சி சு செல்லப்பாவின் மறைந்த நாள் இன்று


அழகியசிங்கர்


திருவல்லிக்கேணியில் தள்ளாத வயதில் மனைவியுடன் ஒரு சின்ன குடியிருப்பில் குடியிருந்தார் சி சு செல்லப்பா.


முக்கிய நோக்கமாக அவர் சென்னையில் குடியிருந்தார். ‘சுதந்திர தாகம்’ என்ற அவருடைய நாவலை அவரை அச்சடித்து வெளியிடுவதென்று முடிவெடுத்து சென்னையில் குடியிருந்தார்.
அந்தத் தள்ளாத வயதில் அவருடைய உறுதி எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. சுதந்திர தாகம் 3 பாகங்களைக் கொண்டது. திருவல்லிக்கேணியில் உள்ள மணி ஆப்செட்காரரை சி.சு செல்லப்பாவிற்கு அறிமுகப்படுத்தினேன்..மணி ஆப்செட் (பெயர் மறந்து விட்டது)காரர் சிசு செல்லப்பா வீட்டிற்கே வந்து ப்ரூப் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சடித்துக் கொடுத்தார்.


மூன்று பாகங்களை அவர் வீட்டுப் பரணில் அடுக்கி வைத்து விட்டார். அவர் ஒருவரே எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.


ஆயிரம் பிரதிகள் அச்சடித்திருந்தார். அதுதான் எனக்குத் திகைப்பு. அவ்வளவு மன உறுதி. அவர் புத்தகம் விற்றுவிடும் என்று.


அதற்குத் தகுந்தமாதிரி இந்தியா டுடே பத்திரிகையில் அந்தப் புத்தகத்திற்குப் பெரிய விளம்பரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 300 பிரதிகள் விற்றன.


சி சு செல்லப்பா முழுவதும் சுதந்திர தாகம் விற்பதற்குள் இன்னொரு புத்தகத்தையும் தயார் செய்து விட்டார். அது ‘ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற புத்தகம். அதையும் துணிச்சலாக 500 பிரதிகள் அச்சடித்து விட்டார். ராமையாவின் சிறுகதைகள் புத்தகமாக (இன்னும் கூட வரவில்லை) இல்லாதத் தருணத்தில் அவற்றைக் குறித்து விமர்சன நூல் உருவாக்கி விட்டார் செல்லப்பா.


இவர் செயலை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு இடத்திற்கும் நடக்க முடியாத இவர் எப்படி இந்தப் புத்தகங்களை விற்கப் போகிறார்?. சுதந்திர தாகமாவது பரவாயில்லை. ஆனால் ராமையாவின் சிறுகதைகளே முழுமையாக இல்லாதத் தருணத்தில் அவருடைய கதைகளை விமர்சனம் செய்த புத்தகம் எப்படி விற்கும்?. ஆசைக்குக் கொஞ்சம் பிரதிகளாவது போட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் என்ன துணிச்சல் இவருக்கு. 500 பிரதிகள் அச்சிட்டு விட்டாரே ?


ராமையா 304 கதைகள் எழுதியிருக்கிறார். சி சு செல்லப்பா ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். அத்தனை கதைகளும் எந்தந்தப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. ஆனால் 287 கதைகளை முன்கதை சுருக்கத்துடன் விமர்சனம் செய்திருந்தார்.சி சு செல்லப்பா மறைந்தபின்பு அவருடைய ‘சுதந்திர தாகம்’ நாவலுக்கு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்தது.


300 பிரதிகள் விற்ற பின் அவர் இறந்து விட அவருடைய உறவினர் வீட்டிற்கு எல்லாப் புத்தகங்களும் மாற்றப்பட்டு விட்டன.
கெஞ்சிக் கூத்தாட நூலகம் ஆணை இன்னும் சில நூறு பிரதிகளுக்குக் கிடைத்தன. அவருடைய தள்ளாத வயதில் நூலக ஆணையரைச் சந்தித்து புத்தகம் வாங்குவதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.


அதன் பிறகு அவருடைய சுநத்திர (3 தொகுதிகள்) தாகம் என்ற நாவலைப் புத்தகக் கண்காட்சியின் போது 3 தொகுதிகளும் சேர்த்து ரூ.100 அல்லது ரூ.150 என்று விற்றேன்.


ஒரு தீவிர போஸ்ட் மாடர்னிஸ விமர்சகர் எல்லாப் புத்தகங்களும் திருவல்லிக்கேணி

பிளாட்பாரத்துக்கு வந்து விடும் என்று சாபமிட்டார். நல்ல காலம் நான் அதைத் தடுத்துவிட்டேன்.
‘ராமையாவின் சிறுகதை பாணி’யை இன்னும் அடிமாட்டு விலைக்கு விற்றேன்.


சி சு செல்லப்பாவை நினைக்கும் போது எதையும் சாதிக்க முடியும் என்ற அவருடைய உறுதியை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.அவரை இந்த நாளில் நினைவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.


ஓய்வு ஊழியர்களின் நாள் இன்று

அழகியசிங்கர்

ஓய்வு ஊதியக்காரர்களில் நானும் ஒருவன்.   ஓய்வுபெறும்போது எப்படா ஓய்வு பெறப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு நாளையும்  குறைத்துக்கொண்டே வருவேன்.  வேண்டா வெறுப்பாக அலுவலகம் போகும்போது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடும்போது சத்தமாக எல்லோர் காதுகளில் விழும்படி இன்னும் இவ்வளவு நாட்கள்தான் இருக்கின்றன என்று சொல்வேன்.  எல்லோரும் சிரிப்பார்கள்.


கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஓடிவிட்டன.  தேவையான அளவிற்கு ஓய்வூதியம் வருகிறது.  அது போதும்.  விருப்பமான பொழுதில் எழுந்துகொண்டு விருப்பமான புத்தகங்கள் படித்துக்கொண்டு எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.  யாரும் எந்தக் கட்டளையும் இடவில்லை.   


உண்மையில் யாராவது இன்று என்ன தேதி என்று கேட்டால், எனக்குத் தெரியாமல் போய்விடத் தோன்றுகிறது.  இன்று புதன் கிழமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் வியாழக்கிழமை.


நான் ஓய்வு பெற்ற பின்தான் என் புத்தகங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்தேன்.  என் ஓய்வூதியம் பணத்திலிருந்துதான் விருட்சம் இதழும், புத்தகங்களும் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்.  உண்மையில் ஓய்வு பெற்றபின்தான் நான் அதிகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.  


ஓய்வு பெறுவது பற்றி இரண்டு மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  ‘வரட்டும்’ என்கிற கவிதை ஒன்று அந்தக் கவிதையை இங்குத் தருகிறேன்.

வரட்டும்..


சந்திரமௌலி என்பவர்

அங்கிருந்து இங்கு வருகிறார்

இங்கிருந்து அங்குப் போகிறார்


பென்சன்காரர்கள்

எங்கே எங்கே எங்கே

என்று கேட்கிறார்கள்

இவரைத் தேடி அலுவலகத்தில்


அவர்

ஆமாம் ஆமாம் ஆமாம் என்கிறார்


யாருக்கும் எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை

குறையில்லாத மனிதர்களும் இல்லை

2014 பிப்ரவரி மாதத்திற்குப் பின்பு இவரும் பென்சன்காரர்


விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம்

30. 18.12.2020

அழகியசிங்கர்

நாளை (வெள்ளிக்கிழமை – 18.12.2020) மாலை 6.30 வழக்கமாக நடைபெறப்போகிற விருட்சம் சூம் மூலமாக நடைபெற உள்ள 30வது கவிதை வாசிப்பு கூட்டம்.


20 நிமிடங்கள் கவிஞர் அ.கார்த்திகேயன் அவர்கள் ஜென் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துகிறார்.  அதன்பின் கவிதை வாசிப்பு கூட்டம் வழக்கம்போல் நடைபெற உள்ளது.


எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும்.  ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். கலந்து கொள்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய பெயர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
வழக்கம்போல் நம் விதிகளை மீறக் கூடாது.  
 தற்போதைய அரசியல், ஆத்திகம்-நாத்திகம், ஆபாசம், கொரானா, ஒருவரை ஒருவர் பழித்துச் சொல்லுதல் கூடவே கூடாது.
கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.      

Meeting ID  :        884 5094 1418
             Passcode:                 167180

ஒரு கதை ஒரு கருத்துபாரதியாரின் ஸ்வர்ண குமாரி ……………..2

அழகியசிங்கர்

மாலை 6 மணி. ஸ்வர்ணகுமாரி தனியாக இருக்கிறாள். ஹேமசந்திரனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாள். அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடலைப் பாரதியார் எழுதியிருக்கிறார்.ஹேமசந்திரனைப் பார்த்து அவனை மணக்க தனக்குச் சம்மதமில்லை என்கிறாள். அப்பாவின் பலவந்தத்தின் பேரில் விவாகம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள்.அவளைத்தானே விவாகம் செய்து கொள்ளப் போகிறோமென்று தப்பாக நடந்துகொள்ளப் போகிறான்.

கொடி மாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்சனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திரனை பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரத்திலே தந்தையாகிய ஸ÷ர்யபாபுவும் வந்து விட்டான்.

இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாநாயகியைக் கற்பழிக்கும்போது எங்கிருந்தோ கதாநாயகன் தோன்றி கதாநாயகியைக் காப்பாற்றி விடுவான். அது மாதிரி தோன்றுகிறது.

நம் குடும்பத்திற்குப் பெரிய பாதகம் இழக்க இருந்த பாதகனுக்கா நாம் பெண்ணை கொடுக்க இருந்தேன் என்று சூரியகாந்த பாபு நினைத்தார்.அவள் அப்பா மனோரஞ்சனனிடம் ஒன்றே ஒன்று சொல்கிறார்.

அவன் ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில், அவனுக்கு தன் பெண்ணைக் கொடுப்பதாகச் சொல்கிறார்.அவனுக்கோ தாயினிடத்து அன்பு ஒரு புறமும், அவனது ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமாக இருக்கிறது. ஸவர்ணகுமாரியம் பிடிவாதமாக அவனைத் தவிர வேற யாரையும் விவாகம் செய்யாமலிருக்கத் தீர்மானித்தாய்.இப்படியே ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.

இப்படியிருக்க 1906ஆம் வருஷம் கல்கத்தாவிலே காளி பூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே, ஸ்வர்ண குமாரி தனது வீட்டு மாடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு ஸந்தியா என்னும் தினசரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் ஒரு குறிப்பு பட்டது.மனோரஞ்சித பானர்ஜி பிரம ஸமாஜத்தில் சேர்ந்து விட்டாரென்று.

அவள் ஆனந்த பரவசத்திலே ஆழ்ந்து விட்டாள். பத்திரிகையிலே வேறு ஒரு இடத்தில் அவன் பெயர் தட்டுப்பட்டது. அதில் லோகமான்ய பால கங்காதர திலகருக்கு விரோதமாக சில வாலிபர்கள் மனோரஞ்சன் பானர்ஜியின் கீழ் கூட்டம் கூடியது என்று.இதைக் கண்டவுடனேயே ஸ்வர்ணகுமாரிக்கு மனம் பதைத்து விட்டது.

குழந்தை முதல் பால கங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தாள். மனோரஞசனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள் அன்பு பதினாயிர மடங்கு வன்மையுடையது. பாலகங்கதர திலகருக்கு விரோதமாக இருப்பவர்களைப் பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

பொதுவாக நான் படித்த இரண்டாவது பாரதி கதைகளில் அவர் தேசத்தை ஒரு பகுதியாகக் கதையில் கொண்டு வருகிறார். தேச அபிமானம்தான் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று கதை எழுதுபவர்கள் இதுமாதிரியான தேசத்தில் நடக்கிற விஷயங்களை இணைப்பார்களா என்று தெரியவில்லை.

அப்படியே இணைத்தாலும் அவற்றைப் படிப்பதற்கு ஏதுவாக இருக்குமா என்பது தெரியவில்லை.தன் கண்போன்று இருந்த ஆசை மகன் ஹிந்து மதத்தை விட்டு விலகிப் போய் விட்டான் என்பதை அறிந்தவுடன் மனோரஞ்சனனுடைய அம்மா இறந்து விட்டாள். அந்த அளவிற்குத் தீவிர ஹிந்து வெறியாளராக அம்மா பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் பாரதி.

அம்மா இறந்து போன செய்தியைக் கேட்டு அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வருகிறான் மனோரஞ்சனன். தாயின் கிரியைகளையெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலம் நிறைவேற்றுகிறான். ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் செல்கிறான்.

அவள் அவனுக்கு ஒருகடிதத்தை எழுதிவிட்டு காசிக்கு அவள் அத்தை வீட்டிற்குப் போய்விட்டாள். ஒரு வருடம் என்னைப் பார்க்க வராதே என்று எழுதியிருக்கிறாள்.ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டதால் அவன் சவகாசமே வேண்டாமென்று ஒதுக்கி விடுகிறாள். அவன் திருந்தியபிறகுதான் பார்க்க விரும்புவதாகக் கடிதத்தில் குறிப்பிடுகிறாள். அதுவரை அங்கே அவன் வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறாள்.கடைசியில் பாரதியார் இப்படி முடிக்கிறார்.

இப்போது மனோரஞ்சனன் பூனாவிலே திலகரிடம் தேச பக்திப் பாடங்கள் படித்து வருகிறான் என்று.இந்தக் கதையைப் பற்றிப் பின்வருமாறு முடிவுக்கு வருகிறேன்.-

இந்தக் கதை 1906 ஆம் ஆண்டில் எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது.-

கதை வெகு சுலபமாகப் புரியும்படி எழுதப்பட்டிருக்கிறது.- அந்தக் காலத்தில் ஜாதி அபிமானம் மரணம் வரை சென்று விடுகிறது.-

கதாலுடன் தேசப்பக்தியை இணைக்கிறார் கதாசிரியர்.- பெரும்பாலும் பிராமண குடும்பச் சூழ்நிலையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.-

கதையில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாகக் காணப்படுகிறது.இன்னும் அதிகமாகப் பாரதியார் கதைகளைப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.

நேற்றும் இன்றும் இரு பகுதிகளாக வெளிவந்த கட்டுரை.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 13 டிசம்பர் 2020 அன்று வெளியான கட்டுரை)

நவீன விருட்சம்

ஒரு கதை ஒரு கருத்து 

 பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

அழகியசிங்கர்

            டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள்.  இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.

      அவர் 42 கதைகள் எழுதி உள்ளார்.  அவர் கதைகள் படிப்பதற்கு எப்படி இருக்கிறது.  முதலில்  எளிமையாகச் சரளமாகப் படிக்க முடிகிறது.  

      பாரதி இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறாரென்று பார்ப்போம்.  

      பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே, வாந்த்பூர்  (சாந்திர புரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்சன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு.

      இப்படி ஒரு காதல் கதையைப் பாரதியார் விவரிக்கிறார்.  மனோரஞ்சிதன் சுந்தரமான ரூபமுடையவன்.  பார்ப்பதற்கு மன்மதனைப்போலியிருப்பான்.   தன்னோடு ஒத்த வாலிபர்கள் எல்லோராலும் அர்ஜ÷னன் என்று அழைக்கப்பட்டு வந்தான்.  

      அவனுக்கு வயது இருபத்தி மூன்றாகியிருந்த போதிலும், என்ன காரணத்தாலோ இன்னும் விவாகம் நடக்காமலிருந்தது.  இவனுக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுதே, இவன் அப்பா இறந்து விடுகிறார்.  அதனால் இவனுக்குத் திருமணம் ஆகாமல் தடைப்பட்டுப் போய்விட்டது.  தாய்க்கு இவன் ஒரே பிள்ளையாதலால், இவன் மீது மிகுந்த அருமை கொண்டவளாகி வீட்டில் இவன் வைத்ததுதான் சட்டம்.  இவன் சொன்ன சொல்லை மீற மாட்டாள்.  இந்தக் குடும்பத்தில் அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும் உள்ள நிலத்தை விற்று பணம் எடுத்துக்கொண்டு கல்கத்தா போய் பரீட்சைகள் எழுதித் தேறி வர வேண்டுமென்ற இவன் எண்ணத்தின்படி இவனை அனுப்பி வைத்தாள்.

      இவன் தாயார் ரஞ்சனைப் பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்பாள்.  இவன் அதற்குப் பதில் சொல்ல மாட்டான்.  அந்தப் பேச்சே எடுக்காதே என்று அம்மாவை மிரட்டுவான். 

      ஆனால் அந்தரகத்திலே இவன் வடக்கு வீதி ஸ÷ர்யகாந்த பாபு என்ற பெருஞ் செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ணகுமாரியின் மீது மோகம் வைத்திருந்தான்.  இது அவன் அம்மாவிற்கும் தெரியும்.  ஆனால் தன் பையன் ஸ்வர்ண குமாரியை ஒருபோதும் விவாகம் செய்யக் கூடாது என்று நினைக்கிறாள்.  அதற்குக் காரணம் அந்தப் பெண் மிலேச்சனுடைய பெண்.  அவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அறிந்தால் இவனுடைய தாயார் தேட்ட மாத்திரத்திலேயே இறந்து விடுவாள்.   அதேபோல் அவளை தன் மகன் கட்டிக்கொள்வதைக் காட்டிலும் இறந்து போவது மேல் என்று நினைக்கிறாள்.

 “     ஏன் அவன் தாய் அப்படி நினைக்கிறாள்?  

      ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய÷ர்யகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்தாலும் பிரமஸமாஜம் என்ற புதிய மார்க்கத்திலே சேர்ந்து கொண்டு விட்டார். 

      பிரம ஸமாஜத்தில் சேர்ந்தவருக்கு ஜாதி பேதம் இல்லை.  விக்ரகாராதனை கூடாது.  பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம் என்பதுபோல் நவீன கோட்பாடுகளைக் கொண்டிருப்பார்.

      அவர்கள் வீட்டு ஸ்திரீகள் பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை என்று நடப்பவர்கள். 

      ஸ்வர்ண குமாரிக்கு இன்னும் விவாகமாகவில்லை.  மனோரஞ்சனின் தயாருக்குக் காதால் கேட்கக் கூடா வெறுப்பாக இருந்தது.  தன் பையன் அடங்காத காதல் கொண்டிருக்கிறானென்றும்  அதன் பொருட்டே மறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறானென்பதும் அவளுக்குத் தெரியும்.

      பாரதியார் இந்தக் கதையை ஒரு காதல் கதையாகக் கொண்டுபோகிறார்.  ஜாதி மாறுவதை கடுமையாகக் கருதுகிறார்கள்.  ஸ்வரண குமாரி மனோரஞசனுடைய வடிவம் என்று அகலாத சுந்திர விக்கிரமாகப் பதிந்து போய்விட்டது.

      இந்த இடத்தில் ஸ்வர்ண குமாரியின் அழகை வர்ணிக்கிறார் பாரதியார்.  எப்படி?  ‘இவளுடைய ரூப லாவண்யமோ சொல்லுந் தரமன்று.  கருமை நிறங் கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும் கன்னமும், நெற்றியும், ஸ்வர்ண மயமான சரீரமும் என்னவென்று சொல்வது?’ என்கிறார்.

      இந்த இடத்தில் ஒரு ஜோக் அடிக்கிறார் பாரதி.  சுகப்பிரம்மரிஷி ஸ்வர்ண குமரியைப் பார்த்த போதிலும் மயங்கிப் போய் விடுவார் என்கிறார்.

      ஸ்வரணகுமாரி அடிக்கடி மனோரஞ்சிதத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாள்.  இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.  இதை அறிந்து அவள் அப்பா, ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்துகொள்ளச் சம்மதிக்கச் சொல்கிறார்.  இல்லாவிட்டால் என் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கிறார். 

      அவளுடன் ஹேமச்சந்திரா பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்கிறாள்.  தோட்டத்திலுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்கு.  அப்படிச் சந்திக்கும்போது அவளுடைய சம்மதத்தைத் தெரிவிக்கும்படி சொல்கிறார்.  

      வேறு வழியில்லை ஹேமசந்திரனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விதி இருக்கிறது.  திருமணம் செய்துகொண்டு விஷம் தின்று உயிரை விடலாமென்று நினைத்துக் கொள்கிறாள்.  

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 13 டிசம்பர் 2020 அன்று வெளியான கட்டுரை)

                                                                     இன்னும் வரும்….
SHARE

Comments

Post a comment

Popular posts from this blog

சில சிறுபத்திரிகைகள்..

January 20, 2020SHARE POST A COMMENTREAD MORE

இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்தேன்

January 28, 2020SHARE POST A COMMENTREAD MORE

துளி – 93- புத்தகக் காட்சி நினைவுகள் 3

January 12, 2020SHARE POST A COMMENTREAD MORE

உள்ளே

 Powered by Blogger

நவீன விருட்சம்

SUBSCRIBESEARCH

சூபியும் சுஜாதாவும் என்ற மலையாள திரைப்படம்

சூபியும் சுஜாதாவும் என்ற படத்தை ப்ரைம் வீடியோவில் பார்த்தேன். விட்டு விட்டுத்தான் பார்த்தேன். என்னால் மறக்க முடியாத மலையாளப்  படம்.  வாய் பேசமுடியாத ஒரு பெண்ணுடன் ஒரு சூஃபி சந்நியாசி காதலிப்பது போல் படம்.  உண்மையில் இருவரும் காதலிக்கிறார்கள்.  
கதை கேரளாவில் ஒரு கிராமத்தில் நடக்கிறது.  இந்தக் காதல்  ஈடேறாது என்று படம் ஆரம்பிக்கும்போதே தெரிந்தாலும், இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் கதை. 
சுஜாதா என்ற பாத்திரமேற்று நடித்த நடிகை அதித்ராவ்  மறக்க முடியாத கதை  பாத்திரமாக கதையுடன் ஒன்றி விடுகிறார்.  அவருடைய ரசிகர்கள் ரொம்ப நாட்களுக்கு இந்தப் படத்தை ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்.
அதித்ராவ் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.   சூபியாக நடிக்கும் தேவ் மோஹனுக்கு இது முதல் படம். இந்தப் படத்தில் முக்கியமாக உரையாடல்களே இல்லை.  
இந்தப் படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் பார்த்தேன்.  இந்தப் படம் மெதுவாகப் போகிறது.  இந்தப் படத்தில் கதையே இல்லை என்றெல்லாம். இந்தக் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.

நான் ப்ரைம் வீடியோவில் பார்த்தாலும், விட்டு விட்டுத்தான் பார்த்தேன்.  அப்படிப் பார்த்தாலும் இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் வரை இந்தப் படத்தைப் பற்றி நினைக்காமலில்லை . 

ஒரு கிராமத்துச் சூழலில் நடைபெறும் இந்தக் கதையில் எல்லாம் இயல்பாக இருப்பதுபோல் இருக்கிறது.  சூபிக்கும் சுஜாதாவிற்கும் ஏற்படும் காதல் பரவசத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.  அந்தக் காதல் நிறைவேறாது என்றாலும் வாய் பேச முடியாத நிகழும் இந்தக் காதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை.


சுஜாதா ஒரு வாய் பேச முடியாத ஒரு அழகான பெண்.  அவளுக்கு வாய்த்தான் பேசமுடியாதென்றாலும் காது நன்றாகக் கேட்கும்.  முஸ்லிம் குடும்பங்களிருக்கும் நடுவில் சுஜாதா குடும்பமும் வசிக்கிறது. 
இந்தப் படத்தில் ஆரம்ப காட்சியே அற்புதமாக அமைந்திருக்கிறது.  10 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஊரை விட்டுப் போன சூபி அந்த ஊருக்குத் திரும்பி வருகிறான்  உண்மையிலேயே அவன் சாவதற்குத்தான் அங்கு வருகிறான்.   பின் இந்தப் படம் பின்னோக்கிச் செல்கிறது. 

சுஜாதாவும் சூபியும் சந்திக்கும் காட்சிகளிலிருந்து  ஆரம்பமாகிறது.  ஒருவருக்கொருவர் பேசாமல் காட்டப்படும்

காதல் கதையைத் தத்ரூபமாகக் காட்சி படுத்திருக்கிறார்கள்.  
இசையும் நடனமும் இப்படத்தில் முக்கியமாகக் காட்டப் படுகின்றன.  ஆரம்பத்தில்  சூபி   காதல் அவள்  அப்பாவால் தடுக்கப்படுகிறது.  ஒரு கட்டத்தில் சூபியுடன் ஓடிப் போய்விடலாமென்று சுஜாதா நினைக்கிறாள்.  அதைத் தடுத்து விடுகிறார் அவள் அப்பா. 

ஏற்கனவே ராஜீவ் குடும்பத்தினருடன்  அவள்  திருமணம் நிச்சயமாகிறது. . 
சூபி அந்த ஊரை விட்டுப் போய்விடுகிறான்.  சுஜாதா அவள் அப்பா விருப்பப்படி ராஜீவ்வை திருமணம் கொள்கிறாள் துபாய்க்குச் சென்று விடுகிறாள். ராஜீவ்வை மணம் முடித்தாலும் அவள் சூபி நினைவாகவே இருக்கிறாள். 


பத்தாண்டுகளுக்கு முன் போன சூபி திரும்பவும் அவர்கள் ஊருக்குத் திரும்பி வருகிறான்.  வந்த இடத்தில் இறந்தும் விடுகிறான்.   துபாயில் இருக்கும் அவர்களுக்குச் செய்தித் தெரிகிறது.  அதைக் கேட்டவுடன் சுஜாதா கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்.  இந்தச் சம்பவத்தை அற்புதமாகப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் நாரான புழா ஷான்வாஸ்.  
இதுதான் முதல் படம் ஒடிடி பிளாட்பார்ம் மூலம் காட்டப்படுகிறது.  மனைவியை அழைத்துக்கொண்டு சுஜாதாவின் கிராமத்திற்கு வருகிறான். 

சுஜாதா சூபி நினைவாகவே இருக்கிறாள்.  ஊரிலிருந்து வந்ததிலிருந்து  படபடப்பாக இருக்கிறாள்.  ராஜீவ்வும் பரபரப்பாக இருக்கிறான். 

அடுத்தாள்  அவன் ஊருக்குத் திரும்ப வேண்டும்.  ஒருநாள்தான் அவன் இங்கிருப்பதாகத் திட்டம்..  சவ அடக்கம் நடக்கும் இடத்திற்கு ஏர் போர்டிலிருந்து நேராக காரில் போகிறார்கள் அவனும் சுஜாதாவும்..

நிம்மதி இல்லாமல் இருக்கிறாள் சுஜாதா.  அவர்கள் சவ அடக்கம் செய்யும் இடத்திற்குச் செல்கிறார்கள்.  ஆனால் சுஜாதா காரிலேயே இருக்கிறாள்.  
அவர்கள் பெண்களை சவம் அடக்கம் செய்யுமிடத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள்.  அதனால் சுஜாதா காரிலேயே அமர்ந்து இருக்கிறாள்.  துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாள். அவள் கணவன் ராஜீவ் சவ அடக்கத்திற்குப் போகிறான்.  சவக்குழியில் ஒரு பிடி மண்ணத் தூவுகிறான்.

திரும்பவும் அவர்கள் சுஜாதா அப்பா அம்மா வசிக்கும் வீட்டிற்கு வருகிறார்கள்.  அவர்களுக்கோ இவர்களைப் பார்க்கும்போது திகைப்பு.  
அவர்கள் துபாயிலிருந்து புறப்படும் போது யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.  சுஜாதா துக்கம் தாங்காமலிருக்கிறாள்.  ராஜீவ் அடுத்த நாள் ஊர் திரும்ப வேண்டுமென்று இருக்கிறான்.  பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொள்ள நினைத்தபோது பாஸ்போர்ட் இல்லை என்று தெரியவருகிறது.  உடனே பதட்டமடைகிறான்.  எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.  தன் மனைவி சுஜாதாவைத் திட்டுகிறான்.  சுஜாதாவிற்கு வாய்த்தான் பேச முடியாது தவிர அவளுக்கு யார் பேசுவதும் கேட்கும்.

அவனுக்குச் சந்தேகம் வருகிறது.  பிணத்தை அடக்கம் செய்யும்போது சவக்குழியில் குனிந்து மண்ணைப் போடும்போது அவன் வைத்திருந்த பாஸ்போர்ட் கீழே விழுந்து விட்டிருக்குமா என்ற சந்தேகம் ராஜீவ் மனதில் எழுகிறது.  

புதைக்கும் இடத்திற்குப் போய் கல்லறையைத் தோண்டுகிறார்கள்.  அங்கே கிடைக்கவில்லை.  இரவு நேரத்தில் யாருக்கும்  தெரியாமல் பதட்டத்துடன் தோண்டுகிறார்கள்.  வீட்டிலேயே கீழே விழுந்து கிடந்த பாஸ்போர்டடை சுஜாதா கண்ணில் பட,  எடுத்துக்கொண்டு சவக்குழி இடத்திற்கு வருகிறாள்.

முதன் முதலாக  சுஜாதா சூபியைச் சந்திக்கும் பேருந்தில் சூபி ஒரு பச்சை நிற மாலையை பேருந்தில் விட்டுவிட்டுச் சென்று விடுவான்.  அவன் நினைவாக அதை எடுத்து வைத்துக்கொண்டிருப்பாள் சுஜாதா. இப்போது .அதை சவக்குழியில் போடுகிறாள். 

கூடவே அவன் நினைவையும் அழித்து விடுகிறாள். 

அவர்கள் துபாய் திரும்பும்போது ராஜீவ் அவளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.  அவர்களிடையே காதல் துளிர் விடுகிறது. 
கொஞ்சம்கூட அலுக்காமல் இந்தப் படத்தைப் பார்த்துரசித்தேன்   

29வது சூம் மூலம் கவிதை வாசிப்பு கூட்டம்


அழகியசிங்கர்


வெள்ளிக்கிழமை (11.12.2020) பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு பாரதியின் கவிதைகளை மட்டும் வாசித்தோம். நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதுமை செய்ய வேண்டுமென்று நினைப்பேன். இக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அதைப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


இந்த முறை பாரதியார் கவிதைகளை அவருடைய பாடல்களை வாசிப்பதும் இசைப்பதுமாய் கூட்டம் நடத்தி முடித்தேன். எல்லோரும் இதில் கலந்து கொண்டு பாரதியார் பாடல்களை/கவிதைகளை பாடினார்கள். ஏற்கனவே கவிதைகளை வாசித்தவர்களின்/பாடியவர்களின் ஒளிப்பதிவுகளை சூமில் பதிய வைத்தோம். சிறப்பாக வந்துள்ளது.

ஓஷோவின் பிறந்த தினம் இன்று

 துளிகள்  – 160

அழகியசிங்கர்

மத்தியபிரதேசத்தில் உள்ள குச்வாடா கிôமத்தில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 11ல்பிறந்தவர், ரஜனீஷ் சந்திர மோகன்.  இவர், ஓஷோ என்றழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியில் ஓஷோ கடையில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போவேன்.  59 வயது மட்டும் வாழ்ந்த ஓஷோ 1990 ல் ஜனவரி 19ல் இயற்கை எய்தினார்.

சிறிய வயதிலிருந்து கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் உடனுக்குடன் வாசிக்கும் திறமை படைத்தவர்.  கிட்டத்தட்டப் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பதிலிருந்து விலகியும் போய்விட்டார்.
\ அவருடைய எல்லாப் புத்தகங்களையும் அவர் கையால் எழுதவில்லை.  அவர் சொன்னதை மற்றவர்கள் குறித்துக்கொண்டு புத்தகங்களாக மாற்றி உள்ளார்கள்.  இப்படிப்பட்ட புத்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன.

எந்தச் சிக்கலான தத்துவங்களையும் எளிதாகப் புரியும்படி சொல்லிக்கொண்டே போவார்.
இவர் காலத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நிஸகர்தத்தா மஹாராஜ், யூ ஜி கிருஷ்ணமூர்த்தி என்று பல ஆன்மிக குருமார்கள் வாழ்ந்து வந்தார்கள்.  ஓஷோவை நிஸகர்தத்தா மஹாராஜ் தவிர எல்லோரும் கிண்டல் அடிப்பார்கள்.  குறிப்பாக யூ ஜி ஓஷோவை பயங்கரமாகக் கிண்டல் அடிப்பார்கள்.
இன்றைய ஜெக்கி வாசுதேவ் கிட்டத்தட்ட ஓஷோ ஸ்டைலில்  இருக்கிறார்.  ஓஷோவின் கண்கள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் கண்கள்.  
என்னதான் மற்ற குருமார்கள் கிண்டல் அடித்தாலும் ஓஷோ எழுதிய புத்தகங்கள் முன் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போக வேண்டியதுதான்.  ஓஷோவின் எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும்  ஒவ்வொருவரும் பரவசம் அடையாமல் இருக்க மாட்டார்கள்.  அந்த அளவிற்குத் திறமையானவர்.

அடையார் தியோசாபிகல் நூல்நிலையத்திலிருந்து ஓஷோவின் பதஞ்சலி யோகா ஐந்தாவது பாகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  படிக்கப் படிக்க அந்தப் புத்தகத்தைத் திருப்பிக்கொடுக்கவே எனக்கு மனமில்லை.

சரி, இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது எனக்கு என் நண்பர் கூறியபடி எக்ஸ்பிரúஸô காப்பி குடித்த மாதிரி இருக்கும். ஆரம்பித்தில். ஒரு கதைப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தூக்கிப் போடுவதுபோல் இம்மாதிரியான புத்தகங்களும் என்று எனக்குத் தோன்றும்.  ஆனால் எங்கே பார்த்தாலும் ஓஷோ புத்தகங்களை வாங்காமல் இருக்க மாட்டேன்.
சமீபத்தில் புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகம் தி புக் ஆப் சீக்ரட்ஸ்.  எங்கே  ஓஷோ புத்தகத்தைப் பார்த்தால் வாங்கிக் குவித்துவிடுவேனோ என்ற பயத்தில் ஓஷோ புத்தகம் விற்கும் பக்கத்திலேயே போய் நிற்கமாட்டேன்.
அன்று ஜெய்கோ என்ற புத்தக அலுவலகத்திற்குச் சென்றேன்.  ஆர்யாகவுடர் தெருவில்தான் அந்தப் புத்தகக் கடை இருந்தது.  என்ன சோகம்.  அங்குக் கிருஷ்ணா என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று இருந்தது.  700 பக்கங்கள் உள்ள புத்தகம்.  ரூ.375க்குக் கிடைத்தது. 
பொதுவாக ஓஷோ புத்தகங்கள் எல்லாம் கேள்வி பதில் வடிவத்திலிருக்கும்.  அந்த வடிவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதாவது ஒரு பக்கத்தைத் திறந்து எதாவது ஒரு கேள்வியை ஒரு பதிலைப் படித்தால் போதும். ஒன்றாம் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிக்க வேண்டாம். சரி, இந்தக் கொரானா நேரத்தில் ஓஷோ இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? தனித்திருக்கச் சொல்வார், விழித்திருக்கச் சொல்வார், மௌனமாக இருக்கச் சொல்வார்.  

     ஓஷோ பிறந்தநாளான இன்று கொஞ்சமாவது ஓஷோ புத்தகத்தைப் படிக்க வேண்டும்.        

29வது சூம் மூலம் கவிதை வாசிப்பு கூட்டம்.

. அழகியசிங்கர்

வரும் வெள்ளிக்கிழமை (11.12.2020) பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு கவிதை வாசிப்பு கூட்டம்.  நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதுமை செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  இக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அதைப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த முறை பாரதியார் கவிதைகளை அவருடைய பாடல்களை வாசிப்பதும் இசைப்பதுமாய் கூட்டம் நடத்தலாமென்று நினைக்கிறேன். எல்லோரும் இதில் கலந்து கொண்டு பாரதியார் பாடல்களை/கவிதைகளைப் பாட வேண்டும் அல்லது வாசிக்க வேண்டும்.


எல்லோரும் எந்தந்தப் பாடல்களை வாசிக்க அல்லது இசைக்கப் போகிறீர்கள் என்று முன்னதாகவே கூறி விடுங்கள்.  இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.


இக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் வாட்ஸ்அப்பில் எனக்கு எந்தப் பாடலை பாட விருப்பமென்று கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். 

என் வாட்ஸ் அப் எண் 9444113205.  அப்படி முன்னதாக சொன்னால் நான் வாசிப்பவர் பெயர் பற்றியும் அவர் இந்தப் பாடலை படிக்க/பாட குறித்துக்கொள்வேன்.                  

Meeting ID: 880 2637 8918 

Passcode: 655148

கவிதையும் ரசனையும் (பகுதி 2)

கவிதையும் ரசனையும் – 6

(பகுதி 2)

அழகியசிங்கர்

‘லாங்ஸ்டன் ஹியூஸ்’ கவிதையைப் பார்ப்போம்.

            ‘கலப்பு’ என்பது அக் கவிதையின் தலைப்பு.

            என் தந்தை ஒரு வெள்ளையன்

            என் தாய் ஒரு கறுப்பி

            என் வெள்ளை தந்தையைச் சபித்தால்

            என் சாபம் எனக்கே திரும்பும்

            என் கறுப்புத் தாயைச் சபித்தால்

            அவள் நரகத்தில் இருக்க விரும்பினால்

            அந்த கெட்ட விருப்புக்கு வருத்தம்

            அவள் நன்றாக இருக்கட்டும் அதுவே

            என் இப்போதைய விருப்பம்

            என் தந்தை இறந்தது அழகிய பங்களாவில்

            என் தாய் செத்தது ஒரு குடிகையில்

            நான் சாகப் போவது எங்கேயோ

            நான் வெளுப்பும் இல்லை கருப்பும் இல்லையே 

            பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு சிறுபத்திரிகைகள்தான் தான் அடைக்கலம் கொடுக்கின்றன.  ஆனால் இன்னும் கூட வணிக ரீதியாக இயங்கும் பத்திரிகைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பிரசுரம் செய்வதில்லை.  ஏன் என்று தெரியவில்லை?

            ஆனால் ஒருவர் விதம்விதமாக கவிதைகள் எழுத வேண்டுமென்று நினைத்தால் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் வாசிக்க வாசிக்கப் பலவிதங்களில் எழுத உதவும்.  இதை சி சு செல்லப்பா புரிந்து வைத்திருந்தார்.

            மேலே குறிப்பிடப்பட்ட லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதையைப் பார்ப்போம்.  தந்தை வெள்ளையனுக்கும் தாய் கறுப்பிக்கும் பிறந்திருக்கும் பையன் வழியாக இந்தக் கவிதை சொல்லப்பட்டிருக்கிறது.  பையனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சாகப் போவது எங்கே?  அவன் கருப்புமில்லை வெளுப்புமில்லை. அவன் தந்தை ஒரு வெள்ளையன் என்பதால் அவன் அழகிய பங்களாவில் இறந்து போகிறான். அவன் தாய் செத்தது ஒரு குடிசையில்.  அவன் வெள்ளைத் தந்தையைச் சபித்தால் என் சாபம் எனக்கே திரும்பும் என்று கவிகுரலோன் கூறுகிறான்.

            லாங்ஸ்டன் ஹியூஸ் ஒரு நீக்ரோ கவிஞர்.  இன்னும் அதிகமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து ஆராய வேண்டும் என்று தோன்றுகிறது.

            ‘பிரமிள் படைப்புகள்’ என்ற புத்தகத்தில் கவிதைகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  அதில் எஸ்ரா பவுண்ட் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் பிரமிள்.  அதில் ஒரு கவிதை. 

சுருட்டுக்கடை

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

நெடர்களைப் போஷிக்கும் புதனே! 

கெஞ்சிக் கேட்கிறேன்,

காலாகாலத்தில் 

எனக்கொரு

நட்டுக்கடை வைத்துக்கொடுங்கள் சாமி!

விதவிதமாகப் பதனிட்டு 

கண்ணாடி பீரோவினுள் 

அழகான பெட்டிகளில் 

அடுக்கப்பட்ட 

வெவ்வேறு வெட்பதட்பங்களின் 

சுருட்டுக்கள். 

கூடவே, எடைபோட 

எண்ணெய்ப் பிசுக்கு 

ரொம்பவும் இல்லாத ஒரு தராசு. 

இன்னும் ஒன்று – 

கலைந்த தலைமயிரைச் செப்பனிட்டு, 

சிறுவிஷமச் சொற்கள் பரிமாற 

அவ்வப்போது சில 

வேசிகளும் வரவேண்டும். 

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

திருடர்களைப் போஷிக்கும் புதனே! 

எனக்கு ஒரு சுருட்டுக்கடை வேண்டும் சாமி! 

இல்லையானால் வேறு ஏதும் ஒரு தொழில் – 

நிரந்தரமும் மூளை தேவைப்படுகிற 

இந்த எழுத்துத் தொழில் தவிர.  

            இந்தக் கவிதையைப் படிக்கும்போது சிரிப்பு தாங்க முடியவில்லை.  கவிதையில் திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்கிறார் தெரியுமா? சுருட்டுக் கடை வைத்துக்கொடுக்க அருள் புரிய வேண்டும் என்கிறார்.

      ஒரு கவிதையை எப்படியெல்லாம் கற்பனை செய்யலாம்  என்பதற்கு இது முன்மாதிரி.  எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் இதுமாதிரியெல்லாம் எழுதி உள்ளார்.

 கடைசியில் முடிக்கும்போது திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  ஏன் இப்படியெல்லாம் வேண்டிக்கொள்கிறார் என்றால் மூளை தேவைப்படுகிற எழுத்துத் தொழில் தவிர இதை அளிக்கச் சொல்கிறார்.

            இப்படி சிறுபத்திரிகைகளில் வரும் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை இன்னும் பின்னால் ஆராய்ந்து பார்ப்போம்.

(08.12.2020 தேதியிட்ட திண்ணை இணைய வார பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)