நடந்தாய் வாழி, காவேரி – 1

 


அழகியசிங்கர்


நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன். இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன். 23.06.2021 அன்று சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம். அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் – தி.ஜானகிராமனும்’ எழுதிய ‘நடந்தாய் வாழி, காவேரி’ என்ற புத்தகம் பற்றி கூட்டம்.

புத்தகம் படித்து எழுத வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். படிக்கப் படிக்கக் குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டே வந்தேன். முதலில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.இது ஒரு பயண நூல் என்பதால்படிக்கப் போரடிக்கவில்லை. அதனால் தொடர்ந்து படிக்க முடிந்தது.

இந்தப் புத்தகம் சிட்டி – தி.ஜானகிராமன்எழுதியது. 287 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் சிட்டியும் ஜானகிராமன் எந்தந்தப் பகுதிகளில் எழுதினார்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் குறிப்புகளை இங்குக் குறிப்பிடுகிறேன் :

– காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என்ற உண்மை தெளியத் தெளிய அவர்கள் மேற்கொண்ட பொறுப்பு சாதாரணமானதல்ல என்ற உணர்வு சிறிது தயக்கத்தையும் அளித்தது.

– மயிலாடுதுறையில் ஒரு கை காட்டியைப் பார்க்கிறார்கள். கோவலனும், கண்ணகியும் சென்ற சுவட்டில் புகாரிலிருந்து மதுரை வரை நடந்தே செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்படுகிறது.

– செயற்கைக் கோள்கள் சுக்ரனை வலம் வரும் இந்த நாளில் இது என்ன ஆசை? அவர்களுக்கே புரியவில்லை. அதனால் நடந்து செல்லாமல் நடையும் காருமாக சென்று காவேரியை தலையிலிருந்து கால்வரைப் பார்த்து வருகிறார்கள்.

– பூவர் சோலை மயிலால், புரிந்த குயில்கள் இசைபாட, தான் நிலை திரியாத் தண்டமிழ்ப்பாவை என்று இளங்கோ அனுபவித்த பூரிப்பை அவர்களும் அடைந்து கொண்டே சென்றார்கள்.

– சென்னையிலிருந்து குடகு நாட்டுத் தலைக் காவேரியைக் காணப் புறப்பட்ட அவர்கள் முதன் முதலாக வட ஆர்ச்சாட்டில் பூம்புகாரைப் பார்த்தபோது அவர்களுக்கு நெஞ்சு கொள்ளா வியப்பாக இருந்தது.

– முதலில் சென்னையிலிருந்து பெங்களூர் சாலைக்குப் போகிறார்கள்.

– தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த பாயம்பள்ளி என்ற இடத்தைப் பார்வையிடுகிறார்கள்.

– கி.மு 1500 முதல் கி.மு 500 வரை வாழ்ந்த கற்கால மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதற்காகத் தொல்பொருள் துறையினர் அரிய தடயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

– கி.மு 1500 முதல் கி.மு 1000 வரையிலான காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவர்கள்.

– மலைக் குன்றுகளில் அவர்களுக்கு உறைவிடமாக இருந்த பல குகைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

– காட்டை அழித்து நாடாக்க அவர்கள் செய்த முயற்சிகள் – வேட்டையாட கற்கோடலி கள், வில், அம்பு பயன்படுத்தியது தெரிந்தன.

– சமையலுக்குப் பயன்பட்ட பானை வகைகளின் சிதறிய துண்டு – பெண்களின் அணிகலங்கள். மண்ணலான பாசி மணிகள், அதேபோல் கற்காலமாகிய கி.மு 1000முதல் கி.மு 300 வரையிலான காலத்தில் வாழ்ந்த மக்கள் கையாண்ட கருவிகளும் கண்டு பிடித்தார்கள்.

முதலில் பெங்களூரிலிருந்து கொள்ளேகாலம் போய்ச் சேர்க்கிறார்கள். இருட்டில் சென்றதால் சிவசமுத்திரம் போக முடியவில்லை. மறுநாள் கொள்ளேகாலத்திலிருந்து சிவ சமுத்திரத்திற்குப் போகிறார்கள். சிவசமுத்திரம் அடர்ந்த காடு நிறைந்த ஒரு தீவு. பாலத்தைக் கடந்து தீவுக்குள் சென்றவுடன் பழைய அழகு நிறைந்த சிவசமுத்திரம் கிராமத்தைக் கண்டார்கள். அந்தத் தீவைச் சுற்றி காவேரி இரண்டு கிளைகளாகப் பிரிந்து வளைந்து வந்து, பார்சுக்கி, ககனசுக்கி என்ற இரு பெரும் நீர்வீழ்ச்சிகளாக இருநூறு அடி ஆழத்தில் பாய்ந்து மீண்டும் ஒன்றுகூடுகிறது. பல பிரம்மாண்டமான பாறை முண்டு குமிழியிட்டு, குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தாள் காவேரி.

அங்கிருந்து அவர்கள் ககனசுக்கி நோக்கிப் புறப்பட்டார்கள்.தீவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ககனசுக்கியை பார்சுக்கியின் மூத்த சகோதரி என்று கூறலாம். உயரம், ஓசை, பாயும் நீரின் பரிமாணம் எல்லாவற்றிலும் ககனசுக்கியே பெரியது. சுமார் மூன்று மைல் நீளமும் முக்கால் மைல் அகலமும் உள்ள சிவசமுத்திரம் தீவில் நான்கு கோவில்களும், ஒரு முஸ்லிம் சமாதியும் இருக்கின்றன. பார்சுக்கி நீர் வீழ்ச்சிக்குப் போகும் வழியில் தீவில் இருக்கும் நான்கு கோவில்களில் முக்கியமானவை சோமேஸ்வர சிவாலயமும், ரங்கநாத விஷ்ணு ஆலயமும் ஆகும்.

சோமேஸ்வரர் ஆலயம் பழமை நிறைந்த பெரிய அமைப்பு. விஷ்ணு ஆலயத்தில் ஜகன் மோஹன ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். இந்தக் கோவிலுக்குக் கோபுரம் இல்லை. காவேரி அம்மனின் விக்ரஹமும் இந்தக் கோவிலில் காணப்படுகிறது. மேலே காவேரியின் ஓட்டத்தை எதிர்நோக்கிச் செல்லும் அவர்களுக்கு சோமநாதபுரம் வரை வழிகாட்டி விளக்கிக் கூறுவதற்காக சிவசமுத்திரம் விஷ்ணு ஆலயத்தில் சேவை செய்து வந்த ஒரு பட்டரை அங்குள்ள துறவி ஏற்பாடு செய்து கொடுத்தார். சோமநாதபுரம் போகும் வழியில் அகண்ட காவேரிபோல் தோற்றமளித்த ஓரிடத்தில் ஒரு தாழ்வான அணைக்கட்டைப் பார்த்தார்கள். அந்த அணைக்கட்டிற்கு மாதவ மந்திரி கட்டே என்று பெயர்.

தொன்மை மிகுந்த தலைக்காடு சென்றடைந்தார்கள்.அங்குக் கீர்த்தி நாராயண சுவாமி என்ற கோவிலைப் பார்க்கச் சென்றபோது ஒரு கனவுலகத்திற்கே சென்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். கீர்த்தி நாராயணசாமி கோவில் மணற் குன்றுகளிடையே ஒரு பள்ளத்தில் புதைந்திருப்பதைக் கண்டார்கள். 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி திருமலை ராஜா என்பவர் ஒரு கொடிய நோய்க்கு உட்பட்டு இருந்ததால் தலைக்காட்டிற்கு வந்து வைத்தீஸ்வரர் கோவிலை வழிபட்டு சிகிச்சை தேடினார். அவருடைய மனைவி ரங்கம்மாள் என்பவள் அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீரங்கப்பட்டனத்திலிருந்து புறப்பட்டுத் தலைக்காடு வந்தாள்.

வரும்போது ஸ்ரீரங்கப்பட்டன நிர்வாகத்தை மைசூர் மன்னரிடம் ஒப்படைத்திருந்தாள். ரங்கமாளிடமிருந்த மிகுந்த மதிப்புற்ற மூக்குத்தி ஒன்றைக் கவர்ந்துகொள்ள மைசூர் மன்னர் திட்டமிட்டார், தம்முடைய சூழ்ச்சி பலிக்காமற் போனதும் அவர் தலைக்காட்டின் மீது படையெடுத்து வந்தார். போரில் திருமலை ராஜா இறந்து விட்டதும் பத்தினி ராணி ரங்கம்மாள் காவேரிக்கு விரைந்து தன்னுடைய விலையுயர்ந்த மூக்குத்தியை நீரில் எறிந்துவிட்டுத் தானும் மூழ்கி உயிர் நீத்தாள். தலைக்காட்டுக்கு அக்கரையில் உள்ள மாலங்கி என்ற இடத்தில் அவள் காவேரியில் மூழ்கியபோது தனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியிடும் வசையில் ஒரு சாபமிட்டவாறே உயிர் நீத்தாள்.

தலைக்காடு முழுவதும் மண்மூடிப் போகட்டும். மாலங்கி ஒரு சுழற்சுனையாகட்டும். மைசூர் மன்னர்களுக்குச் சந்ததி இல்லாமற் போகட்டும். என்பதுதான் தலைக்காடு சாபத்தின் சொற்கள். சமவெளிப்பரப்புத் தோற்றத்தை உடைய அந்தப் பகுதியில் தலைக்காட்டில் மட்டும் எங்கிருந்து இவ்வளவு மணல் வந்து சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமாகவே இருக்கிறது.

(இன்னும் வரும்)
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 27.06.2021 அன்று வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன