ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 3 அழகியசிங்கர்

அழகியசிங்கர்








வழக்கம்போல் இந்த ஞாயிற்றுக்கிழமை (17.04.2016) கூட்டம் 4.30 மணிக்கு. 
விஜய் மகேந்திரன், வினாயக முருகன்  வேடியப்பன் முதலிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு கதை வாசிப்பதாக கூறி உள்ளார்கள்.  நீங்களும் வரலாம்.  தூரம் ஒரு பொருட்டல்ல என்றால் வரலாம்.
புதிய முறையாக கதையைப் படிக்காமல் சொல்லிப் பார்க்கும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
போன ஞாயிற்றுக்கிழமை கவிதையே வாசிக்கவில்லை.  இந்த முறை முதலில் கவிதையுடன் தொடங்கலாம் என்று நினைக்கிறோம்.இந்த முயற்சியை இன்னும் பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல தோன்றுகிறது. 
தி நகரில் உள்ள வெங்கட நாராயணன் தெருவில் உள்ள நடேசன் பூங்காவில் நடைபெற உள்ளது.
உங்களுடைய ஆதரவு தேவை.

என்னுடைய கதை….

அழகியசிங்கர்


இந்த மாதம் கலைமகள் இதழில் விருட்சத்தில் வெளியான டீ என்ற என் சிறுகதை திரும்பவும் பிரசுரமானது.  என்னால் நம்ப முடியவில்லை.   கலைமகள் ஆசிரியருக்கு என் நன்றி. நீங்களும் படிக்க அந்தக் கதையை இங்கு அளிக்கிறேன்.
..
டீ………
அந்தக் கிராமத்தில் அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் வயதானவர்கள்.  தினமும் அவர்கள் சந்திக்கும் இடம்.  அந்தக் கிராமத்திலேயே பிரதானமாக இருக்கும் அந்த டீ கடையில்தான்.  என்ன அந்த டீக் கடையில் முக்கியமானது என்றால் ஒன்றுமில்லை.  அது கொஞ்சம் பெரிய டீக் கடையாக இருக்குமாதலால்,  அவர்கள் இருவரும் அமர்ந்துகொண்டு உலக விசாரணை வீட்டு விசாரணையெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.  நான் அவர்கள் இருவரையும் அடிக்கடிப் பார்ப்பேன்.  பென்சன் பணம் வாங்க எங்கள் வஙகிக் கிளைக்குத்தான் வருவார்கள்.  சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து மாட்டிக்கொண்ட என்னைப் பார்த்து பச்சாதாபப்படுவார்.  
“இந்த இடத்திலேயே இருக்கீங்களே இந்த இடம் போரடிக்கவில்லையா?” என்று ஒரு நாள் கலியமூர்த்தி என்ற பெரியவரைப் பார்த்துக் கேட்டேன்.
:”போரடிக்கவில்லை.  ஆனா எனக்கு மெட்ராஸில இருந்தாதான் போரடிக்கும்,” என்றார் அவர்.
“நீங்க மெட்ராஸ் வந்திருக்கீங்களா?”
“ஒரே தடவைதான் வந்திருக்கிறேன்.  மயிலாப்பூர் என்ற இடம்.  என் தம்பிக்கு கல்யாணம் ஆன சமயத்தில,”
“நான் ஒருமுறை கூட மெட்ராஸ் போனதில்ல.. திருச்சிக்குப் போயிருக்கேன்,” என்றார் அப்துல்லா என்ற கலியமூர்த்தியின் நண்பர்.
இருவரும் அந்தக் கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிலே இருந்தார்கள். மிக சிறிய வீடு.  ஒரு வரண்டா ஒரு அறை ஒரு சமையல் அறை. கழிவறையும், குளிக்கும் இடமும் தனித்தனியாக பின்னால் இருந்தன.  இரண்டு வீடுகளும் ஒரே மாதிரியாகக் கட்டியிருந்தார்கள்.
“நாங்கள் இருவரும் சகோதரர்கள் மாறி.. எங்கள் வாரிசுகள் எல்லாம் எங்கக் கூட இல்லை.” என்றார் அப்துல்லா.
“எனக்கு ஒரே ஒரு பையன்.  அவன் அமெரிக்காவில இருக்கான்.  வருஷத்துல ஒரே ஒருமுறை வந்திருந்து சில நாட்கள் இங்கே தங்கிவிட்டுப் போவான்,”என்றார் கலியமூர்த்தி.
“எனக்கு ஒரே ஒரு பெண்தான்.  அதைக் கட்டிக் கொடுத்துட்டேன்.  அது துபாயில இருக்கு.  ‘அப்பா, எப்படி இருக்கேன்னு’ விஜாரிக்கும்,  அவ்வளவுதான்.” என்றார் அப்துல்லா.
அவர்கள் குரல்களில் இதையெல்லாம் சொல்லும்போது எந்த வருத்தமும் இல்லை.  வருமானம் என்று பெரிதாக இல்லாவிட்டாலும, அவர்கள் இருவரையும் பாதுகாத்துக்கொள்வதற்கான பணம் கிடைக்காமல் இல்லை. மேலும் அவர்கள் தேவை ரொம்பவும் குறைவு. 
முதலில் அப்துல்லா மனைவிதான் இறந்து போனாள்.  அதன்பின் அப்துல்லா கலியமூர்த்தி வீட்டில்தான் சாப்பிடுவார்.  அதற்காக அவர் பணம் கொடுத்தாலும் கலியமூர்த்தியும் அவர் மனைவியும் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர்.
“என் சகோதரன் மாதிரி நீங்கள்,” என்று கலியமூர்த்தியின் மனைவி அப்துல்லாவை கவனித்துக் கொள்வாள்.  அதுமாதிரி சமயங்களில் அப்துல்லா உண்மையில் நெகிழ்ந்து போயிருக்கிறார். மேலும் அந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு இவர்கள் இருவர் குடும்பங்களையும் தெரியும்.  கிராமத்தில் எதாவது பிரச்சினை என்றால் இவர்களுடைய அறிவுரையைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.  
ஒருமுறை கிராமத்தில் காலரா நோய் தொற்றிக்கொண்டபோது எப்படி மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பது என்பது பற்றி மருத்துவ ரீதியில் தெரிந்துகொண்டு பலரிடம் அறிவுரை கூறி பிரச்சாரம் செய்தார்கள் இருவரும்.  
ஒரு வருடம் முன்புதான் கலியமூர்த்தியின் மனைவியும் இறந்து விட்டாள்.  கண்கலங்கி அவள் கணவரையும், அப்துல்லாவைப் பார்த்தும் கையசைத்து விட்டுப் போய்விட்டாள். அது ஒரு பெரிய துக்கமாக கலியமூர்த்தியை வாட்டியது உண்மைதான்.  அந்தத் தருணத்தில் அப்துல்லாவின் துணை பெரிதும் தேவைப்பட்டது.  
இப்படி அதிசயமாக இரண்டு பேரகள் இருப்பதை நினைத்து அந்த ஊரே பெருமைப் பட்டது.  அவர்களுக்குள் எந்தச் சண்டையும் நிகழ்ந்ததில்லை. ஹிந்து கோயிலுக்குள் அப்துல்லாவும், மசூதிக்கு கலியமூர்த்தியும் போய் வருவார்கள்.  
அந்தக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் இருவர் மீது ஒரு சந்தேகம் எப்போதும் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் சந்தேகம்.  அவர்கள் வீட்டில் அவர்கள் எந்தச் சமையலையும் அடுப்பை மூட்டி சமைப்பதில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் உணவு வழங்கினாலும, அது ஒரு தொடர்கதை கிடையாது.  சில நாட்கள் யாருமே அவர்களுக்கு உணவு வழங்கமாட்டார்கள்.  
அதேபோல் உணவு இல்லை என்று அவர்கள் கவலைப் படுவதுமில்லை.  எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? அவர்களுடைய எளிமையான வாழ்க்கை அவர்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கிறது.
யார் வேண்டுமானாலும் காலையில் அவர்கள் இருவரையும் டீக் கடையில் பார்க்கலாம்.  டீக்கடையில் வாங்கும் தினசரிகளை வைத்துக்கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச நேரம் நடப்பார்கள்.  கிராமத்தில் உள்ள பாதையில்.  பின் டீக்கடையில் டீயைச் சாப்பிட்டபடி கிட்டத்தட்ட காலை 11 மணி வரை பொழுதைக் கழிப்பார்கள்.  பின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்து திரும்பவும் டீக் கடைக்கு வந்து விடுவார்கள்.
எனக்கு அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கேட்டவுடன் ரொம்ப ஆச்சரியம்.  எப்படி சமையல் பண்ணாமல் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பதுதான் சந்தேகம்.
என் அலுவலக நண்பரை நான் கிண்டல் செய்வேன்.  அலுவலகம் நடந்து கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக அவன் வெளியே ஓடுவான்.  என்ன காரணம் என்றால் சுடச்சுட டீக் கடையில் போடும் போன்டாவைச் சாப்பிடத்தான் அவன் அப்படி ஓடுவான்.  அதனால் அவன் பெயரை போன்டா ஸ்ரீனிவாசன் என்று அலுவலகத்தில் கூப்பிடுவோம்.
அவனைப் பார்த்துதான் ஒரு முறை கூறினேன் : “நீ இப்படி போன்டாவுக்காக தினமும் ஓடுகிறாயே,,,அவர்களைப் பார்த்தாயா? எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள்.”
“யாருக்கு என்ன தெரியும்.  அவர்கள் இருவரும் டீக் கடையில் இருப்பதால் எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள் என்று.”
எனக்கும் அந்தச் சந்தேகம் எழுந்ததால், டீக் கடைக்காரரிடம் ஒரு நாள் அவர்களைப் பற்றி விஜாரித்தேன். 
“அவர்கள் இருவரும் இந்தக் கடைக்கு வருவதால்தான் இந்தக் கடையில் லட்சுமி கடாச்சாம் தவழ்கிறது.  டீயைத் தவிர அவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.”
“ஒரு நாளைக்கு எத்தனை டீ சாப்பிடுவார்கள்.”
“பத்து பதினைந்து சாப்பிடுவார்கள்.  சில சமயம் 20 டீக் கூட சாப்பிடுவார்கள்.”
“நிஜமாகவா?”
“உண்மைதான் சார்.  நல்ல மனுஷங்க சார் இரண்டு பேரும்.”
அன்றிலிருந்துதான் என் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி இவர்கள் இருவரும் டீ மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்று,
அவர்கள் இருவரும் ஒருமுறை வங்கிக் கிளைக்கு வந்தவுடன், விஜாரித்தேன்.  “இது உண்மையா?”
“எது?”
“நீங்க இருவரும் டீ மாத்திரம் சாப்பிட்டு இருப்பது.”
“ஆமாம்.” என்றார் அப்துல்லா.
“எப்படி அது மாதிரி இருக்க முடியும்?”
“எங்கள் தேவை மிகக் குறைவானது.  ஒரு நாள் அப்படி இருக்க முடிவு செய்தோம்.  வெறும் டீ மாத்திரம் அன்று குடித்தோம்.  பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.  எங்களால் அப்படி இருக்க முடிந்தது.”
“நானும் அப்படி இருக்க முடியுமா?”
“நீங்க ஏன் தம்பி அப்படி இருக்கணும்.  நாங்க வயசானவங்க.  எந்த வேலையும் எங்களுக்குக் கிடையாது.  இன்னும் எத்தனை வருஷம் உயிரோடு இருப்போனுன்னு தெரியாது. அதனால் டீயைக் குடிச்சிட்டு காத்திருக்கிறோம்.”
நான் அந்தக் கிராமத்தை விட்டு வேற கிராமத்திற்கு மாறி வந்து விட்டேன்
  ஆனால் அந்தக் கிராமத்தில் இருக்கிற அந்தப் பெரியவர்களை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.
ஒருநாள் தினமலர் பத்திரிகையைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு செய்தி, அவர்கள் இருவர் புகைப்படங்களைப் பிரசுரம் செய்து.  ’75 வயதிலும் டீ மாத்திரம் குடித்து உயிர் வாழ்கிறார்கள்,’ என்று.
  
.

முதல் இதழ் நவீன விருட்சம்

அழகியசிங்கர்


மொத்தம் 16 பக்கங்கள்.  ஜøலை – செப்டம்பர் 1988 ஆண்டு வெளிவந்தது.  மயிலாப்பூரில் உள்ள ஒரு அச்சக உரிமையாளரிடம் தயார் செய்யக் கொடுத்திருந்தேன்.  500 பிரதிகள் அடித்தேன் என்று ஞாபகம்.  எல்லாப் பக்கங்களும் கவிதைகள்.  அதை அச்சடித்துவிட்டு எடுத்துக்கொண்டு வரும்போது, அச்சக உரிமையாளரைப் பார்த்தேன்.  அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன்.  ஆனால் அவர் ஏளனமாகப் பார்ப்பதுபோல் இருந்தது. அவர் அச்சக உரிமையாளர் மட்டுமல்ல, ஆனால் ஒரு இலக்கியவாதியும் கூட.  
‘இதில் உள்ள கவிதைகளைக குறித்து என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டேன்.
அவர் சொன்னார் : ‘ இதெல்லாம் கவிதை இல்லை.’
அடுத்த இதழ் அங்கு அடிக்கப் போகவே இல்லை.  ஏன் மையிலாப்பூர் பக்கமே தலையை வைத்துப் படுக்கவில்லை.  எங்காவது பார்த்தாலும் தள்ளிப் போய் நிற்பேன்.  தப்பி தவறி பார்த்துவிட்டால் போதும் அவருடைய ஏளனப் பார்வை என் முன்னால் தவழ்ந்தபடி வரும். 
16 பக்கங்களில் கவிதைகள் எழுதியவர்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. ரா ஸ்ரீனிவாஸன் 2. கோபி கிருஷ்ணன் 3. தேவதேவன் 4. ஆர்.ராஜகோபாலன் 5. துரியன் கோஷ் ப்ரீதி 6. சுரேசன் 7. ஆனந்த் 8. ஞானக்கூத்தன் 9. கண்ணன் எம் 10. ஜெயதேவன் 11. ஆ இளம்பரிதி 12. எஸ் வைத்தியநாதன் 13. கி சீனிவாசன் 14. நாரணோ ஜெயராமன் 15. அழகியசிங்கர் 
முதல் பக்கத்தில் அலங்கரித்த ஸ்ரீனிவாஸன் கவிதையை இங்கு அளிக்கிறேன்.
ரா ஸ்ரீனிவாஸன்
சூரியனைத் தவிர
சூரியனே, நீ உதயமாகும் பொழுது 
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி

நீ மறைகின்றாய்
மலைகளுக்கும்
கட்டிடங்களுக்கும்
ஒவ்வொன்றிற்கும் அப்பால்
நீ எழுதிய ஓவியமும்
மெல்ல அழிகின்றது
இருள் சூழ்ந்து
பின்பு அதிகாலையினில்
நீ உதிக்கின்றாய்
உன்னுடன் நானும் 
மாலைக்கான ஓர் புதிய ஓவியமெழுத.

குழந்தையின் தோழர்

தம்பி சீனிவாசன்

அம்மா அப்பா என் மேலே
அன்பைக் காட்டும் தோழர்கள் – நான்
கும்பிடும் சாமி நீயும் என்
கூட ஆடும் ஒரு தோழன்

ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம்…

அழகியசிங்கர்


கோவிந்தன் தெரு வந்தால் எங்கள் தெரு தெரிந்து விடும்.  மேற்கு மாம்பலத்தில் ஆதி கேசவ பெருமாள் கோயில் என்ற ஒன்று உண்டு.  அதன் எதிரில்தான் ராகவன் காலனி.  ஆனால் யாரிடமாவது முகவரியைக் கேட்டால் கட்டாயம அசோக் நகரில் உள்ள ராகவ காலனிக்கு வழி சொல்வார்கள். ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு மாம்பலத்தில் உள்ள ராகவன் காலனி தெரிவதில்லை.  
என் கடிதங்கள் எல்லாம் அப்படித்தான் சென்று விட்டு வரும்.  யாராவது வீடு தேடி வந்தால் குழம்பி விடுவார்கள். சரி ராகவன் காலனியில் என்ன அப்படி முக்கியத்துவம் இருக்கிறது?  ஒன்றுமில்லை.  ஆனால் அங்கு ஒரு முதியோர் இல்லம் ஒன்றுள்ளது.  ஏழாம் நெம்பர் வீட்டில்தான் அந்த முதியோர் இல்லம் உள்ளது.  
அந்த முதியோர் இல்லத்தில் மூன்று பேர்கள் மட்டும் உள்ளார்கள்.  வேற யாரும் கிடையாது.  சேர்க்கவும் மாட்டோம்.  முதல் முதியவர் வயது 93.  என் அப்பா.  இரண்டாவது முதியவர் நான்.  வயது 62.  மூன்றாவதாக ஒரு முதியவர் சேர்ந்துள்ளார்.  அவர் வேற யாருமில்லை என் மனைவி.  சமீபத்தில் 93 வயதான முதியவரான என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை.  எப்போதும் தானவே எல்லாக் காரியங்களையும் செய்து கொள்பவர்.  யாரையும் எதிர்பார்க்க மாட்டார். காலையில் எழுந்தவுடன் தானே ஷேவ் செய்து கொள்வார்.  பின் குளிப்பார்.  கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிப்பார்.  தானே தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிடுவார்.  
சமீப காலத்தில் அந்த முதியவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.   வலி வலி என்று வலது கையைப் பிடித்துக்கொண்டு தினமும் புலம்புகிறார்.  எழுந்து நிற்கவே முடியவில்லை.  படுத்தபடியே இருக்கிறார்.  கொஞ்சம் எழுந்து உட்கார சொன்னால் ரொம்பவும் கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொள்கிறார்.  முன்பெல்லாம் யூரின் போக பாத் ரூம் போவார்.  இப்போதெல்லாம் முடிவதில்லை.
ராகவன் காலனியில் வீற்றிருக்கும் இந்த முதியோர் இல்லத்தில் வெளியில் உள்ள முதியோரை சேர்க்க முடியாது.  அப்பாவாகிய மூத்த முதியவருக்காக அவருடைய பையனாகிய நடுத்தரமான முதியவனான நான்தான் எல்லா உதவிகளையும் செய்து கொண்டு வருகிறேன்.
ஒருநாள் விட்டு ஒருநாள் அவரைக் குளிக்க அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். நானே பாத்ரூமிற்குப் போய் அவருக்குக் குளிப்பாட்டலாமென்றால் அவர் விடுவதில்லை.  அவர் பாத்ரூமிற்குப் போனால் கீழே விழாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டுவேன்.  பாத்ரூம் கதவை தாழ்ப்பாள் போடக் கூடாது என்று வேண்டி கேட்டுக்கொள்வேன்.  சில நாட்கள் அவர் குளிக்க மாட்டார்.  பிழிந்தத் தூண்டால் உடம்பை துடைத்துக் கொள்வார்.  சிலதினங்களாகத்தான் அப்பா இப்படி இருக்கிறார்.
தனியாகப் படுத்துக்கொள்ள பயப்படுகிறார்.  என் பெயரைச் சொல்லி அடிக்கடி கூப்பிடுகிறார். 
முன்பெல்லாம் மாடிப்படி வழியாக எங்கள் வீட்டு கீழே நடந்து வருவார்.  படிக்கட்டுகள் வழியாக அவர் நடப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.  வீட்டிற்குள்ளேயே கீழே உள்ள இடத்தில் நடப்பார்.  தெருவில் யாரும் அவர் முன்னால் நடந்து போகக் கூடாது.  உடனே காட் ப்ளஸ் யூ, குட் மார்னிங் என்று சொல்வார்.  
அப்பாவின் எதிர்பார்ப்பு பெரிதாக எதுவும் இல்லை.  புதிதாக எந்தச் சட்டையும் அவர் அணிய மாட்டார்.  என் சகோதரன் பயன்படுத்திய சட்டைகளைதான் அணிவார்.  என் சட்டை அவருக்கு சரியாக வராது.   வீட்டில் செய்யும் உணவுகளையே சாப்பிடுவார்.  அவர் அடிக்கடி விருப்பப்பட்டு சாப்பிடுவது மோர்கழி என்ற டிபன். 
முன்பெல்லாம் அப்பாதான் எனக்கு காப்பி போட்டுக் கொடுப்பார்.  என்னைப் பார்க்க வருபவர்களுக்கு டீ போட்டுத் தருவார்.  இதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது.  அதன்பின் நான் காப்பிப் போட்டு அப்பாவுக்குக் கொடுப்பேன்.   அப்போதெல்லாம் மூன்றாவது முதியவர் எங்கள் குழுவில் சேரவில்லை.  
போன மாதத்தில் இருந்து மூன்றாவது நபரும் முதியவர் குழுவில் சேர்ந்ததால், முதியோர் இல்லம் களை கட்டிவிட்டது.  ஆனால் ரொம்ப மூத்தவரான என் அப்பாதான் முடியாதவர் ஆகிவிட்டார்.  வீட்டிக்குள் நடந்து கொண்டிருப்பவரால் அதுவும் முடியாமல் போய்விட்டது.  எப்போதும் ஒரே தூக்கமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.  சாப்பிடுவதிலும் முன்பு போல் ஆர்வம் காட்டுவதில்லை.   எல்லாம் கொஞ்சம்தான் எடுத்துக்கொள்கிறார். 
பின் அவர் ஒரு அறையில் படுத்துக்கொண்டே இருப்பார்.  கொஞ்ச நேரம் கழித்து வேற அறைக்குப் போய்விடுவார்.   முன்பெல்லாம் அவர் குளித்துவிட்டு நெற்றியில் விபூதியுடன், சாமி ஸ்லோகம் சொல்லிவிட்டுத்தான் சாப்பிட அமர்வார்.  எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.  பால்கனியில் நின்றுகொண்டு தெருவில் போவோர் பெயர்களை எல்லாம் கூப்பிட்டு வாழ்த்துவார்.  இப்போது முடிவதில்லை.  பாத்ரூம் எழுந்து போக முடியாததால், பிளாஸ்டிக் குவளையில் அவர் போகும் யூரினை நான் எடுத்துக் கொட்டி பினாயில் மூலம் சுத்தப் படுத்துகிறேன்.  இதுமாதிரி ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டி உள்ளது.   யாராவது வீட்டிற்கு வந்தால் பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறார்.  அல்லது கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்.  அவர் படுத்திற பாட்டில் யாராவது பார்க்க வருபவர்கள் எழுந்து ஓடியே போய்விடுவார்கள்.
நேற்று மனைவியிடமிருந்து போன் வந்தது.  காலையில் நான் நடை பயிற்சியில் இருந்தேன்.    அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தேன்.  அப்பா வெஸ்டர்ன் டாய்லட்டின் பக்கத்தில் கீழே தரையில் உட்கார்ந்து இருந்தார்.  எழுந்திருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் நான் கால் முட்டிகளில் தைலம் தடவுவேன்.  அவர் என்னை ஆசிர்வாதம் செய்வார்.  
அடுத்த முதியவனான நான், காலையில் காப்பியைக் குடித்து விட்டு கிரவுண்டிற்கு நானோ காரிலோ டூ வீலரிலோ சென்று நடக்கிறேன்.  இப்போது ஒரு அற்புதமான பூங்காவில் நடக்கிறேன்.  எட்டுப் போட்டு நடந்தால் உடலுக்கு நல்லதாமே அதனால் எட்டுப் போட்டு நடக்கிறேன்.  பின் கைக்கும் காலுக்கும் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன்.
வீட்டிற்கு வந்தவுடன், செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்க்கிறேன்.  தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவன்.    முன்பெல்லாம் ஒரு பக்கம் முழுவதும் டைரி எழுதுவேன்.  இப்போதெல்லாம் கால் பக்கம் அரைப் பக்கம்.   
என் முன்னால் மூன்று பைகள் நிறைய புத்தகங்கள்.  ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  எதாவது எழுத முயற்சி செய்கிறேன்.  குறைந்தது ஆர்யக்கவுடர் தெருவில் நாலைந்து முறைகள் வண்டியை ஓட்டிக் கொண்டு போவது என் வழக்கம்.  வங்கிக் கிளைகளில் கூட்டத்தில் நின்று கொண்டு பாஸ் புக்கைப் பதிவு செய்வேன்.  பின் நண்பர்களைப் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களுக்குப் போவது என்று பொழுதைக் கழிக்கிறேன்.  தினமும் புத்தகம் படிக்கும் நேரத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டுமென்றும் நினைக்கிறேன்.  ஆனால் முடிவதில்லை.  அப்பாவைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வீட்டைவிட்டு வெளியூருக்கெல்லாம் செல்வதில்லை.  மகாமகத்திற்கு என் மனைவிதான் சென்றாள். நான் போகவில்லை.  இன்னும் ஒன்று சொல்லவேண்டும், நான் சாப்பிட்டப் பின் சில மாத்திரைகளைப் போட்டுக்கொள்கிறேன்.  அது நல்ல தூக்கத்தைக் கொடுத்துவிடும்.  நாற்காலியில் உட்கார்ந்த உடன் தூங்க ஆரம்பித்து விடுவேன்.  ஒரு நாள் காலையில் நான் தூங்கவில்லை என்றால் மாலை நேரம் தூக்கம் வந்துவிடும்.
சில மாதங்களுக்கு முன் நான் முன்பு எழுதிய ஒரு நோட்புக்கைப் பார்த்தேன்.  அதில் நான் படித்தப் புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள் எழுதி இருந்தேன்.  எனக்கே ஆச்சரியமாக இருந்தது.  எனக்கு திரும்பவும் அந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை.  என்ன படித்தோம் என்று ஞாபகத்திற்கும் வரவில்லை.  நான் எழுதியதைப் படித்தப்பின் நான் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேனா என்று தோன்றியது. என் பிரச்சினை நான் ஒரு புத்தகத்தைப் படித்தவுடன், அடுத்தப் புத்தகத்திற்குப் போனால் முதல் புத்தகம் மறந்து விடும்.  அதனால் எழுதி ஒரு கட்டுரை மாதிரி இப்போதெல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  இக் கட்டுரைகளைத் தொகுத்துதான் நீங்களும் படியுங்கள் என்ற புத்தகம் தயாரித்து உள்ளேன். இலக்கியக் கூட்டங்களில் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்கிறேன்.  இது ஒரு பொழுதுபோக்குதான் வேற ஒன்றுமில்லை.
எங்கள் முதியோர் இல்லத்தில் மூன்றாவதாக இருப்பவர் என் மனைவி.  ஜனவரி மாதம் முதல் அவர் முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார்.  அவர் வங்கியில் பணி புரிந்து ஜனவரி முதல் ஓய்வு பெற்றுள்ளார்.  அதனால் முன்பு இருந்ததைவிட முதியோர் இல்லத்தில் இன்னொருவர் கூடி விட்டார்.  முன்பெல்லாம் என் மனைவி காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்றவுடன், நான் மாம்பலத்தில் உள்ள சின்ன ஓட்டலில் இட்லி வடை சாப்பிடுவேன்.  இப்போது அதெல்லாம் கிடையாது.  வேளா வேளைக்கு உணவு கிடைத்துவிடுகிறது.  முதியோர் இல்லம் பார்க்க கொஞ்சம் சுத்தமாக இருக்கிறது.  
ஆனால் மூன்றாவது முதியவர் ஆன மனைவியிடம் ஒரு கெட்ட குணம்.  காலையில் சாப்பிட்ட உடன், டிவி முன் உட்கார்ந்து விடுகிறார்.  பின் எழுந்து கொள்வதில்û.  ஒரு நாள் முழுவதும் டிவியில் வருகிற சீரியல்களைப் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.  எனக்கு டிவியோ பிடிப்பதில்லை.  மனைவிக்கு நான் எப்போதும் புத்தகம், கம்ப்யூட்டர் என்று இருப்பது பிடிக்கவில்லை.  என்ன செய்வது? மூத்த உறுப்பினரான அப்பாவிற்கு கட்டாயமாக குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு கிடைத்து விடுகிறது.  
மூவருக்கும் பென்சன் வருகிறது.  மூத்தவர் அப்பாவின் பென்சனைத் தொடுவதில்லை.  அது அவருடைய பணம்.  என் பென்சன் பணமும், மனைவியின் பென்சன் பணமும்தான் முதியோர் இல்லத்தை நடத்த போதுமானதாக இருக்கிறது.  ஒவ்வொரு மாதமும் புத்தகம் வாங்குவது என் இயல்பு.   அது என் மனைவிக்கும் அப்பாவிற்கும் பிடிப்பதில்லை.  என் பிரச்சினை புத்தகங்களை எங்கே வைப்பது என்று. அதேபோல் நல்ல சினிமா எதாவது இருந்தால் தியேட்டரில் போய் பார்த்து விடுவேன்.  
மூத்தக் குடிமக்களாகிய எங்களை யாரும் பார்க்க வருவதில்லை.  என் மகள் அவள் குடும்பத்துடன் மடிப்பாக்கத்தில் இருக்கிறாள்.  அவளால் வர இயலாது.  புதல்வன் வெளி நாட்டில் இருக்கிறான். அவனாலும் வர இயலாது.
என் வீடு உண்மையிலேயே ஒரு முதியோர் இல்லம் தானே?
 

கதையை எப்படி வாசிக்கலாம்?

அழகியசிங்கர்

நேற்று நடந்த கூட்டத்தில் இரா முருகன் அவருடைய நாவலான  ‘அச்சுதம் கேசவம்’ என்ற நாவலிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வாசிக்க கூட்டம் 5.30 மணிக்குத் தொடங்கியது.  
கங்கையைப் பற்றி விவரிக்கும் பகுதியை எடுத்துப் படித்தார் :
‘தினசரி கூடும் கூட்டம்தான்.  தினம் தினம் புதிதாக யார்யாரோ வருகிறார்கள்.  கிழக்கிலும் தெற்குத் திசைக் கோடியிலும் மேற்கிலும், பனி மூடித் தவத்தில் நிற்கும் இமயப் பெருமலைக்கு அந்தப் பக்கம் இருந்தும் இங்கே வந்து கூடுகிறவர்கள்.  ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கு மேலாக தினம் தினம் இந்தத் கல் படிக்கட்டுகளில் இருந்தும் நின்றும் தொழுது வணங்கியும் அழுதும் தொழுதும் கங்கைக்கு ஆராதனை நடப்பதைக் கண்ணில் நீல் மல்கப் பார்கிகறார்கள…’
ஆனால் மிகக் குறைவான நேரம்தான் படித்தார்.  கோவிந்தராஜன் பச்கைச் கிளிகள் என்ற பாவண்ணனின் கதையை எடுத்துப் படித்தார்.  கிருபானந்தம் அவர்கள் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்ற சுப்ர பாரதி மணியன் கதையைப் படித்தார். நான் பேயோன் என்பவர் எழுதிய அகலிகைப் படலம் என்ற கதையை எடுத்துப் படித்தேன்.  அதன்பின் கோவிந்தராஜன் அந்திமழை என்ற பத்திரிகையில் வெளிவந்த பண்டிகை நாள் என்ற விநாயக முருகன் எழுதிய கதையைப் படித்தார்.  5 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 7 மணிக்கு முடிந்தது.  எங்களால் ஒரு கவிதையும் படிக்க முடியவில்லை.  பா வெங்கடேசனின் ஆலா என்ற கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகள் படிக்கலாம் என்று நினைத்தேன்.  முடியாமல் போனதற்கு சிறிது வருத்தம்தான்.
இதன் மூலம் சிலவற்றை அலச முடிந்தது.  கூட்டம் பார்க்கில் நடப்பதால் சுற்றிலும் கூச்சல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  அதைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மேலும் ஒரு கதையைப் படிக்கும்போது சத்தமாகப் படிக்க வேண்டும்.  ரொம்பவும் நிதானமாகவும் படிக்க வேண்டும்.  கவிதையை நாம கட்டாயம் படிகத்தான் வேண்டும்.  கதையை வேண்டுமானால் படிக்கலாம், அல்லது சொல்லலாம்.
நீண்ட கதைகளைப் படிக்கும்போது கேட்பவர்களுக்கு கவனம் முழுவதும் இருந்துகொண்டு இருக்க வேண்டும்.  கதை வாசிப்பவர்கள் எல்லோரும் கதையைக் கேட்பதுபோல் அமர்ந்துகொண்டு கதையை வாசிக்க வேண்டும். 
 பேயோன் கதையை நான் சத்தமாக வாசிக்கும்போது, பூங்காவிற்கு வந்தவர்கள் கேட்க வந்து விட்டார்கள்.  அவர்களும் ரசித்தார்கள்.  அவர்களை அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கிறேன்.  வழக்கம் போல் நேற்று வாசித்ததை சோனி ரிக்கார்டில் பதிவு செய்திருக்கிறேன்.  
விநாயக முருகன் கதை எஸ் ராமகிருஷ்ணன் கதை எழுதும் பாணியில் இருப்பதாக என் நண்பர் குறிப்பிட்டார்.  எனக்கு கேட்கும்போது அது மாதிரி தோன்றவில்லை.  போயோன் கதையை முழுவதும் படிக்கும்போது அகலிகைக்கு திரும்பவும் தண்டனை கொடுத்து விட்டாரோ என்று தோன்றியது.  சுப்ர பாரதி மணியன் கதையில் மாமிச உணவு புசிப்பதை முழுக்க முழுக்க வர்ணிப்பதுபோல் இருந்தது.  என்னையும் வலுகட்டாயமாக சாப்பிட வைத்துவிடுவாரோ என்று மனதில் பட்டது.  பாவண்ணன் கிளிகளைப் பற்றிய கதை ஏற்கனவே பேப்பரில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டது. நாம் படிக்கும் செய்தியை எப்படி கதையாக மாற்றுவது என்பது ஒரு கலைதான்.
இன்னும் எடுத்துக்கொண்டு வந்த கதைகளை படிக்காமல் திரும்ப வேண்டியிருந்தது.
முக்கியமாக கதை வாசிப்பர்களுக்கு கேட்பவர்கள் போராடிக்காமல் கதையை எப்படி கேட்க வைக்கலாம் என்பதில் பயிற்சி யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது.  மேலும் கதையைப் படிக்காமல் சொல்வது சாத்தியமா என்றும் சோகித்துப் பார்க்க வேண்டும்.  
நாங்கள் சத்தமாக கதைகளை வாசித்ததால் பூங்காவில் சுற்றிக்கொண்டிருப்பவர்களையும் எங்கள் பக்கம் இழுக்க முடிந்தது.  இதை வாசிக்கும் நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 2

அழகியசிங்கர்

வாரம் ஒரு முறை சந்தித்து கதையோ கவிதையோ படிப்பது என்பதும் கேட்பது என்பதும் யோசித்தால் சற்று சிரமமான விஷயமாகக் கூட தோன்றலாம்.  அதனால்தான் எல்லோரும் நடமாடும் பூங்காவில் இக் கூட்டம் நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு 2 பேர்கள் போதும்.  பூங்கா ஒரு அற்புதமான விஷயம்.  எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருப்பார்கள்.  கலகலவென்று இருக்கும்.  நாம் ஒரு இடத்தில் கூடி கதையையோ கவிதையையோ படிக்கலாம்.  இதை அவரவர் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில உள்ள பூங்காவிலும் வைத்துக் கொள்ளலாம். கட்டாயம் வீட்டில் வேண்டாம்.  அது வீட்டில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும்.
1. கூட்டத்திற்கு வருபவர்கள் ஒரு கதையோ கவிதையோ வாசிக்கலாம்; யாரும் படிக்க இல்லையென்றால் இன்னும் கதைகளோ கவிதைகளோ வாசிக்கலாம்.
2. கூட்டம் சரியாக 5.00 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் முடித்து விடலாம்;
3.  கூட்டத்திற்கு வருபவர்கள் முதல் முறையாக அவர்கள் எழுதிய கதையோ கவிதையோ வாசிப்பதாக இருந்தால் முதலில் அதை வாசிக்கவும்.
4. நீங்கள் விருப்பப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளும் கவிதைகளும வாசிக்கலாம்.
5. எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.கதையைப் படிப்பதற்குப் பதில் கதையைச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என்று.  ஆனால் எழுத்தில் எழுதப்படுகிற நயத்தை படித்தால்தான் வெளிப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.
6.  தயபுசெய்து தி நகர் பக்கத்தில் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  எளிதில் தி நகரிலிருந்து ஒருவர் வீட்டுக்குப் போகும் தூரத்தில் இருக்கும்படி வரவும்.
7. படிக்க விரும்புவர்கள் அவரவர் புத்தகமோ பத்திரிகையோ எடுத்து வந்து வாசிக்கவும்.
நடேசன் பூங்காவில் வருகிற ஞாயிறு அதாவது 10 ஆம் தேதி கூட்டம் நடைபெறுகிறது. 5.00 மணிக்கு வரவும்.  பூங்கா முகப்பில் தென்படும் மேடைக்கு வரவும்.  அங்கு அமர்ந்துகொண்டு வாசிக்கலாம். 

நீங்களும் படிக்கலாம்……

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் எழுதிய புத்தகம்தான் நீங்களும் படிக்கலாம் என்ற புத்தகம்.  கடந்த ஓராண்டாக 3000 பக்கங்களுக்கு மேல் 20 புத்தகங்கள் படித்துள்ளேன்.  அவற்றை குறித்து நான் எழுதிய கட்டுரைகளே நீங்களும் படிக்கலாம் என்ற புத்தகம்.  90 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரு.60 தான்.  புத்தகம் வேண்டுபவர்கள் 9444113205 என்ற தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.
புத்தகத்தில் நான் எழுதிய என்னுரையை இங்கே தருகிறேன்.
போன ஆண்டு ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்குப் போயிருந்தேன். படிக்க அவருடைய நாவலை வாங்கினேன்.  அதைப் படிக்க ஆரம்பித்தபோது, அது குறித்து எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது. ஒரு வாசகனாக.   அந்தப் புத்தகம் பற்றி எழுத ஆரம்பித்ததுதான் இநதப் புத்தகத்திற்கு ஆரம்பம்.  எல்லோரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப் பட்ட கட்டுரைகள்தான் இவை.  
நான் தொடர்ச்சியாக புத்தகங்களைப் படித்து வருகிறேன். பெரும்பாலான நேரம் படிப்பதில் போய்விடுகிறது. போன ஆண்டில் கிட்டத்தட்ட 3000 பக்கங்களுக்கு மேல் நான் படித்த 20 புத்தகங்களின் விபரங்கள்தான் üநீங்களும் படிக்கலாம்ý என்ற இந்த சிறிய நூல். ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதிய பிறகே இன்னொரு புத்தகம் படித்து முடிக்கிறேன்.  இதுதான் இந்தப் புத்கம் வருவதற்கான பின்னணி.  எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்பிராயங்களை நான் நவீன விருட்சம் பிளாகிலும், முகநூலிலும் பதிவு செய்வது வழக்கம்.  அப்படிப் பதிவு செய்ததைத்தான் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.
புத்தகம் குறித்து எழுதுவதில் என் முன்னோடி க.நா.சு தான்.  அவருக்கு இப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளேன். üமுழு நேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம்ý என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் க.நா.சு. வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்.  
மரணம் அடையும் தறுவாயில் கூட தமிழில் எழுதிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறார். தமிழுக்கு அவர் செய்த தொண்டை யாரும் மறந்து விட முடியாது. 
                                                                                                                                      அழகியசிங்கர்
 25.03.2016

ஒரு நிமிடம் கவிதையைப் படியுங்கள்

அழகியசிங்கர்

நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை.  இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார்.  கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது.  அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.
 ஜான்னவி



திசைகள்




நாம் அறிமுகமானோம்
சிநேகம் கொண்டோம்
சிநேகம் வளர்ந்து
ஆழ்ந்த நட்பானது


உன் மொழியை நானும்
என் மொழியை நீயும்
கற்றோம்
கொஞ்சம்
வேலையின் அழுத்தலில்
மூச்சுத் திணறியபோதும்
இனிமையாய் மாறியது
காலம்


நாம் பேசிக்கொள்ள
இன்னும் நிறைய இருந்தது
உன் மொழியிலும்
என் மொழியிலும்
மொழியற்ற மௌனத்திலும்.


காதல் வந்து
தட்டிக் கொண்டிருந்தது கதவை
நமக்கு நேரமிலாத் தருணத்தில்


உன் நாட்டில் உன்னைத்
திரும்ப அழைத்து விட்டார்கள்
என்னைச் சிறை வைக்க
என் வேலை


நாம் கற்ற நாகரீகம்
எங்கு போனது?
கதவைத் தட்டிய காதலை
வரவேற்கவில்லை நாம்.


கண்டும் காணாதது போல்
பாசாங்கு செய்து
மிகுந்த எச்சரிக்கையோடு
கடந்து சென்று விட்டோம் அதை


பிறகு பிரிந்து போனோம் நாம்
விடை பெறாமலே

இலவசமாய் க நா சு கவிதைகள்

அழகியசிங்கர்
க நா சு நூற்றாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு சில க நா சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.  ஏற்கனவே மையம் வெளியீடாக வெளிவந்த புத்தகம்.  14 கவிதைகள் கொண்ட சிறிய தொகுதி இது.  500 பிரதிகள் இதை அச்சடித்து நான் எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  நான் அப்போது மயிலாடுதுறையில் இருந்தேன்.  அங்கு நான் சாப்பிடப் போகும் ஓட்டலுக்குச் சென்று, இப் புத்தகத்தின் சில பிரதிகளை கொண்டு வைத்தேன்.  ஓட்டல் கல்லாவில் இருப்பவர், “இதெல்லாம் விற்க முடியாது,” என்று புத்தகம் பார்த்தவுடன் சொல்ல ஆரம்பித்தார்.  நான் சொன்னேன் :  “இதெல்லாம் விற்க வேண்டாம்.  இலவசமாகக் கொடுங்கள்.   
கநாசு புதுக்கவிதையின் முன்னோடி….அவர் பெயரை கேள்விப்பட்டிருக்கிறீரா,”என்று கேட்டேன்.  முழித்தார் மனிதர்.  
அதன் பின் வெற்றிலைப் பாக்குக் கடையில் கொண்டு போய் கொடுத்தேன். இலவலசமாகக் கொடுங்கள் என்று சொன்னாலும் எல்லோருக்கும் அலட்சியம்.
நான் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழீ பஸ்ஸில் ஏறி அலவலகம் செல்வேன்.  பஸ்ஸில் எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பேன்.  யாராவது பத்திரிகை எதாவது படித்துக் கொண்டிருந்தால் போதும்.  உடனே போய் சில க நா சு கவிதைகள் புத்தகத்தை நீட்டுவேன்.  சிலர் வாங்கிக் கொள்வார்கள்.  சிலர் முறைத்துப் பார்ப்பார்கள். சிலருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு விளக்குவேன்.  க நா சு எப்படி கவிதை எழுதியிருக்கிறார் என்று.  நாம் ரசிக்கிற ஒரு விஷயத்தை மற்றவர்களால் ரசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குண்டு.  இந்தத் தொகுதியில் நான் ரசித்த கவிதை இதுதான்.
இதன் முதல் பதிப்பைக் கொண்டுவந்த மையம் ராஜகோபாலன் போற்றுதலுக்கு உரியவர்.  இந்தப் புத்தக வெளியீட்டு விழா கூட்டத்தில் இந்தப் புத்தகம் வந்ததை அறிந்து க நா சு வெளிப்படுத்திய மகிழ்ச்சி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  கோபிகிருஷ்ணனின் ஒவ்வாத உணர்வுகள் என்ற மகத்தான சிறுகதைத் தொகுதியும் அன்றுதான் மையம் வெளியீடாக வந்தது. இன்னொரு பதிப்பாக இந்தப் புத்தகம் திரும்பவும் கொண்டு வந்து இலவசமாகக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.  ஆனால் இந்த முறை 100 பிரதிகள்தான் அச்சடிக்கப் போகிறேன். 
விலை

 ஓ ! ஓ ! ஓ !  ஓ !
  இவனுக்குத்  தேச பக்தி
  நிறைய வுண்டு. தேசத்தை
  விற்கும் போது
  நல்ல விலை போகும் படிப்
  பார்த்துக் கொள்வான்
  இவனுக்கு தேச பக்தி
  நி-றை-ய வுண்டு
  ஓ !  ஓ !  ஓ ! ஓ !