அசோகமித்திரனும் ஜானகிரமானும்

அழகியசிங்கர்

ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி கதைப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்து முடித்தப்போது எனக்கு அசோகமித்திரனின் கதைகள் ஞாபகத்திற்கு வந்தன.  

என்னிடம் அசோகமித்திரன் கதைகள் படிக்க எந்தப் புத்தகமும் இங்கு (அமெரிக்காவில்) கொண்டு வரவில்லை.  ஆனால் ஒரு கேள்வி என்னுள் எழுந்தது?  

இங்கு அசோகமித்திரனை விட ஜானகிராமன் சிறந்த எழுத்தாளர் என்றோ ஜானகிராமனை விட அசோகமித்திரன் சிறந்த எழுத்தாளர் என்று நிரூபிக்கப் போவதில்லை.  

ஆனால் இரண்டு பேர்கள் எழுதுகிற சிறுகதைகளை அலச முடியுமா என்று யோசிக்கிறேன்.

ஜானகிராமன் அசோகமித்திரன் மாதிரி கதை எழுத முடியாது.  ஆனால் அசோகமித்திரன் நினைத்தால் ஜானகிராமன் மாதிரி எழுத முடியும்.  அதாவது 50 சதவீதம்.  

உதாரணமாக அக்பர் சாஸ்திரி கதையை எடுத்துக்கொண்டால் அசோகமித்திரன் இப்படி எழுதி இருப்பார்.  அக்பர் சாஸ்திரி கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.  யார் கூப்பிட்டும் எழுந்திருக்கவில்லை என்று எழுதி முடித்திருப்பார்.  ஆனால் ஜானகிராமன் இன்னும் கூடுதலாக.

68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிளக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவம் சொல்லிக்கொண்டு போகிறார். உற்சாகமாக. சத்தமாக.   

இப்படி ஒரு முடிவை அசோகமித்திரன் சொல்லவே மாட்டார்.  அசோகமித்திரன் ஒரே வரியில் வாசகனை வசியப்படுத்துவதுபோல் போறப்போக்கில் சொல்வதுபோல் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.  ரிக்ஷா என்ற கதையில் அசோகமித்திரன், ஒரு இடத்தில், ‘உலகம் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்று விட்டது,’ என்று எழுதி இருப்பார்.  மொத்தமே இரண்டு பக்கங்கள்  கொண்ட கதையில் இப்படி ஒரு வரியை எழுதிவிட்டு ஒன்றும் தெரியாமல் போய்விடுவார்.

ஆனால் ஜானகிராமனோ விட மாட்டார்.   அவருடைய வர்ணனைகளும் வித்தியாசமாக இருக்கும்.  

கள்ளி என்கிற கதையில் ஜானகிராமன் இப்படி எழுதுகிறார். ‘கெட்டவர்கள் சேர்கிற பட்டணம்.  கெடாதவர்கள் சேர்கிற பட்டணம். பசிக்கிறவர்கள் வந்து சேர்கிற பட்டணம்.  இருக்கிறவர்கள் போதாதென்று ஊரிலிருந்து வேறு பணத்தைக் கொண்டு வந்து வயிற்றில் அடிக்கிறவர்கள் தொகையைப் பெருக்குகிற பட்டணம்.’ 

என்றெல்லாம் எழுதிக்கொண்டு போயிருக்கிறார்.  அசோகமித்திரனால் இதுமாதிரியெல்லாம் எழுதியிருக்கவே முடியாது. முடியாது ஏன்பதைவிட தேவையில்லை என்று நினைப்பவராக எனக்குப் படுகிறது.

ஜானகிராமன் எழுதியிருக்கிற துணை என்ற கதையில், ஒரு இளைஞன் இரண்டு வயதானவர்களை மஸ்டர் ரோலில் கையெழுத்துப் போட அழைத்துக்கொண்டு போய் திரும்பிவரும்போது குதிரை வண்டி குடை சாய்ந்து விடும்.  ஆனால் இங்கு அடிபடுவது இளைஞன் மட்டும்தான்.  3 மாதம் அலுவலகம் போக முடியாமல் எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இதை அலாதியாக ஜானகிராமன் விவரித்துக்கொண்டே போவார்.  இதை ஜானகிராமன் இப்படி விளக்குகிறார்.  ‘எனக்கு எழுந்திருக்க முடியவில்லை.  வலது முன்னங்கை வளைந்திருந்தது.  ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.  ரத்தத்தைப் பார்த்ததுதான் எனக்குத் தெரியும்.  கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று.’ இதையே அசோகமித்திரன் இவ்வளவு வரிகள் எழுதியிருக்கமாட்டார்.  

எலும்பு முறிவோடு ஆஸ்பத்திரியில் கட்டுப்போட்டுக்கொண்டிருந்தான் என்று முடித்திருப்பார்.

குழந்தைக்கு ஜ÷ரம் என்ற கதையில் ஜானகிராமன் கொண்டு போகிற முடிவை அசோகமித்திரன் எழுதியிருக்கவே

மாட்டார்.  பாதியிலேயே கதையை முடித்திருப்பார்.

சரவண வாத்தியார் பாடப்புத்தகங்களை அச்சிடும் பஞ்சுவைப் பார்த்து புத்தகம் எழுதிக்கொடுத்ததற்காகப் பாக்கிப் பணம் கேட்கிறார்.  அவன் அவருடன் தகராறு செய்கிறான்.  கொடுக்கவேண்டிய பணத்தைக் குறைவாகச் சொல்கிறான்.  அவனைப் போய்ப் பார்க்கக்கூடாது இனிமேல் என்று நினைக்கிறார் சரவண வாத்தியார்.  

குழந்தைக்கு சுரம்.  வேற வழியில்லை.  அவனைப் பார்க்கத் திரும்பவும் பார்க்கப் போகவேண்டும்.  போகிறார்.  அங்குப் போய் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும் பஞ்சு மனைவிக்கு டாக்டரை அழைத்து வந்து உதவி செய்கிறார்.  இதை ஜானகிராமன் எழுதியிருக்கிறார்.  இங்கு அசோகமித்திரன் எழுதியிருந்தால் இவ்வளவு தூரம் கொண்டு போயிருக்க மாட்டார். 

நான் இங்கு இரு எழுத்தாளர்களையும் ஒப்பிட்டு எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதி உள்ளேன்.  ஒவ்வொருவரின் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன