விசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று

நான் பெரிய மனிதர்களைப் பார்ப்பதில் சங்கடப்படுவேன். அவர்கள் முன் எப்படி நடந்துகொள்வது என்பது எனக்குத் தெரியாது. அதாவது சரியாக வராது. அதைவிட நான் போய் பார்க்க விரும்பாதது. சாமியார்களைப் பார்ப்பது.

அவர்கள் முன் நிற்பது எனக்கு சங்கடத்தைத் தரும். எதாவது சொல்லி விடுவார்களோ என்று யோசனை ஓடும்.

ஆனால் தீவிர இலக்கியவாதியான பிரமிள் சாமியார் பின்னால் போனது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பார்த்தால் இலக்கியத்தைப் பற்றி பேசுவார் என்றால், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஷீரிடி சாய்பாபா, ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று பேசிக்கொண்டிருப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பூக்கோ, தெரீதா என்றெல்லாம் பேசுவதை விட்டு, சாய்பாபா, ராம்சுரத் குமார் ஜே கிருஷ்ணமூர்த்தி என்று பேசுகிறாரே என்று தோன்றும்.

ஒருமுறை என்னை திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார். யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கலாம் என்றார். அவருடன் போனதால் சாமியார் என்னைப் பார்த்து எதுவும் சொல்லிவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது. நான் வீட்டிலேயே கூட சொல்லாமால் விசிறி சாமியாரைப் பார்க்க பிரமிளுடன் சென்றேன்.

போகும் வழியெல்லாம் சாமியார்களைப் பற்றி நிறையா கதைகள் சொன்னார். கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. சில சாமியார்கள் எல்லாம் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று சொன்னார். ரொம்ப ஆச்சரியம். சாமியார்கள் எல்லாம் அப்படியெல்லாம் பேசுவார்களாவென்ற ஆச்சரியம்.

விசிறி சாமியார் முன் நாங்கள் போய் நின்றோம். எனக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவு எளிமையாக ஒரு சாமியார் தென்படுகிறாரே என்ற ஆச்சரியம். அவர் வீட்டு முன்னால் மாலைகள் எல்லாம் அழுக்கடைந்த நிலையில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன. மற்றப் படைப்பாளிகள் முன் சிம்ம சொப்பனமாக இருந்த பிரமிள், சாமியார் முன்னால் பவ்யமாவ இருந்தார். எனக்கு அதுவும் ஆச்சரியம். நாங்கள் உட்கார்ந்த பிறகு, (கால சுப்பிரமணியனும் வந்திருந்தார்) சாமியார் பிரமிள் முதுகில் இரண்டு மூன்று முறை தட்டினார். பின் தெய்வத்தின் குரல் புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து. அங்கு இருந்த சில மணி நேரங்கள் வித்தியாசமாக இருந்தன. விசிறி சாமியார் அழுக்கான உடை உடுத்தியிருந்தார். ஆனால் அவர் முகத்தில் தென்பட்ட தேஜஸ் ஆச்சரியமாக இருந்தது. விரல்களைச் சிமிட்டி ஜபம் செய்து கொண்டிருந்தார். அதைவிட ஆச்சரியம். சாமியார் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தது. சிகரெட் தீர்ந்துபோனபிறகு பிரமிள் சிகரெட் வேண்டுமா என்று கேட்க, ஆமாம் என்றார் சாமியார். பிரமிள் என்னைப் பார்க்க, நான் உடனே பணத்தை எடுத்து சாமியாரிடம் நீட்டினேன். ஆனால் விசிறி சாமியார் என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். நான் பிரமிளிடம் கொடுத்து அதை அங்குள்ள ஒரு பையனிடம் கொடுத்து சிகரெட் வாங்கிவரச் சொன்னார்.

இந்தச் சம்பவம் எனக்கு இன்னும் கூடப் புரியவிôல்லை. ஏன் என்னிடம் பணம் வாங்க விரும்பவில்லை என்ற கேள்வி என்னை அன்று முழுவதும் குடைந்து கொண்டிருந்தது. என் யோஜனைகளை சாமியார் மாற்றி விட்டார் என்று தோன்றியது. அதன் பின் நான் திரும்பவும் அங்கு போகவில்லை. ஆனால் பிரமிள் இரண்டு மூன்று தடவைகள் போயிருப்பார்.

பல வருடங்கள் கழித்து நான் ஒரு முறை குடும்பத்தோடு திருவண்ணாமலை சென்றபோது விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. நான் பிரமிளுடன் பார்த்தபோது எளிய வீட்டில் இருந்தார். அதன் பின் எல்லாமே பெரிய மாற்றமாக மாறி விட்டது. விசிறி சாமியார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவதுபோல் ஒருமுறை கனவு கண்டேன்.

ஏன் இதெல்லாம் எழுதுகிறேன் என்றால், விசிறி சாமியாரின் பிறந்தநாள் இன்று. ஒருமுறை .இதே பிறந்த தினம்போது பெரிய விழா எடுத்து சிலர் கொண்டாட முயற்சித்தார்கள். ஆனால் அவர் அந்த விழாவிற்குப் போகவில்லை. அந்த அளவிற்கு விளம்பரப் படுத்திக்கொள்ளாத எளிதில் புரிந்துகொள்ள முடியாத மகான் அவர். என்னோட பிறந்த நாளும் இன்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன