கவிதையும் ரசனையும் – 8

சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன்.

கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான் இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான். புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன். அப்படியும் அது புரியவில்லை என்றால் விட்டுவிடுவேன்.
சரி. ஒரு கவிதை புரியாமல் இருக்க வேண்டுமா? அல்லது புரியத்தான் வேண்டுமா? நிச்சயமாகப் புரியவேண்டும். வாசிப்பவருக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும் கவிதை.
இன்றைய சூழ்நிலையில் கவிதைப் புத்தகங்களே விற்கப்படுவதில்லை. புரியாத போகிற கவிதைப் புத்தகங்கள் நிச்சயமாக விற்கப் போவதில்லை.கவிஞர்களே அவர்கள் புத்தகங்களை வெளியிட்டு அவர்களே ரசித்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.
அதேசமயத்தில் ரொம்பவும் புரிகிற மாதிரி கவிதைகள் எழுதப்பட்டால் அவை கவிதைகள்தானா என்ற சந்தேகமும் வந்து விடும்.
ஒரு கவிதைப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அந்தப் புத்தகத்தைப் பத்திரப்படுத்தத் திரும்பிப் படிக்க ஒரு நியாயம் வேண்டும். அதுமாதிரியான புத்தகங்கள் எல்லார்கவனத்தையும் கவராமல் போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

‘அப்பாவின் நண்பர்’ என்ற சமீபத்தில் வந்த (அக்டோபர் 2020) புத்தகத்தில் கே.ஸ்டாலின் கவிதைகளைப்படிக்கும்போது எளிதாகப் புரிவதோடல்லாமல் கொஞ்சம் யோசிக்கவும் வைக்கின்றன.


அப்பாவின் நண்பர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு
அப்பாவின் நண்பரொருவரை
வழியில் சந்திக்க வாய்த்தது
அவரின் மகனாவென
அவரும் கேட்கவில்லை
இறந்து வருடங்களான
அப்பா குறித்து பகிர்ந்திட
என்னிடமும் எதுவுமில்லை
எனினும் -
எங்கள் கண்கள்
சந்தித்து மீண்ட
அச்சிறு கணத்தில்
எனக்குள்ளிருந்த அப்பாவும்
அவருக்குள்ளிருந்த அப்பாவும்
புன்னகைத்தபடி
கை குலுக்கிக்கொண்டதை
என்னைப்போலவே அவரும்
உணர்ந்திருக்கக்கூடும்


ஒரு விதத்தில் இந்தக் கவிதை நகுலனின் இராமச்சந்திரன் கவிதையை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் அக் கவிதையிலிருந்து இது மிகவும் விலகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பவரை அப்பாவின் நண்பர் என்று நிச்சயமாக கவிகுரலோனுக்குத் தெரிகிறது. நகுலன் கவிதையிலோ எந்த ராமச்சந்திரன் என்று யாருக்கும் தெரியவில்லை.இறந்து போனவரின் மகனா என்று வழியில் சந்தித்தவர் கேட்கவில்லை. ஏனெனில் நிச்சயமாக எதிரில் வருபவன் இன்னாரின் மகன் என்று தெரிந்திருக்கிறது. அவருக்கு அவனுடைய அப்பாவைப் பற்றிக் கேட்பதற்கு ஒன்றுமில்லை. அதேபோல் கவிகுரலோனுக்கும் சொல்வதற்கும் ஒன்றுமில்லைûல். இங்கே அவரிடம் அப்பாவைப் பற்றி பகிர்ந்திட ஒன்றுமில்லை என்கிறான் கவிகுரலோன்.
எனினும் – “எங்கள் கண்கள் சந்தித்து மீண்ட அச்சிறு கணத்தில் எனக்குள்ளிருந்த அப்பாவும் அவருக்குள்ளேயிருந்த அப்பாவும் புன்னகைத்தபடி கைக்குலுக்கிக் கொண்டதாக வர்ணிக்கிறார் கவிகுரலோன்.

இருவரும் சந்தித்தாலும் நேரே எதுவும் பேசவில்லை. இரண்டு பேருக்கும் கவிகுரலோனின் அப்பாவைப்பற்றிய நினைவுதான். வெறும் புன்னகையோடு ஒன்றும் சொல்லாமல் பிரிந்து போகிறார்கள்
அப்பாவைப் பற்றிய சிந்தனைகளோடு.இப்படிப்பட்ட நிகழ்ச்சி சாதாரணமாக ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நிகழக்கூடியதுதான். இந்தக் கவிதையில் இருவருக்கும் எந்த ஏமாற்றமும் எதிர்ப்படவில்லை. வெறும் புன்னகைப் புரிந்தபடி போய் விடுகிறார்கள். மிகக் குறைந்த வரிகளில் சிறப்பாக எழுதப்பட்ட கவிதை இது.


சற்றைக்கு முன்தான்

சற்றைக்கு முன்தான்
 உனது சாயலில்
 எனையொருத்திக் கடந்தாள்.
 எஞ்சிய எனது பயணத்தின்
 வெளியெங்கும்
 நிரம்பியது நின் நினைவு.
 விடிந்த பொழுதின்
 தொடுவானத்தில்
 மேகங்களிடையே பிறையென
 மிதந்துகொண்டிருப்பது
 அழுக்கு நீங்கிய
 உன் பெருவிரல் நகம்.
 உறைந்த தார்ச்சாலையில்
 காலைச்சூரியனின்
 கரங்கள் பட்டு மின்னும்
 கண்ணாடித்துண்டு
 அவ்வப்போது
 தோன்றி மறையும் உனது
 தெற்றுப்பல்.
 உதிர்ந்த காட்டுப்பூக்கள்
 மணமெனப் பரப்புவது
 உயிர்வரை ஊடுறுவும்
 உன் தேகத்தின் வாசனை.
 வழிப்போக்கர்களை
 ஆதூரமாய் தழுவிக்கொள்ளும்
 அடர் மரத்தின் பெரு நிழலென்பது
 என்றைக்கும் வற்றாத உனதன்பு.
 கடந்து சென்றது
 நிச்சயம் நீயாகவே இருப்பின்
 எதிர்த்திசையில்
 எனது சாயலில் நீயும்
 எனைக் கண்டிருக்கலாம்
 உனது வெளியெங்கும்
 நினைவுகளால் நான் நிரம்ப
 இன்று நாம் பயணித்தது
 திறந்துகொண்ட இறந்தகாலப்
 பாதையொன்றின் மீதெனலாம்.


நான் குறிப்பிட்ட முன் கவிதைக்கும் இந்தக் கவிதைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு கவிதைகளும் தெருவில் நடக்கிறது. தெருவில் ஒருவரைப் பார்க்கும்போது தோன்றும் எண்ணம்தான் கவிதையாக மலர்கிறது.
‘அப்பாவின் நண்பர்’ ஏற்கனவே தெரியும். சந்திக்கும்போது ஒருவரைப் பார்த்துப் புன்னகை செய்தபடி அப்பாவைப் பற்றிப் பேசாமல், ஆனால் பார்த்தபடியே போய் விடுகிறார்.
இன்னொரு கவிதையில் எதிரில் தென்படுகிற பெண்ணை ஏற்கனவே சந்தித்த பெண்ணை பார்த்தது மாதிரி ஞாபகப்படுத்துகிறர் கவிகுரலோன்.
இக் கவிதையில் ஏற்கனவே பார்த்த பெண்ணை நன்றாக ஞாபகப்படுத்துகிறார். தோன்றி மறையும் உனது தெற்றுப்பல் என்கிறர். அழுக்கு நீங்கிய உன் பெருவிரல் நகம் என்கிறார். அதை எதற்கு உவமைப் படுத்துகிறார் என்றால் விடிந்த பொழுதின் தொடுவானத்தில் மேகங்களிடையே பிறையென மிதந்து கொண்டிருப்பது என்கிறார்.
ஏற்கனவே சந்தித்துப் பழகிய ஒருபெண்ணின் ஞாபகமாய் இக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு கவிதைகளும் ரோடில் யாரையோ சந்திக்கும்போது ஞாபகத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன
முதல் கவிதை ‘அப்பாவின் நண்பர்’. அப்பாவைப் பற்றி ஞாபகப்படுத்தாமல் இருவரும் நழுவுகிறார்கள்.இன்னொரு கவிதையில் ஏற்கனவே சந்தித்த பேசிய ஒரு பெண்ணாக இவள் இருக்குமோ என்ற ஏக்கத்தில் தெருவில் நடந்து செல்லும் பெண்ணை ஞாபகப்படுத்திக் கொள்கிறார்.
கடைசியில் முடிக்கும்போது உனது வெளியெங்கும் நினைவுகளால் நான் நிரம்ப இன்று நாம் பயணித்தது திறந்துகொண்ட இறந்தகாலப் பாதையொன்றின் மீதெல்லாம். என்கிறார்.


அப்பாவின் நண்பர்’ என்ற இக் கவிதைத் தொகுப்பில் இன்னும் பல கவிதைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. எல்லோரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். டிஸ்கவரி புக் பேலஸில் வந்துள்ள இப்புத்தகம் விலை ரூ.100தான்.


(திண்ணை முதல் இணைய வாரப் பத்திரிகையில் 03 ஜனவரி 2021ல் பிரசுரமான கட்டுரை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன