சூரியனுக்குப் பின் பக்கம் என்ற பெயரில் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுப்பு ழ வெளியீடாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத் தொகுப்பில் சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை மட்டும் இல்லை. புத்தகத்திற்கு அதுமாதிரி தலைப்பிட்டுவிட்டு அக் கவிதை அதில் இடம் பெறவில்லை எனப்தை வேடிக்கையாகச் சொல்வார் ஞானக்கூத்தன். பின் நான் அதைத் தீபம் பத்திரிகையிலிருந்து கண்டுபிடித்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பில் சேர்த்தேன். தீபம் நா பார்த்தசாரதியின் புதல்வர் வீட்டிற்குச் சென்று பழைய தீபம் இதழ்களை அங்கயே புரட்டிப் பார்த்து பின் ஒரு நோட்டில் எழுதி வந்து சேர்த்தேன். இதுமாதிரி பல விட்டுப் போன கவிதைகளை அத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன். அப்படி சேர்த்தாலும். இன்னும் விட்டுப்போன ஞானக்கூத்தன் கவிதைகள் நிச்சயம் இருக்கும். எனக்குத் தெரிந்து கசடதபற இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும், மையம் இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும் அவர் சேர்க்க விரும்பவில்லை. ஞானக்கூத்தன் ரொம்ப குறைவான வரிகளைக் கொண்ட கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார். அதாவது மூன்று வரி, இரண்டு வரி, நான்கு வரிகள் என்று.
அப்படி எழுதுகிற அவர் கவிதைகள் வலிமை உடைய கவிதைகளாக எனக்குத் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட கவிதைகளை ஹைக்கூவாக அடையாளப்படுத்தக் கூடாது. ஞானக்கூத்தனுக்கு ஹைக்கூ மீது நம்பிக்கை இல்லை. உதாரணமாக ‘தமிழ்’ என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்,
பிறர்மேல் அதைவிட மாட்டேன்
என்கிறார். ஒருமுறை கவிதை எழுதும் நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். அப்போது பிரமிளும் என்கூட பேசிக்கொண்டிருந்தார். அந்த நண்பரை பிரமிளுக்கு அறிமுகம் செய்தேன். பிரமிளுக்கு ஏதோ ஆவேசம் வந்துவிட்டது. ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர் மேல் விடத்தான் விடுவேன்’ என்று சத்தம் போட ஆரம்பி0த்துவிட்டார் அந்த நண்பரைப் பார்த்து. ஏன் இந்தக் கவிதை அவரைக் கோபப்டும்படி செய்தது என்று யோசித்துக்கொண்டிருப்பேன். எனக்கு இன்றும் புரியாத புதிர் இந்தக் கவிதை. அதன் பின் பிரமிளிடம் இதைப் பற்றி நான் எப்போதும் பேசியது கிடையாது. இன்னொரு கவிதையான சமூகம் என்ற கவிதையில்
சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம்
வாடா
என்கிறார். இக் கவிதைகளை எல்லாம் நறுக்குக் கவிதை என்று புதுப்பெயர் இட்டுக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். இப்படி ஏகப்பட்ட கவிதைகள் ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார். எல்லாத் தொகுப்புகளிலும் இதுமாதிரி கவிதைகளைப் பார்க்கலாம். கவிதை என்பது மனதிலிருந்து தோன்றுவது, அது எழுச்சிப் பெற்று சில வரிகளில் நின்று விடுகிறது என்று நினைக்கிறேன். நானும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் ஞானக்கூத்தன் இதில்
திறைமையானவர். மேலும் அவர் மறைவுக்குப் பிறகு கடைசியாக வெளியான இம்பர் உலகம் என்ற தொகுப்பில் கூட சுற்றறிக்கை என்ற நறுக்குக் கவிதையைப் பார்க்கலாம்.
ஒரு சுற்றறிக்கை
கடைசிக் கையெழுத்தைத்
தேடுகிறது.
அவ்வளவுதான் கவிதை. இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஒருவித சோகம் என்னை ஆட்கொள்கிறது. அவர் மரணத்தை உணர்ந்துதான் இப்படி எழுதி உள்ளாரா என்று. என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் தெளிவாகக் குறிப்பிட முடியவில்லை. நான் கேட்டுக்கொள்வதெல்லாம் நறுக்குக் கவிதையை தமிழில் வெளிவரும் ஹைக்கூ என்ற வகையில் சேர்த்து விடாதீர்கள்.
(அகில இந்தியா ஆகாசவாணியில் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)