துளிகள் 148 – இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்…

07.10.2020


அழகியசிங்கர்

    ஞானக்கூத்தன் பிறந்த நாள் இன்று.  அவர் 1938ல் பிறந்தவர். இப்போது இருந்திருந்தால் 82 வயதாகியிருக்கும்.

    1988ஆம் ஆண்டு விருட்சம் என்ற சிற்றேடு நடத்தும் போது எனக்கு நெருக்கமாக சில எழுத்தாள நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.   அதில் ஞானக்கூத்தன் முதன்மையானவர். பலர்  தவறுதலாக விருட்சம் பத்திரிகையை ஞானக்கூத்தன்தான் நடத்துகிறார் என்று சொல்வார்கள்.

    நான் இல்லை இல்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.  ஞானக்கூத்தன் போல இன்னும் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகம்.

    பிரமிள், வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், நகுலன், காசியபன், ஐராவதம், ஸ்டெல்லா புரூஸ் என்று பலர் எனக்கு நண்பர்கள்.  இவர்கள் எல்லோரும் என்னை விட மூத்தவர்கள்.

    இவர்கள் மூலம் நான் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். விருட்சம் வரும் ஆரம்ப ஆண்டுகளில் ஒவ்வொரு இதழிலும் ஞானக்கூத்தன் கவிதை இடம் பெறாமலிருக்காது.

    அவர் ஒருநாள் பீச்சில் பேசிக்கொண்டிருந்தபோது என் கைக்குத் தங்கக் காப்பு போட வேண்டுமென்று அன்று கூடிய நண்பர்கள் முன்  சொன்னார்.  என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

    முழு மூச்சாகக் கவிதையைப் பற்றிச் சிந்தித்து கவிதைகள் மட்டும் எழுதி தன் வாழ் நாளைக் கழித்த ஞானக்கூத்தனுக்குக் குறைந்த பட்சம் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருக்க வேண்டும்.

    நண்பர் ஜெயமோகன் விஷ்ணுபுர விருது கொடுத்து கௌரவம் செய்தது மறக்க முடியாதது.  நண்பர் வினோத் அவரைக் குறித்து ஒரு ஆவணப் படம் எடுத்து கௌரவம் செய்தார்.

    ஞானக்கூத்தனைப் பற்றிப் பேசும்போது அவர் ஆரம்பக் கால கவிதைகளை மட்டும் குறிப்பிட்டு ஓடிப் போய்விடுவார்கள்.

    கடைசிவரை அவர் சிறப்பாகக் கவிதை எழுதி உள்ளார்.

    நகுலனின் சுசீலா

    நான்கைந்து ரூபாய்கள் செலவழித்தால்
    கும்பகோணத்துக் கடைத் தெருவை
    வாங்கிவிடலாமென்று
    கனவு கண்ட சோமு முதலியார்
    கடைசியில் சோமுப் பண்டாரமாகி
    திடீரென ஒருநாள் செத்துக் கிடந்தார்

    சுசீலாவும் ஒருநாள்
    செத்துக் கிடந்ததாய்
    நகுலன் சொன்னார்
    சுசீலாவின் ரோமபந்தி
    தனியாய்க் கிடந்ததாய்க்
    கூறவும் செய்தார்.
    ஆனால் சுசீலா போனது
    தெருவிலா வீட்டிலா

ஞானக்கூத்தன் மொழிபெயர்ப்பில் ஒரு தாஒ கவிதை


அழகியசிங்கர்

எழுத்து பத்திரிகை ஞானக்கூத்தனின் திறமையைப் புரிந்து கொள்ளவில்லை.  ஆனால் 1970 வெளிவந்த ‘கசடதபற’ என்ற சிற்றேட்டில்தான் அவருடைய படைப்புகள் எல்லாம் வெளிவந்தன.

‘தமிழை எங்கே நிறுத்தலாம்’ என்று அவருடைய முதல் கவிதையிலிருந்து தொடர்ந்து கசடதபறவில் அவர் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.  
ஜனவரி 1971ஆம் ஆண்டு ‘கசடதபற’  இதழில் (4வது இதழ்) அவருடைய மொழிபெயர்ப்பு ஒன்று வெளிவந்தது.  மொத்தமே 3 வரிகள்தான்.  ஒரு தாஓ கவிதை என்ற தலைப்பில்.  இங்கே வாசிக்கத் தருகிறேன்.

ஒரு தாஒ கவிதை

“ சோளக் கொல்லைப் பொம்மையிடம் இரவல் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது.

இன்னும் ஒரு கவிதை




அழகியசிங்கர்

“ சூரியனுக்குப் பின் பக்கம் என்ற ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி வந்தது. மிளகாய்ப் பழங்கள் மாடியில் என்ற கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.  கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்டார்.
நானும் படித்துப் பார்த்தேன். கவிதை புரிவதுபோல் இருக்கிறது.  ஆனால் கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்கிறார் கவிஞர் என்று தெரியவில்லை.  
முதலில் ஒரு கேள்வி எழுகிறது.  அணில் மிளகாய்ப் பழத்தைத் தீண்டுமா? என்ற கேள்வி.  மிளகாய்ப் பழம் வைத்து வேற எதுவோ ஞானக்கூத்தன் சொல்கிறாரா? இதையெல்லாம் மீறி ஞானக்கூத்தன் கவிதையில் ஒரு வசீகரம் தென்படுகிறது.

கவிதையை இங்கே கொடுக்கிறேன்.  நீங்களும் படித்துவிட்டு உங்களுக்குப் புரிகிறதா என்று கூறுங்கள்.
1982ல் இந்தக் கவிதை எழுதப்பட்டது.


மிளகாய்ப் பழங்கள் மாடியில்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன ஆசை மிகுந்து அணிலொன்று வந்தது பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித் தடுத்திழுத்து நிறுத்திய போதும் ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க உலவைப் பழங்கள் எங்கும் சிதறின ஜன்னலை விட்டுத் திரும்பினேன் எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று

ஞானக்கூத்தனின் பிறந்த தினம் இன்று

ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது ஞானக்கூத்தனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். விருட்சம் பத்திரிகை அச்சடித்து வரும்போதெல்லாம் முதலில் ஞானக்கூத்தனிடம் ஒரு பிரதி கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன்.
திருவல்லிக்கேணி தெருக்களின் முனைகளில் ஞானக்கூத்தனை பலமுறை சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறேன். அவர் வீட்டுத் திண்ணைகளிலும் மொட்டை மாடிகளிலும் பேசியிருக்கிறேன். ஒருமுறை பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்துப் படிக்கட்டிகளில் உட்காரந்து பேசியிருக்கிறேன். இதுமாதிரி திருவல்லிக்கேணி என்றாலே ஒரு அடையாளத்தை ஞானக்கூத்தன் என் மனதில் ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல் அவர் கவிதைகள் மூலமும் ஒரு ஞாபகத்தை உண்டாகியிருக்கிறார்.
இன்று ஞானக்கூத்தனின் பிறந்தநாள். இம்பர் உலகம் என்ற பெயரில் வெளிவந்த கவிதைத் தொகுதிதான் அவருடைய கடைசி கவிதைத் தொகுதி. அந்தத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை இங்குத் தர விரும்புகிறேன்.

சுசீலாவும் பிறரும்

மௌனியும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்.
நகுலனும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்
மௌனியும் நகுலனும்
தெருவில் நடந்தால்
சுசீலா ஏன் வரவில்லை என்று
மக்கள் தெருவில் தேடுவார்கள்
சுசீலாவும் தோழியும்
தெருவில் நடந்தால்
மௌனியும் நகுலனும்
வரவில்லை என்று
மக்கள் மகிழ்வார்கள்
நானும் சுசீலாவும்
தெருவில் நடந்தால் மக்கள்
என்னையே பார்ப்பார்கள்
எப்படி இவளை இவன்
பிடித்தான் என்று.

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..

 
 
முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம்.  ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார்.  நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன்.  ஆனந்த், ஆர்.ராஜகோபாலன், ராம்மோஹன், ஸ்ரீனிவாஸன் என்று நிறையா நணள்பர்கள் சந்தித்துக் கொள்வோம்.  இந்த முகநூல் அப்போது இல்லை.  இருந்திருந்தால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு என்ன பேசினோம் என்பதை முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்போம்.
எங்கள் எல்லோரையும் விட மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன்.  தலைமை என்றெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர் தலைமை தாங்கி நடத்துவதுபோல்தான் அந்தக் கூட்டம் நடைபெறும்.  இப்படி எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளை நான் இனிதாக கழித்திருக்கிறேன்.
ஆனால் இப்போது ஒரு கூட்டம் கூட அதுமாதிரி முடியாது.  அவ்வளவுதூரம் இறுகி விட்டது பொழுது எல்லோருக்கும்.
ஒருமுறை ஞானக்கூத்தன் எங்களைப் பார்த்துச் சொன்னார். ‘இன்று எனக்குப் பிறந்தநாள்’ என்று.  நாங்கள் அவரை வாழ்த்தினோம்.
‘இந்தப் பிறந்தநாளில் என்ன பெரிதாக நடந்தது.  ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும்.   இத்தனை நாட்கள் உயிரோடு இருந்திருக்கிறேனே அதுவே பெரிய விஷயம், என்று சொன்னேன், கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கினார்கள்,’  என்றார் ஞானக்கூத்தன்.
அன்று அவர் சொன்னதை இன்றும் கூட என்னால் மறக்க முடியாது.
இன்று அவர் பிறந்தநாள்.   அவர் நினைவாக ‘உபதேசம்’ என்ற அவர் கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.