சென்னையில் மூன்று கவிஞர்களும் விருட்சமும்..

 

விருட்சம் ஆரம்பித்தபோது மூன்று கவிஞர்கள் சென்னையில் இருந்தவர்கள் விருட்சத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள்.  ஒருவர் ஞானக்கூத்தன், இன்னொருவர் பிரமிள், மூன்றாமவர் வைதீஸ்வரன்.

இந்த மூன்று கவிஞர்களும் விருட்சத்தில் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பிரமிள் கவிதை மூலம் யாரையாவது திட்டி எழுதியிருந்தால், அதைப் புரிந்துகொள்ளாமலேயே நான் பிரசுரம் செய்திருக்கிறேன்.  ஒரு முறை முதல் இதழ் விருட்சத்தில் நான் பிரமிளை கவிதைத் தரும்படி கேட்டேன்.  அவர் ஒரு கவிதையைப்   மனசிலிருந்து சொல்ல  என்னை எழுதச் சொன்னார்.  அந்தக் கவிதையின் பெயர் கிரணம். அவர் சொல்ல சொல்ல நான் எழுதினேன்.

 

அந்தக் கவிதை இதுதான் :

விடிவுக்கு முன் வேளை

ஆகாயத்தில் மிதக்கின்றன

நாற்காலி மேஜைகள்

ஊஞ்சல் ஒன்று

கடல்மீது மிதக்கிறது

அந்தரத்து மரச் சாமான்களைச்

சுற்றிச் சுற்றிப் பறக்கிறது

அசிரீரிக் கூச்சல் ஒன்று

சிறகொடித்து கிடக்கிறது

ஒரு பெரும் கருடப் பட்சி

கிழக்கு வெளிறிச்

சிவந்து உதித்த மனித மூளைக்குள்

வெறுமை ஒன்றின் இருட் குகை

குகைக்குள் கருடச் சிறகின்

காலை வேளைச் சிலிர்ப்பு

ஆகாயத்தில்

அலைமேல் அலை.

மௌனித்தது

அசரீரிக் குரல்..

இந்தக் கவிதையை முதல் இதழ் வெளிவந்த விருட்சத்தில் நான் பிரசுரம் செய்யவில்லை.  இந்தக் கவிதை மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.  மேலும் விருட்சத்தைக் கிண்டல் செய்ய இதை எழுதி உள்ளார் என்று அப்போது நினைத்தேன்.  ஆனால் பின்னால் பிரமிள் எழுதிக் கொடுத்த கவிதைகள் எல்லாவற்றையும் நான் பிரசுரம் செய்தேன். இந்தக் கவிதையையும் பின்னால் வந்த விருட்சம் இதழில் பிரசுரம் செய்தேன்.

ஆனால் வைதீஸ்வரன், ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகளை நான் உடனே பிரசுரம் செய்து விடுவேன்.  ஆனாலும் ஞானக்கூத்தன் ஒரு முறை குதிரை என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார்.

அக் கவிதை ஒரு சிறிய கவிதை.  அதை இங்கே தருகிறேன்.

மரத்துக்குக் கீழே குதிரை

அதற்குக் கொடுக்கப்பட்ட

புல்லைக் குனிந்து குனிந்து

தரையிலேயே தின்றவாறு நிற்க

குதிரைக்குப் பக்கம் இவன் போனான்.

‘குதிரை’ ‘குதிரை’ என்றான்.

இவனைக் குதிரை கவனிக்காமல்

தன்

பாட்டுக்குப் புல்லைக் கொரித்தது.

மீண்டும் இவன் சொன்னான்

குதிரை குதிரை குதிரை

விட்டது பட்டென் றொருஉதை

அந்தக் குதிரை.

தரையில் உருண்டான்

அப்பால் ஒருமுறைகூட

குதிரையென் னாமல் கிளம்பிப்போனான்.

இந்தக் கவிதையை ஞானக்கூத்தன் முன் நான் படித்தேன்.  என்னைப் பார்த்துக் கேட்டார்.  ‘விருட்சத்திற்கு ஏற்றவாறு இருக்கிறதா?’ என்று. நான் ஒன்றும் சொல்லாமல் தலை ஆட்டினேன்.  என்னடா இது குதிரை என்று இப்படி எழுதிவிட்டாரே என்று பின்னால் யோசித்தேன்.  பின் அந்தக் கவிதையைப் பிரசுரம் செய்துவிட்டேன்.

வைதீஸ்வரன் முதன் முதலாக விருட்சத்தில் எழுதிய கவிதை.  ஒன்ஸ் மோர்.  ஆத்மாநாமின் தற்கொலையைப் பற்றி எழுதியிருப்பார்.

தற்கொலை செய்துகொள்வது

தண்ணீரில் குளிப்பதைப் போல்

மனசில் ஒட்டாத விஷயமா?

உயிர் வெறும் எச்சிலா

பச்சென்று துப்பிவிட?

பிறவியில்

உயிரை உடமபுக்கு வெளியில்

ஒட்டிக்கொண்டு வந்தானா

ஆறாவத விரலாக

வேண்டியபோது வெட்டிவிட?

என்றெல்லாம் எழுதியிருப்பார்.  இது ஒரு நீளமான கவிதை. வைதீஸ்வரன் எதை எழுதிக் கொடுத்தாலும் பிரசுரம் செய்து விடுவேன்.  பிரமிள் கவிதைக்கும், ஞானக்கூத்தன் கவிதைக்கும் நான் படிக்கும்போது ஏற்பட்ட மனக் கிளேசம் வைதீஸ்வரன் கவிதையைப் படிக்கும்போது உண்டாகவில்லை.

 

இதோ  366 கவிதைகள் கொண்ட வைதீஸ்வரனின் மனக்குருவி என்ற முழுத் தொகுதியைப் புரிந்துகொள்ள அதிகக் காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

நாளை (04.10.2017) மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் வைதீஸ்வரனைப் பற்றி பேசுவோம்.  அவர் கவிதைகளை அவர் முன்னால் வாசிப்போம்.  முடிந்தால் கவிதைகளைப் பற்றி அவரிடம் விவாதிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *