அழகியசிங்கர்
இன்று யாரும் இல்லை வீட்டில். அதனால் மாலை சங்கீதா ஓட்டலுக்கு டிபன் சாப்பிடச் சென்றேன். பங்களூரிலிருந்து நண்பர் மகாலிங்கமும் வந்திருந்தார். ஒரே கூட்டம். இந்த ஓட்டல் அசோக்நகரில் லட்சணமான ஓட்டல். அங்கே மரியாதையுடன் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்கிறார்கள். நான் எப்போதும் இங்கே போகத் தொடங்கி விட்டேன். இந்த ஓட்டல் வந்த பிறகு இங்குள்ள மற்ற ஓட்டல்களின் மவுசு குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.
கொஞ்ச நேரத்தில் சினிமாப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. நான் மியூசிக் சிஸ்டம் மூலம் பாடுவதாக நினைத்தேன். ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் ஓட்டலின் மூலையில் நின்றுகொண்டு பாடிக்கொண்டிருந்தார்கள். டி எம் சௌந்தர்ராஜன் மாதிரி, பி பி ஸ்ரீனிவாஸ், ராஜா மாதிரி எல்லாம் உடனே உடனே பாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடத்தில் பழைய எம்ஜி ஆர் பாடல்களைக் கேட்டபோது, என் நிகழ் காலத்திலிருந்து நழுவி பழைய காலத்திற்குப் போனதுபோல் தோன்றியது. எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் மூலம்தான் எனக்கு எம்ஜிஆரைத் தெரியும். அவர்கள் பாடல்களைக் கேட்கும்போது எம்ஜிஆரைப் பார்ப்பதுபோல் உணர்வு எழுந்தது. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது, நான் நிஜார் போட்டு சுற்றும் பையனாக மாறியதுபோல் இருந்தது. இந்தக் கால மயக்கம் ஆச்சரியமாக இருந்தது.
டிபனும் நன்றாக இருந்தது. நாங்கள் சாப்பிட்டு விட்டு வரும்போது, அங்கு பாடுபவரைப் பார்த்து சந்திரபாபு பாடிய ஒரு பாடலை பாடும்படி சொன்னேன். அவர், ‘பம்பரக் கண்ணாலே..’ என்ற பாட்டைப் பாடினார்.
வீட்டிற்கு வந்தவுடன், பழைய நிலையிலிருந்து மாறி புது நிலைக்கு வந்து விட்டேன்.