நான் டில்லியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அந்த ஒரு வாரத்தில் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. முகநூல் பார்க்கவில்லை. நான் வைத்திருந்த இரண்டு தொலைபேசிகளில் ஒன்றுதான் உபயோகத்தில் இருந்தது. ரவி சுப்பிரமணியன் போன் ஒரு முறை வந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மூலம்தான் எனக்குத் தெரிந்தது மா அரங்கநாதன் இறந்து விட்டார் என்பது. என்னால் நம்ப முடியவில்லை. மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆகிவிட்டது. ஆனால் என் அப்பா பொதுமருத்துவமனைக்கு ஒரு முறை சென்றபோது, ஒரு வாக்கியத்தை அடிக்கடி படிப்பார். ஒருவர் 60 வயதுக்குப் பிறகு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் அவனுக்குப் போனஸ் என்று. என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றும். இதைக் குறிப்பிட்ட என் அப்பா 94 வயது வரை இருந்தார். அப்பா சொன்னது உண்மை என்பதை என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த பல நண்பர்கள் 60 ஆண்டுகள் முடிந்த சில ஆண்டுகளிலேயே இறந்து போவதைப் பார்த்து நினைத்துக்கொள்வேன்.
மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆனாலும் அவர் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை. காரணம் அவர் சுறுசுறுப்பானவர். தடுமாறாமல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடக்கக் கூடியவர். தெளிவாகப் பேசக் கூடியவர். அளவுக்கு மீறி சாப்பிட வேண்டுமென்று ஆசை இல்லாதவர். மிக எளிமையான பழக்கவழக்கங்களைக் கொண்ட எளிய மனிதர். அவர் எப்படி மரணம் அடைந்திருக்க முடியும். 100 வயது வரை அவர் வாழ்ந்திருக்க வேண்டியவர். அதானல்தான் ரவிசுப்பிரமணியம் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. மேலும் மா அரங்கநாதனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, தன் உடம்பில் ஏற்படும் அவதிகளை ஒருபோதும் அவர் தெரிவித்ததில்லை. அவருடைய மனைவியின் உடல்நிலை அவர் கவலைப்படும்படி சொல்வார். அதுவும் என்ன செய்வது என்பார். அவர் சென்னை வாசியாப இருந்து, பாண்டிச்சேரி வாசியாக மாறியபிறகு, அவரைச் சந்திப்பது என்பது சிரமமாகப் போய்விட்டது. அதனால் போனில் பேசுவதோடு என் தொடர்பு எல்லை குறுகிவிட்டது.
ஆரம்ப காலத்தில் நான் மா அரங்கநாதனை மின்சார ரயிலில் பயணம் செய்யும்போது அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அவர் பூங்கா ரயில் நிலையத்தில் இறங்கி சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றுவிடுவார். நான் அவரைத் தாண்டி என் வங்கிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது இருவரும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொள்வோம். பேசிக்கொள்வோம். இரண்டொரு முறை அவருடைய அலுவலத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
அதன்பின் அவரைச் சந்தித்தது, ரங்கநாதன் தெருவில் உள்ள முன்றில் அலுவலகத்தில். அந்த அலுவலகம் ஒரு விசித்திரமான அலுவலகம். அப்போதெல்லாம் அங்கே வைத்திருக்கும் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ யாரும் வாங்க வருவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அங்கே எழுத்தாளர்கள் கூடுவது வழக்கம். மா அரங்கநாதன் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் முன்றில் அலுவலகத்திற்கு வந்து விடுவார். 60 வயதுக்கு மேல் அவர் அங்கு வந்தாலும், அவரிடம் சாப்பாடு விஷயத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து விடுவார். மேலும் மா அரங்கநாதன் யாருடன் பேசினாலும் அவர்களுடைய மனதைப் புண்படுத்துபம்படி பேச மாட்டார். தான் சொல்ல வேண்டிய கருத்தில் உறுதியாக இருப்பார்.
இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும். அரங்கநாதன் முன்றில் என்ற பத்திரிகை நடத்திக்கொண்டு வந்தார். முதலில் அப் பத்திரிகையின் ஆசிரியர் க.நா.சு. அதன் பின் அசோகமித்திரன். மா அரங்கநாதனுக்கு கநாசு மீதும், அசோகமித்திரன் மீதும் அளவுகடந்த மரியாதை உண்டு. ஒரு முன்றில் இதழ் வந்தவுடன், விருட்சம் இதழ் தொடர்ந்து வரும். இரண்டும் அளவில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பக்க அளவும் அதிகமாகப் போகாது. இரண்டு பத்திரிகைகளுக்கும் ஆதிமூலம்தான் லெட்டரிங் எழுதியிருப்பார். அசப்பில் பார்த்தால் இரண்டு பத்திரிகைகளும் ஒரே மாதிரியாகத்தான் ùதியும். ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பத்திரிகைகளும் ஒரே அச்சகத்தில் அச்சடிக்கப் பட்டிருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு மா அரங்கநாதனே அந்தப் பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது, üஇந்த வயதில் இதத்னை துடிப்புடன் இருக்கிறாரேý என்று தோன்றும். கிட்டத்தட்ட அசோகமித்திரனை விட ஒரு சில ஆண்டுகள்தான் குறைவான வயது உள்ளவராக இருந்தார். இருந்தாலும் அவரைப் பார்க்கும்போது ஒரு இளைஞனாகத்தான் காட்சி அளித்தார்.
அவருடன் பேசும்போது அவருக்குக் கோபம் வருமா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி தோன்றும். எதையும் நிதானமாகத்தான் பேசுவார். அவர் பேசும்போது யார் மீதும் அவருக்கு அன்பு உள்ளதுபோல் உணரமுடியும். அவர் சிறுகதைகள் எழுதுவதில் நிபுணர் என்பதை அப்போதெல்லாம் நான் உணரவில்லை. ஏன்என்றால் எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாகப் பேச மாட்டார்.
ஒருமுறை அவருடைய சிறுகதைத் தொகுதியை என்னிடம் கொடுத்தார். அந்தப் புத்தகத்தின் விமர்சனம் விருட்த்தில் வர வேண்டுமென்று விரும்பினார். நான் கொடுக்கக் கூடாத ஒருவரிடம் அவர் புத்தகத்தை விமர்சனத்திற்காகக் கொடுத்து விட்டேன். அவரும் அந்தப் புத்தகத்தை தேவையில்லாமல் தாக்கி எழுதியிருந்தார். எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. நானே கூட அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கலாம், ஏன் இப்படி செய்தோம் என்று வருத்தமாக இருந்தது. மா அரங்கநாதனிடம் அவர் எழுதிய விமர்சனத்தைக் கொடுத்தேன். அதைப் படித்து மா அரங்கநாதனுக்கும் சற்று வருத்தமாக இருந்தது.
‘அவர் எழுதிய விமர்சனத்தை விருட்சத்தில் பிரசுரம் செய்ய மாட்டேன்,’ என்று அவரிடம் கூறினேன்.
அந்த விமர்சனத்தை மட்டும் நான் பிரசுரம் செய்திருந்தால் மா அரங்கநாதன் என்ற நல்ல நண்பரின் நட்பை இழந்திருப்பேன். ஒரு சமயம் நான் பிரசுரம் செய்திருந்தால் அவர் அதைக் கூட பெரிசாக எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். என்னால் எதுமாதிரி நடந்திருக்கும் என்று இப்போது யூகிக்க முடியவில்லை.
விருட்சமும் முன்றிலும் இரண்டு சகோதரிகள் போல் ஒன்று மாற்றி ஒன்று வந்தாலும், இரண்டும் வேறு விதமான பத்திரிகைகள்.ஒரு சந்தர்ப்பத்தில் முன்றில் ஒரு இலக்கிய விழா நடத்தியது. அது பெரிய முயற்சி. அதன் தொடர்ச்சிதான் காலச்சுவடு தமிழ் இனி 2000 என்று விழா நடத்தியதாக எனக்குத் தோன்றுகிறது.
மா அரங்கநாதனிடம் ஒரு எழுத்தாளர்தான் ரொம்ப ஆண்டுகளாக தொடர்பு இல்லாமல் இருந்தார் என்று நினைத்தேன். ஆனால் சிலகாலம் கழித்து அந்த எழுத்தாளரும் முன்றில் அலுவலகத்தில் மா அரங்கநாதனுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் வேறு யாருமில்லை. பிரமிள்தான். பிரமிளுடன் யார் பேசினாலும் தொடர்ந்து நட்புடன் இருக்க முடியுமா என்பது சந்தேகம். மா அரங்கநாதன் எப்படி பிரமிளை சமாளிக்கப் போகிறார் என்று கவலையுடன் இருந்தேன். ஒரு முறை பிரமிளிடம் நான் கேட்டேன். ‘மா அரங்கநாதனின் கதைகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்று. ‘நான் இப்போது ஒன்றும் சொல்ல மாட்டேன்,’ என்றார் பிரமிள். கொஞ்சங்கூட உயர்வாக சொல்ல மனம் வரவில்லையே என்று எனக்குத் தோன்றியது. மா அரங்கநாதன் எழுத்தை அசோகமித்திரன், நகுலன் போன்ற எழுத்தாளர்கள் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்கள். எழுதவும் எழுதியிருக்கிறார்கள். க நாசுவும் எழுதியிருக்கிறார்.
பிரமிளுக்கும் மா அரங்கநாதனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விட்டது. முன்றில் பத்திரிகையில் அது எதிரொலிக்க ஆரம்பித்தது. உண்மையில் பிரமிள் படைப்புகள் மீது மா அரங்கநாதனுக்கு அபாரமான லயிப்பு உண்டு. சண்டைப் போட்டாலும் பிரமிள் கவிதைகளைப் புகழ்ந்து சொல்வார். ஆனால் கருத்து வேறுபாடு வந்தபோது, பிரமிளைப் பற்றி தனக்கு ஒவ்வாத கருத்துக்களையும் அவர் எழுதத் தவறவில்லை. உண்மையில் கொஞ்சம் தைரியயமாக எழுதியவர் மா அரங்கநாதன்தான். அப்போது அதையெல்லம் படிக்கும்போது, ஐயோ ஏன் இப்படி எழுதிகிறார், அவருடன் மோத முடியாதே என்று எனக்குத் தோன்றும். யாராவது பிரமிள் மீது ஒரு அடி பாய்ந்தால் பிரமிள் 10 ஆடி பாய்வார். மேலும் பிரமிள் ஒரு பத்திரிகையைப் பற்றி எதாவது எழுத ஆரம்பித்துவிட்டால், அந்தப் பத்திரிகை தொடர்ந்து வராமல் நின்றுவிடும். இது என் கற்பனையாகக் கூட இருக்கலாம். பிரமிள் உள்ளே புகுந்து கலகம் செய்ததால் பல சிறு பத்திரிகைகள் நின்றே விட்டன என்று கூறுவேன். முன்றில் எள்ற எளிய பத்திரிகைக்கும் அதுமாதிரி நடந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது. விருட்சத்துடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த முன்றில் என்ற சகோதரி பத்திரிகை நின்று போனதில் விருட்சத்திற்கு வருத்தம். அதேபோல் முன்றில் கடையும் முடப்பட்டுவிட்டது. தொடர்ந்து நஷ்டத்துடன் வாடகைக் கொடுத்துக்கொண்டு நடத்துவது என்பது முடியாத காரியம். அதை அவர்கள் நிறுத்தும்படி ஆகிவிட்டது.
அதன் பின்னும் மா அரங்கநாதன் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். சிறுகதை எழுதுவதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். 90 கதைகள் எழுதியிருக்கிறார்.
மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகத்தில் மா அரங்கநாதன் இப்படி எழுதி உள்ளார் :
üகதை என்றால் என்ன – கவிதை என்றால் என்ன – கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறேன்,ý என்று.
மா அரங்கநாதனை நான் அடிக்கடி சந்திக்க முடியாமல் போய்விட்டாலும், தொலைபேசியில் என்னை விஜாரிக்காமல் இருக்க மாட்டார். விருட்சம் பத்திரிகையை அவர் முகவரிக்குக் கட்டாயம் அனுப்பச் சொல்வார். ‘நீங்கள் ஏன் எனக்கு கதைகள் அனுப்பக் கூடாது,’ என்பேன். எனக்கு இரண்டு மூன்று கûதாகள் அனுப்பியிருக்கிறார்.
எதை எழுதி அனுப்பினாலும் அதில் அவர் திறமை வெளிப்படும்.
பொதுவாக என் அலுவலகத்திற்குப் போன் செய்து பென்சன் கிரிடிட் ஆகிவிட்டதா என்று விஜாரிப்பார். அப்போதுதான் அவர் கணக்கில் ஒன்றை கவனித்தேன். அவர் பென்சன் கணக்கில் நாமினேஷன் இல்லாமல் இருந்தது.
“சார் நாமெல்லாம் எத்தனை வருஷம் இருப்போம்னு சொல்ல முடியாது.. நாமினேஷனில் உங்கள் பையன் பெயரையோ பெண் பெயரையோ போடாமல் இருக்காதீர்கள்?” என்று சொல்லிக்கொண்டிருப்பேன். நாமினேஷன் இல்லாமல் இருந்தால் அவருடைய பணத்தை அவருக்குப் பின் வாங்குவதில் பிரச்சனையாக இருக்கும்.
நான் சொன்னபடி அவர் நாமினேஷன் போட்டிரு&ப்பார் என்றுதான் நினைக்கிறேன்.
நாம் ஒரு எழுத்தாளரைப் பற்றி பேசுகிறோம் என்றால் அவர் ஒன்று எதாவது பரிசு வாங்கியிருக்க வேண்டும். அதாவது சாகித்திய அகாதெமி பரிசுபோல் ஒன்று வாங்கியிருக்க வேண்டும். அல்லது அந்த எழுத்தாளர் மரணம் அடைந்திருக்க வேண்டும். மா அரங்கநாதனைப் பற்றி நாம் அவர் மரணம் அடைந்த பிறகுதான் பேசுகிறோம். இது வருத்தத்தற்குரிய விஷயம். அவருடைய முழு தொகுதி வந்தபோது அது குறித்து எதாவது கூட்டம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஏனோ யாரும் கண்டுகொள்ளவில்லை.
நற்றினை என்ற பதிப்பகம் மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகத்தை 1022 பக்கங்களில் அற்புதமாக அச்சடித்து கொண்டு வந்திருக்கிறது. ரூ890 கொண்ட இப்புத்தகம் முக்கியமான புத்தகம் என்று நினைக்கிறேன். மா அரங்கநாதனை முழுவதுமாக இதன் மூலம் அடையாளம் காண முடியும். இது அவருக்குக் கிடைத்த கௌரவம் என்று நினைக்கிறேன். அதேபோல் ரவி சுப்பிரமணியன் அவரைக் குறித்து எடுத்து ஆவணப்படமும் முக்கியமானதாக நினைக்கிறேன். எஸ் சண்முகம் அவரைப் பேட்டி கண்டு அற்புதமான புத்தகம் ஒன்று கொண்டு வபந்திருக்கிறார். அதில் மா அரங்கநாதனின் புகைபடங்கள் அற்புதமாக பதிவு ஆகியிருக்கும்.
மா அரங்கநாதன் கதைகளில் எப்படியும் முத்துக் கருப்பன் என்ற பெயர் வராமல் இருக்காது. அந்த முத்துக் கருப்பன் என்பவர் யார்? அவர் வேறு யாருமில்லை மா அரங்கநாதன்தான். ஆரம்பத்திலேயே அவருடைய எல்லாக் கதைகளைப் படித்திருக்கிறேன். திரும்பவும் இப்போது அவர் கதைகளைப் படிக்கத் தோன்றுகிறது. அதற்கு ஏற்றார்போல் மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகமும் என்னிடம் இருக்கிறது.
இங்கு வருவதற்கு முன் கண்ணை மூடிக்கொண்டு ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தேன். அலுப்பு என்பது அந்தக் கதை. கதை ஆரம்பிக்கும்போது முத்துக்கருப்பன் என்ற பெயர் எங்கும் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு படித்தேன். கதை படித்துக்கொண்டே இருக்கும்போது முத்துக்கருப்பன் வந்துவிட்டார். மா அரங்கநாதன் முத்துக் கருப்பனாக என் கண்ணில் தென்பட்டார். இந்தக் கதையை இங்கு வருவதற்குள் மூன்று முறை படித்துவிட்டேன். அக் கதையில் வருகிற முத்துக்கருப்பன் அதாவது மா அரங்கநாதன் இறந்து விடுகிறார். அந்தக் கதையை அவர் எழுதிக்கொண்டு போகிற விதம் அபாரம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலந்து கலந்து எழுதியிருக்கிறார். அவர் எழுத்தில் நான் காண்பது மனித நேயம். இந்தக் கதையிலும் அது தென்படாமல் இல்லை. மனித நேயம் சிலசமயம் நம்மை ஏம்மாற்றவும் ஏமாற்றி விடும். பெரும்பாலபன எழுத்தாளர்கள் துரோகத்தைதான் அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதுவார்கள். அல்லது வருமைச் சித்தரிப்பை கதைகளாகக் கொண்டு வருவார்கள். இந்தக் கதையை அவர் 1988ல் எழுதியிருக்கிறார். இந்தக் கதையை இன்னொரு முறை படித்தாலும் அதில் எதாவது தென்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.
இத் தொகுப்பில் 90 கதைகள் உள்ளன. தன் வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு கதைகயாக எழுதிப் பார்த்திருக்கிறார்.
சமீபத்தில் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்து அனுப்பச் சொல்லி ஒரு செக் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பாவிட்டாலும் பத்திரிகையை அவருக்கு அனுப்பியிருப்பேன். இனிமேல் யாருக்கு பத்திரிகையை அனுப்புவது.
இக் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்த ரவிசுப்பிரமணியத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(26.04.2017 அன்று கவிக்கோ அரங்கத்தில் மா அரங்கநாதன் குறித்து நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய கட்டுரை)