சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பங்களூர் சென்றேன். ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டேன். என் நண்பர்கள் வேண்டாம் என்றார்கள். அவர்கள் சொன்னபடியே அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போகவில்லை.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது ஒரு படைப்பை நாம் படிக்கிறோம். படித்துவிட்டுப் பரவசப்படுகிறோம். அந்த எண்ணத்தில் எழுத்தாளரைப் பார்க்க வேண்டுமென்று நினைப்பது அபத்தம் என்று தோன்றுகிறது. அப்படி பக்தி பரவசத்தோடு படைப்பாளியை நாம் பார்க்கச் சென்றால், நமக்கு பெரிய ஏமாற்றமே கிட்டும். நாம் எதிர்பாரக்ககும் நிலையில் படைப்பாளி தென்பட மாட்டான்.
உண்மையில் படைப்பாளி வேறு, படைப்பு வேறு. சினிமாவில்தான் ஒரு நடிகரின் பின்னால் ரசிகர் மன்றம் அமைத்து நடிகரை தேடி ஓடுவார்கள். சினிமா என்றால் அது பலருடைய முயற்சி. ஆனால் நடிகர் நடிகைக்குத்தான் அதில் முக்கிய பங்கு கிடைக்கிறது. இது சரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
ஒரு படைப்பு நன்றாக படைக்கப்பட்டிருந்தாலும், படைப்பாளனை ஒரு தெய்வப்பிறவியாக நினைத்துப் பார்க்கச் செல்வதுபோல ஒரு அபத்தம் வேறு எதுவும் இல்லை. இதை ஒரு படைப்பாளியும் விரும்ப மாட்டான். நான் சந்தித்த பல படைப்பாளிகள் சாதாரண மனிதர்கள். அவர்கள் பின்னால் எந்த ஒளிவட்டமும் இல்லை. சாதாரணமாக நம் உறவினர்களை, நண்பர்களைப் பார்க்கச் செல்வதுபோல்தான் அவர்களையும் பார்க்கச் செல்வென். எழுத்து குறித்தும், படைப்புகளைக் குறித்தும் சாதாரணமாகப் பேசுவதபோல்தான் பேசிக்கொண்டிருப்போம்.
இம்பர் உலகம் என்ற கவிதைப் புத்தகத்தில் ஞானக்கூத்தன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
கவிதையின் பெயர் – பொய்த்தேவு
பொய்த் தேவு
சைக்கிள் ரிக்ஷாவில் தன்னுடைய
கனமான உடம்புடன் ஏறி
அமர்ந்து கொண்டார் க.நா.சு.
திருவல்லிக்கேணி பெரிய தெருவில்
நல்லியக் கோடன் பதிப்பாலயம் இருந்தது
தேவாலயத்தைக் காட்டிலும்
புத்தகாலயத்தைப் போற்றிய க.நா.சு.
பதிப்பாலயம் நோக்கிப் புறப்பட்டார்
நாவலுக்கான ராயல்டி
கிடைக்கு மானால் என்னென்ன
செய்யலாம் என்று கணக்கிட்டார்
எதுவும் உருப்படியாய்த் தோன்றவில்லை
கோயம்புத்தூர் கிருஷ்ணையர் கடையில்
கோதுமை அல்வா கொஞ்சமும்
பின்னி மில்ஸ் போர்வை ஒன்றும்
வாங்க முடிந்தால் நன்றாயிருக்கும்
பணத்தை அவளிடம் கொடுத்தால் போதும்
அதற்கே அவள் கண்ணீர் விடுவாள்
சிலப்பதிகாரத்தைப் புரட்டினால்
நல்லதென்று மனம் சொல்லிற்று
என்ன விலையோ இப்போது?
ரிக்ஷாவை விட்டிறங்கினார் க.நா.சு.
ஜிப்பா பையைத் துழாவி
காசுகள் சிலவற்றைக் கண்டெடுத்து
டீ குடித்துவிட்டு வா என்றார்
ரிக்ஷா காரனை அனுப்பிவிட்டுப்
பதிப்பாலயம் போக
உடம்பைத் திருப்பினார். அங்கே
புரட்சிக் கவிஞர் நிற்கிறார்
என்னுடன் போஸ்ட் ஆபீஸ் வாரும்
மணியார்டர் வாங்கணும்
ஆள் அடையாளம் காட்டணும்.
நிறைய கடிதங்கள்
ரைட்டர், பொயட் & க்ரிடிக் என்று
திருப்பப் பட்ட கடிதங்கள் வந்ததால்
க.நா.சு.வுக்கு போஸ்ட்மேன் நண்பரானார்
நல்லியக் கோடனை மறந்து
புரட்சிக் கவிஞருடன் போனார்
கவிஞர் பணத்தைப் பெற்றுக் கொண்டார்
பக்கத்துத் தேநீர்க் கடையில்
தேநீர் வாங்கித் தந்தார்
இருவரும் தெருவில் நின்று பருகினர்
புரட்சியும் அமைதியும் அப்புறம்
தங்கள் தங்கள் வழியே போயினர்.
இந்தக் கவிதையைப் படிக்கும்போது எழுத்தாளர்களின் சாதாரணத் தன்மையை இக் கவிதை விளக்குகிறது. இந்த சாதாரணத் தன்மையைத்தான் ஞானக்கூத்தன் அவர் கவிதை மூலம் விளக்குகிறார். அதனால்தான் படைப்பாளிகளை விட படைப்புகளை நாம் போற்றுவோம். படைப்பாளர்களை விட்டுவிடுவோம். நம் வீட்டில் உள்ளவர்களைப் பார்ப்பதுபோல, நண்பர்களைப் பார்ப்பதுபோல, உறவினர்களைப் பார்ப்பதுபோல படைப்பாளர்களை நாம் சந்திப்போம். அவர்கள் படைப்புகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்போம். அவர் படைப்புகளை வைத்துக்கொண்டு படைப்பளர்களைப் பற்றிய பெரிய கற்பனையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டாம். ரசிகர் மன்றம் போல் ஆக்க வேண்டாம். கொடி பிடித்துக்கொண்டு போக வேண்டாம். உண்மையில் நாம் படைப்புகள் மூலமாகத்தான் படைப்பாளிக்கு கௌரவத்தையும் மரியாதையும் செலுத்துகிறோம்.