ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 5

1. நீங்கள் யார்?

ரமணர்தான் நான் யார் என்ற விசாரணையில் இறங்கினார். என்னைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால் என்ன அர்த்தம். நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யார்?

2. இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

தமிழவனின் ஆடிப்பாவைபோல என்ற நாவலில் 204வது பக்கம் படித்துக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் காந்திமதி என்ற பெண்ணைப் பார்க்க விரும்புகிறேன்.

3. யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும்.

யாருக்கு என்று தெரியாது. ஆனால் பலர் க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

4. உங்கள் பத்திரிகையில் வரும் கதை, கவிதை, கட்டுரையை யாரெல்லாம் படிக்கிறார்கள்.

யாரெல்லாம் என்பது தெரியாது. ஒருவர் நிச்சயமாகப் படிக்கிறார். அது நான்தான்.

5. துயரத்தின் உச்சம் என்ன?

இன்னொரு துயரம்.

6. நின்றுகொண்டே வாசிக்கப் போவதாக ஒரு திட்டம் வைத்திருக்கிறீர்களே?

ஆமாம். கடந்த சில ஆண்டுகளாக நான் தரையில் அமருவதில்லை. தரையில் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்வதுமில்லை. டைனிங் டேபில் வந்தபிறகு தரையில் அமர்ந்து சாப்பிடுவதுமில்லை. அதேபோல் ரொம்ப நேரம் நிற்பதுமில்லை. ஒரு முயற்சி செய்யலாமென்று 16.10.2017 அன்று ஒரு மணி நேரம் நின்றுகொண்டு இரண்டு கதைகளைப் படித்தேன். ஒரு கதை அசோகமித்திரனின் காந்தி கதை. இன்னொன்று போர்ஹஸ்ஸின் ‘கிளை பிரியும் பாதைகளின் தோட்டம்.’ பிரம்மராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது நல்ல அனுபவமாக இருந்தது. அதிகமாக இதுமாதிரி கதைகளைப் படிக்க உள்ளேன்.

7. சமீபத்தில் வந்துள்ள உங்கள் புத்தகத்தின் பெயர் என்ன?

திறந்த புத்தகம். 50 கட்டுரைகள் கொண்ட 203 பக்கங்கள் கொண்ட புத்தகம்.

8. எத்தனைப் பிரதிகள் அச்சடித்தீர்கள் என்று நான் கேட்கப் போவதில்லை.

நீங்கள் கேட்டாலும் நான் சொல்லப் போவதில்லை.

9. படிக்க நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்க நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஏற்றுக்கொள்கிறேன்.

10. 80 வயதிலும் தனியாக இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவருக்காக வருந்துகிறேன். அவரைப் பார்க்கும்போது தடுமாற்றம் நிழல் போல் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

11. பின்நவீனத்துவம் என்றால் என்ன என்ற சுரேஷ் புத்தகத்தில் எதை நீங்கள் ரசித்தீர்கள்?

எழுதி முடித்தவுடன் எழுத்தாளனும் அவனுடைய எழுத்துக்கு ஒரு வாசகன்தான் என்ற கருத்து பிடித்திருந்தது.

12. இப்போதெல்லாம் நீங்கள் சினிமா பார்ப்பதில்லையா?

பார்ப்பதில்லை. பார்க்கும்படியாகவும் இல்லை. ஒரு சினிமாவை தியேட்டரில் அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கிப் பார்ப்பதை விரும்பவில்லை. அதற்குப் பதில் ஒரு சிறுகதையை எடுத்துப் படிக்கலாம்.

13. போதும் உங்கள் சிறுகதை மோகம்..

சரி, ஒரு கவிதையைப் படிக்கலாம்..கட்டுரையைப் படிக்கலாம்..நாவலைப் படிக்கலாம்.

14. உங்கள் கையில் புத்தகம் இல்லை. ஒன்றுமில்லை. பொழுதை எப்படிப் போக்குவீர்கள்?

சும்மாவே உட்கார்ந்து இருப்பேன். அதைப் போல அற்புதமான விஷயம் ஒன்றும் இல்லை.

15. எழுத்துப் பிடிக்குமா எழுத்தாளர்களைப் பிடிக்குமா?

எழுத்துதான் பிடிக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *