அழகியசிங்கர்
நண்பர்களே,
நான் இந்த முறை 14 புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன். அதில் நான் புத்தகங்கள் நான் எழுதிய புத்தகங்கள். ஒரு புத்தகம் நான் தொகுத்த கவிதைப் புத்தகம்.
போன ஜனவரி மாதம் நான் என் சிறுகதைகள் முழுவதையும் தொகுத்து அழகியசிங்கர் சிறுகதைகள் என்று கொண்டு வந்தேன். நான் எழுதியவை எல்லாவற்றையும் சேகரித்து விட்டேன். இதை அப்படிச் செய்யவேண்டுமென்று தோன்றியதால் அந்தப் புத்தகம் கொண்டு வந்தேன்.
அதேபோல் இந்த ஆண்டு என் கவிதைகள் முழுவதும் தொகுக்க வேண்டுமென்று தோன்றியது. எல்லாவற்றையும் தொகுத்து விட்டேன். 304 கவிதைகள் வரை எழுதியிருக்கிறேன்.
1975ஆம் ஆண்டிலிருந்து நான் கவிதை எழுதி வருபவன். என் கல்லூரியில் முதலில் இலக்கணப்படி வெண்பா எழுத ஆரம்பித்தேன். ஆனால் கட்டுப்பாட்டுடன் கவிதை எழுதுவது என்னால் ஏற்க முடியவில்லை.
அப்போதுதான் எஸ்.வைத்தியநாதன் என்ற நண்பர் மூலம் நான் இன்னும் சில கவிதைகள் எழுதும் நண்பர்களுடன் நட்புக்கொண்டேன். அதில் மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள். அதேபோல் இன்னொரு பக்கம் பிரமிள் என்ற மூத்தக் கவிஞருடன் பழகிக் கொண்டிருந்தேன். ஒருபோதும் நான் எழுதிய கவிதைகளை இவர்களிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டதில்லை. திருவனந்தபுரத்திலிருந்து வரும் நகுலனும் என் கவிதைகளைப் பற்றி பேசுவார். இப்படியாக என் கவிதை எழுதும் அனுபவம் ழ பத்திரிகையிலிருந்து விருட்சம் பத்திரிகை வரை வளர்ந்தது. என் முதல் கவிதைத் தொகுப்பு வந்தபோது அப் புத்தகத்திற்கு தமிழவன், ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன், நகுலன் கட்டுரைகள் எழுதி உள்ளார்கள். அதே போல் என் இரண்டாவது தொகுப்பிற்கு ரிஷி முன்னுரை தந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை கவிதை எளிதாகப் புரிய வேண்டுமென்று கொள்கை வைத்திருக்கிறேன். கவிதையைப் பொறுத்தவரை ரொம்பவும் எளிதாகப் புரிந்தாலும் ஆபத்து இருக்கிறது. புரியாமல் போனாôலும் ஆபத்து இருக்கிறது.
ஆரம்பத்தில் நான் கவிதை எழுத வள்ளலார் ஒரு காரணம். அதன் பின் க நா சு. என் சக கவிஞர்களிடமும் நான் பலவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன். கற்றுக்கொண்டு வருகிறேன்.
என்னுடைய இந்தத் தொகுப்பிற்கு சீனிவாச நடராஜனுக்கு நான் நன்றிக்கடன் படுகிறேன். அவர் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அவர் வெங்கட் சாமிநாதன் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகப் பிரதிகளைக் கொடுத்து விருட்சம் நல நிதிக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
மேலும் அவர் எ;ன்னுடன் வந்திருந்த கிபாகரணையும் என்னையும் பல புகப்படங்கள் எடுத்தார். அவர் ஒரு புகைப்படம் மட்டும் எடுப்பதில்லை. பல புகைப்படங்கள் எடுக்கிறார். ஒரு இடத்தில் இந்தப் புகைப்படத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்.
அவர் என்னைப் புகைப்படமாக எடுத்ததை நான் என்னுடைய இரண்டு புத்தகங்களுக்குப் பயன்படுத்தி உள்ளேன். அதில் ஒரு புகைப்படத்தைத்தான் என் கவிதைகளுக்கான அட்டைப்படம் புகைப்படமாகக் கொண்டு வராமல் டிஜிட்டல் படமாக மாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பாகவும் வித்தியாசமாகவும் அட்டைப்படம் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
1975ஆம் ஆண்டிலிருந்து எழுதிய கவிதைகள் தொகுப்பு இது. எல்லாவற்றையும் சேகரித்துவிட்டேன். 2018ல் நான் ஒரு கவிதை எழுதி உள்ளேன். அக் கவிதையின் பெயர் : மீ டு
மீ டு
உலகத்தில் அழகானவர்கள்
பெண்கள்தான்
அவர்கள் இல்லாவிட்டால்
இந்த உலகத்தை ரசிக்க முடியாது
எத்தனையோ வயதான பெண்களின்
உடல் அமைப்பையும் முக அழகையும்
பார்த்து ரசித்திருக்கிறேன்
வெகுளியாக பாவாடைச் சட்டை
அணிந்து வரும் சிறுமிகளையும்
பார்த்து ரசித்திருக்கிறேன்
மெல்லிய சூடிதார் அணிந்து வரும்
இளம் பெண்களிடம்
ஒன்று கேட்க வேண்டும்
உங்கள் காதலர்களிடம்
மணிக்கணக்காய் நீங்கள்
என்ன பேசுகிறீர்கள் என்று
ஒரு பெண் அழுதால்
என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது
நான் தொடர்ந்து அந்தப் பெண்ணின்
அழுகையைப் பார்த்துக்கொண்டிருந்தால்
நானும் கண் கலங்கி விடுவேன்
அதனால் நகர்ந்து போய் விடுவேன்.
எந்தப் பெண்ணும் என்னிடம்
மீ டு என்று சொன்னதில்லை
502 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.350. புத்தகக் காட்சியை ஒட்டி இப் புத்தகம் விலை ரூ.250.
நேற்று தங்களது புத்தக அரங்கில் இந்த புத்தகத்தின் விலைச் சலுகையை பற்றிய விபரம் எதுவும் இல்லை. வ இந்த விபரம் தெரிந்திருந்தால் கண்டிப்பாக இந்த புத்தகம் வாங்கி இருப்பேன்..இன்று blogல் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.