மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 69

நீ மணி; நான் ஒலி!

கவிஞர் கண்ணதாசன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்;

üஅனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவ னேநீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்ý என்றான்!

நன்றி : கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் – தொகுப்பு : சி ஆர் ரவீந்திரன் – மொத்தப் பக்கங்கள் : 365 – விலை : ரூ.150 – இரண்டாம் பதிப்பு : 2014 – வெளியீடு : சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018 –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *