இன்னொரு முறை பார்க்க வேண்டும்….

நான் இந்த 15வது சென்னை சர்வதேசப் பட விழாவில் பார்த்த ஒரே தமிழ்ப்படம் üமனுசங்கடாý. அம்ஷன்குமார் இயக்கியப் படம் இது. இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்குத் தோன்றியது இலக்கிய நண்பர் ஒருவருடன் பல ஆண்டுகளுக்கு முன் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த குருதத்தின் படம். படம் முடியும் தருவாயில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலக்கிய நண்பர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார். அவருடைய அழுகை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஒரு சினிமாப்படம் என்பது என்ன? அது நமக்குத் தெரியாத இன்னொருவர் வாழ்க்கையைச் சொல்வது. அதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்படுகின்றன. சிலசமயம் தாங்க முடியாத வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அம்ஷன்குமார் படம் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
வாழ்க்கையில் தென்படும் சோகம் மனதின் துயரத்தை அதிகரித்துவிடும். படம் பார்த்தாலும் இந்த உணர்வு ஏற்படாமல் இருக்காது. ஆனால் நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு முக்கியம். மனுஷங்கடா படம் கூட ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை ஒரு சோக நிகழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது. அப்பாவின் மரணத்தால் துயரமடைகிற இளைஞன் கோலப்பன் தன்னுடைய கிராமத்திற்குச் செல்கிறான். அங்கே அவன் எதிர்கொள்கிற பிரச்சினை எல்லோர் மனதிலும் ஒரு கேள்விக்குறியை உருவாக்காமல் இருக்காது.
ஊருக்குச் சென்ற இளைஞனைத் தேடி அவனுடைய தோழி அவன் கிராமத்திற்கு வருகிறாள். அவன் வசிக்குமிடத்தை பாதையில் எதிர்படுகிற இளைஞர்களிடம் கேட்கிறாள். அப்படிக் கேட்பதன் மூலம் அவனமானப்படுகிறாள். அவளுக்கு அந்தக் கிராமம் எப்படி என்பது புரிந்து விடுகிறது.
பிணத்தின் முன் கோலப்பனின் அம்மா பாடுகிற ஒப்பாரி பாடலுடன் படத்தின் முக்கியக் கட்டம் நகர்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அம்ஷன்குமார் படம் எடுத்துள்ளார். இப்படம் பார்க்கும்போது பல தமிழ்ப் படங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. உண்மையில் இந்தப் படத்திற்கும் ஞாபகத்தில் வருகிற அந்தப் படங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கதை விஷயத்தில். உதரரணமாக ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், ஜான் அப்ராஹமின் அக்ரஹாரத்தில் கழுதை
ஏன சில பாலசந்தர் படங்களை நாம் எப்படிப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோமோ அப்படித்தான் இந்தப் படத்தையும் நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். ஆனால் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருப்பதாகப் படுகிறது அந்தப் படங்களைப்போல் கதை நகர்கிற விதத்தில்.
கோலப்பன் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என்று சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பிணத்தை எடுத்துக்கொண்டு பொது வழியில் போய்ப் புதைக்க முடியவில்லை. தலித்துக்கென்று இருக்கின்ற வழியில் செல்ல முடியவில்லை. அது காட்டுப் பகுதியாக இருக்கிறது. தலித்துக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள போராட்டம்தான் இந்தக் கதை.
பின்னணி இசை இல்லாமல் கிராமத்தின் மௌனத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். பார்வையாளர்களுக்கு தாமும் ஒரு கிராமத்தில் இருப்பதான உணர்வு ஏற்படாமல் இருக்காது. எந்தக் காட்சியிலும் மிகைப்படுத்தப்படாத உணர்வை எழுப்புகிறார்.
கோலப்பனின் அம்மா அவனுடைய தோழிக்கு அவன் அக்காவை அறிமுகப்படுத்தும் காட்சி துக்கத்திலும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
பொது வழியில் பிணத்தை எடுத்துக்கொண்டு போக கோர்ட் சாதகமாக தீர்ப்பு வழங்கியும், பிணத்தை எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. ஆதிக்க சாதியினரின் கெடுபிடிதான் இதற்குக் காரணம். இங்கு போலீஸ்காரர்கள், அரசாங்க ஊழியர்கள் என்று எல்லோரும் எதிராக உள்ளார்கள். சென்னையில் ஒரு மூலையில் இருக்கும் எனக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
கோலப்பனையும் அவன் உறவினர்களையும் போலீஸ் வண்டியில் வலுக்கட்டாயமாக அழைத்துப் போகிறார்கள். கோர்ட் உத்தரவு இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் போலீஸ் வண்டியில் அழைத்துக்கொண்டு போகும்போது ஒரு காட்சி வெளிப்படுகிறது. போகும் வழியில் ஆதிக்க ஜாதியினர் கல்லெடுத்து அடிக்கிறார்கள். பார்க்கக் கொடுரமாக இருக்கிறது.
இறுதியில் இன்குலாப் எழுதிய கவிதை பாடலாக ஒலிக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். படம் தொய்வில்லாமல் வசனத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தராமல் காட்சியாகவே பலவற்றைக் காட்டியிருக்கிறார்.
இந்தப் படம் தியேட்டரில் வெளிவந்தால் இன்னொரு முறை பார்ப்பதாக இருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *