இருந்திருந்தால் 80 வயது முடிந்திருக்கும்.  இந்தத் தருணத்தில் அவருடைய கவிதை மூலம் அவரை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

கீழே குறிப்பிடப்பட்ட கவிதை ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தில் பிரமிள் வாசித்த ஆத்மாநாம் கவிதை. நான் அவசரப்பட்டு ஆத்மாநாம் கவிதையை பிரமிள் எழுதியது என்று தெரிவித்து விட்டேன்.

சிகரெட்டிலிருந்து

வெளியே

தப்பிச் செல்லும்

புகையைப் போல்

என் உடன்பிறப்புகள்

நான் 

சிகரெட்டிலேயே

புகை தங்க வேண்டுமெனக்

கூறவில்லை

வெளிச் செல்கையில்

என்னை நோக்கி

ஒரு புன்னகை

ஒரு கை அசைப்பு

ஒரு மகிழ்ச்சி

இவைகளையே

எதிர்பார்க்கிறேன்

அவ்வளவுதானே

ஒரு முறை முதல் இதழ் விருட்சத்தில் நான் பிரமிளை கவிதைத் தரும்படி கேட்டேன்.  அவர் ஒரு கவிதையைப்   மனசிலிருந்து சொல்ல  என்னை எழுதச் சொன்னார்.  அந்தக் கவிதையின் பெயர் கிரணம். அவர் சொல்ல சொல்ல நான் எழுதினேன்.

அந்தக் கவிதை இதுதான் :

விடிவுக்கு முன் வேளை

ஆகாயத்தில் மிதக்கின்றன

நாற்காலி மேஜைகள்

ஊஞ்சல் ஒன்று

கடல்மீது மிதக்கிறது

அந்தரத்து மரச் சாமான்களைச்

சுற்றிச் சுற்றிப் பறக்கிறது

அசிரீரிக் கூச்சல் ஒன்று

சிறகொடித்து கிடக்கிறது

ஒரு பெரும் கருடப் பட்சி

கிழக்கு வெளிறிச்

சிவந்து உதித்த மனித மூளைக்குள் 

வெறுமை ஒன்றின் இருட் குகை

குகைக்குள் கருடச் சிறகின்

காலை வேளைச் சிலிர்ப்பு

ஆகாயத்தில்

அலைமேல் அலை.

மௌனித்தது 

அசரீரிக் குரல்..

இந்தத் தவறை முகநூலில் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு என் நன்றி.

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் – 2

அழகியசிங்கர்

(ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார்.  அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் மறைந்தார்.

நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன்.

அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன்.  முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன்.  தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.)

கே.கே : நான் மருத்துவத் துறையைச் சார்ந்தவன்.  நான் அதிகமாகவே படித்திருக்கிறேன்.  உடல் பயிற்சி செய்வதன் மூலமும், தேவைக்கேற்ப உடலைப் பரிசோதனை செய்வதன் மூலமும் நான் ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகிறேன்.  

மஹா : ஆனால் மனதைத் தொட்டு சொல்லுங்கள். நீங்கள் விரும்புவது என்ன?

கே.கே : உண்மையை அறிய விரும்புகிறேன்.

மஹா : உண்மையை அறிய என்ன விலை கொடுக்க விரும்புகிறீர்கள்?  எதாவது விலை உண்டா?

கே.கே : அதற்கு தியரிப்படி எதாவது விலை கொடுக்கத்தான் விரும்புகிறேன்.  இந்த வாழ்க்கையில் திரும்பவும் திரும்பவும் உண்மைக்கும் எனக்கும் வாழத் தூண்டப்படுகிறேன்.  ஆசை என்னை எடுத்துக்கொண்டு போய்விடும்.

மஹா : உங்களுடைய ஆசைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், உண்மை நிலையை நீங்கள் உணரும்வரை.  ஆசைப்படுவது தப்பில்லை.  ஆனால் அதன் குறுகியத்தன்மையும், சின்னத்தனமும்தான் தப்பு.  ஆசை என்பது பக்தி.  உண்மைநிலைக்காக பக்தியைச் செலுத்துங்கள்.  எல்லையில்லா, பிரபஞ்சத் தன்மைக்காக.  ஆசையை அன்பாக மாற்றுங்கள். நீங்கள் வேண்டுவது சந்தோஷமாக இருப்பது.  எல்லாவிதமான உங்கள் ஆசைகளும், நீங்கள் நீண்டகாலமாக ஏங்கிக்கொண்டிருக்கும் சந்தோஷத்திற்குத்தான்.   அடிப்படையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.  

கே.கே : எனக்குத் தெரியும், நான் அப்படி இருக்கக்கூடாதென்று..

மஹா : பொறுங்கள் .  யார் சொன்னார்கள் நீங்கள் ஆசைப்படக்கூடாதென்று?  என்ன தப்பு ஆசைப்படுவதால்?

கே.கே : எனக்குத் தெரியும், ஆன்மா போகவேண்டும்.

மஹா : ஆனால், ஆன்மா இருக்கிறது; உங்கள் ஆசைகளும் இருக்கின்றன.  நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது கூட இருக்கிறது.  எதனால்?  ஏனென்றால் நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள்.  கெட்டிக்காரத்தனமாய் உங்களை விரும்புகிறீர்கள்.  என்ன தப்பு என்றால் முட்டாள்தனமாய் உங்களை நீங்கள் விரும்புவதுதான்.  அதனால் நீங்கள் துன்பத்தை அடைகிறீர்கள்.   உங்களை கெட்டிக்காரத்தனமாய் நேசியுங்கள்.  எளிமையாக இருப்பதும், அதிக ஈடுபாட்டுடன் இருப்பதும் சந்தோஷத்தைத் தேடும் நோக்கத்தில்தான்.  அதிக ஈடுபாடுடன் இருப்பது முட்டாள்தனமான வழி, எளிமையாக இருப்பது கெட்டிக்காரத்தனமான வழி.

கே.கே : எளிமையாக இருப்பதென்றால் என்ன?

மஹா : நீங்கள் ஒரு அனுபவத்திற்குள் போய்விட்ட பிறகு, திரும்பவும் அதே அனுபவத்திற்குப் போகாமலிருப்பது எளிமையான வழி.  தேவையில்லாதவற்றில் ஈடுபடாமலிருப்பது எளிமையான வழி.  இன்பத்தையும் துன்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமலிருப்பது எளிமையான வழி.  எப்போதும் எல்லாவற்றையும் உங்கள் ஆஞ்ஞைக்கு உட்பட்டுக் கொண்டுவருவது எளிமையான வழி.  ஆசைப்படுவது தப்பில்லை.   வாழ்க்கை முழுவதும் அறிவாலும், அனுபவத்தாலும் வளர வேண்டுமென்று 

அவா ஏற்படுவதுண்டு.  நாம் எதுமாதிரி விருப்பப்படுகிறோமோ அதுதான் தவறாகப் போய்விடுகிறது.  யோசனை செய்து பாருங்கள்.  சின்ன விஷயங்களான உணவு, பாலுணர்வு, அதிகாரம், புகழ் – உங்களை ஏமாற்ற சந்தோஷத்தைத் தரும்.  ஆனால் உண்மையாகவே ஆழமானதாகவும், விஸ்தாரமானதாகவும் உங்களின் உண்மையான ஆன்மாதான் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.  

கே.கே : அடிப்படையில் ஆன்மாவின் அன்பை வெளிப்படுத்தும் ஆசையினால் தவறில்லை.  ஆனால் ஆசையை எப்படி சமாளிப்பது?

மஹா : உங்கள் மனதில் உள்ள ஆழமான ஆர்வங்களுடன் உங்கள் வாழ்க்கையைக் கெட்டிக்காரத்தனமாய் வாழப் பழகிக்கொள்ளுங்கள்.  நீங்கள் என்ன பெரிதாய் விரும்பப் போகிறீர்கள்?  முழுமையை அல்ல.  நீங்கள் ஏற்கனவே முழுமையானவர்.  நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களென்றால், உங்கள் செயல் மூலம் வெளிப்படுத்துவதை.  இதற்கு உங்களுக்கு உடலும் மனமும் தேவைப்படும்.  அவற்றை எடுத்துக்கொண்டு உங்களுக்கு அவை பணிசெய்யும்படி மாற்றுங்கள்.

கே.கே : யார் இங்கே செயல்படுத்துபவர்?  யார் உடலையும் மனதையும் கையாள்வது?

மஹா : உள்ளேயும் வெளியேயும் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி, உண்மையான மனம்தான் நம்பிக்கையான பணியாளாக ஆன்மாவிற்கு இருக்கிறது.  தேவைக்கேற்ப பயன்படுபடியாக இருக்கிறது.  

கே. கே : அவற்றின் தேவைகள்தான் என்ன?

மஹா : ஆன்மா என்பது பிரபஞ்சதன்மை கொண்டது.  அவற்றின் குறிக்கோள்களும் பிரபஞ்சதன்மை கொண்டவை.  எப்போதும் ஆன்மாவிற்கென்ற தனிப்பட்ட தன்மை கிடையாது.  ஒரு ஒழுங்கான வாழ்க்கைமுறையை வாழுங்கள்.  ஆனால் அதுதான் உங்கள் குறிக்கோள் என்று எண்ணாதீர்கள்.  ரொம்ப துணிச்சலான செயலுக்கு அதுதான் ஆரம்பமாக இருக்கும்.

கே கே : திரும்ப திரும்ப இந்தியாவிற்கு வரும்படி நீங்கள் அறிவுரை கூறுவீர்களா?

மஹா : நீங்கள் அக்கறையுடன் இருந்தால், நீங்கள் எங்கு நகர்வதற்கும் தேவை இருக்காது.  எங்கிருந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்.  உங்களுக்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள்.  இடம் விட்டு இடம் பயணம் மேற்கொள்வது எந்தவித முக்தியையும் உங்களுக்குத் தராது. நீங்கள் 

உடல் மட்டுமன்று.  உடலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இழுத்துக்கொண்டு போவது உங்களை எங்கேயும் கொண்டு செல்லாது.  üமனதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்ý என்பதில்தான் உங்கள் மனதை தடங்களின்றி சுழலவிடவேண்டும்.

கே.கே : நான் சுதந்திரமானவன் என்றால் ஏன் ஒரு உடலில் இருக்க வேண்டும்?

மஹா : நீங்கள் உடலில் இல்லை, உடல் உங்களிடம் இருக்கிறது.  மனமும் உங்களிடம் உள்ளது.  உங்களுக்காக அவை ஏற்பட்டுள்ளன.  அவை இருப்பதால் உங்களுக்கு ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன.  உங்களுடைய உண்மையான தன்மை அளக்கமுடியாத அளவிற்கு வாழ்க்கையில் திளைப்பது.  இது முழுவதும் அன்புமயமானதும், உற்சாகமுள்ளதாகவும் உள்ளது.  தன்னிடம் விழும் எல்லாவிதமான அவதானிப்புகள்மீதும் தன்னுடைய சக்தியை வெளிப்படுத்துகிறது.  அதற்கு அசிங்கமும் கெட்டதும் தெரியாது.  அது நம்புகிறது.  அன்பு செலுத்துகிறது.   உங்களுடைய உண்மை சொரூபம் தெரியாமல், உங்களை மாதிரி இருப்பவர்கள் எவ்வளவு தூரம் இழக்கிறீர்களென்று.  நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை.  நீங்கள் எண்ணையும் இல்லை, நெருப்பும் இல்லை.  அவற்றின் விதிகள்படி அவை தோன்றுகின்றன, மறைந்துவிடுகின்றன.

உங்களுடைய உண்மையான ஆன்மாவை விரும்புகிறீர்கள்.  நீங்கள் என்ன செய்தாலும் உங்களுடைய சந்தோஷத்திற்காகச் செய்கிறீர்கள்.  உங்களுடைய அடிப்படையான விழைவு, நீங்கள் கண்டுபிடித்து, அறிந்துகொண்டு, அதைச் செறிவூட்டுவதாகும்.  காலம் காலமாக நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். ஆனால் புத்திசாலித்தனமாக இல்லாமல்.  உங்கள் உடலையும், மனதையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள், உங்களுடைய ஆன்மாவின் சேவைக்காக.  அவ்வளவுதான்.  உங்களுக்குள் உண்மையாக இருங்கள்.  முழுவதுமாக உங்கள் ஆன்மாவை நேசியுங்கள்.  மற்றவர்களை உங்களை மாதிரி நேசிப்பதாகச் சொல்லி நடிக்காதீர்கள்.  அவர்களும், நீங்களும் ஒன்று என்பதை உணராதவரை நீங்கள் அவர்களிடம் அன்பு செலுத்த முடியாது.  நீங்கள் எதுவாக இல்லையோ அது இருப்பதாக எண்ணி நடிக்காதீர்கள்.  அதேபோல் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை மறுக்காதீர்கள்.  நீங்கள் மற்றவர்களை நேசிப்பதென்பது உங்களுடைய சுய அறிவால் மட்டும்தான், அவற்றின் செயல்பாடுகளால் அல்ல.  சுய அறிவு இல்லாமல் எந்தப் புனிதமும் நியாயமானதல்ல.  எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை ஓட்டம்தான் ஓடிக்கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்தீர்களென்றால், எல்லோரையும் இயல்பாகவும், இயற்கையாகவும் நேசிப்பீர்கள்.  முழுவதுமாகவும், ஆழமானதாகவும் நீங்கள் உங்களை விரும்புனீர்களென்றால், நீங்கள் உணர்வீர்கள், ஒவ்வொரு உயிரனமும், பிரபஞ்சம் முழுவதும் உங்களுடைய அக்கறையுடன் சேர்ந்துவிடுமென்பதை.  ஆனால் நீங்கள் உங்களைத் தனிமைப்படுத்திப் பார்த்தீர்களென்றால், நீங்கள் யாரையும் நேசிக்க மாட்டீர்கள், மேலும் பயப்படவும் ஆரம்பிப்பீர்கள்.  தனிமை பயத்திற்குக் காரணமாகிறது.  பயத்தின் ஆழம் தனிமையை அதிகரிக்கிறது.  இது ஒருவிதமான சுழற்சி.  சுய அறிவுதான் அதை உடைக்கும்.  உறுதியாக அதை நோக்கி செல்லுங்கள்.

                                                                       தமிழில் : அழகியசிங்கர்

துளி : 44 – யாரும் படிப்பதில்லையா?

அழகியசிங்கர்

எழுத்தாளர் பிரபஞ்சன் ராயப்பேட்டையில் கோபாலபுரத்தில் குடியிருந்தார்.  புதுமைப்பித்தன் கதைகள் முழுவதும் படித்துவிட்டு அது குறித்து வாரம் ஒருமுறை அவருடைய வாசகர்களுடன் உரையாட நினைத்தார்.  கூடவே ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கவும் விரும்பினார்.  ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு இது தொடர்ந்து நடக்கவில்லை.  இதெல்லாம் ரொம்ப ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  முக்கியமான ஒன்றாக இதைக் கருதுகிறேன்.  கதைகளை வாசிக்கவும் கதைகளை எழுதவும் ஒரு தளத்தை அவர் உருவாக்க முயன்றார். முடியவில்லை.

பிரபஞ்சனின் சிறுகதைகள் 3 பாகங்களாக வெளிவந்துள்ளன.  அவருடைய எல்லாக் கதைகளையும் வாசிக்கும்போது பிரபஞ்சனின் உலகம் என்னவென்று தெரியும். பிரபஞ்சனாவது கொஞ்சமாவது அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர். ஆனால் அவரைப்போல் திறமையாக எழுதக்கூடிய வேறு பல எழுத்தாளர்களை யாரும் கண்டுகொள்ளக் கூட இல்லை.

எழுத்தாளர் மா அரங்கநாதன் பெயரில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் கடந்த இரண்டாண்டுகளாகப் பல படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கிறது. மா அரங்கநாதனின் குடும்பத்தினர் மூலம் இது தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த ஆண்டு வெளி ரங்கராஜனுக்கும், யூமா வாஸ÷கிக்கும். அவர்களுக்கு என் நன்றி. நூற்றுக்கணக்கான கிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி உள்ள எழுத்தாளர் மா அரங்கநாதன்.  அவர் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் யாரும் சரியாக அவரை வாசிக்கவில்லை. பெயரைக்கூட யாரும் குறிப்பிடமாட்டார்கள். இப்போது கூட வாசிக்கிறார்களா என்பது தெரியாது.   சாகித்திய அக்காதெமி பரிசு கூட அவருக்குக் கிடைக்கவில்லை.  அவர் கதைகளைப்போல் மற்ற மொழிகளில் யாராவது கதைகள் எழுதியிருக்க வாய்ப்புண்டா என்பதும் தெரியவில்லை.  அவர் காலத்தில் அவருடைய படைப்புகளை உணர்ந்து அதற்கான அங்கீகாரம் அளித்தார்களா என்பது தெரியவில்லை.  அவர் சாதித்தாலும் அவர் எழுத்தைக் குறித்து யாரும் உரத்துப் பேசவில்லை.  அவரும் அதைக் குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லை.    அவருடைய எழுத்தின் முக்கிய அம்சம். மனிதாபிமானம்.  அவர் காலத்தில் அவர் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், மற்றவர்கள் படைப்புக்கு அங்கீகாரம் அல்லது கௌரவம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கக் கூடியவர் மா அரங்கநாதன்.  இன்று அவர் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களைக் கௌரவம் செய்கிறார்கள்.  

எழுத்தாளர்களைத் தாங்கிப் பிடிக்கக் கூடியவர்கள் வாசிப்பவர்கள்.  இந்த வாசிப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்.  அவர்கள் மௌனமாக வாசித்தபடி பேசாமல் இருக்கிறார்களா?  அல்லது இல்லவே இல்லையா என்ற கேள்வியெல்லாம் என்னுள் எழாமல் இல்லை. 

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பெயரைக் கூட இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  அவரைப்போல ஒரு எழுத்தாளர் தமிழில் கிடைப்பது அரிது. யாரும் அவரைப்போல ஒரு எழுத்தை எழுதியிருக்கவே முடியாது.  மனப்பிறழ்வை எழுத்தில் வடித்து வெற்றி கண்டவர். 

இவர்களையெல்லாம் இப்போதைய வாசகர்கள் அறிவார்களாக மாட்டார்களா என்பது தெரியவில்லை. புதிதாக உருவாகும் ஒவ்வொரு வாசகனும் அறிந்துகொள்வது அவசியமில்லையா?  இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் இப்படி விடுபட்டுப் போன பட்டியலில் இல்லாமல் இல்லை.

துளி : 43 – எது சுலபமானது?

அழகியசிங்கர்

இந்த ஆண்டும் தினமணி கதிர் – சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது முறையாக என் கதைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பிற்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்து அதற்கென்று ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டுமென்று நினைக்கும் எழுத்தாளர் சிவசங்கரியைப் பாராட்டுகிறேன்.  இந்தத் திட்டத்திற்கு தினமணி கதிரும் உறுதுணையாக இருப்பதற்குப் பாராட்டப்பட வேண்டும்.  

தமிழில் இதெல்லாம் நடந்தால்தான் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் தோன்றுவார்கள்.  ஆனால் வாசகர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கூட்டுவது என்பது தெரியவில்லை.

அமெரிக்காவில் நான் தங்கியிருக்கும் பீனிக்ஸில் தமிழ் சங்கம் என்று எதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்தேன்.  பெரிய ஏமாற்றம்தான் எனக்குக் கிடைத்தது. தமிழ் மொழி தெரிந்தும் தமிழில் பேசாதவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்.  இங்குள்ள தமிழ்ச்சங்கம் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள்.  தமிழில் பேசுபவர்களே தமிழில் பேசுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் எங்கே தமிழ்ச் சிறுகதையோ கவிதையோ படிக்கப் போகிறார்கள்?

ஆனால் தமிழில் எழுதப்படும் கதைகளையோ கவிதைகளையோ அல்லது கட்டுரைகளையோ யாரும் பேசத் தயாராக இல்லை.  தமிழ் மட்டுமல்ல வேறு மொழிகளிலாவது எதாவது பரிமாற்றம் நடக்கிறதா என்றால் இல்லை. 

இன்று தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி பல குடும்பங்களிலிருந்து பலர் கலந்து கொண்டார்கள்.  அவர்களில் தமிழில் பேசுபவர்கள் மிகக் குறைவு.  தெலுங்கில் பேசுபவர்களும் இந்தியில் பேசுபவர்களும் அதிகம்.  ஆனால் அந்தந்த மொழிகளில் சிறப்பாகப் பேசப்படும் கதைகளைப் பற்றியோ கவிதைகளைப் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை.  நான் இதைப் பற்றிப் பேசினால் என்னை ஒரு வழி பண்ணியிருப்பார்கள். பெரும்பாலான நேரத்தை வெட்டியாகப் பேசியும், உணவுபண்டங்களைத் தின்று கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.

மராட்டி மொழி பேசும் ஒருவரிடம் பேசினேன்.  ‘உங்கள் மொழியில் நீங்கள் படித்த சிறுகதையோ கவிதையோ சொல்ல முடியுமா?’ என்று கேட்க நினைத்துப் பேசாமலிருந்தேன்.   அவருக்கும் அதற்கும் ரொம்ப தூரம் மாதிரி தெரிந்தது.  யாருக்கும் அதுமாதிரியான சிந்தனை சிறிதும் இல்லை.  கேளிக்கை நடக்கும் இந்த இடத்திற்கு புத்தகம் எடுத்துக்கொண்டு வராமல் இருந்துவிட்டேனே என்று தோன்றியது.  எடுத்துக்கொண்டு வந்திருந்தால், கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் உணவு பின் புத்தகம் படிப்பது என்று பொழுதைக் கழித்திருப்பேன். நான் கிட்டத்தட்ட காலையிலிருந்து மாலைவரை கேளிக்கையைப் பார்த்துக்கொண்டும் அதில் பங்கு கொண்டும் இருந்தேன்.

அசோகமித்திரனும் ஜானகிரமானும்

அழகியசிங்கர்

ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி கதைப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்து முடித்தப்போது எனக்கு அசோகமித்திரனின் கதைகள் ஞாபகத்திற்கு வந்தன.  

என்னிடம் அசோகமித்திரன் கதைகள் படிக்க எந்தப் புத்தகமும் இங்கு (அமெரிக்காவில்) கொண்டு வரவில்லை.  ஆனால் ஒரு கேள்வி என்னுள் எழுந்தது?  

இங்கு அசோகமித்திரனை விட ஜானகிராமன் சிறந்த எழுத்தாளர் என்றோ ஜானகிராமனை விட அசோகமித்திரன் சிறந்த எழுத்தாளர் என்று நிரூபிக்கப் போவதில்லை.  

ஆனால் இரண்டு பேர்கள் எழுதுகிற சிறுகதைகளை அலச முடியுமா என்று யோசிக்கிறேன்.

ஜானகிராமன் அசோகமித்திரன் மாதிரி கதை எழுத முடியாது.  ஆனால் அசோகமித்திரன் நினைத்தால் ஜானகிராமன் மாதிரி எழுத முடியும்.  அதாவது 50 சதவீதம்.  

உதாரணமாக அக்பர் சாஸ்திரி கதையை எடுத்துக்கொண்டால் அசோகமித்திரன் இப்படி எழுதி இருப்பார்.  அக்பர் சாஸ்திரி கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.  யார் கூப்பிட்டும் எழுந்திருக்கவில்லை என்று எழுதி முடித்திருப்பார்.  ஆனால் ஜானகிராமன் இன்னும் கூடுதலாக.

68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிளக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவம் சொல்லிக்கொண்டு போகிறார். உற்சாகமாக. சத்தமாக.   

இப்படி ஒரு முடிவை அசோகமித்திரன் சொல்லவே மாட்டார்.  அசோகமித்திரன் ஒரே வரியில் வாசகனை வசியப்படுத்துவதுபோல் போறப்போக்கில் சொல்வதுபோல் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.  ரிக்ஷா என்ற கதையில் அசோகமித்திரன், ஒரு இடத்தில், ‘உலகம் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்று விட்டது,’ என்று எழுதி இருப்பார்.  மொத்தமே இரண்டு பக்கங்கள்  கொண்ட கதையில் இப்படி ஒரு வரியை எழுதிவிட்டு ஒன்றும் தெரியாமல் போய்விடுவார்.

ஆனால் ஜானகிராமனோ விட மாட்டார்.   அவருடைய வர்ணனைகளும் வித்தியாசமாக இருக்கும்.  

கள்ளி என்கிற கதையில் ஜானகிராமன் இப்படி எழுதுகிறார். ‘கெட்டவர்கள் சேர்கிற பட்டணம்.  கெடாதவர்கள் சேர்கிற பட்டணம். பசிக்கிறவர்கள் வந்து சேர்கிற பட்டணம்.  இருக்கிறவர்கள் போதாதென்று ஊரிலிருந்து வேறு பணத்தைக் கொண்டு வந்து வயிற்றில் அடிக்கிறவர்கள் தொகையைப் பெருக்குகிற பட்டணம்.’ 

என்றெல்லாம் எழுதிக்கொண்டு போயிருக்கிறார்.  அசோகமித்திரனால் இதுமாதிரியெல்லாம் எழுதியிருக்கவே முடியாது. முடியாது ஏன்பதைவிட தேவையில்லை என்று நினைப்பவராக எனக்குப் படுகிறது.

ஜானகிராமன் எழுதியிருக்கிற துணை என்ற கதையில், ஒரு இளைஞன் இரண்டு வயதானவர்களை மஸ்டர் ரோலில் கையெழுத்துப் போட அழைத்துக்கொண்டு போய் திரும்பிவரும்போது குதிரை வண்டி குடை சாய்ந்து விடும்.  ஆனால் இங்கு அடிபடுவது இளைஞன் மட்டும்தான்.  3 மாதம் அலுவலகம் போக முடியாமல் எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இதை அலாதியாக ஜானகிராமன் விவரித்துக்கொண்டே போவார்.  இதை ஜானகிராமன் இப்படி விளக்குகிறார்.  ‘எனக்கு எழுந்திருக்க முடியவில்லை.  வலது முன்னங்கை வளைந்திருந்தது.  ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.  ரத்தத்தைப் பார்த்ததுதான் எனக்குத் தெரியும்.  கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று.’ இதையே அசோகமித்திரன் இவ்வளவு வரிகள் எழுதியிருக்கமாட்டார்.  

எலும்பு முறிவோடு ஆஸ்பத்திரியில் கட்டுப்போட்டுக்கொண்டிருந்தான் என்று முடித்திருப்பார்.

குழந்தைக்கு ஜ÷ரம் என்ற கதையில் ஜானகிராமன் கொண்டு போகிற முடிவை அசோகமித்திரன் எழுதியிருக்கவே

மாட்டார்.  பாதியிலேயே கதையை முடித்திருப்பார்.

சரவண வாத்தியார் பாடப்புத்தகங்களை அச்சிடும் பஞ்சுவைப் பார்த்து புத்தகம் எழுதிக்கொடுத்ததற்காகப் பாக்கிப் பணம் கேட்கிறார்.  அவன் அவருடன் தகராறு செய்கிறான்.  கொடுக்கவேண்டிய பணத்தைக் குறைவாகச் சொல்கிறான்.  அவனைப் போய்ப் பார்க்கக்கூடாது இனிமேல் என்று நினைக்கிறார் சரவண வாத்தியார்.  

குழந்தைக்கு சுரம்.  வேற வழியில்லை.  அவனைப் பார்க்கத் திரும்பவும் பார்க்கப் போகவேண்டும்.  போகிறார்.  அங்குப் போய் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும் பஞ்சு மனைவிக்கு டாக்டரை அழைத்து வந்து உதவி செய்கிறார்.  இதை ஜானகிராமன் எழுதியிருக்கிறார்.  இங்கு அசோகமித்திரன் எழுதியிருந்தால் இவ்வளவு தூரம் கொண்டு போயிருக்க மாட்டார். 

நான் இங்கு இரு எழுத்தாளர்களையும் ஒப்பிட்டு எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதி உள்ளேன்.  ஒவ்வொருவரின் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.   

விருட்சம் 109வது இதழ்

அழகியசிங்கர்

அமெரிக்கா வருவதற்கு முன் நவீன விருட்சம் 108வது இதழ் தயாரித்து முடித்து விட்டேன்.  பின் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன்.  சிலருக்கு அனுப்பாமல் விட்டிருப்பேன். 108வது இதழ் கனமான இதழ்.  அத்தனைப் பக்கங்கள் ஒரு இதழைக் கொண்டு வர முயற்சி செய்யக்கூடாது. அந்த இதழில் குறிப்பிட்டபடி அமெரிக்காவிலிருந்து 109வது இதழ் தயாரிக்க விரும்புகிறேன்.  அமெரிக்கா வந்தபிறகு இங்கு எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளைக் கொண்டு வரலாம் என்று இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.  நான் நினைத்தபடி நடக்காமல் போகலாம்.  முகநூலில் இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.  யாராவது இதைப் பார்த்துப் படைப்புகளை அனுப்பினால் பிரசுரிக்கத் தயாராக உள்ளேன்.  

படைப்புகளை அனுப்ப விரும்புவோர் என்னுடைய இ மெயிலில் படைப்புகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.  அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அனுப்பலாம்.

navina.virutcham@gmail.com  முகவரிக்கு அனுப்பவும்.

துளி : 40 – அவர்கள் நாகரீகமானவர்கள்

அழகியசிங்கர்

ஆரம்பத்தில் நான் அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது, அமெரிக்கா ஒரு பணக்கார நாடு.  பிச்சைக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.  பிச்சைக்காரர்கள் இல்லாத உலகமே இல்லை.  என் கற்பனை முட்டாள்தனமானது.  ஏன் அப்படி நினைத்தேன் என்றால் செல்வ செழிப்புள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதால்.  

2011 ல் நான் வந்தபோது நியூயார்க் என்ற இடத்தில்தான் ஒன்றிரண்டு பிச்சைக்காரர்களைப் பார்த்தேன்.  அப்போது நான் ப்ளோரிடாவில் இருந்தேன்.  இப்போது பினீக்ஸ்.  சில தினங்களுக்கு முன்னால் நான் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் தட்டியை வைத்துக்கொண்டு இருந்தாள்.  தட்டியின் வாசகம் இப்படி எழுதியிருந்தது.  எதாவது உதவி செய்ய முடியுமா என்று.  

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  பிச்சை எடுப்பவர்கள் கூட நாகரீகமான முறையில் ஒரு தட்டியில் வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக் கிறார்களே என்று.

சென்னையில் காலையில் சரவணபவன் அருகில் வந்தால் குறைந்தது நாலைந்து பேர்களாவது தென்படுவார்கள்.  அவர்களிடம் ஒரு ரூபாய் காசைப் போட்டால், முறைத்துப் பார்ப்பார்கள்  ஏன் வாங்குவதற்குக் கூட யோசிப்பார்கள்.  குறைந்தது ஐந்து ரூபாயாவது வேண்டும்.  ஒரு மாதிரியாக நம்மை முறைத்துப் பார்ப்பார்கள்.

திரும்பவும் இன்னொரு முறை ஒரு ஆண் பிச்சைக்காரரைப் பார்த்தேன்  தட்டியுடன் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.  தட்டியில் எந்தவிதத்திலும் உதவி செயலாம் என்ற வாசனம் எழுதப்பட்டிருந்தது.  அவரைக் கூப்பிட்டு ஒரு டாலர் கொடுத்தேன்.  வாங்கிக்கொண்டு, கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என்றார் அவர்.

சென்னையில பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போது நமக்குப் பச்சாதாப உணர்வு ஏற்படாமல் இருக்காது.  ஆனால் இங்கே பிச்சை எடுப்பவர்கள் வாட்டசாட்டமாக இருக்கிறார்கள். 

அமெரிக்காவில் பார்த்து ரசித்தது.  சுத்தம்.   இங்குக் காணப்படுவதுபோல் சுத்தம் வேறு எங்கும் காண முடியாது.  இதே சென்னையில் நடந்து போகும்போது  பல பேர்கள் தெருவில் காறி உமிழாமல் செல்வதில்லை.  நமக்கே அருவெறுப்பாக இருக்கும்.  அமெரிக்காவிலோ எதாவது குப்பையைப் போடுவதாக இருந்தாலும் அதற்கான குப்பைத் தொட்டியில்தான் போடுகிறார்கள்.

இன்று காலையில் வ்ரைஸ் என்ற கடை வாசலில் வாகனம் வைத்திருக்கும் இடத்தில் சிகரெட் துண்டு ஒன்றைப் பார்த்தேன்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒரு இந்தியர்தான் வாகனம் ஓட்டும் இடத்தில் சிகரெட் துண்டைப் போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  அதுவும் குறிப்பாக தமிழர்கள்தான் இருக்க வேண்டுமென்றும் யோசித்தேன்.