ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா……….

சமீபத்தில் என் நண்பர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்னை ராமானுஜர் என்ற நாடகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.  இந்த நாடகத்தை எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி.  நான் பொதுவாக நாடகமோ சினிமாவோ இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.  முதலில் ஒரு அரங்கத்தில் உட்கார்ந்துகொண்டு  சினிமாவையோ  நாடகத்தையோ பார்க்க முடியுமாவென்று  என்னைச் சோதித்துக் கொள்கிறேன்.  என்னால் உட்கார முடிகிறது.  ரசிக்கவும் முடிகிறது.  ஆனால் சினிமாவும் நாடகமும் என்னை சோதிக்காமல் இருக்க வேண்டும்.  நாரதகானசபாவில் ஆறாம்தேதி இந்த நாடகத்தைப் பார்த்தேன்.

இந்த நாடகத்தைத் தயாரித்தவர்கள் ஷரத்தா என்ற நாடகக் குழுவினர்.  நாடகத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.  கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நடிகர்களைக்கொண்டு நாடகத்தை இயக்கி உள்ளார்கள். அரங்கத்தின் ஒரு மூலையில் இசை நிகழ்ச்சி நடப்பதுபோல் ஒரு குழு அமர்ந்து இசைக்க நாடகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நாடகத்தை ஜி கிருஷ்ணமுர்த்தி இயக்கி உள்ளார்.

நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று தோன்றியது.  இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் என்ற நாடகப் பிரதியையும் படித்து விடலாமென்று.  இந்திரா பார்த்தசாரதி எழுதிய மொத்த நாடகங்களைக் கொண்ட புத்தகத்தை வைத்திருக்கிறேன்.  கிழக்கு வெளியீடாக அது வந்திருந்தது.  அதைப் போல் ந முத்துசாமியின் நாடகங்களையும் வைத்திருக்கிறேன். இதையும் தவிர தனித்தனியாக கொண்டு வரப்பட்ட நாடகப் புத்தகங்களையும் வைத்திருக்கிறேன்.

இபாவின் நாடகப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒரு ஆச்சரியம். அவர் ஒரு நாடகம் எப்படி மேடையில் அரங்கேற வேண்டுமென்பதுபோல் எழுதி உள்ளார்.  எப்படி ஒரு கதாபாத்திரம் மேடையில் தோன்றவேண்டும்.  அப்போது உள்ள நேரம்  பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.  மனதளவில் அவர் நாடகம் எழுதும்போதே நாடகத்தை கற்பனையில் அரங்கேற்றம் செய்திருப்பார் என்று தோன்றுகிறது.

க நா சு ஒரு நாடகத்தைப் படிப்பதற்காக எழுத வேண்டுமென்று குறிப்பிடுகிறார்.  இக் கருத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் ஒரு நாடகத்தை மேடையில் கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. 40 லிருந்து 50 பேர்கள் எண்ணிக்கை உள்ள நடிகர்களைக் கொண்டு நாடகம் நடத்துவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.   அதை சாதித்துக் காட்டியிருக்கிறது ஷரத்தா என்ற அமைப்பு.

இந் நாடகம் தொடங்கப்பட்ட நேரம் 6.45 மணி.  ஆனால் நாடகம் முடியும் நேரம் 9.30 மணி.   அவ்வளவு நேரம் பார்வையாளர்கள் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த கோவிந்தராஜ÷ற்கு ராமானுஜர் பற்றி தெரியும்.  அதனால் நாடகத்தில் நடக்கக் கூடியவற்றை அவர் முன்னதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். முதன் முதலாக ராமானுஜர் பற்றி தெரியாதவர்கள் இந் நாடகத்தைப் பார்த்தால் அவர்கள் சற்று புரிந்துகொள்ள தடுமாறுவார்கள்.

மேடையில் ஒலிபெருக்கிகள் சரியாக இல்லாததால் நடிக்கர்கள் உச்சரிக்கும் வசனங்கள் சரியாக காதில் விழவில்லை.  அதனால் சிலர் மைக் மைக் என்று கத்தினார்கள்.   நாடகத்தில் அவ்வப்போது பாட்டும் இடம் பெற்றது.  அதனால் இந் நாடகத் தன்மை அந்தக் காலத்தில் நடத்தப்படும் நாடகத்தை ஞாபகமூட்டியது.

இந் நாடகத்தில் ராமானுஜராக நடித்த சுவாமிநாதன் சிறப்பான தமிழ் உச்சரிப்புடன் அந்தப் பாத்திரத்திரத்திற்கு பொருத்தமாக நடித்தி உள்ளார்..  இந்திரா பார்த்தசாரதியின் நாடகத்தைத்தான் அவர்கள் கையாண்டார்கள் என்றாலும், வாழ்க்கை வரலாறு போன்ற இந் நாடகத்தில் சுவாரசியமான தன்மையை இன்னும் கூட்ட வேண்டுமென்று தோன்றியது.

2 மணி நேரத்திற்கு நாடகத்தைக் கொண்டு போகாமல் ஒரு மணி நேரத்திலேயே முடித்திருக்கலாம்.  மைக் மூலம் பல சம்பவங்களை சுருக்கமாகக் கூறிக்கொண்டே நாடகத்தை நடத்திக் கொண்டு போயிருக்கலாம்.

ராமானுஜருக்கும் அவர் மனைவி தஞ்சம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.  இதை மட்டும் நாடகத்தை முழுப் பகுதியாகக் காட்டியிருக்க முடியும்.  அதாவது இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தில் கிளைக் கதைகளாக பல நாடகங்கள் எழுத ஒரு வாய்ப்பை ராமானுஜர் என்ற நாடகப் பிரதி ஏற்படுத்துகிறது.

உண்மையில் ராமானுஜர் தஞ்சம்மாவை அதன் பின்னால் சந்திக்கவில்லை.  இதைத்தான் இந்திரா பார்த்தசாரதியும் எழுதி இருக்கிறார்.  ஆனால் ஷரத்தா நாடகக் குழு தஞ்சம்மா ராமானுஜரை சந்திப்பதுபோல் ஒரு கனவுக் காட்சியை உருவாக்கி உள்ளார்கள். அதனால் ஒரு வரலாற்றை மாற்றி எதாவது கூறும்போது ஜாக்கிரதையாக அதைக் கையாள வேண்டுமென்று தோன்றுகிறது.

நாடகம் பார்க்க சபாவிற்குள் நுழையும்போது ஒரு பிட் நோட்டீஸ் போல ஷரத்தா என்ற நாடகக் குழுவினர் வினியோகம் செய்தனர்.  ஆனால் அதை என்னைப் போன்றவர்களால் படிக்க முடியவில்லை.  யார் ராமானுஜராக நடித்தது?  யார் இந் நாடகத்தை இயக்கியது என்ற விபரமெல்லாம் படிக்க முடியவில்லை.

எந்தவித பிரமிப்பையும் ஏற்படுத்தாமல் ஒரு நாடகத்தை ஒரு மணி நேரத்தில் நடத்த முடியுமா முடியாதா..அல்லது நாடகப் புத்தகங்களை மட்டும் வாங்கிப் படித்துவிட்டுப் பேசாமல் இருக்கலாமா….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *