24வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் – மழை என்ற தலைப்பில்

அழகியசிங்கர்

வணக்கம்.

வரும் வெள்ளி (06.11.2020) அன்று நடைபெற இருக்கும் சூம் மூலமாகக் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் மழை என்ற தலைப்பில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைக்கிறேன்.. நீங்கள் எழுதிய தலைப்பாகவோ அல்லது வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளையோ நீங்கள் வாசிக்கலாம்.

வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள்.

சிறப்புரை வழங்குபவர் : கவிஞர் க.வை.பழனிசாமி அவர்கள். ‘தேவதச்சன் நின்று பார்க்கும் இடம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.

கூட்டம் மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது.

24வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் – மழை என்ற தலைப்பில் Time: Nov 6, 2020 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88290587812?pwd=NFZNbTRWbmlIMU1KdjVxTXVwbnh1Zz09

Meeting ID: 882 9058 7812

Passcode: 670293

அடடா என்று சொல்லிக் கொண்டேன்

அழகியசிங்கர்

2017ஆம் ஆண்டு மா அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் . சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்துகொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று சொன்னதில்லை. முதுமையில் அவர் கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். 
 மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி நான் பீச் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கி எதிரில் உள்ள தேசிய வங்கிக்குச் செல்வேன். மின்சார வண்டியில் பயணம் செய்யும்போது மா அரங்கநாதனும் மின்சார வண்டியில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுமாதிரியான தருணங்களில் நானும் அவரும் உரையாடிக்கொண்டிருப்போம். அவர் முன்றில் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தார். நான் விருட்சம் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முன்றிலும் விருட்சமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒரே அச்சு. ஆதிமூலம் லட்டரிங். முன்றில் வந்தவுடன் விருட்சம் வந்துவிடும். ஒரே அச்சகத்தில் இரண்டும் அச்சிடப்படும். பத்திரிகைகளின் உள்ளே வித்தியாசமான பக்கங்கள். 


 மா அரங்கநாதன் அரசின் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் தி நகரில் ஒரு இடத்தில் முன்றில் என்ற பெயரில் புத்தகம்/பத்திரிகை விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்த இடத்தில் எல்லோரும் சந்திப்போம். தூய வெண்ணிற ஆடைகளுடன் மா அரங்கநாதன் காட்சி அளிப்பார். நான் பல எழுத்தாளர்களைக் கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் மா அரங்கநாதனை நான் அப்படிப் பார்த்ததில்லை. அந்தக் கடை வைத்திருந்ததால் பெரிய லாபமே வராது. ஆனால் புத்தகங்கள் பத்திரிகைகள் விற்று ஒழுங்காகப் பணம் கிடைத்துவிடும். இப்படி பலமுறை பல சந்தர்ப்பங்களில் பார்த்துப் பேசியிருக்கிறேன். 

 கடைசியாக அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தடம் பத்திரிகையில் அவரைப் பற்றி பேட்டி ஒன்று வந்திருந்தது. அது குறித்து நான் சொன்னபோது அவருக்கு அது தெரியவில்லை. அந்தப் பத்திரிகை பாண்டிச்சேரி போய்ச் சேர்வதற்கு முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சிறுவனின் குதூகலத்துடன் அவர் அந்தப் பேட்டியைப் பற்றி என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.

 ‘திரிசடை’ என்ற கவிஞரின் கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு விருட்சம் நூலகத்திற்கு வந்தேன். நான் கிட்டத்தட்ட 400 கவிதைப் புத்தகங்களை நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறேன். ஏன் 500 கூட இருக்கும். புத்தகம் வைத்திருக்கும் ஸ்டீல் அலமாரியின் அடித்தட்டில் ஒரு புத்தகம் எதிர்பாராத விதமாக என் கண்ணில் பட்டது. ‘மா அரங்கநாதன் படைப்புகள்’ என்ற புத்தகம்தான் அது. அதைப் பார்த்தவுடன் அடடா என்று தோன்றியது.

 என்னமோ அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை மா அரங்கநாதன் ஞாபகமாய்ப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன். 1021 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. அந்தக் காலத்தில் சிறு பத்திரிகையில் ஒரு கதை வந்தால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படியே வந்தாலும் படிப்பவர்கள் யார் என்றும் தெரியாது. அப்படியே படிப்பவர்கள் இருந்தாலும், வாய்திறந்து எழுதுபவரைப் பாராட்டவும் மாட்டார்கள். இப்படித்தான் மா அரங்கநாதன் கதைகள் பல வந்திருக்கின்றன. ஆனாலும் அவர் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளர்தான். 


 அவர் மொத்தப் படைப்புகள் அடங்கிய இத் தொகுதியில் அவருடைய ‘எறும்பு’ என்ற சிறுகதையைப் படித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போது எறும்பு பற்றி என்ன கதை எழுதியிருக்க முடியும் என்று யோசித்துத்தான் படித்தேன். ஒரு எறும்பு எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வதைப் பற்றிய கதையா? அதாவது எறும்பு இன்னொரு இடத்திற்குப் போனாலும் அங்குள்ள எறும்பு கூட்டத்துடன் எளிதாகக் கலந்துகொண்டு விடுவதாக எழுதி உள்ளார். காலம் காலமாகப் பயன்படுத்தப்படும் பழமொழிகளின் அபத்தங்களைப் பற்றியும் கதை சொல்கிறது. 


 பின் இக் கதை சொல்லி நெல்லையிலிருந்து ரயில் பயணம் தொடங்கி பட்டிணம் போகிற அவதியை வெளிப்படுத்துகிறான். அங்கு சில நாட்கள் தங்கி விட்டுத் திரும்பவும் ஊருக்குக் கிளம்புகிறான். அங்குள்ள எறும்பு ஒன்று அவன் வேட்டியில் ஏறி இருந்தது என்று முடிக்கிறார். இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது. குறிஞ்சி நிலம் ஏற்பட்டு விவசாயம் மலராத காலத்திலேயே தோன்றிய அந்த மொழியில் அவன் பேசி பதிலையும் பெற்றாலும் புரியாத நிலை. அப்போதே தோன்றி மறைந்தது அந்த வெறுப்பு என்று முடிக்கிறார். 

இந்தக் கதையை முடிக்கும்போது, இது எறும்பைப் பற்றிய கதையா அல்லது எறும்பை முன்னிறுத்திக் கதைசொல்லியின் கதையா என்பது யோசிக்க வேண்டி உள்ளது. வழக்கம்போல மா அரங்கநாதனின் நுணுக்கம் மிகுந்த கதை. இன்னொரு இடத்தில் ஆசிரியர் கூற்று வெளிப்படுகிறது. ‘பிறபொக்கும் எல்லாம் உயிர்க்கும் சொன்னவரா மனுதர்ம சாஸ்திரப்படி நிற்க என்று சொல்லுவார். வேடிக்கைதான். இது பரிமேலழகர் அருளிச் செய்த உரை. அவர் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர். நிற்க.
.’ எப்படி எறும்பு வேட்டியில் ஒட்டிக்கொண்டதோ அதேபோல் என் நினைவில் மா அரங்கநாதனின் கதையும் ஒட்டிக்கொண்டு என்னைத் திரும்பத் திரும்பப் படிக்க வைத்துவிட்டது. அடடா என்று சொல்லாமல் என்ன சொல்வது. 
 (இன்று மா.அரங்கநாதன் பிறந்தாள். அவர் ஞாபகமாய் நான் 15.4.20018 அன்று எழுதிய கட்டுரை)

வரிகள்

அழகியசிங்கர்

    எழுதிய வரிகளில்
    இரண்டாவது வரி
    தாளிலிருந்து தப்பி
    குதித்து ஓடிவிட்டது
    அதைப் பிடிக்க முடியவில்லை
    மிரண்டு விட்டதாகச் சொன்னார்கள்
    ஆறாவது வரியோ
      டி       து      டி     த்
    கு  த்  கு  து
    கவிதை எழுதும்
    கவிஞரைப் பார்க்கச் சென்றுவிட்டது
    எட்டாவது வரி
    தற்கொலை செய்துகொண்ட
    கவிஞன் பேரைச் சொல்லி
    தற்கொலை செய்துகொண்டது
    சில வரிகள்
    புத்தி குழம்பிப்போய் சோர்ந்து வீழ்ந்தன
    தற்செயலாய்
    விபத்தில் சிக்கிய வரிகள்
    ஆபத்தாய் மருத்துவமனையில் படுத்துக்
                       கிடந்தன
    இன்னும் சில வரிகளுக்குக்
    கிழடுத் தட்டிப்போய்விட்டன
    மிஞ்சிய வரிகள்
    தானே இடம் மாற்றிக்கொண்டன
    எல்லா வரிகளும்
    கவிதை செத்துவிட்டதாய் ஓலமிட்டன.

                                          ((1993ல் எழுதிய கவிதை)

ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை

ஒரு கதை ஒரு கருத்து

அழகியசிங்கர்


தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் எதையாவது எடுத்துப் படித்துப் பார்க்கலாமென்று அகப்பட்ட கதை ஆறுதலகாதல் என்ற பத்திரிகையின் ஆண்டு மலரில் 1953ல் எழுதப்பட்ட கதை இது.
இந்தக் கதை ஆரம்பத்திலேயே மனைவியை விட்டுப் பிரிந்த கணவனைப் பற்றிச் சொல்கிறது. தனிக்குடித்தனம் போக வேண்டுமென்று நினைக்கிறான் சங்கர். ஆனால் அது முடியவில்லை. 6 மாதமாக மனைவியைப் பிரிந்து இருக்கிறான்.ஒரு வீட்டில் ஒரு அறையில் அவனும் நண்பன் கோபாலுடன் குடியிருக்கிறான். அவன் மனைவி பிரசிவித்த முதல் குழந்தையுடன் சென்னையில் தனிக் குடித்தனம் நடத்தத் திட்டமிடுகிறான். ஆனால் அவ்வளவு சுலபமாக அது நடக்கவில்லை. அவளையும் குழந்தையையும் ஊரில் விட்டு வைத்திருக்கிறான்.ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து கடிதத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான். குடித்தனம் செய்யும் பெண்ணுக்குக் கடிதம்
எழுதுவதென்றால் கல்யாணம் செய்கிறதுபோல. கை ஒழிந்து, குழந்தையைத் தூங்கச் செய்து….ஒவ்வொரு கடிதத்திலும் அவள் குழந்தையைப் பற்றி எழுதி வருகிறாள். மூன்று வாரம் முன் அவன் ஊருக்குப் போனபோது குழந்தை தவழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் உட்காரத் தெரியவில்லை.
அவள் கடிதம் வந்தபோது குழந்தைக்கு உட்கார தெரிந்து விட்டது. பிடித்துக்கொண்டு நிற்கிறது என்று எழுதியிருந்தாள். குழந்தைகள் எவ்வளவு விரைவாக வளர்கின்றன.
புழுக்கமான புழுக்கம். கோட்டுக்குள் கசகசவென்று பனியனும் சட்டையும் முதுகோடு ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ÷ற்குப் போவதற்கும் வீட்டிற்கு வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம். கதாசிரியர் இதை விவரிக்கும்போது நமக்கும் அந்த உணர்வு ஏற்பட்டு விடும் போல் தோன்றுகிறது.
இது வழக்கமாக ஆபீஸ் போகும் மனிதனின் கதை. தினமும் அவன் வரும்போது லெவல் கிராஸிங் மணி அடிக்கும். அப்புறம் இப்படியும் அப்படியுமாக தடதடவென்று இரண்டு ரயில்கள் ஓடிப்போகிற வரைக்கும் காத்திருக்க வேண்டும்.
இன்று வித்தியாசமாகக் கேட் திறந்திருந்தது. அவசரம் அவசரமாக சங்கர் கேட்டைக் கடந்து வந்து விடுகிறான். வீட்டு மாடி ஏறிப் போகும்போது, வீட்டுக்காரன் குழந்தை கூப்பிட்டு சாக்லெட் கேட்கிறது. “யே பேசாமல் இருடா,” என்று குழந்தையின் தாயார் கூறுகிறாள். ஒரு நாளும் அவள் இப்படிச் சொன்னதில்லை.
கோட்டுப் பையிலிருந்து ஒரு சாக்லெட் எடுத்துக் கொடுக்கிறான் சங்கர்.
மெடிக்கல் காலேஜ்ஜில மாணவனாக இருந்த கோபால் அவனுக்காகக் காத்திருக்கிறான்.”கெட்ட செய்தி வந்திருக்கிறது” என்று ஒரு கடிதத்தை சங்கரிடம் கொடுக்கிறான்.
அது ஒரு கார்டு. . மேலே தஞ்சாவூர் என்று எழுதியிருந்தது. பஞ்சாபகேசன் என்ற நண்பன் எழுதியிருந்தான். போனவாரம் வந்து சங்கரின் சித்தப்பா வந்திருந்து அவனுடைய மனைவியையும் குழந்தையும் அழைத்துப் போயிருக்கிறார்கள். தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு அழைத்துப் போயிருக்கிறார். போன இடத்தில் குழந்தைக்கு உக்கிரமான அம்மை போட்டு குழந்தை இறந்து விட்டது. சங்கரின் அப்பாவிற்கு இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. குழந்தை இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டது. இந்தத் துக்கத்தை அவர்கள் எழுதக்கூடாது என்று பஞ்சாபகேசன் என்ற நண்பன் எழுதியிருக்கிறான்.இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் பெரிய அதிர்ச்சியாக இருந்தது சங்கருக்கு.
கதாசிரியர் இந்த இடத்தில் இப்படி வர்ணிக்கிறார். நாலைந்து தடவை வாசித்தான். பிறகுதான் புரிந்தது. செய்தி மனதில் பதிந்தது உதட்டைப் பல்லால் படித்தான். நெஞ்சை வலித்தது.
அவன் நண்பன் கோபால் சொல்கிறான். “சங்கர் சட்டையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு வாங்க. தண்ணியிழுத்து விடறேன்.”
அவன் குளிக்கும்போது சொட்டச் சொட்ட நனைந்து விடுகிற சட்டைத் துணிகளை அவிழ்த்து விடச் சொல்கிறது ஒரு குரல் ஜன்னலிருந்து . பிழிய வேண்டாமென்று கட்டளை இடுகிறது. வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் அவனுக்கு இந்தக் குரல் திகைப்பைக் கொடுத்திருக்கும். அறைக் கதவைப் பூட்டிவிட்டு அவனை வெளியே அழைத்துப் போகிறான் கோபால்.
அவன் மனைவி கமலி சின்னஞ்சிறு பெண். எப்படி இந்தத் துக்கத்தைத் தாங்குவாள் என்று கவலைப் படுகிறான்.
கிரிபத் ரோடு முழுவதும் அழுதுகொண்டே வருகிறான் சங்கர். அவனை கோபால் சமாதானப் படுத்துகிறான். அவனை கோபால் உஸ்மான் ரோடில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போகிறான். கோரமான பசி. எல்லாவற்றையும் வாங்கிச் சாப்பிடுகிறான் சங்கர்.
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் சங்கரிடம் ஒன்று சொல்கிறான் கோபால் அவனுடைய அம்மா கிணற்றடியில் சறுக்கி விழுந்துவிட்டதால் அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமென்கிறான் கோபால்.கோபால் எவ்வளவு நல்ல மனிதன் இதைச் சொல்ல எவ்வளவு தயங்குகிறான் என்று நினைக்கிறான்சங்கர். அவன் மீது அவனுக்கு அன்பு பெறுகிறது.
அவனைத் தனியே சென்று விட்டு கோபால் சென்று விடுகிறான். சங்கர் உடனே அறைக்குச் செல்ல விரும்பவில்லை. அவன் குழம்பிப் போயிருக்கிறான்.ஒன்றும் புரியாமல் கோபதி நாராயணசாமி தெருவில் நடக்கிறான். அப்போது யாரோ கூப்பிடுவது கேட்கிறது. வீட்டுக்காரர்.
அவர் துக்கம் விசாரிக்கிறார். “என்ன சார் இது, வைசூரியில் யாராவது இறந்து போவார்களா? பதமா அப்படியே இடிஞ்சு போயிட்டா. எனக்கு ஒண்ணும் சொல்லத் தோன்றவில்லை,” என்றார்.
சங்கர் அவர் பேச்சைக் கேட்டதும் அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது. வீட்டுக்காரர் சாப்பிடக் கூப்பிடுகிறார்.
சங்கர் முதலில் மறுத்து விடுகிறான். வீட்டுக்காரர் ரொம்பவும் தொந்தரவு செய்தவுடன் சரி என்கிறான்.
“சார் இப்ப எங்கே போறீங்க?”
இப்படியே போயிட்டு வருகிறேன்” என்கிறான் சங்கர்.ஜாக்கிரதையாகப் போகும்படி எச்சரிக்கிறார் வீட்டுக்காரர்.
“பாண்டிபஜார் பக்கம் போக வேண்டாம். கூட்டம் அதிகம்,” என்று எச்சரிக்கிறார்.
இந்த இடத்தில் கதாசிரியர் ஒன்றை வெளிப்படுத்துகிறார்.
‘மனிதருக்கு எவ்வளவு கவலை. சோகம் அபூர்வமான ஒரு அனுபவம். சோகப்படுகிறவன் மற்ற மனிதர்கள் அனைவரினும் உயர்ந்து விடுகிறான். அதன் காலடியில் மற்ற உணர்ச்சிகளும் ரணங்களும் விழுந்து அடிமைப்பட்டு விடுகின்றன.’
இந்த இடத்தில் ஒரு காட்சியை வெளிப்படுத்துகிறார். குழந்தை இருக்கும்போது அவன் ஊருக்குப் போகிறான். அவன் மனைவி தனியாக இருக்கிறாள்.
“நீ பூனைக்குட்டி மாதிரி இருக்கே. அதுக்குள்ளே ஒரு குழந்தை உனக்கு,” என்கிறான்.
உடனே அவள், ஏன் என்னைப் பார்த்தால் அம்மா மாதிரி இல்லையா? நீங்களும்தான் துளியூண்டு பள்ளிக்கூடத்துப் பையன் மாதிரி இருக்கேள் என்கிறாள்.
தேனாம்பேட்டை வரை வந்து விடுகிறான் சங்கர். அவனுடன் ஓட்டலில் சாப்பிடுகிறவர், “என்னசார் எண்ணெய் தேய்ச்சிக் குளிக்சிங்களா?” என்று விசாரிக்கிறார்.
தேனாம்பேட்டை வந்ததை உணர்ந்தவுடன் வீட்டிற்குத் திரும்புகிறான் சங்கர்.
அவன் அப்பா குழந்தை இறந்ததைக் குறித்து பெரிதும் கவலைப்படுவார் என்று நினைக்கிறான் சங்கர். சித்தப்பா பதறிப் போயிருப்பார்.
இருட்டி வெகு நேரமாகிவிட்டது. வாசல் கேட் உள்ளுக்குள் தாளிட்டிருந்தது.
வீட்டுக்காரரின் மனைவி வந்து கதவைத் திறக்கிறாள். வீட்டுக்காரர் டூட்டிக்கு மீனம்பாக்கம் போயிருப்பதாகச் சொல்கிறாள்.
அவள் சாப்பிடக் கூப்பிடுகிறாள். அவன் இப்போது வேண்டாமென்று மறுத்து விடுகிறான்.
கோபால் கொடுத்த சாவியைக் கொடுக்கிறாள்.
ஊருக்குப் போக முடியாத நிலையை எண்ணி ஒரு கடிதம் எழுதுகிறான். கடவுளாகப் பார்த்துக் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார் என்று அவனுடைய சித்தப்பாவிற்குக் கடிதம் எழுதுகிறான்.கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறான். பிறகு லைட்டை அணைத்துவிட்டு மீண்டும் படுக்கை.
“சாப்பிட வரவில்லையா?” என்று பத்மா வந்து கேட்கிறாள். அவன் திகைக்கிறான்.
“யாரு நீஙகளா?” என்று கேட்கிறான்.
“மணி பன்னிரண்டு ஆகப் போகிறது. சாப்பிட வரவில்லையா?” என்று கேட்கிறாள்.
பசியில்லை என்கிறான் சங்கர்
“எனக்காகக் கொஞ்சம் சாப்பிடுங்களேன். எனக்கு மட்டும் வருத்தமில்லையா?” என்கிறாள் பத்மா.அவள் விசும்பி விசும்பி அழுகிறாள்.
அவனும் அழுகிறான். அப்படியே படுக்கையில் சாய்ந்து விடுகிறான்.
பத்மாவிற்கும் அப்படிப்பட்ட ஒரு அனுபவம் இருக்கிறது. அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்து வைசூரி கண்டு இறந்து விட்டதாகக் கூறுகிறாள். அதனாலதான் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றும். அவனைப் பார்த்து ஆறுதல் படுத்த வேண்டுமென்று நினைக்கிறாள்.
அவள் அருகே உட்கார்ந்தாள். அவள் புடவைத் தலைப்பால் அவன் கண்களைத் துடைத்தாள். தலையைக் கோதி விட்டாள்.
இந்தக் காட்சியின் இறுதியில் கதாசிரியர் இப்படி வர்ணிக்கிறார். அவன் கைகளுக்குள் அவள் உடல் துவண்டு விழுந்தது. பிரிக்க முடியாத அழைப்புப் போலிருந்தது மனத்தின் சூன்யம் சூடு நிரம்பி பால் பாத்திரம் போலப் பொங்கி வழிந்தது.
இந்த இடத்தை விவரிக்கும்போது தி.ஜா விரசமில்லாமல் எழுதி இருக்கிறார. பொதுவாக தி ஜா அவருடைய எல்லாக் கதைகளிலும், நாவல்களிலும், பெண்ணிடமிருந்து ஆணிற்குத் தாபம் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். அவருடைய நாவல்களான ‘மோக முள்,’ ‘அம்மா வந்தாள்,’ ‘மரப்பசு’ என்று எல்லா நாவல்கள் மூலம் இதைக் குறிப்பிடலாம்.
இந்தக் கதையிலும் இதைத் தெரியப்படுத்துகிறார். ‘ஆறுதல்’ எப்படி ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் தாபமாக மாறுகிறது என்பதுதான் இந்தக் கதை
திரும்பவும் பதமா சாப்பிட கூப்பிடுகிறாள். தனக்கும் பசிக்கிறது என்று சொல்கிறாள். “நீ சாப்பிடவில்லையா? என்று கேட்கிறான்.
இல்லை உங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன் என்கிறாள் பத்மா.
அப்பவே சொல்லக் கூடாதா என்று அவன் எழுந்து கொள்கிறான்.
தலையை முடித்துக்கொண்டு எழுந்தாள் அவள். அவனுக்கும் வயிறு பசித்தது.
துக்க உணர்வு இரண்டு பேர்களையும் நெருங்கிப் பழக வைக்கிறது. திருமணமான பெண் இன்னொரு திருமணஆன ஆணுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளுவதை மிகைப்படுத்தாமல் எழுதப்பட்டிருக்கும் கதை இது. சாதாரண இயல்பான நிகழ்ச்சியாக இது ஏற்படுவது போல் தோன்றுகிறது.
1953 ஆம் ஆண்டு இந்தக் கதையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். இது உண்மையாக அவர் நண்பருக்கு ஏற்பட்ட சம்பவம் என்று விவரிக்கிறார் ஆசிரியர் குறிப்பு என்ற பெயரில். ஆசிரியர் குறிப்பு கதை இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது அவசியமாக என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஜானகிராமன் ஆண் பெண் உறவைக் கொஞ்சம் கூட ஆபாசமாக விவரிக்கவில்லை. காமம் இயல்பாக ஏற்படுவதுபோல் கதையைக் கொண்டு போகிறார்.
‘தொகுக்கப்படாத கதைகள்’ என்ற பெயரில் தி.ஜானகிராமன் கதைகளைக் கண்டறிந்து ‘கச்சேரி’ என்ற பெயரில் காலச்சுவடு ஜனவரி 2020ல் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளது.’
(திண்ணை முதல் இணைய வார இதழில் நவம்பர் 1, 2020ல் பிரசுரமானது)

23வது நிகழ்வாக (30.10.2020) விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

1. தேவேந்திர பூபதி 2. ஷாஅ 3. கண்டராதித்தன் 4 . வத்சலா 5. பானுமதி ஆகியோர் சிறப்பாக கவிதைகள் வாசித்தார்கள்.

கவிதை ஒரு நிலைக்கண்ணாடி

அழகியசிங்கர்

கவிஞர் தேவேந்திர பூபதி கவிதை ஒரு நிலைக்கண்ணாடி என்ற தலைப்பில் உரையாடிய ஒளிப்பதிவை இங்கு பகிர்கிறேன்.

23வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

” வணக்கம்.


 நாளை நடைபெற இருக்கும் சூம் மூலமாகக் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் கீழ்க்காணும் கவிஞர்கள் கலந்துகொள்ள இசைந்துள்ளார்கள். அவர்கள் பெயர்கள் வருமாறு:


 1. தேவேந்திர பூபதி  2. ஷாஅ  3. கண்டராதித்தன்  4 . வத்சலா   5. பானுமதி 

வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள்.
நாளை (30.10.2020)  மாலை 6.30க்கு கவிதை வாசிப்புக் கூட்டம்
கவிஞர் தேவேந்திர பூபதி   ‘கவிதையெனும் நிலைக்கண்ணாடி’  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்துகிறார்.  கவிதைகளை ரசித்துக் கேட்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். 


Topic:23வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம்Time: Oct 30, 2020 06:30 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/86752404512?pwd=aUxqV0VBU0s3aS9KNkRjMXlQbzhqdz09
Meeting ID: 867 5240 4512Passcode: 621962

இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

 
அழகியசிங்கர்


இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.


இந்திரா பாரத்தசாரதயின் சிறுகதைகள் தொகுதி 1 என்ற புத்தகத்திலிருந்து இக் கதையைப் படித்தேன். கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பாக 2010ல் வெளியிட்டிருந்தது.


இப்போது இந்தப் புத்தகம் விற்பனைக்கு இருக்குமா என்று தெரியாது. இத் தொகுப்பில் ஒரு பெரிய குறையைக் கண்டு பிடித்தேன்.


‘சூசைம்மாவும் அத்வைதமும்’ என்ற சிறுகதை எப்போது எழுதப் பட்டது என்ற குறிப்பு இல்லை. அல்லது பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தால் எந்தப் பத்திரிகையில் வந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது பெரிய குறையாக எனக்குத் தோன்றுகிறது. சரி, இனிமேல் கதைக்குப் போகலாம்.


இக் கதையில் தலைப்பிலேயே இந்திரா பார்த்தசாரதியின் நையாண்டித்தனம் ஆரம்பித்து விட்டது. இக் கதை ஒரு விதத்தில் இன்றைய நிலையை வெளிப்படுத்துகிறது.


சூசையம்மா நர்ஸ் சூபரின்டெண்டன்ட ஆக அந்த மருத்துவமனையில் பணி புரிகிறாள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவள். அவளுக்கும் அத்வைதிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. கிண்டலுக்காகக் கதாசிரியர் இந்தக் கதையின் தலைப்பை அப்படி வடிவமைத்திருக்கிறாரா?இந்தக் கதை அன்னம்மா என்ற நர்ஸ் மூலம் ஆரம்பமாகிறது.


அன்னம்மா மணியைப் பார்க்கிறாள். மணி 5.15. ஆஸ்பத்திரிக்கு வெளியே ஸ்கூட்டரில் மாத்யூ என்பவன் அன்னம்மாவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். ஐந்து நிமிடம் காத்திருந்தாலும் அவனுக்குக் கோபம் வந்து விடுகிறது. அவனுடைய சினம் வெளிப்படையாகக் காட்டாத சினம்.கதை தலைப்பே கிண்டலாக வைக்கப் பட்டிருந்தாலும், அன்னம்மாவிற்காகக் காத்திருக்கும் அவள் காதலன் பெயர் மாத்யூ. கிறித்துவ மதத்தைச் சார்ந்தவன்.நர்ஸ் உடையைக் களைந்து புடவையைக் கட்டிக்கொள்ள அவள் ஜெனரல் வார்டை ஒட்டியிருந்த அறைக்குள் சென்றாள்.


மூன்று நிமிஷம் நாற்பது வினாடிகளில் அறையைவிட்டு வெளியே அலறிக்கொண்டு ஓடிவந்தாள். கதாசிரியர் துல்லியமாக நேரம் சொல்லி விவரிக்கிறார்.அறையில் உள்ளே எலி ஒன்று செத்துக் கிடக்கிறது என்று அன்னம்மா கூறுகிறாள். அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எல்லோரும் திகைப்படைகிறார்கள்.தோராயமாக இந்தக் கதையை 1996ல் இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போதுதான் சூரத்திலிருந்து பிளேக் என்ற நோய் பரவுகிறது என்ற அச்சம் மக்களிடம் பரவி இருந்தது. பிளேக் நோயின் முக்கியமான அம்சம். எலி செத்து விடுவது.


. ‘செத்த எலி,’ என்றாள் அன்னம்மா, அங்கு அனைவரும் மின்சாரத்தால் தாக்குண்டவர்கள் போல் ஆளுக்கொரு திக்காய் ஓடத் தொடங்கினார் என்று விவரிக்கிறார் கதாசிரியர்.
அதன்பின் எலியை வைத்து கூத்துதான் இந்தக் கதை முழுவதும்.
முகமூடி அணிந்துகொண்டு வந்த ஆஸ்பத்திரி உதவியாளன் எல்லோருக்கும் முகமூடிகளை விநியோகம் செய்தான்.
அன்னம்மாவைப் பார்க்க வந்த மாத்யு, “மணி 5.30 ஆகப்போகிறது,” என்கிறான்.


“தெரியும். அந்த ரூம்மில டிரஸ் மாத்திக்கப் போனேன். செத்த எலியைப் பார்த்தேன்,” என்கிறாள்.இன்னொரு நர்ஸ், “அங்க என் டிரஸ் இருக்கிறது,” என்றாள்.


அன்னம்மா, “நல்லகாலம் நான் டிரெஸ் மாத்திண்டுட்டேன்,” என்கிறாள்.


உடனே மாத்யு, “முழுக்க மாத்திக்கலே. ப்ளவுஸ் எங்கே?” என்றான்.
அப்பொழுதுதான் அன்னம்மா தன்னைப் பார்த்துக் கொண்டாள். இப்படியே ப்ளேக் என்ற நோய் காரணம் காட்டி கிண்டல் தொனியில் கதையை நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர். கொரானா குறித்துக்கூட இன்னொரு கதையை எழுதச் சொல்லலாம் இந்திரா பார்த்தசாரதியை.


இந்த இடத்தில் உதவியாளன் முகமூடியை வழங்குகிறான். மாத்யு வாங்கிக்கொள்ள மறுத்ததுடன், வெளியே செல்ல லிஃப்டுக்குள் புகுந்து கொண்டான்.சூசைம்மாளும் முகமூடியை வாங்கிக்கொள்ள வில்லை. ஆனால் அவள் அன்னம்மாவைப் பார்த்து ஒன்று சொல்கிறாள்.


“பாத்தியாஉன் சினேகிதனை, ஓடிப்போறான். இவனையா கட்டிக்கப் போறே?” என்று கேள்வியை எழுப்புகிறாள்.
சூசைம்மாளுக்கு தைரியம் ஜாஸ்தி. செத்துப் போனஎலியைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. அதனால்தான் இ.பா. ‘சூசைம்மாளும் அத்வைதமும்’ என்ற பெயரைக் கதைக்கு வைத்திருக்கிறாரென்று தோன்றுகிறது.


சூசைம்மாவை முகமூடியைப் போட்டுக்கொள்ளும்படி அங்கிருக்கும் டாக்டரும் மற்றவர்களும் போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் சூசைம்மா மாஸ்க்கை போட்டுக்கொள்ள மறுக்கிறாள்.இந்தஇடத்திற்கு மெடிக்கல் சூப்ரின்டெண்டன்ட் அவசரமாக வருகிறார். கதாசிரியர் அவரை இப்படி வர்ணிக்கிறார்.
அவருக்கு ஐம்பது வயதிருக்கும். மீசை நரைத்திருந்தது .தலை மயிர், சாய உதவியில் அசாதாரண கறுப்புடன் பட்டொளி வீசியது என்கிறார் கிண்டலுடன்.


யாருக்கு ப்ளேக்? என்று கேள்வி கேட்கிறான் மெ.சூவுடன் கூட வந்த டாக்டர்.


சூசைம்மாள் கிண்டலாக பதில் சொல்கிறாள். “யாருக்குமில்லை இதுவரைக்கும். நீங்க செய்ற அமர்க்களத்திலே எல்லாருக்கும் வந்துடலாம்,” என்கிறாள்.


இப்படியே இந்தக் கதை நகைச்சுவை உணர்வுடன் போய்க்கொண்டிருக்கிறது.


மெ.சூ அடிமேல் அடி எடுத்து அன்னம்மா குறிப்பிட்ட அறையை நோக்கிச் சென்றார்.


“எங்கே எலி?” என்று அவர் கேட்கும்போது அன்னம்மா அவரருகில் வந்தாள். மெ.சூ வெருட்டென்று நகர்ந்து கொண்டார்.
அவர் கண்ணில் எலி தென்படவில்லை.


“உனக்கு நிச்சயமாகத் தெரியுமா அது செத்தஎலிதானா” என்று
“மல்லாக்கக் கிடந்தது,” என்கிறாள் அன்னம்மா.
“நாத்தம் வந்ததா?”
“எனக்குத் தெரியலை அப்ப,” என்கிறாள் அன்னம்மா
. “இப்பவும் நாத்தமில்லே” என்கிறாள் சூசைம்மா.
எலி செத்துக் கிடந்ததா என்பதுபோல் சூசைம்மா சந்தேகப்படுவதுபோல் தோன்றுகிறது.மெ.சூ சிரிக்கும்போது எல்லோரும் சிரித்தாக வேண்டுமென்பது அந்த ஆஸ்பத்திரி நியதிகளிலொன்று. அவர் ஜோக் அடிக்க எல்லோலரும் சிரிக்கிறார்கள். சூசைம்மாவைத் தவிர.
சூசைம்மாவிற்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது. அரசியல்வாதிகளின் தயவில் உயர்ந்த பதவிக்கு வந்து விட்டான் என்று நினைக்கிறாள்.. சர்ஜன் என்று பெயர். சலூனில் கூட வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஜோக் அடிக்கிறார் கதாசிரியர்.இப்போது பாத்ரூமில் செத்த எலியை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்குப் போக வேண்டுமென்று தீர்மானம் ஆகிறது. சூசைம்மா எடுத்துக்கொண்டு போகத் துணிகிறாள்.
“எலிப்பிரேதத்தை எப்படிக்கொண்டு போய் அடக்கம் செய்றது?” என்ற கேள்வியை எழுப்புகிறாள் சூசைம்மா.
“அடக்கம் செய்யக்கூடாது. எரிக்கணும். துணியோடு எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு எரிக்கணும்” என்கிறார் மெ.சூ.
ஹெர்ஸ் வண்டியில் எடுத்துச் செல்வதாகத் தீர்மானம் ஆகிறது. செத்த எலியை அந்த அறையிலிருந்து எடுத்துக் கொண்டு போக யாரும் துணியவில்லை. சூசையம்மா அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அட்டைப்பெட்டியுடன் எடுத்து வந்தவுடன் ஸீல் வைக்கிறார்கள்.
இங்கு செம்ம கிண்டலாக ஒரு உரையாடல் நடக்கிறது.
“பிராமணாள் இங்கே யாருமில்லையா? என்று கேட்டாள் சூசைம்மா.
“எதுக்கு?” என்றார் மெ.சூ. அவர் பிராமணர்.
“மந்திரம் சொல்ல,” என்கிறாள்.
அங்கிருந்தவர்கள் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். சுடுகாட்டிற்குச் செத்த எலியை எரிப்பதற்கு சூசையம்மா எடுத்துக் கொண்டு போகிறாள். சவப்பெட்டி ஊர்வலம் தொடங்கியது. அட்டைப் பெட்டியை ஹெர்ஸ்ஸில் வைத்துவிட்டு டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள் சூசைம்மா.
சுடுகாட்டில் தகராறு. எரிக்க அனுமதி மறுக்கிறார்கள். எரிக்க டெத் சர்டிஃபிகேட் வேணும் என்கிறான்.
“செத்த எலிககா டெத் சர்டிஃபிகேட் என்று கேட்க, உடனே இடத்தைக் காலி செய்யச் சொல்கிறான். இந்த இடத்தில் கதையின் நையாண்டித்தன ரசிக்கும்படியாக உள்ளது.
அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியவில்லை. டிரைவர் ஆத்திலே தூக்கிப் போடலாம் என்கிறான்.
சுடுகாட்டிலேயே எரிக்கப் பயப்படறாங்க, ஆத்தில போடலாம்னு சொல்றீங்க என்று சூசைம்மாள் டிரைவரைப் பார்த்துக் கேட்கிறாள்.
சூசைம்மா அவள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போகிறாள். செத்த எலியை அவள் வீட்டுக் கொல்லைப்புறத்திலே எரிச்சிடுவதாகச் சொல்கிறாள்.
சூசைம்மா ஒண்டிக் கட்டை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றாள். இருட்டு வந்ததும்.
உரிய மரியாதையோடு எரிக்க ஆசை. உள்ளே போய் பைபிளை எடுத்து வந்தாள்.
அட்டைப் பெட்டியில் இருக்கும் செத்த எலியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. எலியைச் சுற்றிவைத்திருந்த துணியைப் பிரிக்கத் தொடங்கியவள், எழுந்து உள்ளே சென்றாள்.
முகமூடியை அணிந்து கொண்டு துணியைப் பிரித்தாள். பிரித்தாள். பிரித்துக்கொண்டே இருந்தாள். அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிரித்துக்கொண்டே இருந்தாள். நிஜமும் நிழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவளுக்குப் பட்டது. நாணயம் எது என்பதுதான் அவளுக்குப்பிடிபடவில்லை என்று முடிகிறது கதை.
துணியை அவிழ்க்கும்போது அதில் செத்த எலி இல்லையா? ஏன் சூசைம்மாள் சிரிக்கிறாள்? ஒரு வரியில் இந்தக் கதையைப் படித்தவுடன் என்ன சொல்வது? ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்குப் பெரிதாக கலவரப்படுவது மனித இயற்கை. இப்போதைய கொரானா சூழ்நிலைக்கும் இந்தக் கதை பொருந்துகிறது.
நகைச்சுவை உணர்வுடன் கடைசிவரை அதைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இ.பாவிற்குப் பாராட்டுகள்.
(25.10.2020 திண்ணை முதல் இணைய வாரப் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

நவீன விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

 

அழகியசிங்கர்  

ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்

1) மழைக்குப் பின் .. 

இந்த கணம்தான் 

உருவானதுபோல் எல்லாம் 


நான் பார்க்கப் பார்க்க

 முளைத்தன மரங்கள் 


படர்ந்து சென்றது வானம் 

எதிலும், எங்கும் 


காற்றில் பழுத்தன பறவைகள் 

மனிதர்களும் 

இப்போது தான் தோன்றியது போல் 

எங்கெல்லாமோ … எப்படியெல்லாமோ 


மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும் 

விதைத்துவிடு  

மனதில் தோன்றியதை 

ஆகாயத்தைக் கூட 


சிருஷ்டித்துக் கொள் 

விரும்பியவற்றை 

மரம், பறவை, வீடு 

ஏன் மனிதனையும் கூடத்தான்

ஹிந்தி மூலம் : ஜ்யோத்ஸ்னாமிலன்


தமிழில் : திலீப்குமார்


(நவீன விருட்சம் இதழ் :7 ஜனவரி – மார்ச்சு 1990)

ஜெயகாந்தன் நண்பரை இழந்து விட்டோம்.

அழகியசிங்கர்

சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமலிருந்த ஜெயகாந்தன் நண்பரான கே எஸ் என்று அழைக்கப்படுகிற டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவருக்கு வயது 83. 
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஜெயகாந்தனை அறியச் செய்தவர்.  பல கவிதை நூல்களை ஆங்கிலத்திற்கு அறிமுகப் படுத்திய பெருமை அவருக்குண்டு.

சமீபத்தில் பலருடைய கவிதைகளைக் கொரானா குறித்து எழுதப்பட்டதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘லாக்டௌன் லரிக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.  
அவருடைய மரணம் இயற்கையானது
.  கொரானாவால் இறக்கவில்லை.  அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இன்று காலை 11.30 மணிக்கு பெஸன்ட் நகர் மின் தகன மேடையில் இறுதிச் சடங்கு நடக்க உள்ளது.