ஏன் இந்தக் குழப்பம்?

 

நேற்று மாலை 7 மணிக்கு என் சம்மந்தி அவர்களின் அம்மா உடல்நலம் குன்றி இறந்து விட்டார்.  கடந்த பல மாதங்களாக அவர் படுக்கையிலேயே இருந்தார்.  மாலை 4 மணிக்கு காப்பி குடித்தப் பிறகு அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டிருக்கிறார்.  என் உறவினர் டிபன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கும்போது அவர் அசைவற்று இருப்பதைப் பார்த்து பக்கத்தில் யாராவது மருத்துவர் இருந்தால் அழைத்து வரலாமென்று எண்ணித் தவித்திருக்கிறார்.  எந்த மருத்துவரும் வரவில்லை என்பது பெரிய சோகம்.  அதை விட அவரை அழைத்துக்கொண்டு போய் பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கலாமென்று நினைத்து ஒரு ஆம்புலன்ஸிற்கு போன் செய்தார்கள்.  அந்த ஆம்புலன்ஸிலிருந்து வந்த ஒரு நர்ஸ் நோயாளியைப் பார்த்துவிட்டு, üபல்ஸ் நின்று போய்விட்டது.  அழைத்துக்கொண்டு போக முடியாது.  லோக்கல் டாக்டரைப் பாருங்கள்ý என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.  நான் அப்போது உறவினர் வீட்டில்தான் இருந்தான்.  என்னடா இப்படி ஒரு சங்கடம் என்று தோன்றியது.

மருத்துவர் வர விரும்பவில்லை. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லலாமென்றால் ஆம்புலன்ஸ் அழைத்துக்கொண்டு போக முடியாது என்கிறார்கள்.

எப்படியோ சமாளித்து வேற ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மேற்கு மாம்பலத்தில் உள்ள ஹெல்த் சென்டருக்கு அழைத்துச் சென்றோம்.  அங்கே அந்த உறவினர் அம்மா இறந்து போனதை உறுதி செய்தார்கள்.  ஆனால் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள்.  அதாவது நோயாளியை இறந்தே கொண்டு வந்துள்ளார்கள் என்று பேப்பரில் எழுதிக் கொடுத்தார்கள்.  மயானத்தில் மருத்துவரின் சான்றிதழ் இல்லாமல் பிணத்தை எரிக்க விட மாட்டார்கள்.  இந்தத் தருணத்தில்தான் டாக்டர் பாஸ்கரன் எனக்கு உதவி செய்தார்.  அவர் ஒரு சிறுகதை எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர்.  முதல் சான்றிதழ் என்று ஒரு கதையை விருட்சத்தில் எழுதியிருக்கிறார்.  முதன்முதலாக ஒரு மரணச் சான்றிதழைத் தரும்போது ஏற்படும் மன உளைச்சல்தான் அந்தக் கதை.  உண்மையில் ஒரு மரணச் சான்றிதழ் என்பது எவ்வளவு முக்கியமானது.  அதை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் கொடுத்துள்ளார்.  அவருக்கு என் நன்றி.

மரணம் அடைந்துவிட்ட ஒரு நோயாளியை எந்த மருத்துவரும் பார்க்க விரும்புவதில்லை.  அதற்கான மரணச் சான்றிதழையும் தர அவர்கள் விரும்புவதில்லை.  இதற்கு சில சமூக நிகழ்வுகளைத்தான் குறை சொல்ல முடியும்.  இதற்குப் பயந்தே மருத்துவர்களும் செயல் படுகிறார்கள்.   இது எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *