Category: கவிதை
பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 6
15.09.2016
அழகியசிங்கர்
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 18
எங்கள் ஜாதி
கிருஷாங்கினி
மாத முதலில் அல்லது கடைசியில்
இடைவிடாத லாரிகளின் ஓட்டம்,
காலியாக அல்லது தானிய மூட்டையுடன்.
அரசின் தானியக் கிடங்கு,
அதன் அருகில் எங்கள் வீடு
விடியற் கருக்கலில் ஆளரவமற்ற போதில்
காக்கைகளும் குருவிகளும் தெருவில்
தானியம் கொத்திப் பசியாறுகின்றன.
நன்றி : கவிதைகள் கையெழுத்தில் – கவிதைகள் – கிருஷாங்கினி – விலை : ரூ.150 – பதிப்பாண்டு 2007 – பக்கம் : 143 – அளவு கால் கிரவுன் – வெளியீடு : சதுரம் பதிப்பகம், 34 சிட்லப்பாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047 – தொலைபேசி : 044 – 22231879
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 17
முனியமரம்
பாலா
அந்த புளியமரத்தைக் கடந்துதான்
எல்லோரும் செல்லவேண்டும் ஊருக்குள்
உருண்டு திரண்டு நிற்கும் அந்தப் புளியமரம்
ஒட்டுமொத்த ஊருக்கான
பயத்தையும் உள்வைத்திருந்தது
ஒத்தையாய் ஒருவரும் கடப்பதில்லை
முனி இருப்பதாய் சொல்லும்
அந்தப் புளியமரத்தை
வாந்தி பேதி முதல்
நல்லது கெட்டது வரை
முனியோட வேலைதான் என நம்பிய ஊர்
இரவு எட்டுமணிக்கும்
சாமியாடியின் பேச்சுக்கும்
அடங்கிபோகும்
முனி விரட்டுதலும்
மூலிகை வைத்தயமும்
மூன்று தலைமுறையாய் வளர்க்கிறது
சாமியாடியின் சந்ததியை
வாக்கு கேட்டு வருவோரின்
வசதியை பொருத்து வசூலிக்கப்படும்
வகை வகையாய் சுருட்டு, சாராயம், கோழி என
எல்லாவகை வஸ்த்துக்களும்
ஒரு நாள்
அடித்த அசுரக் காற்றில்
அடியோடு சாய்ந்த முனியமரம்
பெருந்திரள் கூட்ட பூசையோடு
அகற்றப்பட்டது
பிழைப்புப்போன விசனத்தில்
ஒடுங்கிப்போன சாமியாடிக்கு
பாடம் போட்டாள் சாமியாடி சம்சாரம்
“அட கூறுகெட்ட மனுசா
ஒத்தையா குத்தவைச்சு ஒக்காராம
ஊருக்குள்ள போயி சொல்லு!
புளியமரத்துல இருந்த முனி
நேத்து வைச்ச புங்க செடியில்
குடியேறிச்சுனு”
அடுத்த பூசை ஆரம்பமானது…….
நன்றி : முனியமரம் – கவிதைகள் – பாலா – விலை : ரூ.80 – பதிப்பாண்டு 2015 – பக்கம் : 80 – புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11 அப்துல்ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை, சென்னை 600 015
தொலை பேசி எண் : 044 – 42147828
பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11
தொலைந்துபோன பாரதியார்
அழகியசிங்கர்
நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்
எங்கே ஒளிந்திருக்கிறீர்
என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்
சிரித்தபடி மறைந்து விட்டார்
போனில் படித்தபோது
நண்பர் தலை ஆட்டி
‘நன்று நன்று’ என்றார்
கொண்டு வருவார்
துடிப்புடன்
பாரதியார் பற்றி எழுதிய
பலர் கவிதைகளையெல்லாம்
சேர்த்தென்றால்
கேட்டவுடன்
திட்டத்திலிருந்து விலகி விட்டார்
அப்போது எழுதிய
அந்தக் கவிதையை
எங்கே வைத்தேன்
ஃபைல்களைப் புரட்டிப்
பார்த்தாலும் கிட்டவில்லை
பாரதி என் பாரதி
நீண்ட நோட்டில்
எழுதிப் பார்க்கும்
கவிதைகள் பலவற்றை
சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு
இருந்தாலும்
பாரதியாரைப் பற்றி
நானெழுதிய கவிதையைக்
காணவில்லை ஏனோ..
எங்கே ஒளிந்துகொண்டார்?
தெரியவில்லை
வாவென்றால் வருவாரா?
தெரியவில்லை
அவர் வரிகளிலிருந்து
கயிறு பிடித்து
இறங்கியிருக்கிறோம்.
வழிதெரியாமல்
திகைத்த
எங்களுக்கு
வரங்கொடுத்து
வரி தந்த மேதையவர்
அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர்
பாட்டுப்பாட பிய்த்துக் கொண்டனர்
அவர் பாடல்களை
நானோ கவிதை எழுத முயற்சிக்கிறேன்
மனதுக்குப் பிடித்த கவிதைகள் 16
வேஷம்
க. நா. சு
நான் அறிவாளி என்று வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை சோம்பேறி என்றார்கள்.
நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள்.
நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது
அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள்
நான் பணக்காரன் போல நடந்துகொண்டபோது
அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள்.
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் என்றார்கள்.
நானும் அறியாமலே, மனவலி தாங்காது நான் முனகியபோது
நான் துயருற்றவன் போல வேஷம் போடுகிறேன் என்றார்கள்
நன்றி : க நா சு கவிதைகள் – கவிதைகள் – பக்கம் : 176 – விலை ரூ.65 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 15
அழகியசிங்கர்
எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு….
விக்ரமாதித்யன்
எப்பொழுதும்போல
இருக்கிறேன்
எப்பொழுதும்போல
என்றால்?
எப்பொழுதும்
போலத்தான்
அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்
தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்
காசு கிடைக்கையில்
குடிக்கிறேன்
வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்
ஏதாவது படிக்கத் தோன்றினால்
படிக்கிறேன்
எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்
நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய்ப் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமேயெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்
ஊர்சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்
கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
கோயில் கோயிலாகப் போய் வருகிறேன்
இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே
வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்
பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 5
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 14
தலைப்பில்லாத கல்யாண்ஜி கவிதை
கல்யாண்ஜி
உங்களைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.
தபால் பெட்டியில் கடிதம் இடுபவராக
ஆதார் அட்டை வரிகையில் நிற்பவராக
மீன் வியாபாரியிடம் சிரித்துப் பேசுபவராக,
மழையில் வாகனம் ஓட்டிச் செல்பவராக,
கண்மருத்துவ மனையில் சோதிக்கப் படுபவராக,
மரணவீட்டில் நாற்காலியில் குனிந்திருப்பவராக,
புதிய சுவரொட்டியை ஆர்வமாக வாசிப்பவராக,
கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுப்பவராக,
தலைக் கவசம் அணியாமல் காவலரிடம் கெஞ்சுபவராக,
பலூன் விற்பவரிடம் நீல பலூன் வாங்குபவராக…
இவ்வளவு இடங்களில் பார்த்திருக்கிற என்னை
எங்குமே பார்க்காதது போல் உங்களால்
போக முடிவது எப்படி
நன்றி : மூன்றாவது முள் – கவிதைகள் – கல்யாண்ஜி – பக்கம் : 64 – விலை ரூ.55 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 – PHONE : 044 – 24896979
நவீன விருட்சம் 100வது இதழும் நானும்…
அழகியசிங்கர்
நவீன விருட்சம் 100வது இதழைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இதழ் வெளிவந்துவிடும். மொத்தம் 250 பக்கங்களுக்கு மேல். இதுதான் முதல் முறை நான் அதிகப் பக்கங்களுடன் நவீன விருட்சம் இதழைத் தயாரிப்பது. ஏகப்பட்ட கவிதைகள், ஏகப்பட்ட கதைகள், கட்டுரைகள் என்று இதழ் ரொம்பி வழிகிறது. இந்த முறை எனக்கு உதவி செய்ய நண்பர்கள் வட்டமும் சேர்ந்துள்ளது.
100வது இதழுக்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபு அனுப்பிய கவிதையை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
புத்தகம்
மயிலாடுதுறை பிரபு






