நேற்று நடந்த கூட்டத்தைப் பற்றி இன்றும் இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன். எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார். அந்தப் புத்தகம் பெயர் சில படைப்பாளிகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.75. அப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் எஸ். கே. என். அவர் யாருமில்லை கிருபாகரன்தான். ஏன் இப்படியொரு பெயரில் அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை.
இந்தப் புத்தகத்தை முழுவதும் தயாரித்தவர் கிருபாகரன். முதலில் ஒரு பெரிய பிரசுராலயத்திற்குப் பணத்தைக் கொடுத்து இவருடைய நண்பர்கள் சிலர் புத்தகம் அடிப்பது வழக்கம். அந்த அபத்தத்திலிருந்து மாறி தானே அவருடைய புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார் கிருபாகரன்.
ஒரு சினிமா படத்தைத் தயாரிப்பவர்கள், நடிப்பதிலிருந்து டைரக்ட் செய்வது வரை தானே ஈடுபடுவதுபோல், கிருபாகரன் அவரே ஒரு புத்தகத்தைத் தயாரித்துள்ளார். அவருடைய துணிச்சலுக்கு வாழ்த்துகள்.
112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 24 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு ஒரு ரசிகரின் பார்வையில் எழுதியிருக்கிறார். அப்படி எழுதிக்கொண்டு போகும்போது அந்த எழுத்தாளரின் பின்னணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இது அபாரமான முயற்சியாக எனக்குப் படுகிறது. அவர் ரசித்த சிறுகதையைப் படித்து எழுதினாலும் அதிகப் பக்கங்களுக்கு மேல் போகாதவாறு எழுதிக்கொண்டு போகிறார். இவர் இன்னும் இதுமாதிரி கதைகளைப் படித்துப் படித்து எழுதும்போது கதையைக் குறித்து இவர் அறிவு விசாலமாகிப் போகுமென்று தோன்றுகிறது.
இவருடைய புத்தகத்தை நேற்று (23.07.2017) நான் வெளியிட பரிசல் செந்தில் பெற்றுக்கொண்டார். சுரேஷ் அவர்கள் இப்புத்தகத்தைப் படித்து விமர்சனம் செய்தார்.
கிருபானந்தன் கூட்டத்திற்கு மூத்தக் கவிஞர் வைதீஸ்வரன், சச்சிதானந்தம், எஸ் ராமகிருஷ்ணன் என்று பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இப் புத்தகம் தற்போது விருட்சம் ஸ்டால் 12ல் கிடைக்கும். விருட்சம் மூலம் இப் புத்தகம் விற்பனைக்கும் கிடைக்கும்.