அழகியசிங்கர்
புராதனக்குடுவை
பா ராஜா
மிக அழகான வேலைப்பாட்டுடன் கூடிய
புராதனக்குடுவையன்று எனக்குக்கிடைத்திருக்கிறது
அதனைக்கொண்டு
பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்
நிதி திரட்ட உண்டியல் குலுக்கலாம்
கள்ளருந்தப் பயன்படுத்தலாம்
கழிப்பறையின் குவளையாக்கலாம்
திரியன்றுப் போட்டு விளக்காக்கலாம்
காகங்களுக்கு நீர் வைக்கலாம்
அரிசியளக்கும் படியாக்கலாம்
படுக்கையில் கிடக்கும் தகப்பனின் மூத்திர டப்பாவாக்கலாம்
பூஜையறையில் வைத்துப் பூஜிக்கலாம்
உள்ளே பூதமிருப்பதாய் கோகுலிடம் பயம் காட்டலாம்
மண்ணை நிரப்பி டேபிள் ரோஜா செடி வளர்க்கலாம்
அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாம்
இனப்பெருக்கஞ்செய்யத் தோதாய் பறவைக்கூட்டின் மூலையில்
பொருத்தலாம்
நாட்டாமைகள் எச்சியுமிழ் சினிமாவில் நடிக்க வைக்கலாம்
அல்லது
இறுதிச்சடங்கில் அஸ்தியெடுப்பதற்கென பத்திரப்படுத்தலாம்
எவ்விதமதனைப் பயன் படுத்துவதென்ற பெருங்குழப்பத்தால்
சிரம் வெடித்துச்சிதற
கழுத்தின் மேல் அமர்ந்திருக்கிறது அப்புராதனக்குடுவை
சற்றே சிதிலமடைந்து.
நன்றி : மாயப்பட்சி – பா ராஜா – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 64 – விலை : ரூ.60