விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

டேவிட் சட்டன்

கம்ப்யூட்டர் அறை, நடு இரவு

குகையின் சில்லிப்பாய்க் காற்று…
இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும்.
பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை.
சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும்.
அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது .
வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம்.

எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன.
சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே;
இங்கேதான் நான் வாசம் புரிகிறேன்.
கட்டளைக் கிணங்கும் அசரீரிகளினிடையில் இயங்கி
பாதுகாப்பாய் உணர்கிறேன்.
இந்தத் திரையைப் பார்த்து
நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத்
தாமதிக்கையில்
உடனே தோன்றுகிறது
பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில்:
‘ஆரம்பி.’
இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும் :
ஆணையிடுகிறேன்.
இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடி பணிகின்றன.
அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை
வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று.
சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய்
எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால்
கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில்
பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம்.

வீடு செல்லும் நேரம்… வெளிப்பக்கத்தில் குறியிடல்…
காவல்காரனுக்கு நல்லிரவு’ வாழ்த்து.
கொடூரமான வெளிப்புற இருட்டு.
மங்கிய நிலவின் வெள்ளித் தீவிரத்தை
அலங்கோலப் படுத்தும் முரட்டு அந்தகாரம்.
உயர எழுந்த பெருத்த மேகங்கள்.
காலியான நடைபாதைகளில் நடந்து
கட்டுப்பாடற்ற காற்றின் தாக்குதல்களில் சரணடைகிறேன்.
உள்முகத்தின் பின்னே –
எதிர்காலத்தின் கருத்த பூட்ஸ்களில்
இளகியோடுகின்றன. மனதின் உறைபனித் துகள்கள்.

மூலம் : ஆங்கிலம் தமிழில்: கால. சுப்ரமணியம்

(நவீன விருட்சம் அக்டோபர் – டிசம்பர் 1989)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன