துளி : 23 – ஆழ்வார் கடையை மறக்க முடியாது

அழகியசிங்கர்

எப்போதும் நான் பழைய புத்தகங்களையே வாங்குவேன். என் பார்வை பழைய புத்தகக் கடைக்கே செல்லும். 1978ஆம் ஆண்டில் ஹைகோர்டிற்கு எதிரில் ஒருவர் பை நிறையப் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பார். அவரிடம் ஆங்கிலப் புத்தகங்களை வாங்குவேன். அப்படி நான் வாங்கியப் புத்தகங்கள் அல்பெர் கம்யூவின் தி எக்ûஸல் அன்ட் தி கிங்டம். அதேபோல் சாத்தர் புத்தகம் ஒன்று வாங்கினேன். இப்படித்தான் என் புத்தகம் வாங்கும் வரலாறு துவங்கியது. அப்போது வாங்கிய அந்தப் புத்தகங்களை இன்றும் வைத்துக்கொண்டிருக்கிறேன். அதில் உள்ள முதல் கதையான ஒழுக்கமற்றப் பெண் என்ற கதையை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.
பல பழையப் புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதிலும் என் பொழுது போகும். பெரும்பாலும் திருவல்லிக்கேணி பிளாட்பாரங்களில் என் கவனம் இருந்துகொண்டு இருக்கும். சமீபத்தில் ஏ கே செட்டியாரின் குமரி மலர் என்ற பத்திரிகையை அபூர்வமாகக் கண்டுபிடித்தேன் திருவல்லிக்கேணி பிளாட்பாரக் கடையில்.
அதேபோல் மயிலாப்பூரில் உள்ள ஆழ்வார் கடை. நீண்ட தாடியுடன் ஒரு வயதான மனிதர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். தாடியுடன் அவரைப் பார்க்கும்போது எனக்கு பெரியார் ஞாபகம் வரும். அங்கு புத்தக விலை நமக்கு ஏற்றதுபோல் இருக்காது. ஆனால் என் நண்பரையோ உறவினரையோ பார்ப்பதுபோல் ஆழ்வாரைப் பார்த்து விட்டு வருவேன். நானும் அவரும் ஒன்றும் பேசுவதில்லை. இது ஒரு நல்ல அனுபவமாக எனக்குத் தோன்றும்.
சில தினங்களுக்கு முன் அகிலா கண்ணதாசன் என்பவர் ஆங்கில ஹிந்துவிற்காகப் பேட்டி எடுத்தார் (போனில்). அதற்கு நான் அளித்தப் பதிலை ஹிந்து பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அவரிடம் என் ஆசை ஒன்றையும் குறிப்பிட்டேன். இதுமாதிரி பிளாட்பாரத்தில் நான் அச்சிடும் புத்தகங்களையும் கொண்டு வந்து விற்க வேண்டும் என்று. ஆனால் புத்தகங்களை வாங்க என்னை மாதிரி அழகியசிங்கர் ஒருவர் வரவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன