தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது

அழகியசிங்கர்

 

எங்கள் தெருவில் முதல் தண்ணீர் சண்டை இன்று ஆரம்பமாகிவிட்டது.  இனி தினமும் இந்தக் காட்சிகளைக் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கலாம்.  தினமும் காலையிலிருந்து தெருவில் உள்ள பெண்கள் தண்ணீருக்காக குடம் குடமாக எங்கிருந்தோ தண்ணீரை சேகரித்த வண்ணம் இருக்கிறார்கள்.  ஆண்கள் இதில் கலந்து கொள்வதாக தெரியவில்லை.  எப்படித்தான் இந்தப் பெண்களுக்கு இந்தக் குடங்களைக் கொண்டு வரும் சக்தி இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  அதேபோல் தண்ணீர் பிடிக்க அவர்கள் சண்டைப் போடுவதும் ஆபாசமாக இருக்கும்.  ஒரே வீட்டில் பத்து குடுத்தனங்கள் இருப்பார்கள்.  எத்தனை தண்ணீரை சுமந்தாலும் தேவை இருந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் போஸ்டல் காலனி வீட்டில் இருந்தபோது தண்ணீருக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்.  மொத்தம் 7 அடுக்ககங்கள்.  எல்லோரும் சேர்ந்து லாரியில் தண்ணீர் வாங்கிக் கொண்டு, சம்பில் கொட்டுவோம்.  சம்பை சரியாக மூடாவிட்டால் நாங்கள் கொட்டிய தண்ணீரெல்லாம் எதிர்சாரியில் உள்ள வீடுகளுக்கு தானாகவே ஓடிவிடும்.

எங்களுக்குள்ளே சண்டையும் ஏற்படும்.  தண்ணீர் பிரச்சினை போதுதான் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வோம்.  அதற்கு முன் நாங்கள் யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம்.  கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி.  முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.  தண்ணீர் விலைக்கு வாங்கி அளந்து விடும்போது எல்லோரும் பணத்தை சமமாகப் பிரித்துக்கொள்ள úவ்ணடும்.  கீழே உள்ள பெண்மணி ஒப்புக் கொள்ள மாட்டார்.  இத்தனைக்கும் அவர் ஒரு டீச்சர்.  üüநான் எப்படி என் ஒருவளுக்காக அத்தனைப் பைசா கொடுப்பது,ýý என்று சண்டைக்கு வருவார்.  பத்து நபர்கள் உள்ள குடும்பத்திற்கு சங்கடமாக இருக்கும்.

ஆனால் தண்ணீரைத் திறந்து விடும் சமயத்தில் ஒரு ஆளுக்காக தண்ணீர் நிரப்ப மாட்டார்.  பலருக்கு நிரப்புவதுபோல் பக்கெட்டுகளில் நிரப்பி வைத்திடுவார். பணம் குறைவாகத்தான் கொடுப்பார்.

நான் இதை எப்படி சரி செய்வது என்று மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்வேன்.  எனக்கு சிலசமயம் நல்ல பெயர் கிடைப்பதாக இருக்கும்.  பின் கெட்ட பெயரில் வந்து முடியும்.  அந்தச் சமயத்தில் அற்புதமாக ஒத்துழைப்பு நல்கியது எங்கள் வளாகத்தில் உள்ள கிணறுதான்.  அதை வைத்து நான் அற்புதக் கிணறே என்று ஒரு கவிதை எழுதினேன்.  அது ஒரு நீண்ட கவிதை.  அதில் ஒரு பகுதியை இங்கே தர விரும்புகிறேன்.

 

அற்புதக் கிணறோ

எந்நேரமும் தவறாமல்

அளித்த

தண்ணீரின் கொடையை

ஒரு நாளைக்கு

சில மணி நேரங்களில்

எங்களின்

சில பக்கெட்டுகளை

நிரப்ப

அள்ளித் தருகின்றது

தண்ணீரை ஒருநாள் முழுவதும்

பாதுகாக்க

நாங்கள் பதட்டப்படுகிறோம்

அற்புதக் கிணற்றின்

காய்ந்த மார்பு காம்புகளிலிருந்து

நீருக்குப் பதில்

செந்நீரா கசிகிறது

அற்புதக்கிணற்றின்

திரவ ஊற்றே

உம் முன்னே

தலை வணங்கி நிற்கிறோம்

 

சென்னையில் இப்படி ஒரு தண்ணீர் பிரச்சினை வருமென்று நினைத்துப் பார்க்காத தருணம் அது.

இதோ உங்களுக்குக் கேட்கிறதா எங்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பலமாக ஹான்ட் பைப்பில் தண்ணீர் அடிக்கும் சத்தம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன