நான் நவீன விருட்சம் 102வது இதழை இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 90 சதவிதம் அனுப்பி இருப்பேன். இந்த இதழ் 114 பக்கங்கள் கொண்ட அசோகமித்திரன் இதழ். இதழ் 120 கிராம் எடை கொண்டிருந்தது. ஒரு இதழ் அனுப்ப ரூ.4 தபால் தலைகள் ஒட்டி அனுப்பியிருந்தேன். கிட்டத்தட்ட 70 பிரதிகள் ஒரு நாளும் பின் இன்னொரு நாளில் 50 பிரதிகள் அனுப்பி இருந்தேன். தபால் சார்டிங் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. üநீங்கள் ரு.5 தபால் தலை ஒட்ட வேண்டும்,ý என்று சொன்னார்கள். எனக்குத் திகைப்பாக இருந்தது. 100 கிராமிற்கு இரண்டு ரூபாய் விதம் 120 கிராமிற்கு 4 ரூபாய் போதும் என்று எண்ணியிருந்தேன். நான் அவர்களிடம் அப்படித்தான் சொன்னேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்ûடில. 100 கிராமிற்கு இரண்டு ரூபாய் ஆனால் அதற்கு மேல் மூன்று ரூபாய் அதிகமாக ஒட்ட வேண்டும். ஐந்து ரூபாய் ஆகும் என்றார்கள்.
வேற வழி இல்லாமல் ஒரு ருபாய் கூடுதலாக ரூ.120 பணம் கட்டினேன். அப்போதுதான் ஒன்று நினைத்தேன். ஏனோ தபால்தலை மட்டும் ஐந்து ரூபாய் ஒட்டுகிறோமே என்று. எனக்கு மனசே இல்லை. முதல் இதழ் நவீன விருட்சம் கொண்டு வந்தபோது இதழ் விலை ரூ.1.50. ஆண்டுச் சந்தா ரூ.5 தான்.
28 ஆண்டுகளுக்கு மேலாக சிறுபத்திரிகை நடத்தும் நான், சில அடிப்படையான உண்மைகளை உணர வேண்டுமென்று நினைத்தேன்.
100 கிராமுக்குக் கீழ்தான் இனி இதழ் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தேன். அப்போதுதான் தபால் தலை ரூபாய் இரண்டுடன் முடிந்து விடும்.
இன்னொரு உண்மையையும் உணர்ந்து கொண்டேன். 750 பிரதிகள் அச்சடிக்கக் கூடாது என்ற உண்மை. போன ஜனவரி மாதம் 101வது இதழ் கொண்டு வரும்போது புத்தகக் கண்காட்சியை ஒட்டிக் கொண்டு வரும்படி நேர்ந்தது. அதனால் 750 பிரதிகள் அடித்தேன். ஆனால் இப்போது தேவையில்லை. நான் 500 பிரதிகளுடன் நிறுத்தி இருக்க வேண்டும். தவறு செய்து விட்டேன். வெயில் கடுமையாக இருந்ததால் பத்திரிகையை எடுத்துக்கொண்டு போகவே என்னால் முடியவில்லை. அதனால் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு இலக்கியக் கூட்டங்களிலும் பார்ப்பவர்களிடம் நவீன விருட்சம் 102வது இதழை நீட்டிக்கொண்டிருந்தேன்.
116 பக்கங்கள் கொண்ட விருட்சம் 102வது இதழின் விலை ரு.20தான் இது மிக மிகக் குறைவான தொகை. நான் எப்போதும் பத்திரிகையை இன்றைய சந்தாதாரர்கள் நேற்றைய சந்தாதாரர்கள் அல்லது எப்போதோ சந்தாதாரர்களுக்கு அனுப்புவேன். இலவசமாக பலருக்கு அனுப்புவேன். அப்படியும் இதழ் பிரதிகள் மீந்து விடும்.
102வது இதழ் மட்டும் 100 பிரதிகளுக்கு மேல் மீந்து விடும். நான் இனிமேல் 100கிராமுக்குக் கீழ்தான் கொண்டு வர வேண்டும். மேலும் 500 பிரதிகளுக்கு மேல் தாண்டக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.
பல சிறுபத்திரிகைகளைப் பார்த்து சிறு பத்திரிகையின் பால பாடத்தைக் கற்றுக்கொண்டவன். என்னை அறியாமல் நானே மீறி விட்டேன்.