ஓஷோவும் செந்தூரம் ஜெகதீஷ÷ம்..

 

ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தியைத்தான் எல்லோரும்கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  கிருஷ்ணமூர்த்தி சென்னைக்குப் பிரசங்கம் செய்ய வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பல மூலைகளிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் குமிழ்வார்கள் வஸந்த விஹாரில்.

கிருஷ்ணமூர்த்தி பேசுகிற தோரணையே சிறப்பாக இருக்கும்.  எனக்குத் தெரிந்து எழுத்தாளர் பலருடைய எழுத்தில் கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் இருக்கும்.

நான்கூட கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்துவிட்டால் எங்கும் போக மாட்டேன்.  ஒவ்வொரு வாரம் டிசம்பர் மாத்தில் சனி ஞாயிறுகளில் வஸந்த விஹாரில் கூடி பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு எதோ ஒரு உலகத்தில் உலவுவதுபோல் நினைத்துக்கொள்வேன்.  பின் திங்கள் கிழமை அலுவலகம் செல்லும்போது கிருஷ்ணமூர்த்தியின் பேச்சின் தாக்கம் குறைந்து, சாதாரண மனிதனாகிவிடுவேன்.

கிருஷ்ணமூர்த்தியை விட என்ன பெரிசாக சொல்லிவிட முடியும் என்று எழுதுவதையே நிறுத்தியவர்கள் உண்டு.  சாதாரணமாக வங்கியில் பணிபுரிந்த ஒருவர் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்டு பித்துப் பிடித்த நிலைக்குச் சென்று, வேலையை விட்டு போகும்படி நேர்ந்திருக்கிறது.

இந்தத் தருணத்தில்தான் ஜெகதீஷ் என்பவர் செந்தூரம் என்ற பத்திரிகையைக் கொண்டு வந்து ஓஷோவைப் பற்றி எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஓஷோ பகவான் ரஜனிஷ்.   எனக்குத் தெரிந்து பகவான் ரஜனீஷை யாரும் உயர்வாகச் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் நான் ஒருமுறை தியோசாபிகல் நூல்நிலையத்திலிருந்து பதஞ்சலி யோகாவைப் பற்றி ஒரு புத்தகம் எடுத்துப் படித்தேன்.  அது ரஜனீஷ் அதாவது ஓஷோ புத்தகம்.  பதஞ்சலி யோகாவைப்பற்றி அவ்வளவு எளிமையாக யாரும் சொல்ல முடியாது. ஓஷோவால் அது முடிந்திருக்கிறது.  பலமுறை அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

ஓஷோவைப் பற்றி சொல்லும்போது அவர் கண்களைப் பற்றிதான் சொல்ல வேண்டும்.  நான் நேரிடையாகப் பார்த்ததில்லை.  ஆனால் புகைப்படங்களில் அவருடைய கண்கள் ஆழமாக ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக இருக்கும்.

அவர் சொல்கிற எந்த விஷயமும் எளிமையாக எல்லோரையும் சென்றடையும் விதம் இருக்கும்.  நான் பல புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பேன்.

இன்னும் சிறிது நேரத்தில் ஜெகதீஷ் ஓஷோவைப் பற்றிப் பேசப் போகிறார்.  அவர் ஒஷோவிலே ஊர்ந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *