விருட்சம் வெளியீடாக நாலாவது புத்தகமாக பெருந்தேவியின்
கவிதைத் தொகுதியான “பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்” என்ற புத்தகம் தயாராகும் என்று சற்றும் நான் நம்பவில்லை. ஆனால் புத்தகம் தயாராகி வந்து விட்டது.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தது. இன்னும் கூட பலர் அந்தப் புத்தகத்தைக் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் கவிதை எழுதும்போது பெருந்தேவி ஆழமாக கவிதையைக் குறித்து சிந்தித்தவண்ணம் இருக்கிறார். அழுத்தமான பார்வையை கவிதை மூலம் கொண்டு வருகிறார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வித்தியாசமாக இருக்கிறது.
பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் என்ற கவிதைத் தலைப்பே படிக்கும் ஒவ்வொருவருக்கும் நகைப்பை ஏற்படுத்த வல்லது.
இத் தொகுதியின் வெளியீட்டு விழா வியாழன் அன்று அதாவது 27.07.2017 அன்று விருட்சம் ஸ்டால் 12ல் மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.
முதல் பிரதியை வெளியீட்டு சிற்றுரை ஆற்றுபவர் அம்ஷன் குமார். நூலைப் பெறுபவர் கவிஞர் பரமேசுவரி. அவசியம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
இத் தொகுதியில் நான் ரசித்த பல கவிதைகளில் ‘வேஷக் கரப்பான்’ என்ற கவிதையை இங்கே அளிக்க விரும்புகிறேன்:
பஜ்ஜிக்குச் சலித்து வைத்த மாவில்
சின்னக் கரப்பான் ஒன்று குதித்து
மாவைப் பூசிக்கொண்டு
தாவியோடுகிறது
பகல் கூத்துக்கு நீ மட்டும்
வேஷம் கட்டினால் போதுமா
விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.90 மட்டும்தான்