அழகியசிங்கர்
2015 ஆம் ஆண்டுதான் பத்துக்கும் மேற்பட்ட தீபாவளி மலர்கள் வாங்கினேன். முக்கிய காரணம். பட்டாசு வாங்கி பணத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான். எல்லாம் வாங்கி வைத்ததுடன் சரி, புரட்டிப் பார்த்ததோடு சரி, தீபாவளி மலர்களில் வழவழப்பான அட்டைகளைத் தடவியதோடு சரி. கோபுர தரிசனம் என்ற தீபாவளி மலர். எப்போதும் தீபாவளி மலர்கள் வாங்கும் கடைகளில் கிடைக்கவில்லை. தி நகரில் உள்ள ஒரு கடையில் வாங்கினேன். அந்த வருடம் விரட்டி விரட்டி தீபாவளி மலர்களாகச் சேர்த்தேன்.
என் இலக்கிய நண்பர்களுக்கு தீபாவளி மலர்கள் பொருட்டல்ல. யாருக்கும் நான் வாங்கினதும் தெரியாது. கேட்கவும் இல்லை. ஆனால் என் பெண்ணின் மாமியார் ஆனந்தவிகடன் தீபாவளி மலரை வாங்கி நிதானமாகப் படித்துவிட்டுக் கொடுத்து விட்டார்.
தீபாவளி மலர்களை நான் பரன் மீது ஒளித்து வைத்தேன். அந்த வருடம் முழுவதும் நான் எந்த தீபாவளி மலரையும் படிக்கவில்லை. 2016ஆம் ஆண்டு எந்தத் தீபாவளி மலரையும் வாங்கவில்லை. 2015 தீபாவளி மலர்களையும் இன்னும் படிக்கவில்லை. என்னுள் இருந்த இந்தத் தீபாவளி மலர் மோகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து விட்டது. ஆனால் மனதிற்குள் ஒரு தீபாவளி மலர் தயாரித்துக்கொண்டே இருக்கிறேன்.