அழகியசிங்கர்
நான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் இனிமேல் முடியாது. அதாவது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது கலவரமாக இருந்தது. முன்பெல்லாம் ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் இந்திப் பாடம் நடத்துவார்கள். அப்போது தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்ததால் இந்தியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
குடுமி வைத்துக்கொண்டிருப்பார் இந்தி கற்றுத் தரும் ஆசிரியர். கூட்டமாக மாணவர்கள் எல்லாம் கெரோ செய்தார்கள். நான் படித்தப் பள்ளிக்கூடத்தில் அந்த ஆசிரியரை அதன் பின் பார்க்கவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தி விட்டார்களா? என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாவம். பள்ளிக்கூடத்திலிருந்து வரும் மாதச் சம்பளம் அவருக்குப் போயிருக்கும்.
அதன் பின் இந்தி கற்றுக்கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. எனக்கும் இந்தி ஞாபகமில்லை. பின் வேலையெல்லாம் கிடைத்து சிறிது மூச்சு வாங்க நேரம் இருந்தபோது இந்தி கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்தேன். மாம்பலத்தில் எங்கே இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தேன். கோதண்ட ராமர் கோயில் பக்கம் வகுப்பு நடத்துவதாக சொன்னார்கள். நானும் சேர்ந்து கொண்டேன்.
பாடம் நடத்த நடத்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. கா வில் எத்தனை விதமான கா சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். பிராத்மிக் என்ற அடிப்படை தேர்வில் 13 மதிப்பெண்கள் வாங்கி தோல்வி அடைந்தேன். உண்மையில் காப்பி அடித்து எழுதச் சொன்னார்கள். முடியவில்லை. என்னைவிட பொடியன்கள் எல்லாம் என் பக்கத்தில் அமர்ந்து பாஸ் செய்து விட்டார்கள்.
எனக்குச் சொல்லிக்கொடுத்த டீச்சரைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். அவ்வளவு ஒல்லியாய் இருப்பார். இனிமேல் முடியாது என்று தோன்றியது.
வங்கியில் இலவசமாக இந்தி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். என்னால் அதிலும் வெற்றிகரமாக வர முடியவில்லை. ஆரம்பத்தில் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளலாமென்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.
சமீபத்தில் பீனிக்ஸ் போயிருந்தேன். அங்கு ஒரு கூட்டம். ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியவர்கள் கலந்து கொண்டார்கள். எல்லாரும் இந்தி பேசிக்கொண்டிருந்தார்கள். நான் முழித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்தது எனக்குச் சரியாக ஆங்கிலமும் பேச வரவில்லை என்று.