அழகியசிங்கர்
கடந்த ஒரு மாதமாகக் கவிதை வாசிக்கும் கூட்டத்தை நடத்தி வருகிறேன். இந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது என்று யோசிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் கவிதை எழுத ஆரம்பித்தது அப்போதுதான். மக்கள் தலைவர் ஜீவா அவர்களின் புதல்வர் என்னுடன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் இப்போது ஞாபகம் வரவில்லை.
அவர் ஒரு முறை கடற்கரையில் நடக்கும் ஒரு கவிதைக் கூட்டத்திற்கு என்னை அழைத்துப் போனார். கடற்கரையில் அப்போது பொன்னடியான் நடத்தும் கவிதை வாசிக்கும் கூட்டம். மாதம் ஒருமுறை அக்கூட்டம் கூடும்.
கவிதை வாசிக்க வருபவர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு கவிதை வாசிப்பார்கள்.
ஒவ்வொருவரும் எப்போது தம் கவிதையை வாசிப்பது என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
ஆரம்பத்தில் கலந்து கொண்ட நான், பின் நாட்களில் போவதை நிறுத்திக்கொண்டேன். டிவியில் அவர்கள் வாசிப்பதைப் படம் பிடிக்கிறார்கள் என்றால் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதன்பின் சில இலக்கிய நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பால் கவிதை வாசிப்பது மௌனமாகத்தான் வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் உடையவனாக இருந்தேன்.
ஆனால் உண்மையில் யாருமே கவிதைகளை வாசிப்பதில்லை. மௌனமாகக் கூட. நாம் எழுதும் கவிதைகளையே சத்தம் போட்டு வாசித்துப் பழக வேண்டும். அப்போதுதான் நம் கவிதையில் எதாவது தப்பு செய்கிறோமா என்று தெரியும்.
இப்போது கவிதை எழுதும் இளைஞர்களின் கவிதைகளை நாம் பார்ப்பது கூட கிடையாது. ரசிப்பதும் கிடையாது. நயமாக எழுதியிருக்கிறார்களா என்பதும் தெரிவதும் கிடையாது.
சமீபத்தில் நடந்த புத்தகக் காட்சியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பல கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார்கள். ஆரம்பத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் கவிதை வாசிக்க வாசிக்கக் கூட்டம் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் ஏற்பாடு செய்த ஒருவரும் கவிதை வாசிக்கக் காத்திருந்தவர் ஒருத்தர்தான் இருந்தார்கள்.
யாரும் மற்ற கவிஞர்கள் வாசிக்கும் கவிதைகளைக் கேட்கப் பொறுமையுமில்லை. அக்கறையுமில்லை.
சூம் கூட்டம் ஆரம்பித்தபோது எனக்குக் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்த வேண்டுமென்று தோன்றியது. அந்த முயற்சியில்தான் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்துகிறேன். கிட்டத்தட்ட 34 கவிஞர்கள் 100க்கும் மேற்பட்ட கவிதைகளைக் கடந்த ஒரு மாதமாகக் கேட்டிருக்கிறோம்.
இப்போது எழுதும் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அவர்களுடைய கவிதைகளை வாசிக்க வர வேண்டும்.
கவிதை வாசிப்பதில் நாம் எப்படி ஆர்வமாக இருக்கிறோமோ அதேபோல் கவிதையைக் காது கொடுத்துக் கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். இன்னும் கேட்டால் கவிதையை வாசிப்பதைவிடக் கேட்பதில் முக்கியத்துவம் தரவேண்டும். பலதரப்பட்ட கவிஞர்களின் கவிதைகளைக் கேட்கும்போது பலவிதமான குரல்களைக் கேட்கிறேன். எதை வேண்டுமானாலும் கவிதைப் பொருளாக எடுத்துக்கொண்டு கவிதை வாசிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இன்னும் தோண்டத் தோண்ட பலரிடமிருந்து அற்புதமான கவிதைகள் வருமென்று தோன்றுகிறது. ஏற்கனவே கவிதை வாசித்த சிலர் அடுத்த கூட்டத்திற்கு வருவதில்லை. கவிதை மீது அக்கறை இருந்தால் கேட்க வேண்டுமென்று நினைப்பார்கள்