.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்
அழகியசிங்கர்
அழகிரிசாமியின் நகைச்சுவை கதை. ஒரு நகைச்சுவை கதையை எழுதும்போது படிப்பவருக்கு அது நகைச்சுவை கதை என்ற உணர்வே ஏற்படக்கூடாது. பலர் நகைச்சுவை கதையைச் சொல்லும்போது தேவையில்லாததை நகைச்சுவை என்ற பெயரில் சேர்த்து துணுக்குத் தோரணமாக மாற்றி கதையைப் பலர் வீணாக்கி விடுவார்கள்.
கு.அழகிரிசாமி இயல்பாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார்.தானே கதையைச் சொல்கிறார். உண்மையில் தானே சொல்வதால் கு.அழகிரிசாமி இல்லை. ‘நான்’ என்பது ஒரு கதைசொல்லிஅந்தக் கதைசொல்லிக்குப் பெயர் கிடையாது. பெரும்பாலான கதைகளில் கு.அழகிரிசாமி இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்.
“ கதைசொல்லி அவன் இருந்த மாம்பலத்திலேயே அவன் கண்ணில் படாமல் ஆர்.எஸ்.ஆர.கல்யாண கிருஷ்ணன் என்பவன் மூன்று வருஷமும் ஏழு மாதமும் உலவியிருக்கிறானாம். கு.அழகிரிசாமி இனிஷியலோடு அடிக்கடி அவன் பெயரைக் குறிப்பிடுகிறார். கதைசொல்லியின் கண்ணில் படாமல் எப்படி அவனால் உலாவ முடிந்தது?
எழுதிக்கொண்டு போகிற அழகிரிசாமி கதைசொல்லி வாயிலாக இப்படி எழுதுகிறார் : ‘என் கண்ணில் கோளாறா? இல்லை, திடீரென்று மறையும் அபூர்வ சக்தி எதாவது கல்யாண கிருஷ்ணனிடம் இருந்ததா?’
ஏன் கல்யாண கிருஷ்ணனைத் தேடுகிறான் கதைசொல்லி. ஒரு காலத்தில் கதைசொல்லியும், கல்யாண கிருஷ்ணனும் எதிர் எதிர் வீட்டில் குடியிருந்தார்கள். கல்யாண கிருஷ்ணன் ஒரு நா காலை 7 மணிக்கு அவசரமாக வந்து கதைசொல்லியிடம் 37 ரூபாய் கேட்கிறான். மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்கே திருப்பித் தந்து விடுவதாகவும் சொல்கிறான்.இங்கே வேடிக்கையாக ஒரு உரையாடல் நடைபெறுகிறது.
“நான் மூன்று மணிக்கு வீட்டில் இருக்க மாட்டேனே?” என்கிறான் கதைசொல்லி.
“அப்படியானால் அபீசுக்கு வந்து பணத்தைக் கொடுத்து விடுகிறேன்” என்கிறான்.
“ஆபிசுக்கு வருவானேன்? ராத்திரி வீட்டிலேயே கொடுத்தால் போச்சு” என்கிறான் கதைசொல்லி.
கல்யாண கிருஷ்ணன் சொல்கிறான். “கையில் பணம் கிடைத்தால் உடனே கொடுத்து விடவேண்டும். ஆபிசுக்கு வந்து கொடுத்து விடுகிறேன்” என்கிறான்.
இப்படிப் பேசும்போதே தெரிகிறது. கல்யாண கிருஷ்ணன் பணம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என்று.
கல்யாண கிருஷ்ணன் கடனாகப் பணத்தை வாங்கிக்கொண்டு போனான்.. அவ்வளவுதான்.உடனே வீட்டையே காலி செய்து கொண்டு போய்விட்டான். அவன் தங்கியிருந்த வீட்டுக்காரன் சொல்கிறான். தங்கச்சாலைத் தெருவில் புது வீடு பிடித்திருக்கிறான் என்று.
கதைசொல்லிக்குப் பெரிய அதிர்ச்சி. கல்யாண கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்க அலுவலத்திலிருக்கும் இரண்டு பேர்களை (அவர்கள் தங்கசாலையில் இருப்பவர்கள்) ஏற்பாடு செய்கிறான்..
அவர்கள் தங்கசாலையில் கல்யாண கிருஷ்ணனை விசாரிக்கப் போனபோது அவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நகைச்சுவை உணர்வோடு கு.அழகிரிசாமி விவரிக்கிறார்.
ஒவ்வொரு வீடாக விசாரிக்கும்போது எத்தனையோ கூத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. நாலு வீடுகள் காலியான விபரம் தெரிய வருகிறது. அந்த வீடுகளில் அவர்களுக்கு வேண்டியவர்களைக் குடியேற்றியிருக்கிறார்கள்.
ஒரு வீட்டில் மாறு வேடம் போட்ட திருடர்கள் என்று விசாரிக்க வந்தவர்களைச் சந்தேகிக்கிறார்கள். தங்கச்சாலைத் தெருவில் கல்யாணராமன், கல்யாண சுந்தரம், கல்யாணம், மோஹனகிருஷ்ணன் ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்களையெல்லாம் தெரிந்து கொண்டார்கள். கல்யாண கிருஷ்ணனைத் தேடும் சந்தர்ப்பத்தில்.இப்படி கல்யாண கிருஷ்ணனைத் தேடும் சந்தர்ப்பத்தில் இரண்டு அழகான பெண்களை அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களில் ஒரு நண்பர் பிரம்மச்சாரி. இரண்டு பெண்களில் யாரையாவது மணம் புரிந்துகொள்ளலாமென்று நினைக்கிறார். அதற்குள் அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிடுகிறது. ஆனால் கல்யாண கிருஷ்ணன்தான் கிடைக்கவில்லை.
நிச்சயமாகக் கல்யாண கிருஷ்ணன் தங்கசாலையில் இல்லை என்பது தெரிந்து விடுகிறது.கல்யாண கிருஷ்ணனைத் தேடும்போது அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்த மளிகைக்கடைகக்காரன், வெற்றிலை பாக்குக்காரன், ஜவுளிக் கடைக்காரன், காய்கறிக் கூடைக்காரிகள், நெய் வியாபாரி, செண்ட் வியாபாரி காவல்காரனைப்லிக்காரன் என்று பலவகையான பேர்வழிகளை ஞாயிற்றுக்கிழமை கதைசொல்லியின் வீட்டில் ஒரு கூட்டமாக ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களிடம் பொதுவாக ஒரு விண்ணப்பத்தை முன் வைக்கிறான் கதைசொல்லி.. யார் கண்டுபிடித்தாலும் பணம் வசூல் செய்து அவனுடைய முப்பத்தேழு ரூபாயை வசூல் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறான். அப்படி வசூல் செய்த தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இனம் கொடுப்பதாக சொல்கிறான்.
நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார் அழகிரிசாமி என்பதற்கு இன்னொரு உதாரணம். கதைசொல்லியும் அவன் மனைவியும் எவ்வளவு சதவீதம் இனாம் தருவது என்பதைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதைக் கேட்டால் இனாம் வாங்க வருபவன் வேண்டாமென்று சொல்லிவிட்டுத் தப்பி ஓடியிருப்பார்கள் என்பது நிச்சயம் என்று கிண்டலாகச் சொல்கிறார் அழகிரிசாமி.
3 வருஷமாகக் கல்யாண கிருஷ்ணன் என்ற ஆசாமி தட்டுப்படவே இல்லை. காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போனபோது ஓய்வு நேரத்தில் கல்யாண கிருஷ்ணனைத் தேடிக்கொண்டிருக்கிறான். அகப்படவே இல்லை. ஏன் காஞ்சிபுரத்தில் தேடுகிறான்? எப்போதும் காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போவதாகக் கல்யாண கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருப்பான்.
காபூல்காரனைப் பார்த்தவுடன் கல்யாண கிருஷ்ணன் சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கதைசொல்லி உள்ளம் துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் விசாரிக்கத் தயக்கம். கதைசொல்லியைப் பார்த்து காபூல் காரனே மேலும் பல தகவல்களைத் தெரிவிக்கிறான்.
கதைசொல்லியின் கோஷ்டியைப்போல் இன்னும் ஏழு கோஷ்டிகள் சென்னை மாநகரத்தில் இருப்பதாகவும். ஒவ்வொருவரும் கல்யாண கிருஷ்ணனைத் தேடுவதில் பத்து பன்னிரண்டு வருஷங்களாக ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறான்.
காபூல்காரன் சொன்னதில் இன்னொரு விஷயம் கதைசொல்லிக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் இதே மாம்பலம் ஏரியாவில் கல்யாண கிருஷ்ணன் இன்னொரு குடும்பத்தை கதைசொல்லியை ஏமாற்றியதுபோல் ஏமாற்றி இருக்கிறான். காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போகப்போவதாகவும் அவசரமாகப் பணம் தேவைப் படுவதாகவும் கூறி மறுநாள் 3 மணிக்குப் பணம் தருவதாகவும் சொல்லி ஏமாற்றியதை காபூல்காரன் குறிப்பிடுகிறான். இதைக் கேட்டவுடன் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது கதைசொல்லிக்கு..
கல்யாண கிருஷ்ணனுக்கு எதாவது ஒரு தெய்வத்தின் சகாயமோ அல்லது பூதத்தின் சகாயமோ நிச்சயம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி..இது நடந்து 7 வருடங்கள் ஓடிவிட்டன.
கதைசொல்லிக்குத் கல்கத்தாவிற்கு மாற்றல் ஏற்பட்டு மாம்பலத்தை விட்டுப் போய் விடுகிறான். கல்கத்தாவில் உத்தியோகம் காரணமாக அந்தமான் தீவிற்குப் போகும்படி நேர்கிறது. அங்கே ஒரு சில தமிழ் குடும்பங்கள் இருப்பதாகத் தெரிந்து போர்ட்பிளேர் நகரில் தென்கோடியில் செல்கிறான். ஒரு தமிழர் குடும்பத்தை மாலையில் சந்திக்கிறான்.
அவரிடம் தமிழில், உங்கள் சொந்த ஊர் என்று கேட்கிறார். அந்த மனிதன் திண்டுக்கல் என்கிறார்.அவர் தான் ஒரு குமாஸ்தா என்றும், தான் வேலை பார்க்கும் மர வியாபாரக் கம்பெனி பத்து வீடு தள்ளியிருப்பதாகக் கூறுகிறார்.
“எல்லோரும் தமிழர்கள்தானே?” என்று கேட்கிறான் கதைசொல்லி.
“தமிழர்கள் எட்டு பேர்தான். நான்கு பேர் கூலிகள். மூன்று பேர் கிளார்க்குகள்.”
“மொத்தம் ஏழுதானே.“
“இல்லை எட்டுபேர்கள். மானேஜர் கல்யாண கிருஷ்ணனைச் சேர்க்க மறந்துவிட்டேன்,” என்கிறான் குமாஸ்தா.
இந்தக் கதையின் பெரிய டுவிஸ்ட் இந்த இடத்தில் ஏற்படுகிறது. ஒருவழியாக கதைசொல்லி கல்யாண கிருஷ்ணனைக் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறான்.
திகைப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஆர்.எஸ்.ஆர் கல்யாண கிருஷ்ணனா” என்று கேட்கிறான் கதைசொல்லி.”ஆர் எஸ் ஆர் கல்யாண கிருஷ்ணன்தான்” என்கிறான் குமாஸ்தா.
திகைப்படைகிறான் கதைசொல்லி. அவன் தேடிவந்த கல்யாண கிருஷ்ணன் மாட்டிக்கொண்டு விட்டான்.”அவரைப் பார்க்க வேண்டும்” என்கிறான்
கதைசொல்லி. இந்த இடத்தில் அழகிரிசாமி உள்ளே புகுந்து இப்படிச் சொல்கிறார்.
‘கல்யாண கிருஷ்ணா. ஆர்.எஸ்.ஆர்
கல்யாணசிருஷ்ணா. அந்தமான் தீவில் வந்துதான் என்னிடம் அகப்பட வேண்டுமென்று இருந்தாயோ? எப்பொழுதும் தர்மத்துக்குத்தாண்டா வெற்றி. நீ தப்பிக்க முடியாது. நீ கெஞ்சினாலும் விட மாட்டேன். என்றெல்லாம் எழுதிக்கொண்டு போகிறார்.பின் அந்தக் கல்யாண கிருஷ்ணனைச் சந்திக்க அனுமதி பெற்று சந்திக்கிறான். சந்தித்த பிறகு பெரிய ஏமாற்றம்.
இந்தக் கல்யாண கிருஷ்ணன் வேறு..அந்தக் கல்யாண கிருஷ்ணன் வேறு.
கல்யாண கிருஷ்ணன் அகப்படுவதற்குப் பதில் கதைசொல்லி அகப்பட்டுக்கொண்டான் கல்யாண கிருஷ்ணன் என்ற பெயரில் இருக்கும் மானேஜரிடம்..
“மன்னிக்க வேண்டும். ஹி…ஹி..என் நண்பன் கல்யாண கிருஷ்ணன் என்று நினைத்தேன்” என்கிறான் கதைசொல்லி அவரைப் பார்த்து.
“உங்கள் நண்பர் ஆர்.எஸ்.ஆர். கல்யாண கிருஷ்ணனா” என்று கேட்கிறார் அவர்.
“ஆமாம்.” என்கிறான் கதைசொல்லி.
“எதற்கு நீங்கள் பார்க்க வேண்டும்.?”
“எனக்கு அவர் பணம் தர வேண்டும் என்கிறான் கதைசொல்லி.
துள்ளி எழுந்தார் மானேஜர்.
“அடப்பாவி எனக்கும் அவன் பணம் தரவேண்டும்.”
“எனனே?” என்கிறான் கதைசொல்லி ஆச்சரியத்துடன்.
“ஆமாம். 120- தரவேண்டும். மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவதாகச் சொன்னான். அந்தமான் தீவில் நம்ம ஆண் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்று உதவினேன். ஆசாமி பணத்தை வாங்கிக்கொண்டு கப்பலேறி விட்டான். வருஷம் இரண்டாகிறது. என்று மானேஜர்சொல்லி முடிக்கிறார்.
இது ஒரு நகைச்சுவை கதை. அழகிரிசாமி ஜாக்கிரதையாக எழுதிக்கொண்டு போகிறார்.கல்யாண கிருஷ்ணன் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு கடைசி வரை சிக்காமலிருக்கிறான். அதுமாதிரி சிலர் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் என்கிறது கதை. கதையை எழுதிக்கொண்டு போன விதம் சிறப்பாக உள்ளது.
(27.12.2020 அன்று திண்ணை முதல் இணைய பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)