நான் இதுமாதிரி நடக்குமென்று நினைக்கவில்லை. நான் பழைய ஏடிஎம் கார்டுகளை என் கணக்கில் த்திருந்தேன். அவற்றை புது கார்டுகளாக மாற்ற வேண்டுமென்று நினைத்தேன்.

30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என் பழைய ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. புதுகார்டை வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.

சில தினங்களுக்கு முன்னால் ஒரு செய்தி வங்கியிலிருந்து வந்தது. உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வருமென்று. நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை.

இன்று காலை 9.24 மணிக்கு போன் வந்தது. இந்தியன் வங்கி ஏடிஎம் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் பழைய கார்டுகளை மாற்ற வேண்டுமில்லையா என்று. ஆமாம் என்று சொன்னேன். அப்படி பேசியது ஒரு பெண்.

உங்கள் பழைய கார்டு எண்ணை சொல்லுங்கள் என்றாள். நான் அவசரம் அவசரமாக இரண்டு பழைய கார்டு எண்களைச் சொன்னேன். எனக்கு புது ஏடிஎம் கார்டுகள் வாங்க வேண்டுமென்ற அவசரம். ஒரு கார்டு நவீன விருட்சம் கணக்கு. இன்னொரு கார்டு நானும் சகோதரனும் சேர்ந்த வைத்துள்ள கணக்குக் கார்டு.

உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதைச் சொல்லுங்கள் என்றாள்.

நீங்கள் யார் இந்தியன் வங்கிதானே என்றேன்

ஆமாம் என்றாள்.

என் செல் போனில் ஒரு செய்தி வந்தது.

அது இதுமாதிரி எழுதப்பட்டிருந்தது.

Rs. 9999.00 spent on POS/Ecom using IB Debit card on 02/07/2019 09.33 at Pay*WWW OLACABS Com Gurgaon from A/c XXX584636.

என்று.

உடனே போன் பேசியவள் அவசரப்பட்டு ஒடிபி எண்ணைக் கேட்டாள். நானும் என்னை ஏமாற்றுகிறாள் என்று புரியாமல் கூறிவிட்டேன். இது மாதிரி இரண்டு முறை நடந்தது.

அதன் பின் தான் எனக்கு சந்தேகம் வந்தது. என்னை ஏமாற்றுகிறாள் என்று. நான் உடனே மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கிக்குச் சென்று நான் இதைப் பற்றி வங்கி மேலாளரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.

அதற்குள் என் கணக்கிலிருந்து இரண்டு முறை பணம் டெபிட் ஆகிவிட்டது. நான் தாமதமாக சுதாரித்துக்கொண்டதால் ஐந்து முறை அதுமாதிரி பண்ணியிருந்தது தப்பித்தது.

நான், உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்.,

அருணா என்றாள்

என்னவாக இருக்கிறீர்கள் என்றேன்

ஏடிஎம்மில் என்றாள்.

எந்த இடம் என்றேன்.

தலைமை அலுவலகம் என்றாள்.

நான் ஏமாந்து விட்டேன் என்பதை மேற்கு மாம்பல கிளை அலுவலகத்திற்கு வந்தபிறது தெரிந்து கொண்டேன். நல்ல காலம் என்னுடைய இன்னொரு கணக்கிலிருந்து பணம் எடுக்கவில்லை.

நவீன விருட்சம் எணக்கே குருவி சேர்க்கிற மாதிரி சேர்கிற கணக்கு. நான் போடுகிற புத்தகங்களிலிருந்து வருகிற பணத்தை திரும்பவும் புதிய புத்தகங்கள் போட பயன் படுத்துவேன். அந்தக் கணக்கி7ல் உள்ள பணத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதில் புத்தகம் பத்திரிகை நடத்தப் பயன்படுத்துவேன். என் முட்டாள்தனம் நான் ஏமாந்து விட்டேன்.

இதை ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக.

யாராவது 6204482165 என்ற தொலைபேசியிலிருந்து போன் செய்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

நான் இதோ க்ரைம் ப’ôரஞ்சில் புகார் கொடுக்கப் போகிறேன். இந்தப் பணம் எனக்குக் கிடைக்காது என்ற முழுநம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் புகார் கொடுக்க உள்ளேன். பழைய கார்டு புது கார்டு குழப்பம் இருக்கிறது. புது கார்டு வேண்டும் என்கிற அவசரத்தால் நான் எமாந்து போனேன். இத்தனைக்கும் நான் வங்கியில் 33 வருடங்கள் பணிபுரிந்தவன்.

என் வங்கியில் என்னுடன் பணி புரிந்தவர்கள் இதை அறிந்தால் என்னை கிண்டல் செய்வார்கள். அவர்கள் கிண்டலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 115

அழகியசிங்கர்

கதவு

கல்பனா ரத்தன்

எங்கள் மூதாதையர் காலத்தில்
கதவுகள் வைக்கவில்லை.
எங்கள் பாட்டி காலத்தில்
கதவு இருந்தது மூடியே...
என் அம்மா காலத்தில்
நிழலான வெளியுலகம்
என் காலத்தில் அவ்வப்போது
வேடிக்கை பார்க்க அனுமதி
என் மகள் காலத்தில்
விரும்பிய இடத்தில்
கதவு வைக்க உரிமை.
ஆனாலும் எங்களிடம்
ஒருபோதும் இல்லை
கதவின் சாவி.    

நன்றி : மனம் உதிரும் காலம் – கல்பனா ரத்தன் – கல்பதரு பதிப்பகம், 7 சேர்மன் சண்முகம் சாலை, சிவகாசி – 626 123 – தொலைபேசி : 9791065284 – பக்கங்கள் : 96 – விலை : ரூ.100

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 114

அழகியசிங்கர்  

 டீ குடிக்கி

செல்வசங்கரன்

நல்லவேளை டீ குவளையை அடைந்துவிட்டார் 

ஒரு டீயைக் குடித்து முடிப்பதற்கு இவ்வளவு நேரமென 

ஒரு நேரம் கிடையாது 

அதன் சூடு போவதற்குள் குடித்து முடிப்பதே 

நல்ல டீ குடிக்கிக்கான சவால் 

சூடு போய்க்கொண்டிருக்கிறது பாதி முடித்துவிட்டார் 

முழுவதும் அதன் கதையை முடித்து அங்கிருந்து கிளம்ப, 

இன்னொரு மலையையும் கடக்கவேண்டும் 

ரம்மியமான மலை 

இருபத்தைந்து ஆண்டுகளாக கடந்துகொண்டுதானே 

இருக்கிறார் 

அவரது நாற்காலிக்குக் கீழிருந்து விரியும் 

பழைய பூ போட்ட கல் படியிறங்கி 

வரும் வளைவில் திரும்பி சிறிது தூரம் நடந்தால் 

அந்த டீயை அடைந்துவிடலாம் 

இங்கிருந்தென அங்கிருந்தென 

அதற்காக அவர் நடந்து போய் வருவதைப் பார்த்தால் 

போங்கடா மயிருங்களாயென்று ஒரு நாள் 

எல்லாவற்றையும் உதறி அப்படியே கிளம்பிடுவாரோ 

என யாருக்கும் வரலாம் 

அப்படியரு கூத்து அப்படியரு லயிப்பு 

இருக்கையிலிருந்து எழுந்து செருமியபடி

சமஸ்தானம் கீழிறங்க ஆரம்பித்துவிட்டால் 

அங்கு எதுவும் நடக்கலாம்.

நன்றி : கனிவின் சைஸ் – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636453 தொலைபேசி : 9894605371. பக்கங்கள் : 80 – விலை : 90

நீங்களும் படிக்கலாம் – 47  

ஆல்பெர் காம்யுவின் அந்நியன்..

அழகியசிங்கர் 

ரொம்ப நாட்கள் கழித்து இந்தப் புத்தகத்தைத் தூசித்தட்டிப் படிக்க ஆரம்பித்தேன். 1980 ஆண்டு க்ரியாவில் வாங்கியது.   எல்லாம் மறந்து விட்டது.  ஆனால் கொஞ்சமாக ஞாபகத்தில் அம்மா   முதியோர் இல்லத்தில் இறந்ததை ஒட்டி மெர்சோ என்பவன் ஊருக்குச் செல்வான் என்று படித்திருந்தேன்.

அந்த ஊரில் அம்மாவை சவ அடக்கம் செய்யும் வரை அம்மாவின் இறந்த தோற்றத்தைப் பார்க்க விரும்ப மாட்டான்.  ஏன்? இயல்பாக இருப்பான்.  அம்மா இறந்து விட்டாள் என்று அழ மாட்டான்.  

இப்படி மெர்சோ நாவல் முழுவதும் வருகிறான்.  அவன் காதலி மேரி அவனிடம் கேட்கிறாள்.  தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? என்று. அதற்கு மெர்சோ, திருமணம் செய்துகொள்வது கொள்ளாதது எல்லாமே ஒன்றுதான் என்கிறான்.

வேலை மாற்றமாக பாரிஸில் செல்ல விருப்பமா என்று கேட்கிறார் மெர்சோவின் முதலாளி.   மெர்சோ இதற்குப் பதில் அளிக்கும்போது அவனைப் பொருத்தவரை இப்போது இருக்குமிடத்தில் இருப்பதாகக் கூறுகிறான்.  உண்மையில் இது குறித்து அவனுக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.என்று தெரியப்படுத்துகிறான்.  ஏன்என்றால் இப்போதைய வாழ்க்கையில் எதுவும் மகிழ்ச்சி குறைவு இல்லை என்று நினைக்கிறான்.

மெர்சோ ஒரு அரேபியனை சுட்டு விடுகிறான்.  அவனுக்கு அந்த அரேபியனுக்க நேரிடையாக எந்தப் பகையுமில்லை.  மெர்சோவின் நண்பன் ரேமோனுக்கும் அரேபியனுக்கும்தான் பகைமை.   இதற்குக் காரணம் வைப்பாட்டியாக வைத்திருந்த பெண்ணை ரோமன் துர்த்தி விடுவதால் ஏற்படுகிறது.   அந்த அரேபியன் அவள் சகோதரனுக்கு வேண்டியவன் என்று கதை போகிறது.    

மெர்சோ சுட்டு விடுகிறான்.  இந்த இடத்தில் இப்படி எழுதப் பட்டிருக்கிறது.   ‘அதுவே நான் என் துரதிருஷ்டத்தின் வாயிற் கதவில் நான்கு முறை தட்டியதுபோலிருந்தது.’ ஆனால் கொலை செய்துவிட்டோமே என்ற பதைப்பு வெளிப்படவில்லை. அதுவும் தேவையில்லாத கொலை.  தவிர்க்கப்பட வேண்டிய கொலை.

கொலை செய்ததால் கைதாகிறான்.  இந்த நாவலில் இரண்டாவது பாகத்தில் எல்லாம் வருகிறது.  கொலை குற்றவாளி எப்படி தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்கிறான்.  சிறையில் சிகரெட் பிடிக்க முடியாது.  சிகரெட் பிடிக்காமல் தன்னை எப்படிப் பழக்கப்படுத்தி கொள்வது என்று தன்னை மாற்றிக்கொள்கிறான்.

மெர்சோ கடவுளை மறுப்பவன்.  இது அவனுக்கு எதிராக செயல்படுகிறது.  அவன் ஒரு முறை கூட கொடூரமாக கொலை செய்த தன் குற்றத்திற்காக வருத்தப்படவில்லை.  

இந்த நாவலில் முக்கியமான பகுதி பாதிரியாரைச் சந்திப்பது.  

பாதிரியார் அவனைப் பார்த்துப் பேசுகிறார் :”இல்லை அன்பரே, நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன்.  ஆனால் உங்களுக்கு அது தெரியவில்லை.  ஏனெனில் உங்கள் இதயம் இருளில் ஆழ்ந்திருக்கிறது.  நான் உங்களுக்காகப் பிரார்த்திப்பேன்,” என்றார். 

ஆனால் பாதிரியாரை திட்டி அனுப்பி விடுகிறான் மெர்சோ. மெர்சோ யார்?  அவன் ஏன் இதுமாதிரி நடந்து கொள்கிறான்?  அவன் காமுவின் மனசாட்சியா?  இது மாதிரியான கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது.  

மெர்சோவைப் பொறுத்தவரை மரணத்தண்டனையும் ஒன்றுதான் ஆயுள் தண்டனையும் ஒன்றுதான்.  இந்த நாவலைப் படிக்கும்போது ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும்.  அவ்வளவு நுணுக்கம் நிறைந்த நாவல். மெர்சோ எல்லாவற்றையும் வாங்கிக்கொள்பவனாக இருக்கிறான்.  அவனுக்கென்று எந்த அபிப்பிராயமும் இல்லை.  அம்மா இறந்து போய்விட்டாளென்று அறிந்தும் அவள் முகத்தைப் பார்க்க விரும்பாதவன், ஆனால் நாவலின் பல இடங்களில் அம்மாவை ஞாபகப்படுத்திக் கொள்கிறான்.  

பின்னுரையாக வெ ஸ்ரீராமன் அவர்கள் எழுதியதை ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டும். 

நான் ஒரு முறை இந்த நாவலை இப்போது படித்திருக்கிறேன்.  இன்னும் எத்தனை முறை படிப்பேன் என்று தெரியாது.  அல்லது எதாவது ஒரு பகுதியைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் படிப்பேன்.  

அந்நியன் – ஆல்பெர் காம்யு – பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் வெ ஸ்ரீராம். – வெளியீட்டாளர் : க்ரியா.

துளி : 56 – சிறுகதையை கொண்டாடுவோம்

அழகியசிங்கர்

கடந்த இரண்டாண்டுகளாக தினமணி சிவசங்கரி போட்டி வைத்து பரிசுக்குரியவார்களுக்கு நேரிடையாக பரிசு வழங்குகிறார்கள்.

சிறுகதைப் போட்டி வைக்கும் எந்தப் பத்திரிகையாவது இதுமாதிரி செயல்படுகிறதா?  இல்லவே இல்லை என்று சொல்ல வேண்டும். இன்று இரண்டாவது காட்சி அரங்கமானது.  பரிசுக்குரியவர்கள் எல்லோரையும் அழைத்து கவிக்கோ அரங்கத்தில் பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள்.   இதை வரவேற்க வேண்டிய ஒன்று என்று எனக்குத் தோன்றியது.  உண்மையில் சிறுகதைகளை கொண்டாடுகிறார்கள்.  

ஒரே ஒருவரைத் தவிர பரிசுக்குரியவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.  கவிக்கோ அரங்கம் முழுவதும் நிரம்பி விட்டது.  சிறப்புரை மாலன்.  பாராட்டுரை நீதியரசர் ஆர் மகாதேவன்.   போன ஆண்டு விட கதைகள் எண்ணிக்கை அதிகமாக வந்திருந்தாலும்,  குறிப்பிடும்படியான கதைகள் வரவில்லை என்றார் மாலன். ஆனால் உலகம் முழுவதும் கதை சொல்லும் முறையை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். 

தினமணிகதிர் ஆசிரியர் வைத்தியநாதன் பேசும்போது பள்ளி வகுப்பிலிருந்து எல்லாம் கதை சொல்லும் முறை வரவேண்டுமென்றார். 

நீதியரசர் ஆர் மகாதேவன் காஃப்கா, காம்யு, நபக்கோ என்றெல்லாம் கூறிவிட்டு, புதுமைப்பித்தன் கதையை உதாரணம் காட்டினார். 

போ.ன ஆண்டு பரிசுப்பெற்ற கதைகளைப் புத்தகமாக வானதி பதிப்பகம் கொண்டு வந்துள்ளது.  போன ஆண்டு பரிசுப் பெற்ற எழுத்தாளர்களில் பெரும்பாலோர் இந்த ஆண்டு பரிசுப் பெறவில்லை. 

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 3 

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் கடைசிப் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும்.

அழகியசிங்கர்


பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 2

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும்.

அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 1


பிரெஞ்சு இலக்கியமும் நானும்

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் முதல் பகுதியை வெளியிடுகிறேன். 

அழகியசிங்கர்

அன்புடையீர் 

வணக்கம்

முன்னோடி படைப்பாளுமைகளை கௌரவிக்கும் முகமாகவும், தீவிர இலக்கிய உணர்வாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் மணல்வீடு இலக்கியவட்டம் கடந்த இருவருடங்களாக இலக்கிய விருதுகள் வழங்கிவருவருகிறது. அதன் நீட்சியாக இந்த வருடம் அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருதுக்கு நவீன விருட்சம் சிறுசஞ்சிகை தெரிவு பெற்று இருக்கிறது . மேற்சொன்ன விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்து மூன்றாம் தேதி (03 – 08 -19) ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடில் அமைந்துள்ள ராணா விடுதி நிகழ்வரங்கத்தில் நடக்க இருக்கிறது. ஆர்வலர்களும் அன்பர்களும் நேரில் வந்திருந்து விழாவை சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன் .

இவண்

மு . ஹரிகிருஷ்ணன்

தெரிவுக்குழு

செ. ரவீந்திரன்

சுதாகர் கதக்

விவேகானந்தன் ஐ . எப் . எஸ்

நக்கீரன்

குறிப்பு

விருது ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் தொகையும், சான்றிதழும் நினைவு பரிசொன்றும் உள்ளடக்கியது . மாற்றத்திற்குட்டபட்ட விழா நிகழ்ச்சி நிரல் இத்துடன்.

மணல்வீடு இலக்கிய வட்ட நிகழ்வு – 10

நிகழ்விடம் – ராணா விடுதி நிகழ்வரங்கம் – சூரம்பட்டி நான்கு ரோடு – ஈரோடு

நாள் – 03 – 08 – 2019

நேரம் – காலை பத்து மணிக்கு

அமர்வு – 1

சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருது வழங்கும் நிகழ்வு

அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருது

-நவீன விருட்சம் – ஆசிரியர் – அழகிய சிங்கர்

நிகழ்வில்

நாஞ்சில் நாடன் – பிரம்மராஜன் – மோகனரங்கன் – ஷா அ ந. விச்வநாதன் கமலாலயன் பிரவீன் பஃ றுளி

நன்றியுரை – மு.ஹரிகிருஷ்ணன்

தொடர்புக்கு

இர.தனபால்

9677520060 – 9894605371

No photo description available.

அன்புடையீர்,

வணக்கம்.

நான் அமெரிக்கா சென்றதால் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் மார்ச்சு, ஏப்ரல் மாதங்கள் நடத்தப்படவில்லை.   மே மாதம் திரும்பவும் வந்துவிட்டேன்.  ஆனால் கடுமையான வெயில் நடத்தவிடவில்லை.  இதோ ஜøன் மாதம் 15ஆம் தேதி கூட்டம்.  இது 47வது கூட்டம்.  மூகாம்பிகை காம்பளெக்ஸில்.  அவசியம் எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இந்த முறை  செவாலியா விருதுபெற்ற வெ ஸ்ரீராம் அவர்கள் பேசுகிறார்.  இவர் நேரிடையாக பிரஞ்ச் மொழியிலிருந்து மொழி பெயர்த்துள்ளார்.  அவருடைய அனுபவத்தை கூறுகிறார். வரவும. 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு –  47

        தலைப்பு  :   பிரெஞ்சு இலக்கியமும் நானும்

சிறப்புரை :   செவாலியா விருதுபெற்ற வெ ஸ்ரீராம் 

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்

     மூகாம்பிகை வளாகம்

     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே

     ஆறாவது தளம்

      மயிலாப்பூர்

     சென்னை 600 004

தேதி 15.06.2019 (சனிக்கிழமை)

நேரம்  மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : மொழிபெயர்ப்பாளர்

அன்புடன்

அழகியசிங்கர் 

9444113205