கவிதையும் ரசனையும் – 17 – 2

அழகியசிங்கர்

(தொடர்ச்சி)

நான் இந்த வகைமையில் கவிதையைப் பிரிப்பது கூட சரியா என்பது தெரியவில்லை. ஒரு கவிஞனின் ஆழ்ந்த அடிமனதில் அவனை அறியாமலேயே தென்படும் நிகழ்ச்சிகளைக் கவிதை விவரிக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை.

பெரும்பாலான கவிதைகள் ஆர்ப்பாட்டமாகவும், கருத்துக் குவியலாகவும், ஆபாசமாகவும் இருக்கின்றன. ஆனால் உள்முகத் தேடல் கவிதை வித்தியாசமாக இருக்கிறது. இது குறித்து யாராவது யோசித்தார்களா என்பதும் தெரியாது. நான்தான் யோசனை செய்து சொண்டிருக்கிறேன். மற்றவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?

நான் அதைப் பற்றி கவலைப் படப்போவதில்லை. பலவிதமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்த முறை நடந்த புத்தகக் கண்காட்சியில் நூற்றுக் கணக்கான கவிதைப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. வழக்கம்போல் கவிதைப் புத்தகத்தை ஒரு விஸிட்டிங் கார்டு மாதிரி பயன்படுத்திக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

யாரும் எந்தக் கவிதைப் புத்தகத்தையும் வாங்கத் தயாராக இல்லை. அதற்குக் காரணம் கவிதை எழுதுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். வாசகர்கள் இல்லை. .

தேவதச்சன் என்ற கவிஞரின் கவிதைப் புத்தகம் கூட தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளது. பெரும்பாலான கவிதைகள் உள்முகத் தேடல் கவிதைகளாக இருந்தாலும், தேவதச்சனின் குறும்பான கவிதைகளும் பல இந்தப் புத்தகத்தில் உண்டு.


நகத்தை


நகத்தை கடிக்கும்

பெண்ணே

என்

அகத்தையும் சேர்த்து

கடிக்கிறாயே””


பழத்தைச் சாப்பிட்டுவிடு

பழத்தைச் சாப்பிட்டுவிடு

நாளைக்கென்றால் அழுகிவிடும்

என்றாள் அம்மா

வாங்கி விண்டு உண்டேன்

இன்றை

இக் கவிதையில் இன்றை என்று முடிக்கும்போது கவிதையின் அர்த்தம் மாறிப்போய் விடுகிறது. யோசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேவதச்சன் கவிதைகள் குறித்து எழுதியதையும் இங்கே கவனிக்கப்படும்.

‘தேவதச்சனின் கவிதைகள் தமிழ் வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச் சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்தபோதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசிகொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. ‘

எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் கூற்று முற்றிலும் உண்மை.

கவிதை எழுதுவதைப் பற்றியே தேவதச்சன் இரண்டு மூன்று கவிதைகள் எழுதி உள்ளார்.


முகம்


கவிதையே

உனக்குத் தெரியுமா

நான் உன்னை

வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று

உன்னை வாசிக்காமல், மேஜையில் நீ

மூடிக் கிடக்கும்போது

நீ தொணதொண வென்று“

ஏதும் சொல்கிறாயா,

என் அம்மாவைப் போல

கவிதையே! நீ யார்

சென்னையைப் போல

இறக்கை முளைத்த நகரமா நீ

அல்லது

ஆள் நடமாட்டம் அற்ற

எங்கள் சிற்றூரின்

மதியவேளையா

அல்லது

அதிகாலைப் பறவையின்

உற்சாகப் பேச்சரவமா

அங்கங்கே சிதறிக் கிடக்கும்

கவிதைப் புத்தகங்களே!

என் குடும்ப அட்டையில்

உன் பெயர் இல்லைதான்

எனினும்

என் வீட்டை எப்போது

புகைப்படம் எடுத்தாலும்

சிரித்தபடி தெரிகிறது

உன் முகம்.

இது ஒரு உள்முகத் தேடல் கவிதை. இதைப் படிக்கும்போது நமக்குக் காரணமில்லாத வியப்பு ஏற்படுகிறது. இந்தக் கவிதையை எழுதிக்கொண்டிருக்கும்போது தேவதச்சனுக்கும் காரணம் புரியாத வியப்பு ஏற்பட்டிருக்கும். அல்லது இந்தக் கவிதையை எப்படி எழுதி எப்படி முடிக்கப் போகிறோம் என்று தெரியாமலிருக்க வேண்டும். இக் கவிதையுடன் தொடர்புடைய பல உள்முகத் தேடல் கவிதைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

‘பூவுடன் உரையாடல்’ என்ற பெருந்தேவி கவிதையைப் பார்க்கலாம்.


உன்னிலிருந்து நீ எப்போது வெளியேறப்போகிறாய்
நடைபாதையில் ஓர் அங்குல நீளச் செடியின்
வயலட் பூ என்னைக் கேட்டது
ஒவ்வொரு வசந்தத்திலும் இப்படி
எடக்குமடக்காகக் கேட்பது அதன் வழக்கம்தான்
எப்படி வெளியேறுவது என்றேன் சின்னப் பூவிடம்
எங்களைப் பார் என்றது தலையை ஆட்டி ஆட்டி
பக்கத்திலிருந்த இன்னும் குட்டிப் பூக்களெல்லாம்
என்னைப் பார்த்துச் சிரித்தன
ஒரே அவமானமாகிவிட்டது
இனிமேல்
தடுக்கிவிழுந்தாலும் சரி
அண்ணாந்து பார்த்து
நடக்கவேண்டியதுதான்
(அழுக்கு சாக்ஸ்)


அடுத்து அழகியசிங்கரின் ‘ஸ்ரீவித்யா பாட்டு பாடுகிறாள்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.


எல்லோரும் சமையல் செய்கிறார்கள்
இந்த வீட்டில் ஸ்ரீவித்யா
பாட்டுப்பாடிச் சமையல் செய்கிறாள்
சாம்பாருக்கும் ரசத்திற்கும் தெரியுமா?
அவள் பாட்டுப் பாடுகிறாளென்று
பேத்தி வீரிட்டுக் கத்துகிறாள்
அவள் ஓடிப்போய் சமாதானம் செய்கிறாள்
அடுத்த அறையில்
கணவன் போனில் பேசிக்கொண்டிருக்கிறான்
அவளுக்குப் புரியவில்லை
அவன் என்ன பேசுகிறானென்று
ஸ்ரீவித்யா பாட்டுப்பாடியபடி
சமையல் செய்து கொண்டிருக்கிறாள்
தட்டில் சாதத்தை வைக்கும்போதுதான்
சாம்பாரில் ரசத்தில் உப்பு இருக்கிறதா என்று
தெரியும்
ஏனென்றால் அவை அவளுடைய பாட்டைக்
கேட்பதில்லை.


இப்படியெல்லாம் விவரித்துக்கொண்டே போகலாம். உள்முகத் தேடல் கவிதைகளை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன