துளிகள் 150
அழகியசிங்கர்
இரண்டு மாதங்கள் பெண் வீட்டிலிருந்துவிட்டு திரும்பவும் மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்தவுடன் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
பெண் வீட்டிற்குப் போனபோது மிகக் குறைவாகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போனேன். எளிதாகப் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். பிரும்மாண்ட ‘கரமாஸவ் சகோதரர்கள்’ என்ற ‘தஸ்தயேவ்ஸ்கி’ புத்தகத்தைப் படித்து முடித்தேன். இத்தனையும் பெண் வீட்டில்.
என் வீட்டில் ஒரு கட்டில் முழுவதும் புத்தகங்கள். எதை எடுத்துப் படிப்பது என்ற குழப்பத்தில் இரண்டு நாட்கள் ஒன்றும் படிக்காமல் காலத்தைக் கழித்தேன்.
மெதுவாக கட்டிலில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கலாமென்று தனித்தனியாக எடுத்து வைத்து அடுக்கி வைத்தேன். கிட்டத்தட்ட 400 அல்லது 500 புத்தகங்களுக்குக் குறைவில்லாமலிருக்கும். அதில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் என் கண்ணை உறுத்தியது.
அது வேறு ஒன்றுமில்லை என் சிறுகதைத் தொகுப்புதான். 664பக்கங்கள் கொண்ட தொகுப்பு. 100க்கும் மேற்பட்ட கதைகள் கொண்ட தொகுப்பு.
ஏன் இதை மட்டும் சொல்கிறேன்? என் கதைகளைப் படிப்பவருக்குத் தெரியும் அதன் சுவை.
உண்மைதான் எலிக்கு மட்டும் அது தெரிந்து சில பக்கங்களைச் சுவைத்து விட்டது. எங்கோ புத்தகக் கட்டின் அடியிலிருந்த அந்தப் புத்தகத்தை மட்டும் எலியனார் பதம் பார்த்து விட்டார்.
எலியனாரைப் பார்த்தால் கேள்வி கேட்க வேண்டும். எப்படி இருந்தது என் புத்தகம் சுவைக்க என்று.