நியாயமா?



அழகியசிங்கர்

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் பத்திரிகைகள் வாங்குவேன்.  திங்கட் கிழமை தினமணி,  புதன் கிழமை தினத்தந்தி.  சனிக்கிழமை தமிழ் இந்து. ஞாயிற்றுக்கிழமை தமிழ் இந்து, தினமணி, தினமலர்.  ஏன் அப்படி வாங்குகிறேன் என்று கேள்வி கேட்கத் தோன்றும்.  புத்தகங்கள் பற்றிய செய்திகள் இந்தக் கிழமைகளில் இந்தப் பத்திரிகைகளில் வெளிவரும்.

இதனால் நாம் பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.  ஓரளவு புத்தகங்களைப் பற்றி தகவல்களை இப் பத்திரிகைகள் தருகின்றன.  இது மாதிரி யாரும் செய்வதில்லை.  உண்மையில் அனுப்பப் படுகிற எல்லாப் புத்தகங்களைப் பற்றி எழுதுவது கூட இப் பத்திரிகைகளால் முடியாது. ஒரு சமயம்  விருட்சம் வெளியீடாக வந்த காஞ்சி மகானைப் பற்றிய புத்தக விமர்சனம் தினமணியில் வந்தது. அது வெளிவந்தவுடன் தொடர்ந்து போன் வந்து 100 பிரதிகள் வரை விற்றது.  என்னால் நம்ப முடியவில்லை.  ஆனால் இலக்கியப் புத்தகங்களுக்கு இந்த மதிப்பு கிடையாது.  இரண்டு மூன்று போன்கள் வந்தால் ஜாஸ்தி.  பெரும்பாலும் விஜாரித்துவிட்டு விட்டுவிடுவார்கள்.   இருந்தாலும் விருட்சம் வெளியீடாக வரும்  புத்தகங்களை அனுப்பிக் கொண்டிருப்பேன்.  

இன்றைய தினமணி (09.03.2020) இதழில் என் நாவலைப் பற்றி நூல் அரங்கத்தில் வரப்பெற்றோம் என்ற பகுதியில் குறிப்பு வந்திருந்தது.  பெரிய ஏமாற்றமாக இருந்தது எனக்கு.  

தனி இதழ் நன்கொடை ரூ.20 என்று மட்டும் பிரசுரம் செய்திருந்தார்கள்.  அது நாவல் என்றெல்லாம் குறிப்பிடவில்லை.  படித்துவிட்டு புத்தக விமர்சனம் செய்வார்களென்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். தினமணியில் அரைகுறையாய் வந்ததைப் படித்து இரண்டு பேர்கள் போன் செய்தார்கள்.  அவர்களுக்கும் பெரிய குழப்பம்.  அந்தத் தலைப்பு ஒரு நாவலின் தலைப்பு என்று புரியவில்லை. நாவலை வாங்குவதற்குப் பதில் நான் கொண்டு வரும் விருட்சம் பத்திரிகைக்கு ரூ.20 அனுப்புகிறேன் என்று ஒருவர் குறிப்பிட்டார்.  பெரிய ஏமாற்றம் எனக்கு. நான் எதிர்பார்த்தது நாவல்.  ஒரு தகவலைச் சரியாகத் தர தினமணி தவறி விட்டது என்று எனக்குப் பட்டது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன