100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்.

அழகியசிங்கர்

 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.  நான் தேர்ந்தெடுக்கும் கவிதையைக் குறித்தும், முடிந்தால் கவிஞர் பற்றியும் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்த நாளிலிருந்து என்னிடம் கவிதைப் புத்தகங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளன. இந்தக் கவிதைப் புத்தகங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட கவிதைகளையும் நான் மதிக்கிறேன்.

58வது கவிதையாக நான் நேசன் புத்தககத்திலிருந்து  எடுக்கிறேன். ‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ என்பதுதான் கவிதையின் புத்தகம்.  இத் தொகுப்பில் பல கவிதைகள் குறிப்பிடும்படி உள்ளன.  நேசன் ஒரு திறமையான கவிஞர்.  ஆரம்ப காலத்தில் நேகனும், ராணிதிலக் அவர்களும் போஸ்டல் காலனியில் உள்ள என் வீட்டிற்கு வருவார்கள்.  அவர்கள் எழுதிக்கொண்டிருந்த கவிதைகளை என்னிடம் காட்டுவார்கள்.  அவர்களை அக் கவிதைகளை வாசிக்கச் சொல்வேன்.  அவர்களும் கவிதைகளை வாசிப்பார்கள்.  உடனடியாக அக் கவிதைகளை வாங்கிக்கொண்டு விருட்சம் இதழ்களில் பிரசுரம் செய்வேன்.  அவர்களைப் பார்க்கும்போது உண்மையாக கவிதைக்காகவே வாழ்ந்தவர்கள் போல் தோன்றும்.

இத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் என்னை கவர்ந்தாலும், ‘என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்’ என்ற கவிதையை நான் தொகுப்பில் சேர்க்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு நிலவையும் பார்க்கும்போது ஏற்படுகிற அனுபவங்களை நேசன் விவரித்துக்கொண்டு போகிறார்.  ஏழாவது நிலவு ‘எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்,’ என்று முடிக்கிறார். படிப்பவரின் ஆன்மிக உணர்வை தட்டி எழுப்பும் விதமாய் இக் கவிதை உள்ளதாக தோன்றுகிறது.   எளிமையான நேசனின் இந்தக் கவிதையை எப்போதும் வாசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 58

 என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள் 

ஸ்ரீநேசன்

முதல் நிலவை எப்போதும்

எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன

இரண்டாவது நிலவு

குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது

மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்

காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்

நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்

கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று

ஐந்தாவது நிலவு

மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது

ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக் கொண்டிருக்கிறாள்

ஏழாவது நிலவு

எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்.

நன்றி : ஏரிக்கரையில் வசிப்பவன் – கவிதைகள் – ஸ்ரீ நேசன் – மொத்தப் பக்கங்கள் : 80 – வெளியீடு : ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600 024 – தொலைபேசி : 044-23722939 – விலை : ரூ.60

  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன