நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன். இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன். 23.06.2021 அன்று சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம். அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் – தி.ஜானகிராமனும்’ எழுதிய ‘நடந்தாய் வாழி, காவேரி’ என்ற புத்தகம் பற்றி கூட்டம்.
புத்தகம் படித்து எழுத வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். படிக்கப் படிக்கக் குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டே வந்தேன். முதலில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.இது ஒரு பயண நூல் என்பதால்படிக்கப் போரடிக்கவில்லை. அதனால் தொடர்ந்து படிக்க முடிந்தது.
இந்தப் புத்தகம் சிட்டி – தி.ஜானகிராமன்எழுதியது. 287 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் சிட்டியும் ஜானகிராமன் எந்தந்தப் பகுதிகளில் எழுதினார்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் குறிப்புகளை இங்குக் குறிப்பிடுகிறேன் :
– காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என்ற உண்மை தெளியத் தெளிய அவர்கள் மேற்கொண்ட பொறுப்பு சாதாரணமானதல்ல என்ற உணர்வு சிறிது தயக்கத்தையும் அளித்தது.
– மயிலாடுதுறையில் ஒரு கை காட்டியைப் பார்க்கிறார்கள். கோவலனும், கண்ணகியும் சென்ற சுவட்டில் புகாரிலிருந்து மதுரை வரை நடந்தே செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்படுகிறது.
– செயற்கைக் கோள்கள் சுக்ரனை வலம் வரும் இந்த நாளில் இது என்ன ஆசை? அவர்களுக்கே புரியவில்லை. அதனால் நடந்து செல்லாமல் நடையும் காருமாக சென்று காவேரியை தலையிலிருந்து கால்வரைப் பார்த்து வருகிறார்கள்.
– பூவர் சோலை மயிலால், புரிந்த குயில்கள் இசைபாட, தான் நிலை திரியாத் தண்டமிழ்ப்பாவை என்று இளங்கோ அனுபவித்த பூரிப்பை அவர்களும் அடைந்து கொண்டே சென்றார்கள்.
– சென்னையிலிருந்து குடகு நாட்டுத் தலைக் காவேரியைக் காணப் புறப்பட்ட அவர்கள் முதன் முதலாக வட ஆர்ச்சாட்டில் பூம்புகாரைப் பார்த்தபோது அவர்களுக்கு நெஞ்சு கொள்ளா வியப்பாக இருந்தது.
– முதலில் சென்னையிலிருந்து பெங்களூர் சாலைக்குப் போகிறார்கள்.
– தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த பாயம்பள்ளி என்ற இடத்தைப் பார்வையிடுகிறார்கள்.
– கி.மு 1500 முதல் கி.மு 500 வரை வாழ்ந்த கற்கால மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதற்காகத் தொல்பொருள் துறையினர் அரிய தடயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
– கி.மு 1500 முதல் கி.மு 1000 வரையிலான காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவர்கள்.
– மலைக் குன்றுகளில் அவர்களுக்கு உறைவிடமாக இருந்த பல குகைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
– காட்டை அழித்து நாடாக்க அவர்கள் செய்த முயற்சிகள் – வேட்டையாட கற்கோடலி கள், வில், அம்பு பயன்படுத்தியது தெரிந்தன.
– சமையலுக்குப் பயன்பட்ட பானை வகைகளின் சிதறிய துண்டு – பெண்களின் அணிகலங்கள். மண்ணலான பாசி மணிகள், அதேபோல் கற்காலமாகிய கி.மு 1000முதல் கி.மு 300 வரையிலான காலத்தில் வாழ்ந்த மக்கள் கையாண்ட கருவிகளும் கண்டு பிடித்தார்கள்.
முதலில் பெங்களூரிலிருந்து கொள்ளேகாலம் போய்ச் சேர்க்கிறார்கள். இருட்டில் சென்றதால் சிவசமுத்திரம் போக முடியவில்லை. மறுநாள் கொள்ளேகாலத்திலிருந்து சிவ சமுத்திரத்திற்குப் போகிறார்கள். சிவசமுத்திரம் அடர்ந்த காடு நிறைந்த ஒரு தீவு. பாலத்தைக் கடந்து தீவுக்குள் சென்றவுடன் பழைய அழகு நிறைந்த சிவசமுத்திரம் கிராமத்தைக் கண்டார்கள். அந்தத் தீவைச் சுற்றி காவேரி இரண்டு கிளைகளாகப் பிரிந்து வளைந்து வந்து, பார்சுக்கி, ககனசுக்கி என்ற இரு பெரும் நீர்வீழ்ச்சிகளாக இருநூறு அடி ஆழத்தில் பாய்ந்து மீண்டும் ஒன்றுகூடுகிறது. பல பிரம்மாண்டமான பாறை முண்டு குமிழியிட்டு, குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தாள் காவேரி.
அங்கிருந்து அவர்கள் ககனசுக்கி நோக்கிப் புறப்பட்டார்கள்.தீவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ககனசுக்கியை பார்சுக்கியின் மூத்த சகோதரி என்று கூறலாம். உயரம், ஓசை, பாயும் நீரின் பரிமாணம் எல்லாவற்றிலும் ககனசுக்கியே பெரியது. சுமார் மூன்று மைல் நீளமும் முக்கால் மைல் அகலமும் உள்ள சிவசமுத்திரம் தீவில் நான்கு கோவில்களும், ஒரு முஸ்லிம் சமாதியும் இருக்கின்றன. பார்சுக்கி நீர் வீழ்ச்சிக்குப் போகும் வழியில் தீவில் இருக்கும் நான்கு கோவில்களில் முக்கியமானவை சோமேஸ்வர சிவாலயமும், ரங்கநாத விஷ்ணு ஆலயமும் ஆகும்.
சோமேஸ்வரர் ஆலயம் பழமை நிறைந்த பெரிய அமைப்பு. விஷ்ணு ஆலயத்தில் ஜகன் மோஹன ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். இந்தக் கோவிலுக்குக் கோபுரம் இல்லை. காவேரி அம்மனின் விக்ரஹமும் இந்தக் கோவிலில் காணப்படுகிறது. மேலே காவேரியின் ஓட்டத்தை எதிர்நோக்கிச் செல்லும் அவர்களுக்கு சோமநாதபுரம் வரை வழிகாட்டி விளக்கிக் கூறுவதற்காக சிவசமுத்திரம் விஷ்ணு ஆலயத்தில் சேவை செய்து வந்த ஒரு பட்டரை அங்குள்ள துறவி ஏற்பாடு செய்து கொடுத்தார். சோமநாதபுரம் போகும் வழியில் அகண்ட காவேரிபோல் தோற்றமளித்த ஓரிடத்தில் ஒரு தாழ்வான அணைக்கட்டைப் பார்த்தார்கள். அந்த அணைக்கட்டிற்கு மாதவ மந்திரி கட்டே என்று பெயர்.
தொன்மை மிகுந்த தலைக்காடு சென்றடைந்தார்கள்.அங்குக் கீர்த்தி நாராயண சுவாமி என்ற கோவிலைப் பார்க்கச் சென்றபோது ஒரு கனவுலகத்திற்கே சென்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். கீர்த்தி நாராயணசாமி கோவில் மணற் குன்றுகளிடையே ஒரு பள்ளத்தில் புதைந்திருப்பதைக் கண்டார்கள். 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி திருமலை ராஜா என்பவர் ஒரு கொடிய நோய்க்கு உட்பட்டு இருந்ததால் தலைக்காட்டிற்கு வந்து வைத்தீஸ்வரர் கோவிலை வழிபட்டு சிகிச்சை தேடினார். அவருடைய மனைவி ரங்கம்மாள் என்பவள் அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீரங்கப்பட்டனத்திலிருந்து புறப்பட்டுத் தலைக்காடு வந்தாள்.
வரும்போது ஸ்ரீரங்கப்பட்டன நிர்வாகத்தை மைசூர் மன்னரிடம் ஒப்படைத்திருந்தாள். ரங்கமாளிடமிருந்த மிகுந்த மதிப்புற்ற மூக்குத்தி ஒன்றைக் கவர்ந்துகொள்ள மைசூர் மன்னர் திட்டமிட்டார், தம்முடைய சூழ்ச்சி பலிக்காமற் போனதும் அவர் தலைக்காட்டின் மீது படையெடுத்து வந்தார். போரில் திருமலை ராஜா இறந்து விட்டதும் பத்தினி ராணி ரங்கம்மாள் காவேரிக்கு விரைந்து தன்னுடைய விலையுயர்ந்த மூக்குத்தியை நீரில் எறிந்துவிட்டுத் தானும் மூழ்கி உயிர் நீத்தாள். தலைக்காட்டுக்கு அக்கரையில் உள்ள மாலங்கி என்ற இடத்தில் அவள் காவேரியில் மூழ்கியபோது தனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியிடும் வசையில் ஒரு சாபமிட்டவாறே உயிர் நீத்தாள்.
தலைக்காடு முழுவதும் மண்மூடிப் போகட்டும். மாலங்கி ஒரு சுழற்சுனையாகட்டும். மைசூர் மன்னர்களுக்குச் சந்ததி இல்லாமற் போகட்டும். என்பதுதான் தலைக்காடு சாபத்தின் சொற்கள். சமவெளிப்பரப்புத் தோற்றத்தை உடைய அந்தப் பகுதியில் தலைக்காட்டில் மட்டும் எங்கிருந்து இவ்வளவு மணல் வந்து சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமாகவே இருக்கிறது.
(இன்னும் வரும்) (தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 27.06.2021 அன்று வெளியானது)
டாக்டர் பாஸ்கரனின் பிறந்தநாள் இன்று என்பதை ராமகிருஷ்ணன் மூலமாக முகநூலில் தெரிந்துகொண்டேன். முதலில் அவரை வாழ்த்தி விடுகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். இந்த முறை மூன்று புத்தகங்கள் டாக்டர் பாஸ்கரன் எனக்குக் கொடுத்துள்ளார். அந்தப் புத்தகங்கள் முறையே கிணற்றுக்குள் காவிரி, படித்தேன் ரசித்தேன், சிறுவாணி சிறுகதைகள். என்னிடம் இந்த ஆண்டு சேர்ந்துள்ள புத்தகங்கள் குறைந்தது 30வது இருக்கும். இவற்றையெல்லாம் படித்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டுமென்று வைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்பது தெரியாது. ஆனால் கொஞ்சப்பக்கங்களையாவது படித்துவிட்டு எதாவது எழுதலாமென்று நினைக்கிறேன். முயற்சி செய்கிறேன். படித்தேன் ரசித்தேன் என்ற கட்டுரைப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன். இன்று பலரும் டாக்டர் பாஸ்கரன் எழுதியதைப் போல் புத்தகங்களைப் படித்து புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். நானும் இந்த முயற்சியில் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். நீங்களும் படிக்கலாம் படிக்கலாம் என்ற பெயரில் 2 தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன். 3வது தொகுதி தயார் நிலையில் உள்ளது. அதன்பின் வாசிப்போம் வாசிப்போம் என்ற பெயரில் ஒரு புத்தகம் வாசிப்பனுபவத்தை வைத்து எழுதியது. அதையும் கொண்டு வந்து விட்டேன். புத்தகங்களைப்பற்றிச் சொல்வது மூலம் நம் அறிவை வளர்த்துக் கொள்கிறோம். முகநூலில் பலர் இதுமாதிரி புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக்கொண்டு எழுதுவார்கள் என்று தோன்றுகிறது. இப்படிப் புத்தகங்களைப் பற்றி எழுதுவது நல்ல ஆரோக்கியமான முயற்சி. யார் எழுதினாலும் அது தொடர வேண்டும். சமீபத்தில் அ.கார்த்திகேயன் என்ற நண்பர் விருட்சம் வெளியீடாக வந்துள்ள பல நூல்களை வாங்கி ஒவ்வொன்றாக முகநூலில் தெரியப்படுத்துகிறார். ‘படித்தேன் ரசித்தேன்’ என்ற டாக்டர் புத்தகம் 50 புத்தகங்கள் பற்றியது. இந்த 50 புத்தகங்களையும் அவர் படித்து ரசித்ததை சிறப்பான முறையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். இன்னும் எத்தனையோ புத்தகங்களை அவர் அறிமுகப்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும். தொடர்ந்து இதுமாதிரி புத்தகங்களையும் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வேறு யாரும் கண்டுகொள்ளாத புத்தகங்களை அவர் எடுத்து எழுத வேண்டும். 21 கதைகள் கொண்ட ‘கிணற்றுக்குள் காவிரி’ என்ற பாஸ்கரின் சிறுகதைத் தொகுப்பு பவித்ரா பதிப்பகம் மூலம் சிறுவாணி வாசகர் மையம் மூலம் வந்துள்ளது. எல்லாப் பத்திரிகைகளிலும் இப்புத்தகத்திற்கான விமர்சனம் வந்துள்ளன. அதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. இத் தொகுப்புள்ள சில கதைகள் விருட்சம் இதழில் வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு கதைக்கும் பின்னால், மௌனமாய் நிற்கும் மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ, உணர்வுகளையோ என்னால் மறக்க முடியாது – மறுக்கவும் முடியாது என்று குறிப்பிடுகிறார் பாஸ்கரன். உண்மைதான். சிறுவாணி சிறுகதைகள் 2020 என்ற புத்தகம் சிறுவாணி வாசகர் மையம் – ரா.கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி 2020 என்ற பெயரில் 15 கதைகளை எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்., பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஜெ.பாஸ்கரன் அலுப்பில்லாமல் இம்மாதிரியான போட்டிகளில் கலந்து கொண்டிருப்பார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் போட்டியில் நம் கதைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ இல்லையோ எழுதுபவர்களை உற்சாகப்படுத்துகிற விஷயமாகத்தான் எனக்குப் படுகிறது. இத் தொகுப்பில் பஜ கோவிந்தம் என்ற பாஸ்கரின் கதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கப் பரிசு கிடைத்துள்ளது. டாக்டரின் இந்த மூன்று புத்தகங்களை முழுவதுமாகப் படித்துவிட்டு என் கருத்துக்களைப் பின்னால் தெரிவிக்கிறேன். டாக்டர் ஜெ. பாஸ்கரனுக்கு என் பிறந்த தின வாழ்த்துகள்.
ஒவ்வொரு வாரமும் நடத்தும் கவிதை நேசிக்கும் கூட்டத்தில் நான் கவிதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறேன்.
நான் அறிமுகப்படுத்துகிற கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையும் வாசிக்கிறேன். கவிதை நேசிக்கும் கூட்டத்தை ஒரு மாதத்தில் நான்கு விதமாய்ப் பிரிக்கிறேன். முதல் வாரம் எல்லோரும் கவிதைகள் வாசிக்க வேண்டும். இரண்டாவது வாரம் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். மூன்றாவது வாரம் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க வேண்டும்.
நாலாவது வாரம் கவிதையைக் குறித்து உரையாடல். இதுமாதிரி எங்காவது யாராவது கவி அரங்கம் நடத்துகிறார்களா? அப்படி நடத்திக்கொண்டிருந்தால் விபரம் தரவும். இந்த நான்கு வாரங்களிலும் நான் கவிதைப் புத்தகம் அறிமுகப்படுத்துவேன். கடந்த இரண்டு வாரங்களில் நான் அறிமுகப்படுத்திய கவிதைநூல்கள் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
முதல் கவிதைத் தொகுதி ‘சுனையில் நீரருந்தும் சிறுத்தையின் நாக்கு’ என்றப.கு.ராஜனின் மொழிபெயர்ப்புப் புத்தகம்.
அதிலிருந்து ஒரு கவிதை.
அமிரிதா ப்ரிதம் கவிதை சங்கடம்
இன்றைக்குச் சூரியன் ஏதோ சங்கடத்திலிருந்தது
அது ஒளியின் ஜன்னலைத் திறந்தது \
பின்னர் மேகங்களின் ஜன்னலை மூடியது
பின்னர் இருண்ட படிகளில் இறங்கிச் சென்றது
அடுத்த வாரத்தில் நான் அறிமுகப்படுத்திய புத்தகம்.
‘2000-2020 சிறந்த படைப்பாக்கங்கள்’ என்ற புத்தகம். கலைஞன் வெளியிடு. 7 தொகுப்பாசிரியர்கள் தொகுத்த புத்தகம்.
இந்தத் தலைப்புச் செய்தியை நாள் ஒரு தினசரியில் படித்தேன். திகைப்பு அடைந்து விட்டேன். எப்படி யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுக்க முடியும். இந்தத் திருட்டில் ஏடிஎம் கருவிகளைக் கொள்ளையர்கள் உடைக்க வில்லை.
பத்தாண்டுகளுக்கு முன் நான் ஒரு தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அங்கு ஒரு பெண் அலுவலர் நேர்மையானவர், பணி புரிவதில் நல்ல அனுபவமுள்ளவர் மீது ஒரு பழி. அவர் எப்போதும் ஏடிஎம்மில் பணத்தை வைப்பவர். கிடிக்குப்பிடி அலுவலகப் பணிகளுக்கிடையே பணத்தையும் ஏடிஎம்மில் வைத்துவிட்டு வந்து விடுவார். அவருடைய செயலில் எந்தத் தவறும், எப்போதும் ஏற்படாது.
அவர் ஒரு முறை வைத்து விட்டு வரும்போது 1லட்சம் ரூபாய் ஏடிஎம்மில் காணோம். தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிப்புத் துறையினர் ஓடி வந்து அவரைப் பலவாறு கேள்விகள் கேட்டுக் குடைந்துகொண்டே இருந்தார்கள். காமெரா பொருதியிருந்ததால் காமெரா மூலம் பார்த்தார்கள். பின் பணம் பட்டுவாடா செய்த சிப்பந்தியைப் பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை.
பணம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. எல்லோரையும் சந்தேகப் பட்டார்கள். யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று. எப்படிக் கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.
கடைசியாக ஒரு வழியாகத் தீர்மானம் ஆனது. அந்தப் பெண் அலுவலர் இனிமேல் ஏடிஎம் ப்ககம் போகக் கூடாது என்று.
அந்தப் பெண் அலுவலர் இழந்த பணத்தைக் கட்டவேண்டுமென்றும், அவருக்கு வரக்கூடிய இன்க்ரிமென்ட் ஒரு வருடம் கட் என்று தீர்ப்பளித்தார்கள். நேர்மையான அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்து வருந்தி, கிளை மேலாளரும், துணை மேலாரும் அந்த அலுவலருக்கு தன்னால் முடிந்த பங்கைக் கொடுத்தார்கள்.
என்னால் இதை மறக்கவே முடியாது. உடனே அந்த அலுவலரை அந்தக் கிளை அலுவலகத்திலிருந்து மாற்றி விட்டார்கள்.
ஒன்றுமே செய்யாத குற்றத்திற்கு அவருக்குக் தண்டனை கிடைத்தது. நேற்று செய்தித்தாளில் இந்த நூதனமான முறையில் திருடிச் சென்றதைப் பார்க்கும்போது, அந்த அலுவலர் ஞாபகம்தான் வந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பே இதுமாதிரி திருட்டு நடந்திருக்கும் அது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறதோ என்று தோன்றுகிறது.
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 57வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (26.06.2021) நடை பெற்றது. எல்லோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்கள். அதன் காணொளியின் பதிவு.
இந்தக் கவிதையில் கவிகுரலோன் மழை பெய்ததற்காக சந்தோஷப்படத் தோன்றவில்லை. ஏன் எனில் அவன் வீட்டு சாய்ந்த தென்னைமரங்களில் முதுகு நனையவில்லை. இந்தக் கவிதையில் பலர் தன்னைப் பற்றியே நினைத்துக்கொள்வார்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரா? இப்படிப் பல கேள்விகள் ஒரு கவிதையைப் படிக்கும்போது தோன்றுகிறது. கவிகுரலோன் ஒன்று நினைக்கிறார். வாசகன் இன்னொன்று நினைக்கிறான். சின்ன சின்ன வரிகளில் அதிகமாக நாரணோ ஜெயராமன் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதோ இன்னொரு கவிதை
சஞ்சாரம்
நாங்கள்
எங்கள் பிரச்சினைகளைப் பேசி
தீர்வு காணா நிலையில்””
எங்கள் நிழல்கள் பேசிக்கொண்டன”
எப்படித் தீர்வுகாண முடியும் பிரச்சனைகளால் ? அதற்காக நிழல்களை வம்பிககிழுக்கிறாரோ என்று தோன்றுகிறது.
பொதுவாக ஜெயராமன் கவிதைகளில் இயற்கையைப் பற்றி அவதானிப்பும், தத்துவப்போக்கும் எல்லா கவிதைகளிலும் பரவிக் கிடக்கின்றன. ஜெயராமனின் புகழ்பெற்ற கவிதைகள் பல உண்டு. ‘லெவல் கிராஸிங்’ அதில் ஒள்று.
லெவல் கிராஸிங்
இந்த
என்ஜினும் ஓர் எல்லையில்
மூச்சடங்கிவிடும்.
அன்றாடக் காரியம் முடித்த
எந்திரத் திருப்தியுடன்.
பேப்பரில் முகம் மறைத்து
பயணம் செய்யும் மாந்தர்
உறங்கப் போவர்
மூட்டையைப் பத்திரமாய்ச் சேர்த்த
நிம்மதியுடன்.
வெறும் தண்டவாள அதிர்வுகள்
சத்தை, குப்பை குவியலில் கண்ணாடித்
துகள் –
என்னில் வாழ்வு ஒளி
இந்தக் கவிதையில் ஒரு ரயில் பயணம் நடைபெறுகிறது. பத்திரமாக என்ஜினும் ஒர் எல்லைக்குப் போய் மூச்சடங்கி விடுகிறது.வெறும் அதிர்வுகளைக் கொடுக்கும் தண்டவாளம். சக்கை, குப்பை குவியலில் கண்ணாடித் துகளைச் சேர்க்கிறது. கடைசியில் ஒரு வரி எழுதி கவிஞர் முடிக்கிறார். என்னில் வாழ்வு ஒளி என்று.
இதில்தான் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறார். எல்லா அவதிகளையும் தாண்டி வாழ்வு ஒளிமயமாக இருக்கிறது.
சில இடங்களில் இவர் கவிதைகளில் வெளிப்படும் வைர வரிகளை வியக்காமலிருக்க . முடியவில்லை.
‘உயிர்’ என்ற கவிதையில்
‘ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்’
‘தவம்’ என்ற கவிதையில்
‘இமைசொடுக்க விழி மலர்ந்த’
இன்னொரு வரி,
‘அரைத் துஞ்சலில் எருமை.’
‘வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுப்பிற்குப் பின் கவிதைகள் எழுதுவதை விட்டு ஒதுங்கி விட்டார் ஜெயராமன். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் 2011ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை அவர் கவிதைகள் எழுதிக்கொண்டு வந்திருக்கிறார். அக் கவிதைகளை அவர் யாரிடமும் குறிப்பிடவில்லை, எந்தப் பத்திரிகைக்கும் பிரசுரம் வேண்டி அனுப்பவில்லை. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாரோணா ஜெயராமனின் கவிதைகள் முற்றிலும் வேறுபட்டவை..
அவற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.
‘கடியாரப் பிரக்ஞை’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.
வயோதிகத்தில்
மூதாட்டிக்கு,
மணிக்கொரு முறை சிறுநீர்,
ஒவ்வொரு முறையும்
‘பெட்பேன்’ வைத்து
அகற்றுகையில்
மணி என்னவென முனகுகிறாள்
அவஸ்தை நீள
காலம் நீர்க்காமல்
அவஸ்தை மட்டும் நீண்டு கொண்டிருக்கிறது
ஆனால் காலம் அப்படியே நீர்க்காமலிருக்கிறது.
திரும்பவும் சின்ன சின்ன கவிதைகள். மிகக் குறைவான வரிகள் கொண்ட கவிதைகள். யூகபாரம் என்ற கவிதை.
விழுந்த நொடியில்
நீர் முத்தின்
ஜாலத்தைப் போல்
காலத்தை
கணங்கணமாய்
கைக்கொள்
ஆனந்தக் கூத்தாடு
சூட்சுமமாய் நொடி எதையும் தவற விடாதே என்று அழுத்தமாய் இந்தக் கவிதை கூக்குரலாய் ஒலிக்கிறது. மரண சுதந்திரம் என்ற கவிதையைப் பார்ப்போம்.
உயிர் துறந்தாள்
அம்மா
92 வயதில்
உணர்ந்த துக்கமெல்லாம்
அயர்ச்சியெல்லாம்
அவள் பட்ட கஷ்டமோ?
இலேசானது மனசு,
எரியூட்டிய பின்,
ஆன்ம விடுதலையில்
அம்மாவிற்கு ஆன்ம விடுதலை அவள் மரணம் என்று முடிக்கிறார். ‘தோற்றுவாய்’ என்ற கவிதை ஒரு தத்துவ விசாரம்.
இதென்னப்பா?
மனிதர்கள் தாம் தோற்றுவித்த சிக்கலில்
வலிந்து கட்டி
மல்லுக்கட்டி
கூத்தடிக்கிறீர்கள்
பிரபஞ்ச வெளியில்
உன் இடமென்ன? என் இடமென்ன?
உன் காலமென்ன? என் காலமென்ன?
வியந்து, அரவணைத்து
வியாபிக்காமல்?
எங்கோ கொண்டு போய் விடுகிறது கவிதை. வியந்து, அரவணைத்துப் போகாமல் நாம் ஏன் மல்லுக்கட்ட வேண்டுமென்கிறார்.
தன் உள்க் குரலை அவர் பின்னாளில் எழுதிய கவிதைகளில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். இக் கவிதைகளைப் படிக்கும்போது வெளிப்படைத் தன்மை அழுத்தமாகத் தென்படுகிறது.
ஒரு நல்ல கவிதைத் தொகுதியைப் படித்த திருப்தி எனக்கு.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 20 ஜூன் 2021 வெளிவந்தது)
நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை.
தமிழில் எழுதியிருக்கும் அவருடைய கட்டுரையை இன்னொரு முறை யாராவது முயற்சி செய்து தமிழ் படுத்தினால் நன்றாக இருக்கும்.
அவர் எழுதிய இரண்டு இடங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
‘இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சமகால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன. காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜன வாதமாகியதும் ருசிகரமான காதல் கதைகளுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது.’ மேலே குறிப்பிட்டது பிரமிளின் வாசகங்கள்.
1976ல் இப்படி எழுதுவதுதான் ஒரு ஸ்டைல் போலிருக்கிறது. அதில் பிரமிள் கடுமையாக இயங்கிக் கொண்டிருந்தார்.
இந்தப் புத்தகத்திற்கு வைதீஸ்வரனும் முன்னுரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முன்னுரை 2018ல் வெளிவந்திருக்கிறது.
நிலை
அமர்ந்திருக்கும் வரப்பு. வரப்பின் மேல் சிலுக்கும் செடி அரக்குச் சிவப்பாய் ஒளிரும் மேற்குச் சிதறல்கள் அண்ணாந்த கண் தொலைவில் அதிசயிக்க வேகம் கொள்ளும் பறவைகள் வடப்புறத்தில் நீர்த்தடங்களாய் முயங்கிக் கிடக்கும் உருவங்கள், தொலைவில் மேயும் மாடு, கன்று. எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன. எங்கோ மூலையில் கட்டிப் போட்ட வீட்டு நாய் மட்டும் குரைத்துக்கொண்டேயிருக்கிறது.
எங்கோ மூலையில் கட்டிப் போட்ட வீட்டு நாய் குரைப்பதால் எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றனவா என்ற கேள்விக்குறி எழுகிறது. எல்லாவற்றையும் கவனிக்கிற மாதிரி கட்டிப்போட்ட வீட்டு நாயையும் கவனிக்கிறாரா?
(இன்னும் வரும்) (தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 20 ஜூன் 2021 வெளிவந்தது)
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 14வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் ஐராவதம், ஸிந்துஜா. வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். இக் கூட்டம் 25.06.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.