விருட்சம் நடத்திய மூன்றாவது கூட்டம்…..

இந்தச் சென்னைப் புத்தகக் காட்சியில் மூன்றாவது கூட்டமாக பெருந்தேவியின் üபெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்ý என்ற கூட்டத்தை மாலை 6 மணிக்கு மேல் நடத்தினோம். திரளாக பெருந்தேவியின் நண்பர்கள் இந் நிகழ்சியில் கலந்து கொண்டார்கள்.
 
அம்ஷன்குமார் முதல் பிரதியைக் கொடுக்க கவிஞர் பரமேஸ்வரி பெற்றுக்கொண்டார். மற்ற இரண்டு தொகுப்புகள் போல் இல்லாமல் (அழுக்கு சாக்ஸ், வாயாடிக் கவிதைகள்) இது முற்றிலும் வித்தியாசமான கவிதைகள் கொண்ட தொகுப்பு. ஆனால் இந்த மூன்று கவிதைத் தொகுதிகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு.
 
இக் கூட்டத்தை ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துள்ளேன்.
அம்ஷன் குமார் பேசிய சாரம்சத்தை இங்கே தர இயலுமா என்று பார்க்கிறேன்.
 
…..பெருந்தேவி கிட்டத்தட்ட 20 வருஷமாகக் கவிதை எழுதி வருகிறார். அவர் முதல் கவிதைத் தொகுதி 1992ல் வெளிவந்தது. தீயுறைத் தூக்கம். அப்போதிலிருந்து அவர் கவிதைகள் மீது எல்லோருக்கும் கவனம் விழுந்திருக்கிறது. ஒரு கவனிக்கப்பட வேண்டிய கவிஞர் என்று. அந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை என்னவென்றால் அது பலபேர்களுக்குப் புரியவில்லை. ஒரு கவிஞர் முதன்முதலாக தொகுப்பு கொண்டு வரும்போது மொழி மீது யுக்திப் பூர்வமான பரிசோதனைகளைக் கையாளணும்னு தோன்றும். அவர் கவிதை புரியவில்லை என்று சொல்வார்கள், ஆனா கவிதையின் லட்சணம் புரியாமல் இருப்பதுதான். அதாவது ஒரு புலப்படாதத் தன்மை. திரும்பத் திரும்ப அதற்குள் போகும்போது ஒரு திரை விலகிப் போவதுபோல் போய்விடுகிறது. அவர் ஒரு பெண் கவிஞர் என்று வரையறைக்குள் கொண்டு வர முடியாது. அதே சமயம் பெண்ணியக் கவிஞர் என்று தன்னை முன்னெடுத்துக்கொள்ளாத கவிஞர். ஆண்களும் கவிதைகள் எழுதுகிறார்கள், பெண்களும் கவிதைகள் எழுதுகிறார்கள். அப்படித்தான் அவரைப் பார்க்க முடியும். மேலும் அவரது கவிதைகளில் ஒரு எள்ளல் இருக்கிறது, எள்ளல் மூலம் கேலி செய்வது, கேலி மூலம் சீண்டுவது இதெல்லாம் இவர் கவிதைகளில் உண்டு. இந்தத் தொகுப்பில் இது அதிகமாகவே இருக்கிறது. இந்தத் தொகுப்பில நேரிடையான தன்மை இருக்கிறது. எதிர் கவிதை என்று சொல்கிற விஷயமெல்லாம் இருக்கிறது. ஏற்கனவே அவருடைய கவிதைகளில் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன். நாம் புனிதம் என்று நினைக்கிறதை உடைத்தெறிகிறார். வலுவாக உடைத்து எறிந்திருக்கிறார் என்பதைவிட சீண்டிப் பார்த்திருக்கிறார். உதாரணமாக இந்தப் புத்தகத்தின் தலைப்பே அப்படித்தான் இருக்கிறது. ……..
என்று பேசிய அம்ஷன்குமார் சில கவிதைகளை உதாரணமாக எடுத்துப் படித்துக் காண்பித்தார்.
 
அங்குக் கூடிய பலரும் பெருந்தேவியின் கவிதைகளைப் படித்தார்கள். சீனாக்காரன் என்ற கவிதையை மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் படிக்கும்போது, சிரித்து விட்டார். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதனால் அக் கவிதையை அவரால் படிக்க முடியவில்லை பெருந்தேவிதான் படித்தார். கூட்டம் இனிதாக முடிந்தது. எல்லோரும் கலைந்து போன பிறகு, பக்கத்தில் உள்ள ஸ்டால்காரர், ‘என்ன உங்கள் ஸ்டாலில் ஒரே கூட்டமாக இருக்கிறது, கூட்டம் போட அனுமதி வாங்கினீரா,’ என்று சிரித்தபடி கேட்டார். ‘எதுக்கு அனுமதி வாங்கறது..என்ன மைக் வெச்சா கூட்டம் நடத்தறோம்,’என்றேன்.
 
இந்தக் கூட்டத்தின் ஆடியோ வீடியோ பிரமாதமாகப் பதிவு ஆகி இருக்கிறது. யாராவது உதவி செய்தால் எல்லோரும் கேட்பதுபோல் முகநூலில் கொண்டு வர முடியும். எனக்கு சில டெக்னிக் இன்னும் கைவராமல் இருக்கிறது. கூடிய சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுவேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன