ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்..

அழகியசிங்கர்
 
தி ஜானகிராமன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் கங்காஸ்நானம் என்ற கதை. 1956ஆம் ஆண்டு எழுதியது. இந்தக் கதையைப் படித்தபோது ஜானகிராமன் உயிரோடு இருந்தால் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன். துரோகம் செய்வதைப் பற்றி தி ஜானகிராமன் அதிகமாகக் கதைகள் எழுதியிருக்கிறார். இந்தக் கதையும் ஒரு துரோகத்தைப் பற்றிய கதைதான். ஆனால் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால், ஜானகிராமன் வேற மாதிரி எழுதியிருப்பார்.
 
பொதுவாக கடன் கொடுத்தவர்தான் பணத்தைத் திரும்ப வாங்க அல்லல்பட வேண்டும். பணத்தை வாங்கிக்கொண்டு போன பலருக்கு பணத்தைத் திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணம் வராது. அப்படியே திருப்பி தந்தாலும் கடன் வாங்கியதற்கான பணத்தைத் தருகிறோம் என்று எண்ண மாட்டார்கள். என்னமோ அவர்களோட பணத்தை விருப்பமில்லாமல் கொடுப்பதாக நினைத்துக்கொள்வார்கள். இப்போது வங்கியில் உள்ள பிரச்சினை இந்த வாரா கடன்தான்.
ஆனால் இந்தக் கதை 1956ஆம் ஆண்டு எழுதியிருப்பதால், சின்னசாமி என்பவரின் சகோதரி மரணம் அடையும் தறுவாயில் துரையப்பா என்பவரிடம் அவள் வாங்கிய கடனைத் திருப்பித் தர நினைக்கிறாள். அதற்காக அவளிடம் உள்ள நிலத்தை விற்கிறாள். அதன் மூலம் கிடைத்த வருவாயில் ரூ3000 வரை உள்ள கடனை அடைக்க உத்தரவிடுகிறாள்.
 
3000 ருபாய் போக மீதி உள்ள பணத்தில் சின்னசாமியையும், அவள் மனைவியையும் காசிக்குப் போகச் சொல்கிறாள். இது அவருடைய சகோதரியின் வேண்டுகோள். அவள் வாழ்க்கையில் அவள் காசியே போகவில்லை. தன் சார்பாக தம்பியும் அவர் மனைவியும் போகட்டும் என்று நினைக்கிறாள். இதெல்லாம் கட்டளையிட்டு அவள் இறந்து விடுகிறாள். ஜானகிராமன் இதை ஒரு வரியில் இப்படி கூறுகிறார் :
‘மறுநாள் வீட்டடில் ஒரு நபர் குறைந்துவிட்டது,’ என்று.
 
அக்காவின் கடனை திருப்பி அளிக்க சின்னசாமி துரையப்பா வீட்டிற்கு வருகிறார். இரவு நேரம். எதற்காக வந்தீர் என்று சின்னசாமியைக் கேட்கிறார் துரையப்பா. அக்காவுடைய கடனை அடைக்க என்கிறார் சின்னசாமி.
 
இரவு நேரத்தில் கணக்குப் பார்க்க முடியாது என்கிறார் துரையப்பா. நான் இங்கயே படுத்துக்கொள்கிறேன். காலையில் பார்க்கலாம் என்கிறார் சின்னசாமி. ஆனால் அவர் கொண்டு வந்த பணத்தை துரையப்பாவிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே வைக்கிறார் துரையப்பா.
கதையில் துரையப்பாவைப் பற்றி ஒரு அறிமுகம் நடக்கிறது. துரையப்பா பெரிய மனுஷன். அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி ஊரே பேசிக்கொள்கிறது.
 
காலையில் கணக்குப் பார்க்கும்போது, துரையப்பா சின்னசாமியிடம் பணம் கேட்கிறார். அதுதான் நேற்று இரவே உங்களிடம் கொடுத்தேனே என்கிறார் சின்னசாமி. எங்கே கொடுத்தே என்கிறார் துரையப்பா. சின்னசாமிக்கு தூக்கி வாரிப்போடுகிறது. துரையப்பா இப்படி ஏமாற்றுவார் என்பதை சின்னசாமி நினைத்தே பார்க்கவில்லை. ஊரே துரையப்பா பக்கம். தான் ஏமாந்துவிட்டோம் என்று மனம் வெதும்பி அந்த இடத்தை விட்டுப் போகிறார்.
 
இங்கேதான் ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் :
 
ஏன் துரையப்பாவை பெரிய மனிதன் என்றும், அன்னாதாதா என்று வர்ணித்தும், சின்னசாமிக்கு ஏன் துரோகம் செய்கிறார். இந்த அவருடைய குணம் முரண்பாடாக இருக்கிறது.
 
அப்படி பெரிய மனிதனாக இருப்பவர், அன்ன தாதாவாக இருக்பவர், ஏன் சின்னசாமியை ஏமாற்ற வேண்டும்?
 
துரையப்பாவை இப்படி வர்ணித்துவிட்டு, அவர் துரோகம் செய்பவராக ஏன் கொண்டு போகிறார். கதை இங்கு சரியாக இல்லையா என்று எனக்குப் படுகிறது.
 
ஊருக்கு நல்லது செய்பவனாக இருக்கும் துரையப்பா ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும்.
துரையப்பாவும், சின்னசாமியும் திரும்பவும் கங்கா ஸ்நானம் செய்யப் போகிற சந்திக்கிற நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார் ஜானகிராமன். ஆனால் அங்கு சின்னசாமி துரையப்பாவைப் பார்க்க விரும்பவில்லை. இதுதான் கதை.
ஆனால் துரையப்பாவின் காரெக்டரை அப்படி வர்ணித்தவிட்டு, ஏமாற்றுகிறவராக ஒரு வில்லனாக சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தக் கதையை ஜானகிராமன் வேறுவிதமாக எழுதியிருக்க வேண்டும்.

“ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்..” இல் ஒரு கருத்து உள்ளது

  1. Duraiappa is a false person. He earns money by cheating, but escapes every time by taking refuge under his Anna Dhadha image. Such type people exist at all times. He is only a ‘Dada’ masquerading. Janakiraman makes Chinnappa take Ganga Snaanam to wash off his contact with Duraiappa. Unfortunately, though Duraiappa wants to do penance for his sins by taking Ganga Snaanam, there is not going to be respite, as his conscience will keep pricking him.Janakiraman has written a story with moral teachings.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன