அழகியசிங்கர்
எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டுப் படிக்க ஆரம்பித்தேன்.
அவருடைய ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஆண்டு? ஞாபகமில்லை. ஆனால் ஜானகிராமனுடன் கூட இன்னும் சில நாவலாசிரியர்களின் நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆசிரியர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ஜானகிராமனும் அதிலிருந்தார். கிட்டத்தட்டத் தமிழில் இலக்கிய நாவல்கள் பல வெளிவந்துள்ளன. அப்படி ஒவ்வொன்றாகத் தேடிப் படிக்கும்போது ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள’, ‘மரப்பசு’ நாவல்களையும் படித்தேன்.
பின்பு ‘மோகமுள்’ என்ற நாவலையும் படித்தேன். ஜானகிராமன் நாவல்களில் பெண் பாத்திரங்கள் படும்பாட்டை நினைத்துப் பார்த்ததுண்டு. பொதுவாக அவருடைய நாவல்களில் ‘அடல்டிரி’ விஷயம் முக்கியமாகக் கையாளப்படுகிறது. ‘அம்மா வந்தாள்’ நாவலில் பூடகமாகவும், ‘மரப்பசுவில்’ பகிரங்கமாகவும் வெளிப்படுகிறது.
பிறகு அவருக்கு எழுதுவது என்பது கைவந்தகலையாக இருக்கிறது. ஆண் பெண் உறவுமுறையில் உள்ள ஒழுங்கின்மையையும், முரண்பாட்டையும் சுவாரசியமான முறையில் எழுதி உள்ளார். நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள் என்று இலக்கியத்தில், பல தளங்களில் செயல்பட்டவர் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.
ஜானகிராமனைப் படிக்கும்போது, இங்கு கு.ப.ராவையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண் – பெண் உறவின் அதீதப் போக்கை முரண்பாட்டை கு.ப.ரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர். எளிமையான நடையில், பூடகமாக எழுதுவது அவருடைய கலை. அதே பாணியை ஜானகிரமான் ஸ்வீகரித்துக் கொண்டவர். குறைந்த வயதிலேயே கு ப ரா மறைந்து விட்டார். அவர் இல்லாத குறையைப் போக்கியவர் ஜானகிராமன்.
ஜானகிராமனின் எல்லை நீண்டு, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், என்றெல்லாம் போய்விட்டது.
அவர் நாவல்களை மட்டும் படித்துப் பழக்கப்பட்ட எனக்கு, அவர் சிறுகதைகளைப் படிக்க ஏனோ அப்போது தோன்றவில்லை. அதனால் அவர் சிறுகதைகளை முதலில் படிக்க ஆரம்பிக்கவில்லை. இப்போதுதான் அவர் சிறுகதைகளைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. (இன்னும் வரும்)